Friday, December 20, 2013

உலகின் மாசுபட்ட நதிகள் பட்டியலில் முந்தியது பாலாறு! - வேதனை சூழலில் வேலூர் மக்கள்

மனிதன் குடிப்பதற்கு உகந்த ஒரு லிட்டர் குடிநீரில் நைட்ரேட், சோடியம் தலா 20 மில்லிகிராம், ப்ளோரைடு, ஈயம் தலா ஒரு மில்லி கிராம் - மேற்கண்ட அளவுக்கு கீழே இருக்க வேண்டும். இதுவே 250 முதல் 300 டி.டீஎஸ். அளவுள்ள மனிதன் குடிப்பதற்கு உகந்த குடிநீர். ஆனால், பாலாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மக்கள் இந்த அளவுள்ள தண்ணீரை குடித்து சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. சென்னை பெருநகர வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MIDS) பேராசிரியர் ஜனகராஜன் பாலாறு தொடர்பாக நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவரது ஆய்வில், “உலகில் குடிநீர் பயன்பாட்டில் உள்ளவற்றில் மிகவும் மாசுபட்ட 10 நதிகளில் முதலிடம் வகிக்கிறது பாலாறு. வேலூர் மாவட்ட பாலாற்றில் சுமார் 800 தோல் தொழிற்சாலைகளின் குரோமியம் கழிவுநீர் கலக்கின்றன. பாலாற்றில் மொத்தம் 617 ஆற்று ஊற்று கால்வாய்கள் (Spring channels) இருந்தன. பாலாற்றில் இருந்து விவசாய நிலங்களின் பாசனத்துக்காக வரும் கால்வாய்கள் இவை. இன்று இந்த கால்வாய்கள் முழுவதுவமாக குரோமியம் கழிவுகளால் அழிந்துவிட்டன.
குரோமியம் உப்பு
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை தொடங்கி காவேரிப்பாக்கம் வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வறண்டு குரோமியம் உப்பு பூத்துள்ளது. வேலூர் மாவட்டத்தின் 46 ஊர்களில் 27,800 கிணறுகளின் தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றவை ஆகிவிட்டன. இந்தத் தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
வேலூரில் ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களிடம் குடிநீரைக் காய்ச்சிக் குடிப்பது உள்ளிட்ட குடிநீர் குறித்து எவ்வித விழிப்புணர்வும் இல்லை. இதுகுறித்து காவிரி நீர் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சரவணபாபு, “தீமை விளைவிக்கும் நுண்ணுரியிகள் கலந்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நோய்களை மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், குரோமியம் கலந்த தண்ணீரால் என்ன நோய் வந்திருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. குரோமியம் கலந்த தண்ணீரால் பல வியாதிகள் உண்டாகும்.
பிறக்கும் குழந்தைகளுக்கும் இதன் நோய் எதிரொலிக்கும். ப்ளோரைடு தாக்குதலால் எலும்புகள் வலுவிழப்பதுடன் பற்கள் அரிக்கப்பட்டு மஞ்சள் நிறமாகிவிடும்” என்கிறார்.
தேங்காய் வளர்ச்சி குறைவு
பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான காஞ்சி அமுதன், “வேலூர் மாவட்டத்தின் 90 சதவீத விவசாயம் மறைமுகமாக பாலாறையும் நேரடியாக கிணற்றுப் பாசனத்தையும் நம்பிதான் இருந்தது. ஆனால், தோல் கழிவுகளால் பாலாறு விஷமானதால் நிலத்தடி நீரும் விஷமாகி அனைத்துக் கிணறுகளும் பயன்படுத்த தகுதியில்லாதவை ஆகிவிட்டன. தண்ணீர் மட்டுமல்ல... கிணற்றில் போடப்பட்டிருக்கும் மோட்டார் உள்ளிட்ட இரும்பு குழாய்களும் சில மாதங்களியே துருப்பிடித்து உதிர்ந்துவிடுகின்றன.
