Wednesday, April 1, 2015

யானை பசிக்குச் சோளப் பொரி- ஏரின்றி அமையாது உலகு


தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இந்த ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை, இந்த ஆட்சியின் முதல் அறிக்கை. நிதி அமைச்சர் தனது உரையில் மாற்று ஆற்றல் முறைகள், ஊரக மேம்பாடு, உடல்நலம், வேளாண்மை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இருக்கும் என்று கூறினார். ஆனால் உண்மையில் நிதிநிலை அறிக்கையின் ஒதுக்கீடுகள், இதற்கு முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளன.
வேளாண் வெளியேற்றம்
இந்த ஆண்டும் நிதி நிலை அறிக்கை உழவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உழவர்களுக்கு வழங்கப்பட உள்ள கடன் தொகை ரூ. 8 லட்சம் கோடியில் இருந்து, ரூ. 8.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது உழவர்களுக்கு நேரடியாகப் பயன்படுவதைவிட, அதாவது பண்ணையத்துக்குப் பயன்படுவதைவிட, வேளாண் வணிகத்துக்கே பயன்பட உள்ளது. களத்தில் கடுமையாக உழைக்கும் உழவர்களுக்கான பங்களிப்பு என ஏதும் இல்லை.
மிகக் குறைவான வட்டியில் கொடுக்கப்படும் கடன் 92 விழுக்காடு வேளாண் வணிகர்களுக்கே செல்கிறது என்ற குற்றச்சாட்டை யாரும் மறுக்க முடியாது. சிறு பாசனத் திட்டங்களுக்காக ரூ. 5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 'யானைப் பசிக்குச் சோளப் பொரி' போல உள்ளது.
ஊரகப் பகுதிகளை விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேளாண்மையைவிட்டு வெளியேறுதல் நடைபெற்று வருகிறது. இதைப் பற்றி நிதி அமைச்சகம் அக்கறை கொள்ளவில்லை என்பது புரிகிறது.
உணவு தருவது யார்?
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஊரக நிதி ஒதுக்கீடு குறைவு. கடந்த ஆண்டும் அது அதிகமாக இல்லை. அதாவது, இம்முறை ரூ. 79,526 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே கடந்த ஆண்டு ரூ. 83,852 கோடி. ஊரகச் சாலை அமைப்புக்குக் கடந்த ஆண்டைவிட ரூ. 4,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சீர்மை நகரங்கள் (Smart Cities) என்ற திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 7,060 கோடி என்பதைக் கவனிக்க வேண்டும்.
இந்தச் சீர்மை நகரங்கள் திறன்மிகு முறையில் ஆற்றலைச் செலவு செய்து வாழும் மக்களைக் கொண்டதாக இருக்குமாம். பெரும்பான்மையும் எண்ணியல் (Digital) மயப்படுத்தப்படுமாம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இனி 75% பங்களிப்பை இவர்கள் செய்வார்களாம். சரி கொடுக்கட்டும், இவர்களுக்கெல்லாம் உணவைக் கொடுப்பது யார்?
வழக்கம்போல மண்ணைக் கிளறிக்கொண்டும் பட்டினியில் உழன்றுகொண்டும், தற்கொலை முடிவுகளைத் தேடிக்கொண்டும் இருக்கிற நமது உழவர்கள்தான். இவர்கள் வாழ்வதற்கு நமது ஆட்சியாளர்கள் ஏதாவது வழிகாட்டுவார்களா என்று கேட்டால், இவர்களை நிலத்தைவிட்டு வெளியேற்றினால் போதும் என்ற முடிவுக்கு ஆட்சியாளர்கள் வந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
செல்வ வரி குறைப்பு ஏன்?
உழைக்கும் மக்களுக்கும், எளிய மக்களுக்குமான ஒதுக்கீடுகள் ஏறத்தாழ ரூ. 3,000 கோடிவரை குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பெரு நிறுவனங்களுக்கான வரிகளைக் குறைத்தும், செல்வ வரியைக் குறைத்தும் பெருநிறுவனங்களுக்கான வாய்ப்பை வரைமுறையற்று வழங்கியுள்ளனர். இது மட்டும் ரூ. 8,325 கோடி.
இதன் மூலம் பெருமளவு பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டைக் கூட்ட முடியும் என்று நினைக்கின்றனர். இதுவரை பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கிய வேலைவாய்ப்புகள் என்ன? அவர்களால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் எத்தனை பேர், அவை எவ்வளவு இயற்கை வளங்களைச் சூறையாடி உள்ளன என்பது போன்ற வெள்ளை அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகி இருக்கிறதா?

