சமீபத்திய காட்டு பயணம் ஒன்றின் மாலை நேரத்தில் வாகனத்தை ஏழெட்டு யானைகள் மறித்துக்கொண்டன. வானம் இருட்டிக்கொண்டு வரப் பதற்றம் அதி கரித்தது. உடனே வாகனத்தில் இருந்து இறங்கி, மெல்ல யானைகள் முன்பாகச் சில அடிகள் வரை முன்னேறிச் சென்று சில ஒலிகளை எழுப்பினார் ‘தெங்குமரஹடா’ ராமசாமி. அடுத்த நிமிடமே வந்த சுவடு தெரியாமல் காட்டுப் பகுதிகளில் இறங்கி வழிவிட்டன யானைகள்.
ஒரே வழிகாட்டி
யார் இந்த ‘தெங்குமரஹடா’ ராமசாமி. தமிழகம் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரள, கர்நாடக மேற்குத் தொடர்ச்சி மலை வட்டாரச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கானுயிர் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வனக் கல்வி படிக்கும் மாணவர்கள் இடையே அவர் ஏகப்பிரபலம். ஏனெனில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரே வழிகாட்டி ‘தெங்குமரஹடா’ ராமசாமிதான்!
மாயாறு பள்ளத்தாக்கில் இருக்கும் தெங்குமரஹடா இவர் பிறந்த இடம். பள்ளி வாசனையே அறியாத இந்தப் பாமரன் உதவியால் கானுயிர் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் எத்தனையோ பேர். ராமசாமியிடம் பேசினோம்.
‘‘வேட்டை தடை செய்யப்படாத காலத்துல எங்க தாத்தமாரு, அப்பாரு எல்லோரும் வேட்டையாடிங்க. ஏழெட்டு வயசுலயே நானும் வேட்டைக்குப் போனேன். எத்தனையோ கடமானுங்க, புள்ளி மானுங்க, காட்டு மாடு, காட்டுப்பன்னி, நரி, உடும்பு, கருமந்தின்னு நாங்க வேட்டையாடாத சின்ன உசுருங்களே இல்லை. பெரிய உசுருங்க (யானை, புலி போன்றவை) கடவுள்ங்கிறதாலஅதுங்களை ஒண்ணும் செய்ய மாட்டோம்.
மரப்பொந்துதான் வீடு
சுமார் 15 வயசு வரைக்கும் வனப் பரப்புலதான் வளர்ந்தேன். வீடெல்லாம் கிடையாது. மரப்பொந்து, மரக்கிளை, குகையில படுத்துக்குவோம்.
சுமார் 30 வருஷம் முன்னாடி பறவையை ஆராய்ச்சியாளர் ஒருத்தர் காட்டுக்குள்ள அழைச்சிக்கிட்டுப்போகச் சொன்னார்.
அவர்தான் வேட்டையாடுறது தப்பு என்பதைப் புரியவச்சார். அன்னைக்கு வேட்டையை விட்டேன். அதுக்கு அப்புறம் யானை, புலி, கரடி, பறவைகள், ஏன்? பட்டாம்பூச்சி ஆராய்ச்சிக்குகூட நிறையப் பேரைக் காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போவேன். வனவிலங்குகள் கணக்கெடுப்புக்கு வனக் காவலர்களையும் காட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போனேன்” என்றார்.
புலிகள் கணக்கெடுப்பில்…
சமீபத்தில் புலிகள் ஆராய்ச்சியாளரான டாக்டர் நிக்ஸ்ன் குழுவினரைப் புலிகள் எச்சத்தை வைத்து எடுக்கப்படும் ஆராய்ச்சிக்காகத் தெங்குமரஹடா, மங்கலப்பட்டி, ஜீரகஹள்ளி, கடம்பூர், மாயாறு, ஹாசனூர், சத்தியமங்கலம் எனப் பல்வேறு வனப் பகுதிகளுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். வரும் டிசம்பரில் நடக்கவுள்ள புலிகள் கணக்கெடுப்பிலும் ராமசாமியின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
தேடி வந்து தாக்காது
“பொதுவா எந்த ஒரு விலங்குமே நம்மைத் தேடி வந்து தாக்காது. அதிலயும் புலி ரொம்ப ரகசியமா வாழுற கூச்ச் சுபாவமுள்ள விலங்கு. சிறுத்தை குழந்தைகளைத்தான் வேட்டை விலங்குன்னு தப்பா நெனைச்சு தாக்கும். கரடி கோபத்துலயும் பயத்துனாலயும் தாக்கும். காட்டு மாடு பயந்துபோய் ஓடும்போது முட்டுப் பட்டு சாகிறவங்க அதிகம். யானை குட்டியோடு இருக்கும்போதும் மனிதர்கள் மறிக்கும்போதும் அதோட வாழ்விடங்களை ஆக்கிரமிக்கும் போதும்தான் தாக்கும்” என்கிறார் தெங்குமரஹடா ராமசாமி.
பெரிய விலங்குகளை அப்புறப்படுத்த ராமசாமி சில பிரத்தியேகச் சமிக்கைகளையும் பாட்டிலைத் தரையில் உராய்வது, கற்களைத் தரையில் மற்றும் மரக்கிளைகளில் தட்டுவது போன்ற ஒலிகளையும் பயன்படுத்துகிறார். தாத்தா சொல்லிக்கொடுத்ததாம்!