Saturday, November 9, 2013

சிந்திக்க மட்டும் ஒரு "சிறு" கதை

அவர் ஒரு குயவர். அழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார் . அந்தவழியே சென்ற மற்றொருவர் 'இந்த ஆட்டை ஏன் கட்டி வைத்திருகிறாய் " என்று குயவரிடம் கேட்டார் .
'நான் கடவுளை மகிழ்விக்க இதை பலிதரபோகிறேன்" என்றார்
அப்படியா" எனக்கேட்டுவிட்டு அங்கிருந்த அழகிய பானைகளைஎல்லாம் ஒவ்வொன்றாய் போட்டு உடைக்க ஆரம்பித்தார் .
பதறிப்  போய் ஓடிவந்த குயவர் இறைந்து கத்தினார் .
அதற்க்கு "உனக்கு சந்தோசமாக இருக்குமே என்றுதான் உடைத்தேன்" என்றார் வந்தவர்
"நான் செய்த பானைகளை என் முன்னே உடைத்தால் எனக்கு எப்படி சந்தோசம் வரும்" என்றார் குயவர் கோவமாக
"நீ மட்டும் இறைவனின் படைப்பை அவர்முன்னே கொன்றால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்கிறாய் " என்றார் வந்தவர்
 

Friday, November 8, 2013

கண்ணப்பன்!

உறையூர் காவல் நிலையம் ஏரியாவில் படுபிஸியான டூ வீலர் மெக்கானிக் கண்ணப்பன். நகரின் பல பகுதிகளில் இருந்தும் இவரைத் தேடி வருகிறார்கள் வாடிக்கையாளர்கள். பைக் சத்தத்தை வைத்தே அதில் என்ன ரிப்பேர் என கண்டுபிடித்து சரி செய்து தருவது இவரது சிறப்பியல்பு. இத்தனைக்கும் இவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி.
“ஈடுபாடும் தன்னம்பிக்கையும் இருந்தால் முடியாதது எதுவுமே இல்லை’’ என்கிறார் கண்ணப்பன். நான்கு வயதில் வந்து தாக்கிய மூளைக்காய்ச்சல், அவரது பார்வையைப் பறித்துக்கொண்டு போனது யாருமே எதிர்பார்க்காத சோகம். ஆனால், அந்தக் குறையை வெளிக்காட்டாமல் எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன் துறுதுறுவென வேலை செய்கிறார். அவரிடம் பேசியபோது…
எனக்கு மீண்டும் பார்வை வர வாய்ப்பே இல்லைன்னு டாக்டர்கள் சொன்னதைக் கேட்டு அப்பாவும் அம்மாவும் அழுது புரண்டது இன்னமும் நெஞ்சில் நிழலாடுது. அன்னைக்கி அவங்க கதறிய கதறலும் சிந்திய கண்ணீரும்தான் இன்னைக்கி என்னைய இந்தளவுக்கு உயர்த்தி இருக்கு.