கிணற்றுக்கு அருகில் ஒரு சைக்கிளை ஒரு மாதம் நிறுத்திவைத்தால் சைக்கிள் துருப்பிடித்துவிடும். ஒருகாலத்தில் வேலூர் மாவட்டத்தில் தென்னை விவசாயம் அமோகமாக இருந்தது. இன்றைக்கு தென்னை மரங்கள் குலை தள்ளுவதே அபூர்வமாகிவிட்டது. அப்படியே வந்தாலும் தேங்காயின் வளர்ச்சி சுமார் 60% குறைந்துவிட்டது.” என்றார்.ரூ.10 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி
வேலூர் மாவட்டத் தோல் தொழிற்சாலைகளில் தயாராகும் தோல் பொருட்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி கிடைப்பதாக மத்திய அரசு குறிப்பிடுகிறது. ஆனால், சுற்றுச்சூழல் சார்ந்த பொருளாதார வல்லுநர்களோ ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தாலும் இன்னொரு பக்கம் கழிவு நச்சு பாதிப்பு மூலமும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறு உருவாக்கம் செய்தல், இயற்கை வளம், மனித வளம் பாதிப்பு ஏற்படுதல் ஆகியவற்றாலும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தோல் தொழிற்சாலை தொழிலை Dirty industry பட்டியலில் வைத்துள்ளன. அதனால்தான், அந்த நாடுகள் தோல் பொருட்களை தயாரிக்காமல் இங்கிருந்து கொள்முதல் செய்கின்றன.

Thursday, December 19, 2013

ஆந்தைகளுக்கு ஆபத்து

எங்கள் வீட்டிற்கு முன்புறமுள்ள புங்கை மரத்துக்கு ஆந்தை ஜோடி ஒன்று வர ஆரம்பித்துள்ளது. மாலை இருள் கவிழும் நேரத்தில் அவை குரல் கொடுக்கத் தொடங்கும். பண்டிட் ஹரிபிரசாத் செளராஸியா கச்சேரி ஆரம்பிக்கும் முன் புல்லாங்குழலை ஊதிஊதிப் பார்ப்பது போன்ற மனதைக் கவரும் ஒலி. டார்ச் ஒளியைப் பொருட்படுத்தாமல் இவை மாறிமாறிக் குரலெழுப்பும் அழகை, நாங்கள் அருகிலிருந்து பார்க்க முடிகின்றது. நம் நாட்டிலுள்ள ஆந்தை வகைகளில் மிகச் சிறியது இது (Scops owl), புல்புல் அளவுதானிருக்கும்.
சாதாரணமாகக் கிராமங்களருகே காணக்கூடிய, மரப்பொந்துகளில் வாழும் சிறிய புள்ளி ஆந்தையைப் போல் முப்பது வகை ஆந்தைகள் நம் நாட்டில் இருக்கின்றன. இரவில் சஞ்சரிக்கும் பறவையாதலால், மக்கள் இவற்றைப் போற்றுவதில்லை. கவிஞர்கள் பாடிச் சிறப்பிப்பது இல்லை. ஆனால் கூர்ந்து கவனிப்பவர்களை அவை ஈர்த்துவிடும்.