Friday, March 13, 2015

இனம் ஜாதி மதம் இல்லாத இந்தியா

நடைமுறையில் சாதி அழிவில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன?

தமிழகத்தில் சாதிகளுக்கு எதிரான சிலம்பங்கள் சுற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், சுற்றுபவர்கள் காற்றில் சுற்றுகிறார்கள். எதிரில் யாரும் இருக்கக் கூடாது என்ற கவனத்தோடு சுற்றுகிறார்கள். யாரைக் கேட்டாலும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், எனது சாதியைத் தவிர என்ற பதில் சொல்லாமல் விடப்பட்டாலும் கேள்வி கேட்பவருக்கு அதுதான் பதில் என்பது எளிதாகப் புரிந்துவிடும். சாதிகளுக்கு எதிராகப் பல ஆண்டுகளாக வலுத்த குரல்கள் எழுந்திருக்கின்றன. இந்தக் குரல்களுக்குச் சொந்தக்காரர்களில் பலரை நாம் ‘வானுறை தெய்வத்திற்கு’ நிகராக வைத்திருக்கிறோம். ஆனால், சாதி நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது.

நான் அலாஸ்கா சென்ற கப்பலில் என்னுடன் இரு இந்தியப் பயணிகள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் டாக்டர். கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு அவரது மூதாதையர்கள் குஜராத்திலிருந்து சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து இவர் கனாடாவில் குடியேறியிருக்கிறார். மூன்று பெண்கள் அவருக்கு. ஒரு பெண் அவர் சாதிப் பையனையே மணம் செய்திருக்கிறார். ஒருவர் திருமணம் ஆகாதவர். மூன்றாமவர் வெள்ளையர் ஒருவரை மணந்துகொண்டதில் டாக்டருக்கு ஏக வருத்தம். “அங்கே கருப்பர் கையில் அகப்படக் கூடாதென்று இங்கு வந்தால், இங்கே வெள்ளைக்காரன் கையில் அகப்பட்டுக்கொண்டாள்.” மூன்றாவது பெண்ணுக்குத் தனது சாதியில் மும்முரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இரண்டாவது பயணி தமிழர். 50 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்கா சென்றவர். தனது பெண் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதைப் பெருமையாகச் சொன்னார். “எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். பையன் நம்மவனா அமைஞ்சதுல.” நாம் எங்கு இருந்தாலும் எங்கு சென்றாலும் சாதி நம் பின்னால் நிழல் போலத் தொடர்கிறது. நாமும், தொடர்கிறதா என்பதைத் திரும்பிப் பார்த்து, தொடர்கிறது என்று தெரிந்துகொள்வதில் மகிழ்ச்சிகொள்கிறோம்.

அம்பேத்கர்

அருந்ததி ராய் அம்பேத்கரின் ‘சாதி ஒழிப்பு’ புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில், சாதிகள் ஒழிய வேண்டுமென்றால் அம்பேத்கரைப் படிக்க வேண்டும் என்கிறார். அம்பேத்கர் அந்தப் புத்தகத்திலேயே சாதி ஒழிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை காந்திக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார்.

1. சாதி, இந்துக்களை அழிவின் பாதையில் இட்டுச் செல்கிறது.

2. இந்து மதம் சுதந்திர, சமத்துவ மற்றும் சகோதரத்துவக் கொள்கைகளின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
3. இது நடக்க வேண்டுமானால் இந்து மதம் சாதிக்கும் வருணத்துக்கும் ‘புனித ஒப்புதல்’ தருகிறது என்ற எண்ணம் ஒழிய வேண்டும்.

4. சாதியும் வருணமும் ஒழிக்கப்பட வேண்டுமென்றால், சாஸ்திரங்கள் கடவுளால் கொடுக்கப்பட்டவை என்ற எண்ணம் கைவிடப்பட வேண்டும்.