பார்வையில்லாம போனாலும் புள்ளைய நல்லா படிக்கவெச்சு முன்னுக்கு கொண்டுவரணும்னு அப்பாவும் அம்மாவும் நினைச்சாங்க. அதனால, பார்வையற்றோருக்கான பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டாங்க. ஆனா அங்க, டாய்லெட் சுத்தம் பண்ற வேலையும் கூட்டிப் பெருக்குற வேலையும் குடுத்ததால ஒரே வாரத்துல ஓடி வந்துட்டேன். அதோட படிப்புக்கு முழுக்குப் போட்டாச்சு. 15 வயசு இருக்கும்போது, செயற்கை வைரம் பட்டை தீட்டக் கத்துக்கிட்டேன். ஆனா, என்னோட நேரமோ என்னவோ.. அந்தத் தொழிலும் சீக்கிரமே நலிஞ்சு போச்சு.
வேலை இல்லாம உக்காந்து சாப்பிடுறது உறுத்தலா இருந்துச்சு. அதனால, நண்பனோட சைக்கிள் கடையில பஞ்சர் ஒட்டுற வேலையைப் பார்த்தேன். அதுல போதிய வருமானம் கிடைக்கல. எட்டு வருஷத்துக்கு முந்தி, டூ வீலர் மெக்கானிக் வேலையை கத்துக்கிட்டேன். என்னோட நண்பர் ஒருத்தர்தான் பொறுமையா எனக்கு தொழிலை சொல்லிக் குடுத்தாரு. அவர் மூலமா எல்லாத்தையும் கத்துக்கிட்டு நாலு வருஷத்துக்கு முந்தி, இந்த ‘மெக்கானிக் ஷாப்’பை ஆரம்பிச்சேன். எந்தக் கம்பெனியோட டூ வீலரா இருந்தாலும் அது ஓடுற சவுண்டை வைச்சே என்ன கோளாறுன்னு கண்டுபிடிச்சு சரி பண்ணிடுவேன்.
எல்லோரையும் போல நாமும் உழைத்துச் சம்பாதித்து, சொந்தக் காலில் நின்று குடும்பத்தைக் காப்பாத்தணும். அதைப்பார்த்து பெத்தவங்க சந்தோஷப்படணும் என்பதுதான் சின்ன வயசுல நான் எடுத்துக்கிட்ட சபதம். இப்போ நல்ல நிலைக்கு வந்துவிட்டேன். ஆனால், இதைப் பார்த்துச் சந்தோஷப்படுறதுக்கு அம்மா உயிருடன் இல்லை. மெக்கானிக் டிரெயினிங்ல இருக்கும்போதே அவங்க இறந்துட்டாங்க.
இந்தத் தொழில்ல வர்ற வருமானத்தை வைச்சு ஏதோ கஷ்டப்படாம கஞ்சி குடிக்கிறோம். சம்பாதிச்சு சொந்தமா ஒரு வீடு வாங்கணும். அடுத்ததா இன்னொரு ஆசை இருக்கு. இந்த மெக்கானிக் ஷாப்பை இன்னும் பெருசா விரிவுபடுத்தணும். அதுல என்னை மாதிரி பார்வையில்லாதவங்க ஐம்பது பேருக்கு தொழில் பயிற்சி குடுத்து, அவங்களோட வாழ்க்கைத் தரத்தை உயர்த்தணும். பார்வையற்றவங்களுக்கு படிகளா இருந்து உயரத்துல ஏத்திவிடணும். இதற்காகவே கல்யாண ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டேன்…’’ என்று சிரித்தபடி சொன்னார் கண்ணப்பன்.