எல்லா ஆந்தைகளுமே இரவில் நடமாடும் வேட்டையாடிகள். மற்ற பறவைகளைப் போலல்லாமல் ஆந்தையின் இரு கண்களும் மனிதர்களின் கண்களைப் போல முன்புறம் நோக்கி அமைந்திருக்கின்றன. ஆந்தையால் தன் தலையை முழுவதுமாகப் பின்புறம் திருப்ப முடியும். சக்தி வாய்ந்த செவிகளின் மூலம், ஒலி வரும் தூரத்தை வைத்தே இரை இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கணிக்க இப்பறவையால் முடியும். குறைந்த வெளிச்சத்திலும் பார்க்கக்கூடிய பார்வைத் திறன், மெல்லிய இறகுகள் புசுபுசுவென்று நிறைந்திருப்பதால் ஓசையின்றிப் பறக்கக்கூடிய ஆற்றல், கூரிய, வலிமையான நகங்கள், வளைந்த கூர்மையான அலகு, ஆகியவற்றைக் கொண்டு ஆந்தைகள் திறமைமிக்க இரைகொல்லிகளாக இயங்குகின்றன. இந்த இரவாடிப் பறவையின் வலிமையைத் திருவள்ளுவர் சுட்டிக்காட்டியுள்ளார்
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (481)
முதுமலை போன்ற காடுகளில் வாழும் காட்டாந்தை, முயலை எளிதாக அடித்து உண்ணும். மாலை வேளைகளில் மரங்களில் அடையவரும் மயிலைக்கூடக் கொல்லும் வலுவுடையது இந்த ஆந்தை. நீர்நிலைகளருகே வசிக்கும் இன்னொரு வகை ஆந்தை மீன், தவளை, நண்டுகளைத் தனது கால்களால் பிடித்து இரையாக்கி உயிர் வாழ்கின்றது. பயிர்த் தோட்டங்கள், வயல்களருகே இருக்கும் வெண்ணாந்தைகளுக்கு (கூகை) அதிகமாக இரையாவது எலிகள்தான்.
நம் நாட்டில் உணவு தானியங்களைச் சேதம் செய்வதில் முதலிடம் வகிக்கும் எலிகளைக் கொன்று, இந்த ஆந்தைகள் விவசாயிகளுக்குப் பெரும் உதவி செய்கின்றன. உலகின் பல இடங்களில் தோட்டங்களில் வெண்ணாந்தைகளை ஈர்க்கச் சிறிய மரப்பெட்டிகளை மரத்தில் கட்டி விடுகிறார்கள். இனப்பெருக்கக் காலத்தில் ஓர் ஆந்தை ஒரே இரவில் ஐந்தாறு எலிகளைக் கொன்றுவிடும்.
இன்று ஆந்தைகளின் எண்ணிக்கை குறையும் ஆபத்து வந்திருக்கின்றது. மாந்த்ரீக சடங்குகளில் ஈடுபடுத்தப்படுவதற்காகவும் பாரம்பரிய மருத்துவத்துக்காகவும் பல்வேறு இன ஆந்தைகள் ஆயிரக்கணக்கில் பிடிக்கப்பட்டுக் கொல்லப்படுவதை பற்றி அறிய முடிகிறது. செல்வத்தின் கடவுளான லக்ஷ்மியின் வாகனம் என்றாலும்கூட, ஆந்தை என்றதுமே அச்சமும் அருவருப்புமே மக்கள் மனதில் உருவாகிறது. மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் பேய், பிசாசுகளுடன் தொடர்புபடுத்தி இவை வெறுக்கப்படுகின்றன.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள பறவை ஆர்வலரான என் நண்பர் ஒருவர், அடுத்த வீட்டு மாடியில் உள்ள ஒரு பொந்தில் வெண்ணாந்தை ஒன்று குடியிருப்பதை ஜன்னல் வழியாக எனக்குக் காட்டினார். அது அங்கிருப்பது அந்த வீட்டுக்காரருக்குத் தெரிந்துவிட்டால் விரட்டிவிடுவாரோ என்று அஞ்சினார்.