அம்பேத்கர் இதை எழுதியது கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று எந்தக் குறிப்பிடத் தக்க மதத் தலைவரும் சாதிக்கு இந்து மதம் ஒப்புதல் தருகிறது என்று வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். சாஸ்திரங்கள் கடவுளால் கொடுக்கப்பட்டவை என்று அவர்களில் சிலர் சொன்னாலும், சாஸ்திரங்கள் சொன்னவற்றை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடமிருந்து - குறிப்பாக தமிழ் மக்களிடமிருந்து - சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்படிக் கடைப்பிடிப்பவர்கள் தனியாக அறியப்படுவதே அவர்கள் சாதாரண மக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதற்குச் சான்று. அவர்களைப் பழமையின் எச்சங் களாகவே சாதாரண மக்கள் கருதுகிறார்கள். அரசியல் சட்டம் நமக்குக் கொடுத்திருக்கும் அடிப்படை உரிமை களும் இந்து மதச் சட்டங்களும் இந்துக்களின் எல்லாச் சாதிகளையும் ஒரே தட்டிலேயே வைத்திருக்கின்றன. ஆனால், நடைமுறையில் சாதி அழிவில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன?

சாதியின் காரணம்

தூய்மை-தீட்டுச் சடங்குகள் கடைப்பிடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சாதிய அடுக்குநிலை இருந்திருக்கலாம். இதில் ஒவ்வொரு சாதியின் இடமும் அடையாளமும் ஏறத்தாழத் தெளிவாக அறியப்பட்டிருக்கலாம். சமூகவியலாளர்கள் இடையே இதைப் பற்றிப் பல கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன. ஆனால், இன்றைக்கு ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவரும் சாதிய அடுக்கில் தனது சாதியின் இடம் என்ன என்பதைவிடத் தனது சாதியின் அடையாளம் மற்றும் பெருமைகள் என்ன என்பதை அறிவதிலும் அவற்றைப் பரப்புவதிலுமே கவனம் செலுத்துகிறார்கள். இது ஏறத்தாழ எல்லா சாதிகளுக்கும் பொருந்தும். பிராமணர்களில் சிலர் தாங்கள்தான் உயர்ந்த சாதி என்று தங்களுக்குள்ளேயே சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால், 99% மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவே, அவர்கள் உயர்வு-தாழ்வு சர்ச்சையில் இறங்குவதைவிடத் தங்களது அடையாளங்களில் மிகுந்த நம்பிக்கை கொள்ளவே முயல்கிறார்கள். இது ஒவ்வொரு சாதியிலும் வெவ்வேறு வகையில் நிகழ்கிறது.

அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள, ஒவ் வொரு சாதியினரும் தங்கள் கலாச்சாரப் பிம்பங்களை யும் சடங்குகளையும் மறுபார்வை செய்துகொண்டே இருக்கின்றனர். பிம்பங்களும் சடங்குகளும் காலத்துக் கேற்ப மாற்றம் அடைந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அவை அந்தந்த சாதியைச் சேர்ந்தவையாகவே இருக் கின்றன. சில பிம்பங்களும் சடங்குகளும் எல்லாச் சாதியினருக்கும் பொது என்று சொல்லப்பட்டாலும், அவற்றுக்கு சாதி சார்ந்த தெளிவான அடையாளங்கள் இருக்கின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டின் எந்த வைணவக் கோயிலுக்கும் ‘தென்கலை’, ‘வடகலை’ அடையாளங்கள் இருக்கும். வழிபாட்டு முறைகளில் கடைப்பிடிக்கப்படும் சில நுட்பமான வேறுபாடுகள் அந்த அடையாளங்களை அறிவித்துக்கொண்டே இருக்கும். இதைத் தவிர, சாதி எந்த விதத் தடையுமின்றி இயங்குவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

கலப்புத் திருமணங்கள்

அம்பேத்கர் தன்னுடைய ‘சாதி ஒழிப்பு’ புத்தகத்தில் சாதியை ஒழிக்க வேண்டுமானால் கலப்புத் திருமணங்கள் செய்வதுதான் ஒரே வழி என்று குறிப்பிடுகிறார். இதை பெரியார் சொல்லியிருக்கிறார். காந்தியும் பின்னால் இத்தகைய திருமணங்களை முழுவதும் ஆதரித்திருக்கிறார். இந்தியாவில், சுதந்திரத்துக்குப் பின் தோன்றிய எந்தப் பெரிய தலைவரும் சாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லியதாக எனக்குத் தெரியவில்லை. சட்டங்களும் திருத்தப்பட்டுவிட்டன. சாதிக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கணக்கிலடங்காதவை. ஆனாலும், கலப்புத் திருமணங்கள் அதிகம் நடப்பதாகத் தெரியவில்லை.