தண்டனை


சாலை விதிகளை மீறும்போதெல்லாம் போலீஸ் நமக்கு தண்டனை வரி விதிக்கிறார்கள். பல நேரங்களில் நான் கவனித்திருக்கிறேன். பலர் தவறு செய்துவிட்டோம் என்கிற குற்ற உணர்வே இல்லாமல் தண்டனை வரி கட்டிக்கொண்டிருந்தார்கள். மாறாக சில இளைஞர்களின் முகத்தில் பெருமித மிடுக்கு வேறு!
வசதி படைத்த பல இளைஞர்களும் அரசியல் மற்றும் அதிகார குடும்பப் பின்னணி கொண்டவர்களும் தவறுகளை செய்ய தங்களுக்கு உரிமை உள்ளது என்று தாங்களாகவே கற்பிதம் செய்து கொண்டிருப்பார்கள் போல. தவறுகளை செய்துவிட்டு சிக்கும்போது தண்டனை வரி கட்ட முடியாது என்று வீம்புடன் சாலையில் காவல் துறையினருடன் வாக்குவாதம் செய்துகொண்டிருப்பார்கள். நடு இரவிலும் போன் அழைப்புகள் பறக்கும்.
மேற்கண்ட தண்டனை வரிகள் ஒரு ரகம். ஆனால், பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடம் தண்டனை வரி வசூலிப்பது கொடும் ரகம். சொல்லப்போனால் அது ஒரு திருட்டு, பகல் கொள்ளை, வழிப்பறி என்பேன். மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லை என்று ஒரு ஆசிரியர் நூதன தண்டனை ஒன்றைக் கொடுத்தார். தான் எழுதிய புத்தகத்தை கட்டாயமாக வாங்க வேண்டும் என்பதே அது. வேறு வழியின்றி மாணவர்கள் வாங்கினார்கள். அப்புறம் என்ன... வாங்கிய காசுக்கு வஞ்சனை இல்லாமல் அவரும் நூற்றுக்கு நூறு என மதிப்பெண்களை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
உண்மையில் எந்தெந்தத் தவறுகளுக்கு தண்டனை வரி உண்டோ.. அவை எல்லாம் தவறுகளே அல்ல என்ற சிந்தனை பெரும்பான்மை பொதுப் புத்தியில் ஆழ உறைந்துவிட்டிருக்கிறது. ஆனால், அது சரியான பாதை அல்ல; சமூகத்துக்கு ஆரோக்கியமானதும் அல்ல.
அமெரிக்காவில் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் தினம் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை குழந்தைகளை பார்த்துக்கொள்வார்கள். அதற்கு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கிறார்கள். பொதுவாக பெற்றோர்கள் மாலை 5 மணிக்கு மேல் வந்துதான் குழந்தைகளை அழைத்துச் செல்வார்கள். ஆனால், சரியாக 5 மணிக்கு வரவைக்க வேண்டும் அல்லது கூடுதல் காசு பார்க்க வேண்டும் என்று நினைத்த அந்த காப்பக நிர்வாகம், 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வரும் பெற்றோர்கள் கூடுதலாக 10 டாலர் தண்டனை வரி கட்டவேண்டும் என்று அறிவித்தது. ஆனாலும், அலட்டிக்கொள்ளவில்லை பெற்றோர்கள். எல்லாரும் 6 மணிக்கு வந்து 10 டாலர்கள் செலுத்தி புன்சிரிப்போடு குழந்தைகளை அழைத்துச் சென்றனர். அவர்களை பொறுத்தவரை 10 டாலர்கள் தண்டனை வரி அல்ல. ஒரு மணி நேரத்துக்கான காப்பகக் கட்டணம்.