2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெதர்லாந்தில் ஆந்தைகளைப் பாதுகாக்க நடத்தப்பட்ட பன்னாட்டு மாநாடு ஒன்று, இந்தப் பறவைகளின் எண்ணிக்கை உலக அளவில் குறைந்துவருவதைப் பதிவு செய்தது. காட்டுயிர் சார்ந்த கள்ள வணிகத்தைக் கண்காணிக்க, பன்னாட்டளவில் இயங்கி வரும் TRAFFIC என்ற அமைப்பு இந்தியாவில் நடத்திய ஒரு மதிப்பாய்வின்படி, ஆயிரக்கணக்கான ஆந்தைகள் இன்றும் விற்பனைக்காகப் பிடிக்கப்படுகின்றன. பாரம்பரியமாகக் காட்டுயிர்களைப் பிடித்து வாழ்ந்த மக்கள் குழு இந்த வணிகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்களில் இந்தப் பழக்கம் அதிகம் நிலவுகிறது. இங்கு நடக்கும் பல கிராமத்துச் சந்தைகளில் ஆந்தை வியாபாரம் நடக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. சில இடங்களில் இவை பலியாகவும் கொடுக்கப்படுகின்றன. வேறு சில இடங்களில் பில்லி சூனியம் போன்ற மாந்த்ரீக சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டு மருத்துவத்துக்காகவும் ஆந்தைகள் கொல்லப்படுகின்றன. ஆந்தைக் கூடுகளைக் கண்டுபிடித்து, குஞ்சுகளைப் பிடித்துவிடுகிறார்கள். அல்லது கீழே தரையில் கிடக்கும் எச்சத்தின் மூலம் ஆந்தை அடிக்கடி வந்தமரும் கிளையை அறிந்து, அதில் ஃபெவிகால் போன்ற பசைகளைத் தடவி இவற்றை எளிதாகப் பிடித்து விடுகிறார்கள். அதிகமாகப் பிடிபடுபவை புள்ளி ஆந்தைகளும் வெண்ணாந்தைகளும்தான். ஆனால் அதிக விலைக்குப் போவது உருவில் பெரிய கோட்டான். ரூபாய் ஐந்தாயிரம்வரை போகிறது என்கின்றனர் வனத்துறையினர். வீட்டில் குடியிருப்பவரை காலி செய்யக் கால்கள், தேர்தலில் வெற்றி பெறத் தலை, எதிர்காலத்தைக் கணிக்க ஈரல், வேகமாகப் பயணிக்க எலும்புகள் என ஆந்தையின் ஒவ்வொரு உடற்பாகமும் சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.
சரி, எப்படித்தான் ஆந்தையைப் பாதுகாக்க முடியும்? முதலில் இந்தப் பறவையினம் பற்றிய அச்சம், ஆதாரமற்ற தப்பெண்ணங்கள் ஆகியவற்றைப் பொதுமக்களிடம் இருந்து அகற்ற வேண்டும். காட்டுயிர் பற்றிய அறிவு வளர வேண்டும். எல்லா வகை ஆந்தைகளும் காட்டுயிர் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டவை. அவற்றைப் பிடிப்பதோ கூண்டில் அடைத்து வைத்திருப்பதோ சட்டத்துக்குப் புறம்பானது. சுற்றுச்சூழலைச் சமநிலையில் வைத்திருப்பதற்கும், வேளாண்மை, தானியப் பாதுகாப்பிலும் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அது மட்டுமல்ல; மாலை நேரத்தில் வீட்டருகே வந்து உங்கள் வாழ்க்கைக்கும் அவை செறிவூட்டக் கூடும்.

Wednesday, December 18, 2013

வாழ்வு கொடுத்த கற்பூர மரங்கள் அகற்றத்தால் வாழ்வாதாரம் இழக்கும் தொழிலாளர்கள்!

நீலகிரியில் பயிரிடப்பட்டுள்ள கற்பூர மரங்கள் கற்பூர இலைகளை சேகரிக்கும் தொழிலாளர்கள்
நீலகிரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் திரும்பும் போது தங்கள் நினைவுகளோடு திரும்பக் கொண்டு செல்வது வர்க்கி மற்றும் நீலகிரி தைலம்.
தலைவலியிலிருந்து நிவாரணம் பெற பயன்படுத்தும் நீலகிரி தைலம் என்று அழைக்கப்படும் யூகலிப்டஸ் தைலத்தின் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் நீலகிரி தைலம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
எங்கு நோக்கினும் சதுப்பு நிலங்களும், மலை முகடுகளையொட்டிய பகுதிகளில் சோலைக் காடுகளுமே நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக இருந்தது.
ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் வரை நீலகிரி தனது சிறப்பு அம்சங்களை இழக்காத நிலையில், நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கத்தால் உணவுக்காகவும், கால்நடைகளின் தேவைக்காகவும் சதுப்பு நிலங்களை அழிக்கும் பணி தொடங்கப்பட்டது.
குறிப்பாக, நீலகிரியிலிருந்த சதுப்பு நிலங்களின் பரப்பை குறைக்கும் வகையில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டன. அதில் ஓர் அம்சமாக ஆஸ்திரேலியாவிலிருந்து யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டு, சதுப்பு நிலங்களையொட்டியுள்ள பகுதிகளில் நடவு செய்யப்பட்டன. யூகலிப்டஸ் மரத்தின் வேர்
நிலத்தின் அதிகபட்ச ஆழத்திற்கு சென்று நீரை உறிஞ்சிவிடும் என்பதோடு, சதுப்பு நிலப் பகுதிகள் நாளடைவில் சராசரி வாழ்க்கைக்கேற்ற தரத்திற்கு வரும் என்பதே அவர்களது நம்பிக்கையாக இருந்தது. இது நாளடைவில் நடைமுறை வாழ்க்கைக்கும் வந்தது.
இந் நிலையில் நீலகிரியில் நிலத்தடி நீரின் அளவு குறைவதற்கு இங்குள்ள யூகலிப்டஸ் மரங்களே காரணம் என சுற்றுச்சூழலியலாளர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை முழுமையாக அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு யூகலிப்டஸ் தைலம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட கற்பூர தைலம் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.அப்துல் ரகுமான் கூறியது:
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம், மலைக் காய்கறி விவசாயம் போன்ற தொழில்களுக்கு இணையாக, சுற்றுலா மாவட்டம் என்ற பெயர் கிடைக்க காரணமாக உள்ள பல்வேறு அம்சங்களில் ஒன்றாக நீலகிரி தைலம் காய்ச்சும் தொழில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந் நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலரின் கருத்துகளுக்கு ஏற்ப மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதில்லை எனவும், இவை மண் சரிவை தடுப்பதற்கே பயன்படுவதாகவும் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்த பின்னரும் யூகலிப்டஸ் மரங்களை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை முழுமையாக அகற்றிய பின்னர் பல்வேறு இடங்களில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வந்தாலும் அவை தோல்வியையே கண்டுள்ளன.
எனவே, நீலகிரியின் இயற்கை வளத்தின் நலன் கருதியும், இங்குள்ள மக்களின் ஜீவாதார நலன் கருதியும் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் யூகலிப்டஸ் மரக்கன்றுகளை மீண்டும் நடவு செய்ய வேண்டும் என்றார்.
கற்பூர மரங்களை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் நீலகிரி தைலம் சந்தையில் விற்பனைக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
கலப்படத்தால் தொழில் நசிவு
கற்பூர இலைகளை சேகரித்து தைலம் காய்ச்சுவோருக்கு விற்கும் பணியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஈடுப்ட்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்களது குடும்பத்தை கவனிக்க கணிசமான வருவாய் கிடைக்கிறது.நீலகிரி தைலம் லிட்டர் ரூ.600 வரை விற்கப்படுகிறது. சீனா தைலம் மற்றும் கலப்படம் காரணமாக ஏற்கனவே இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. இந் நிலையில் கற்பூர மரங்களை அகற்றினால் பல்லாயிரம் பேர் வேலை இழப்பார்கள் என கற்பூர தைலம் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பயமுறுத்தும் பாதரசம் பயன்பாடு குறைக்கப்படுமா?