2005-ம் ஆண்டு இந்தியா முழுவதும் மிகப் பெரிய கணக்கெடுப்பு (பெண்களுக்கு மத்தியில்) நடத்தப்பட்டது. அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி தெளிவானது: உங்கள் கணவர் நீங்கள் பிறந்த சாதியைச் சேர்ந்தவரா? கொடுத்த பதில்களை ஆராய்ந்ததில் இந்தியா முழுவதும் கலப்புத் திருமணங்களின் சதவீதம் 1981-ல் 3.5 ஆக இருந்தது 2005-ல் 6.1 ஆக உயர்ந்திருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது. அதாவது, வருடத்துக்கு 0.1% கலப்புத் திருமணங்கள் அதிகரித்திருக்கின்றன. இதே நிலைமை நீடித்தால், இந்தத் திருமணங்கள் 50% அதிகரிப்பதற்கு ஏறத்தாழ 500 ஆண்டுகள் எடுக்கும்! தமிழ்நாட்டின் நிலைமை மிக மோசம். கலப்புத் திருமணங்களின் சதவீதம் 2005-ம் ஆண்டு 2.2% மட்டுமே. கலப்புத் திருமணம் அதிகம் நடக்கும் முதல் மூன்று மாநிலங்கள் - பஞ்சாப் 12.2%, மேற்கு வங்கம் 9.3%, குஜராத் 8.2%. 1,000 ஆண்டுகளுக்குப் பின்னும் தமிழ்த் திருநாட்டில் சாதிகள் வலுவாக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனாலும், 1,000 ஆண்டுகளுக்குப் பின்னும் ‘பெரியார் பிறந்த மண்’ என்று சொல்லிக்கொண்டிருப்போம் என்பது நிச்சயம்.

பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

பின்குறிப்பு: Journal of Comparative Family Studies என்ற இதழில் வெளியான ‘Exploring the myth of mixed marriages’ என்ற ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில புள்ளிவிவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Saturday, March 7, 2015