இப்படித் தொடங்கும் மனோபாவம்தான் கடைசியில் காசு கொடுத்து தப்பு செய்துகொள்ளலாம் என்பதில் நிறைவடைகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணமாகத் தோன்றும். ஆனால், உலகின் மொத்த பொருளாதாரத்தில் கணிசமான பகுதி இப்படியான குற்றங்களை செய்யவும் அவற்றை மறைக்கவுமே புழக்கத்தில் இருக்கிறது என்பது தெரியுமா? ஒவ்வொருவரும் மனசாட்சிக்கு நேர்மையாக இருந்துவிட்டால் கணிசமான பொருளாதாரத்தை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மடை மாற்றிவிடலாமே நண்பர்களே.
பெற்றோர்கள்கூட குழந்தைகள் படித்தால் காசும் பொருளும் (புத்தகங்கள் விதிவிலக்கு) கொடுப்பதை தவிர்த்து, குழந்தைகளின் அறிவை மெச்சி போற்றச் செய்யுங்கள். குழந்தைகள் தவறு செய்தால் தவறை
உணரச் செய்யுங்கள். அதற்காக பணத்தைக் கொடுத்து தவறுகளை சரியாக்க நினைப்பது சரியல்ல

Thursday, November 7, 2013

கோள்கள், நட்சத்திரங்கள் ஏன் கோள வடிவிலேயே உள்ளன?


பெரும்பாலான கோள்கள், நட்சத்திரங்கள் போன்ற பெரிய விண்பொருள்கள் கோள வடிவிலேயே உள்ளன. கோள்களும் நட்சத்திரங்களும் இப்படி இருப்பதற்குக் காரணமாக இருப்பது இரண்டு விசைகள். இந்த இரண்டு விசைகளில் ஒன்றாக இருக்கும் ஈர்ப்புவிசை, மற்றொரு விசையை சமநிலைப்படுத்துகிறது.
நட்சத்திரங்களில் அடங்கியுள்ள பருப்பொருளை வெளிப்புறமாக இழுக்கும் வெப்ப அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் வகையில் ஈர்ப்புவிசை செயல்படுகிறது. அதேநேரம் கோள்களில், ஈர்ப்பு விசைக்கு எதிராக சம்பந்தப்பட்ட பொருளில் இயற்கையாகவே உள்ள எதிர்ப்பு சக்தி, பருப்பொருள் ஒடுங்கிப் போகாமல் இருக்கும் வகையில் சமநிலையை உருவாக்குகிறது. கோள்கள், நட்சத்திரங்கள் ஆகிய இரண்டிலும் உள்ள இந்த சக்திகள் எப்போதும் சமநிலையில் இருக்க முயற்சிப்பதால், அந்த இரண்டு விசைகளின் செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வசதியான வடிவத்திலேயே சம்பந்தப்பட்ட பொருள் உருக்கொள்கிறது. வடிவியல் ரீதியில் கோளம் மிகவும் சமநிலையான, உறுதியான வடிவமைப்பு. எனவே, பெரும் கோள்களும் நட்சத்திரங்களும் கோள வடிவத்திலேயே உள்ளன.
பூமியில் இருந்து வெறும் கண்களால் பார்க்கும்போது நட்சத்திரங்கள் ஐந்து வால்களுடன் தோற்றம் தந்தாலும், உண்மையில் கோள வடிவத்திலேயே உள்ளன. நமது பார்வைக்குத்தான், அவற்றின் வெளிச்சம் நட்சத்திர வடிவில் வால்களுடன் தோற்றம் தருகிறது.