வெள்ளியை உருக்கி ஊற்றியது போல அழகாக இருக்கும் பாதரசம், பூமியில் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் அளவிட முடியாதவை. வெறும் 0.6 கிராம் பாதரசம், சுமார் 20 ஏக்கர் அளவுள்ள ஏரியை மாசுபடுத்தும் தன்மை கொண்டது. இதனால் மனிதர்களுக்கு நரம்பு மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மின்சாரம் இல்லாமல் ஒரு நிமிடம்கூட வாழ முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். இன்றைய தேதியில் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது அனல் மின்நிலையங்களில் நிலக்கரி எரிக்கப்படுவதன் மூலம்தான். உலகின் மிக முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள பருவநிலை மாற்றத்துக்கு நிலக்கரியை எரிப்பது முக்கியக் காரணம்.
நிலக்கரியில் இருந்து பாதரசம் வெளியாவது தற்போது கவனத்துக்கு வந்திருக்கிறது. ஐ.நாவின் அங்கமான 'ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்' சமீபத்தில் வெளியிட்ட ஆண்டு அறிக்கை இதைக் கூறுகிறது. நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதைக் குறைக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில்தான் நிலக்கரி பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்கள் அதிகம் உள்ளன.
காடுகளை அழித்தல், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமும் பாதரசம் வெளியாகிறது. அது மட்டுமல்லாமல், நம் தினசரி வாழ்வுடன் இணைந்த சில பொருட்களில் அது இருக்கிறது. குறிப்பாக மருத்துவக் கருவிகளான தெர்மாமீட்டர், ரத்த அழுத்தம் அறியும் கருவிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கருவிகள் பழுதடையும்போது கழிவாகத் தூக்கி எறியப்படுகின்றன. சுற்றுச்சூழலில் அவை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
கருவில் இருக்கும் குழந்தைகள், மன அழுத்தம், தற்கொலை எண்ணம், முடக்கு வாதம், சிறுநீரகம் செயலிழப்பு, அல்ஸெய்மர் நோய், பார்வை, பேச்சுத்திறன் பாதிப்பு, ஒவ்வாமை, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பாதரச மாசுபாட்டால் ஏற்படும். எனவே, பாதரசத்தைக்கொண்ட மருத்துவக் கருவிகளுக்கு மாற்றாக வேறு கருவிகளைப் பயன்படுத்த உலகெங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சென்னையில் உள்ள சென்டர் ஃபார் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸில் பணிபுரிந்து வரும் சுற்றுச்சூழல் ஆய்வாளர் ராஜேஷ் ரங்கராஜன் கூறுகையில், "பாதரசத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கச் சர்வதேச அளவில் அளவில் ‘மினமாட்டா ஒப்பந்தம்' கொண்டு வரப்பட்டது. அதன்படி 2020இல் உலகம் முழுவதும் பாதரசம் உள்ள பொருட்களின் பயன்பாட்டைக் கைவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதிதான் பாதரசம் உள்ள மருத்துவக் கருவிகளுக்குப் பதிலாக மாற்றுக் கருவிகளைப் பயன்படுத்தும் முயற்சி" என்றார்.
ஜப்பான் நகரமான மினமாட்டாவில் 1956ஆம் ஆண்டு முதன்முதலாகப் பாதரசத்தால் ஏற்படும் நோய் கண்டறியப்பட்டது. இதனால் பாதரசம் மூலம் உருவாகும் நோய்கள் 'மினமாட்டா நோய்' எனப்படுகின்றன. 2010ஆம் ஆண்டு 'மினமாட்டா ஒப்பந்தம்' ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானில் நடந்த சர்வதேச மாநாட்டில் 91 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
"இந்நிலையில், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, தமிழகத்தில் 5 அரசு மருத்துவமனைகளும், 9 தனியார் மருத்துவமனைகளும் பாதரசத்துக்குப் பதிலான மாற்று மருத்துவக் கருவிகளைப் பரிசோதனை முயற்சியாகப் பயன்படுத்தி வருகின்றன. இதில் நல்ல முடிவுகளும் கிடைத்துள்ளன. இந்த முயற்சி நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும்போது, குறைந்தபட்சம் மருத்துவத் துறையிலாவது பாதரசத்தின் பயன்பாட்டை நீக்க முடியும்" என்றார் ராஜேஷ் ரங்கராஜன்.