உழவர்களை இறுக்கும் சுருக்குக் கயிறு

இந்திய நாட்டின் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகம் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய உழவர்களில் 52 சதவீதம் பேர் கடனில் தவிக்கின்றனர். அவர்களுடைய சராசரி கடன் குடும்பத்துக்கு ரூ. 47,000 அளவுக்கு இருப்பதாகவும், அவர்களுக்குச் சாகுபடி மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ. 36,972 மட்டுமே என்றும் கூறுகிறது.
இந்த அறிக்கையின் பொதுவான கருத்தை ஏற்றுக்கொண்டாலும், கடன் பெற்றுள்ள உழவர்களின் எண்ணிக்கை குறைவாகக் காட்டப்பட்டுள்ளதாக வேளாண்மைப் பொருளியல் வல்லுநரான தேவிந்தர் சர்மா கூறுகிறார்.
ஏறத்தாழ 80 சதவீதம் குடும்பங்கள் கடன் வலையில் சிக்கி இருப்பதாகக் கணக்கீடுகள் கூறுகின்றன. என்னுடைய தனிப்பட்ட களப் பயணங்களின்போது கண்ட உண்மை என்னவென்றால் 100 சதவீதம் உழவர்கள், குறிப்பாக வேளாண்மையை மட்டுமே நம்பியுள்ள உழவர்கள் கடனில் இருப்பதைக் காண முடிந்தது.
இன்னும் சொல்லப்போனால் பசுமைப் புரட்சியில் ஈடுபட்ட இந்திய உழவர்கள் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து கடனிலேயே செத்தும் போகின்றனர்.
கடன் மட்டுமே மிச்சம்
ஆந்திர உழவர்களில் 92% குடும்பங்களும் அடுத்துத் தமிழகத்தில் 82.5% வேளாண்மைக் குடும்பங்களும் கடன்பட்டுள்ளன. இந்தக் கடன் கணக்கில் நிறுவன ரீதியான கடன்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, வங்கிகள் போன்றவற்றில் கடன் பெற்றவர்கள் மட்டுமே வெளியே தெரிய வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் பெரிய, செல்வாக்குள்ள பண்ணையாளர்கள். சிறு குறு நிலவுடைமையாளர்கள், குறிப்பாக மானாவாரி வேளாண்மையில் ஈடுபடுபவர்கள் கணக்கிலேயே வருவதில்லை.
இவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ள விளிம்புநிலை மக்கள். பொருள்களைக் கைமாற்றித் தரும் தரகு மண்டிகளிலும், ரசாயன - உரப் பூச்சிக்கொல்லிக் கடைக்காரர்களிடமும், இன்னும் பலர் கந்துவட்டிக்காரர்களிடம்தான் இவர்கள் பொதுவாகக் கடன் வாங்குகின்றனர். முதலில் கூறிய பெரிய உழவர்களின் கடன் பெரிதும் வாராக்கடன்களாக இருக்கின்றன, அல்லது தள்ளுபடி செய்யப்படுகின்றன.
விவசாயம் வேண்டாம்
கார்ப்பரேட் பெருங்குழு மக்களுக்குச் செய்யும் தள்ளுபடியைக் காட்டிலும், இது ஒன்றும் பெரியது அல்ல என்றாலும், சிறு-குறு உழவர்களின் நிலை மிகவும் கொடுமையானதாக உள்ளது. ஆகவே, இவர்கள் எப்படியாவது வேளாண்மையைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று தவிக்கின்றனர். இவர்களுக்கு இதைத் தவிர வேறு தொழில் செய்யும் திறனோ, தேவைப்பட்டால் மற்றவர்களை எளிதில் ஏமாற்றி வேறு தொழில் செய்யும் சாதுரியமோ இல்லாத காரணத்தால் வேளாண்மையில் உழன்றுகொண்டு இருக்கின்றனர்.
இதையும் மாதிரிக் கணக்கெடுப்புக் குறிப்பில் குறிப்பிடுகின்றனர். அதாவது 37 சதவீதம் மக்கள் வேளாண்மையை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளதாக அது தெரிவிக்கிறது.
கைகழுவும் அரசு
அது மட்டுமல்ல. நேரடியாக உழைக்கும் உழவர்களை வெளியேற்றிவிட்டு அல்லது அவர்களாகவே வெளியேறச் செய்துவிட்டுப் பெருங்குழுமக் கும்பணி வேளாண்மையை ஊக்குவிக்கும்விதமாக காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதாவது வேளாண்மைத்துறையில் இந்தியப் பொதுத் துறையின், அரசுத் துறையின் முதலீடு கடுமையாகக் குறைக்கப்பட்டுவருகிறது.
அதேநேரம் பெரும் குழும நிறுவனங்களின் முதலீடு அசுர வேகத்தில் அதிகரித்துவருகிறது. 1980-களில் பொதுத்துறை முதலீடு ரூ. 13,174 கோடி. அதுவே தனியார் துறை முதலீடு ரூ. 15,384 கோடி. 2008-9-ம் ஆண்டளவில் பொதுத்துறை முதலீடு ரூ. 24,452 கோடி, தனியார் துறை முதலீடு ரூ. 1,14,145 கோடி. அதாவது கூட்டிக் கழித்துப் பார்த்தால் தனியார் துறை முதலீடு 2.5%-ல் இருந்து 52% ஆக உயர்ந்துள்ளது.
அதாவது பெரும்குழும நிறுவனங்களின் கைகளில் வேளாண் துறை போய்விட்டது தெரிகிறது. அத்துடன் அரசின் பாதுகாப்பு அல்லது பங்களிப்பு மிகவும் குறைவதைக் காண முடிகிறது. நிதி ஒதுக்கீடுகள் மற்றத் துறைகளைவிட மிக மோசமாகக் குறைந்துள்ளது. 2014-ம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட வேளாண் துறைக்குக் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தேவிந்தர் சர்மா குறிப்பிடுகிறார்.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 34,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; வேளாண்மைக்கு ரூ. 31,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர். 1950-களில் இந்தியா ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை 55.6 சதவீதம். அதுவே 2009-ம் ஆண்டளவில் 15.7 சதவீதம். அப்படியானால் இந்திய வேளாண்மையைக் காப்பாற்றப்போவது யார்?
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com