Wednesday, November 6, 2013

காகிதம் காப்போம்!


ஒரு நாளில் எவ்வளவு வீணடிக்கிறோம் என்பதை உணராமலேயே நாம் கழிவாக மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்: காகிதம்.
நீங்கள் இப்போது படித்துக்கொண்டிருக்கும் இந்த நாளிதழ், குறிப்பு எழுதப் பயன்படுத்தும் சிறு நோட்டு, உங்கள் மகனோ, மகளோ பள்ளிக்கு எடுத்துச் செல்லும் நோட்டுப் புத்தகம், அலுவலகத்தில் நாம் பயன்படுத்தும் கோப்புகள்... இவை அனைத்துமே காகிதத்தை அடிப்படையாகக் கொண்டவை.
உலகெங்கும் காகிதப் பயன்பாடு ஆண்டுதோறும் 20 % அதிகரித்துவருகிறது. அலுவலகப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக தினசரி 50 ஷீட்களை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. காகிதப் பயன்பாடு இப்படி கண்மண் தெரியாமல் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம், கணினிகளும் நகலெடுக்கும் கருவிகளும் அதிகரித்திருப்பதுதான்.
இதில் விஷயம் என்னவென்றால், நாம் பயன்படுத்தும் காகிதத்தைவிட, நாம் உருவாக்கும் காகிதக் கழிவுதான் அதிகம். ஒவ்வொரு நாளும் நம் நாட்டில் கழிவாக மாறும் காகிதத்தின் அளவு 1,46,000 கிலோ.
மரங்களின் அழிவு
இந்த இடத்தில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். ஆயிரம் கிலோ காகிதத்தை உருவாக்க வேண்டுமென்றால், 2 ஆயிரம் கிலோ மரங்கள் தேவை.
அதேநேரம் ஆயிரம் கிலோ காகிதப் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் மரங்கள் அழிவது குறையும் (17 முதிர்ந்த மரங்கள்), தண்ணீர் பயன்பாடு குறையும் (30,000 லிட்டர்), ஆற்றல் தேவை குறையும் (3 படுக்கையறை கொண்ட வீட்டுக்கு ஆண்டு முழுவதும் தேவைப்படும் மின்சாரம்), மாசுபாடு குறையும் (95 % காற்று மாசுபாடு), காகிதக் குப்பையும் குறையும்.
என்ன செய்யலாம்?
சரி, காகிதப் பயன்பாட்டை குறைப்பதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய முடியும்?
காகிதப் பயன்பாட்டைக் கூடிய மட்டும் குறைக்க வேண்டும். முடிந்தவரை மறுபடி பயன்படுத்துதல் அல்லது மறுசுழற்சி செய்ய முயற்சிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு ஷீட் காகிதத்தை நீங்கள் சேமித்தால், ஓர் ஆண்டுக்கு 40,000 மரங்களைக் காப்பாற்ற முடியும்.
ஒவ்வொரு தேவைக்கும் புதிய காகிதத்தை எடுக்காமல், அச்சடிக்கப்பட்ட காகிதத்தின் பின் பக்கத்தில் எழுதலாம்.
நமக்கு வரும் அஞ்சல் உறைகளில் பழைய முகவரிகளின் மேல் புதிய முகவரிகளை எழுதி ஒட்டியோ, அல்லது உறையை உட்புறமாகத் திருப்பியோ மீண்டும் பயன்படுத்தலாம்.
அலுவலகத்தில் தகவல்களை அனைவருக்கும் தெரிவிப்பதற்கு மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம். அல்லது தகவல் பலகையில் ஒரே ஒரு அச்சிடப்பட்ட அறிக்கையை மாட்டலாம்.
வங்கிக் கணக்கு அறிக்கைகள், மற்ற மாதாந்திர ரசீதுகளை மின்னஞ்சலில் அனுப்பச் சொல்லலாம்.
இப்போது இந்திய ரயில்வே அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளைக் கேட்பதில்லை. நமது கைபேசிகளில் காட்டினாலே போதும் என்கிறது. எனவே, ரயில் டிக்கெட்டுகளை அச்சு எடுக்காதீர்கள்.
அதேபோல, வங்கி ஏ.டி.எம்.களிலும் அச்சு ரசீது தேவையா என்று ஏ.டி.எம். இயந்திரம் கேட்கிறது. அப்போது நாம் தேவையில்லை என்று சொல்லலாம். திரையிலேயே பார்த்துக்கொள்ளலாம்.
வீட்டில் கணினி அச்சு இயந்திரத்தை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற விஷயங்களுக்கு எல்லாம் அச்சு எடுப்பதைத் தவிர்க்கலாம்.

கோவை: யானைகளை மறிக்கும் 'புதிய மாளிகை' - அனுமதித்தது யார்?

காட்டு யானைகளின் வழித்தடத்தை, பிரம்மாண்ட கட்டடங்கள் ஆக்கிரமித்து, மின்சார வேலிகளும், அகழியும் அமைத்துவிடுதால்தான், அவை திசை மாறி, ஊருக்குள் புகுந்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன.
யானை வழித்தடத்தில் பிரம்மாண்ட பங்களாவைக் கட்டி, வெளி உலகுக்குத் தெரியாமல், யாருடைய இடையூறும் இல்லாமல் புதுமனை புகுவிழாவும் அரங்கேறி இருக்கிறது என்பது புது தகவல்.
தமிழகத்தின் அரணாக இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலை. இதையொட்டியுள்ள கிராமப் பகுதிகளை, மலைப்பகுதி கிராமங்கள் என்ற சிறப்புப் பகுதிகளாக அறிவித்து, அதில் கட்டிடங்களோ, வேறு கட்டுமானங்களோ எழுப்பவேண்டுமென்றால் உள்ளூர் திட்டக் குழுமத்திடமோ, மலைப்பகுதி மேம்பாட்டுக் குழுவிடமோ அனுமதி பெற்றால் மட்டும் போதாது, சென்னையில் உள்ள மலைப் பகுதி மேம்பாட்டுக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.
அதில், வருவாய்த்துறை, கனிமவளத்துறை, வனத்துறை, வேளாண் பொறியியல் துறை என, அனைத்துத் துறையினரிடமும் தடையில்லாச் சான்று பெற்றால்தான், இது சாத்தியமாகும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன. இதையெல்லாம் மீறி, எப்படித்தான் இவர்களெல்லாம், இவ்வளவு பிரம்மாண்ட கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று வருகின்றனரோ? என்று வியக்கும் வண்ணம், மலைப் பகுதிகளில் கட்டிடங்கள் எழுப்புவது, சமீப காலங்களில் சகஜமாகிவிட்டன.
கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை பல்வேறு அமைப்புகளின் கல்வி நிலையங்கள், ஆன்மீக மையங்கள், கேளிக்கை விடுதிகள் ஆக்கிரமித்துள்ளன. அந்த வரிசையில், ஆலாந்துறை நாதகவுண்டம்பாளையம் அருகே, யானைகள் விளையாடும் மலைப் பகுதியில், அமர்க்களமாக ஒரு பிரம்மாண்ட கட்டிடம் உருவாகி, கடந்த திங்கள்கிழமை புதுமனை புகுவிழாவும் நடந்துள்ளது. பல ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம், சொகுசான தங்கும் விடுதி என்றும்… இல்லையில்லை ஆசிரமம் என்றும், வி.ஐ.பி. பங்களா என்றும், பல்வேறு கருத்துகள் உலாவுகின்றன. இந்த விஷயம் கேள்விப்பட்டு, நாமே அந்தப் பகுதிக்குச் சென்றோம்.
கோவையிலிருந்து சிறுவாணி சாலையில் 20 கி.மீ., தொலைவில் உள்ளது ஆலாந்துறை. இங்கிருந்து 2 கி.மீ., நாதகவுண்டம்பாளையம். மூன்று திக்கிலும் அடர்ந்த மலைக் காடுகள் நிரம்பிய கிராமம். இதிலிருந்து, வடக்கே 5 கி.மீ., தூரம் ரங்கசாமி கோயில். முழுக்க விவசாயம் மட்டும் நடக்கும் இப் பகுதியிலிருந்து, அடர்ந்த வனப் பகுதி துவங்கி விடுகிறது. இதன் கடைக்கோடியில்தான், அந்த பிரம்மாண்ட கட்டிடம் கம்பீரமாக நிற்கிறது.
இங்குள்ள விவசாயிகள் பேச்சும் இதைப்பற்றியேதான் இருக்கிறது. சில விவசாயிகளிடம் பேச்சு கொடுத்தோம். 'இந்த பூமியை, பத்து வருஷத்துக்கு முந்தி, ஒரு ரியல் எஸ்டேட்காரர், பல விவசாயிகளிடமிருந்து வாங்கினார். மொத்தம் 60 ஏக்கர். ஒரு ஏக்கர் சில ஆயிரங்களுக்கே வாங்கின அவர், போன வருஷம் இங்குள்ள உள்ளூர் பிரமுகர்கள் இருவரிடம், விற்றுக் கொடுக்கச் சொன்னார். அவர்கள், யாருக்கு விற்றார்களோ தெரியாது. இந்த 60 ஏக்கருடன், மேலும் 30 ஏக்கர் நிலத்தை வாங்கி, எல்லை முழுக்க மின் வேலி போட்டுவிட்டார்கள்.
ஆறு மாதத்தில்…
இந்த ஒரு வருஷத்தில், இங்குள்ள நீரோடை, நீர்வழித்தடம், யானை வழித்தடம் அனைத்தையுமே மறித்து மண் ரோடு போட்டார்கள். பிறகு ஆறே மாசத்தில், இப்படியொரு கட்டிடம் கட்டிவிட்டார்கள். இந்த வேலைகளை முன்னின்று செய்பவர்கள் இருவர், ஆலாந்துறை பேரூராட்சியில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள். இந்த ஒரு கட்டிடத்திற்காக, தார்ச்சாலை போடவும் பஞ்சாயத்தில் தீர்மானம் போட்டுவிட்டதாகக் கேள்வி' என்றனர்.
இந்தக் கட்டிடத்தின் முகப்பில், மிகப்பெரிய மரத்தின் மீது ஒரு ஓட்டுக்குடில் இருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அது முழுக்க முழுக்க கான்கிரீட் தூண்களால் ஆக்கப்பட்டு, பிறகு பிரம்மாண்ட மரம் போல், செட்டப் செய்யப்பட்டதாம். இதற்குள், நீருற்றுக்கள், நீச்சல்குளம் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
விவசாயி ஒருவர் கூறுகையில், 'இந்த செட்டிங் வீடு, முதலில் இங்கிருந்து, 50 மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டது. அதை வனத்துறையினர், விதிமீறல், வனத்திலிருந்து 500 மீட்டருக்குள் எந்த கட்டுமானமும் கூடாது என்று கிடுக்கிப்பிடி போட்டனர். பிறகு அதை அப்படியே, அரைகுறை சிமெண்ட் பில்லரோடு விட்டுவிட்டு, பிறகுதான் இங்கே அமைத்தார்கள்' என்றார்.
புதுக் கட்டிடத்திற்கு சில கி.மீ., தூரத்திலிருந்து கட்டுமானப் பணிகள் நடந்து, மண்சாலை புதிதாக போடப்பட்டு வருவதையும் காண முடிந்தது. மழைக் காலங்களில், இங்கே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து மூலைக்கு மூலை ஓடுமாம். அதுவெல்லாம் ஒன்று சேர்ந்து, அருகே ஓடும் நொய்யலாற்றில் கலக்குமாம். அந்த நீர் வழிப்பாதைதான் இப்போது மண்பாதை ஆகிவிட்டது. இனி அது தார்ச் சாலையாகவும் ஆகிவிடும் என்றனர் சிலர்.
'சாயங்காலம் 6 மணிக்கு யாரும் இங்கே வரமுடியாது. அந்த அளவுக்கு யானைக் கூட்டம் வந்துவிடும். 2002 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, யானைகள் மலையை விட்டு இறங்கினதேயில்லை. எல்லாம் மலையிலேயே இருந்துவிடும். 10 வருஷமாகத்தான் இப்படி படையெடுக்கிறது. அதுக போற வழியெல்லாம், இதுமாதிரி கட்டிடங்கள் கட்டி, வேலி போட்டுட்டா அதுக என்னதான் செய்யும்?
இந்த புதுக் கட்டிடம் வந்ததால, இன்னும் யானைக அழிச்சாட்டியம் கூடத்தான் போகுது' என்று வேதனைப்பட்டார் நாத கவுண்டம்பாளையம் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர்.
'விதிமீறல் இல்லை!'
ஆலாந்துறை பேரூராட்சித் தலைவர் மணிகண்டனிடம் கேட்டபோது, 'அந்த நிலம் தனியாருக்குச் சொந்தமானது. அவர்கள், வெளியூரிலிருந்து வந்தால் தங்குவதற்கு 2,000 சதுர அடியில், ஒரு கெஸ்ட் ஹவுஸ்தான் கட்டியிருக்கிறார்கள். அது ரிசார்ட்டோ, ஓட்டலோ அல்ல. 4,000 சதுர அடி வரை, பஞ்சாயத்து அனுமதி கொடுக்கலாம். இதில், விதிமீறல் எதுவுமே இல்லை' என்றார்.
'சாத்தியமே இல்லை'
இது விதிமீறலா இல்லையா? என்பது பற்றி ஓய்வு பெற்ற, வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'நீங்கள் சொல்லும் கிராமம், மலைப்பகுதி கிராமங்கள் பட்டியலில் வருவதுதான். இங்கே, ஒரு தோட்டத்தில் வீடு கட்டக்கூட மலைப்பகுதி மேம்பாட்டுக் குழுவிடம் அனுமதி வாங்க வேண்டும். கண்டிப்பாக இது அமைந்துள்ள இடத்தில், கட்டிடம் கட்ட அனுமதி கிடைக்க சாத்தியமேயில்லை' என்றார்.
எது எப்படியோ, ஆளுவோர் கண் சிமிட்டுவதாலோ, கண்டும் காணாமல் இருப்பதாலோ, இதுபோன்ற கட்டிடங்கள் ஒவ்வொரு மலை அடிவாரத்திலும் பல்கிப் பெருகி வருகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலை தப்புமா? அரசுக்கே வெளிச்சம்.
பங்களா செல்ல போடப்பட்டுள்ள மண் பாதை. படம்: கா.சு.வேலாயுதன்
வனத்தையொட்டி பிரம்மாண்டமாய் எழுப்பியிருக்கும் மாளிகை. படம்: கா.சு.வேலாயுதன்

Monday, November 4, 2013

காற்று

ஐந்து பூதங்களில் கண்ணுக்குப் புலப்படாமல் நாம் உயிர் வாழவும் பூமி ஆரோக்கியமாக இருக்கவும் பங்காற்றி வருவது காற்று. நம் கண்களுக்கு வெளிப்படையாகத் தெரியாததால், ஓரிடத்தில் காற்று இருப்பதை பெரும்பாலான நேரம் நாம் உணர்வதில்லை.
நம்மைச் சுற்றி எங்கெங்கும் காற்று விரவியிருக்கிறது. பல்வேறு வகைகளில் அது தாக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. காற்று, வெளியை அடைத்துக் கொள்கிறது. அதற்கு எடை உண்டு. அனைத்து திசைகளிலும் அழுத்தத்தையும் செலுத்துகிறது.
எடுத்துக்காட்டாக ஒரு கண்ணாடி புட்டியில் தண்ணீர் வைத்திருக்கிறோம் என்றால், அதிலுள்ள தண்ணீரை எவ்வளவு வெளியேற்றுகிறோமோ அவ்வளவு காற்று அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்தக் காற்று உள்ளே சென்று அழுத்துவதால்தான், உள்ளே இருக்கும் தண்ணீர் வெளியே வருகிறது.
அறிவியல்ரீதியில் பூமியின் வளிமண்டலத்தில் நிரம்பியுள்ள காற்று என்பது நைட்ரஜன் (78%), ஆக்சிஜன் (21%), நீராவி, தூசி, மற்ற வாயுக்கள் (1%) இணைந்தது.
உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் காற்றை சுவாசித்தே வாழ்கின்றன. உயிரினங்கள் ஆக்சிஜனை சுவாசித்து, கார்பன் டை ஆக்சைடை வெளிவிடுகின்றன. நேர்மாறாக, தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை சுவாசித்து ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன, பதிலாக ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. இந்த வேதிவினை தொடர்ந்து நடைபெறவில்லை என்றாலோ, இதன் சமநிலை குலைந்தாலோ உலகம் உயிர்ப்புடன் இருப்பது சாத்தியமில்லை.
மனிதர்கள் உயிர்வாழ உணவு, தண்ணீர் போன்றவை தேவைதான் என்றாலும், இவை அனைத்தும் இருந்து ஓரிடத்தில் ஆக்சிஜன் (காற்று) இல்லையென்றால், மனிதன் வாழ முடியாது. உடல் இயங்குவதற்கான சக்தியை உருவாக்குவதில் ஆக்சிஜன் பெரும் பங்காற்றுகிறது. ஓரிடத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்தாலோ, மனிதன் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டாலோ உயிர் வாழ்வது சாத்தியமில்லை.
ஒவ்வொரு நிமிடமும் ஒரு வளர்ந்த மனிதர் சராசரியாக ஏழு லிட்டர் காற்றை சுவாசித்து, வெளியே விடுகிறார். நமது நுரையீரல் நான்கு முதல் ஆறு லிட்டர் காற்றை சராசரியாக பிடித்து வைத்திருக்கக்கூடியது. அதில் ஒரு சிறு பகுதியைத்தான் நாம் சுவாசிக்கப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
நம்மில் பலரும் நம்புவது போல நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் பெருமளவு காடுகளில் இருந்து வருவதில்லை. கடல்களில் இருந்தே வருகின்றன. கடலில் உள்ள ஆல்கா எனப்படும் பாசிகள் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனில் பெருமளவை உற்பத்தி செய்கின்றன. இந்தத் தாவரங்கள் சிறியதாக இருந்தாலும், பெருமளவில் இருப்பதால், ஆயிரக்கணக்கான கிலோ ஆக்சிஜனை உற்பத்தி செய்து வளிமண்டலத்துக்கு அனுப்புகின்றன.
ஆக்சிஜன் மட்டுமல்ல, காற்று நிரம்பிய வளிமண்டலம்தான் (ஓசோன் படலம்) சூரியனிலிருந்து வெளிப்பட்டு நமக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் புறஊதா கதிர்களின் வீரியத்தைக் குறைப்பதுடன், சூரியனில் இருந்து வரும் கூடுதலான வெப்பத்தை மட்டுப்படுத்தவும் செய்கின்றன.
நமக்கு இவ்வளவு நன்மைகள் செய்யும் வளிமண்டலத்தின் இன்றைய நிலைமை சொல்லிக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை.
பெருநகரங்கள், கடுமையாக மாசுபட்ட பகுதிகளின் மேலே உள்ள வளிமண்டலப் பகுதியில் அடர்த்தியான நச்சுக்காற்று (Smog) சூழ்ந்து இருப்பதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் தெரிவிக்கிறார்கள். விண்வெளியில் இருந்து பார்க்கும்போது காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருவதை அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
காற்றின் பெயர்கள்
தமிழிலும் பண்டைக் காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்குத் தனித்தனி பெயர்கள் இட்டு அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.
வாடை - வடக்கில் இருந்து வீசும் காற்று
சோழகம், தென்றல் - தெற்கில் இருந்து வீசும் காற்று
கொண்டல் - கிழக்கில் இருந்து வீசும் காற்று
கச்சான் - மேற்கில் இருந்து வீசும் காற்று

தீபாவளி நாளிலும் பட்டாசு இல்லை - வவ்வால்களை நேசிக்கும் அதிசய கிராமம்!


தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் வவ்வால்கள் அச்சமடையும் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், பட்டாசே வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கழுப்பெரும்பாக்கத்தில் உள்ள அரசமரம் ஆயிரக்கணக்கான வவ்வால்களின் வாழ்விடமாக உள்ளது. இந்த வவ்வால்களை கிராம மக்கள் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகின்றனர்.
அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கலைச் செல்வி கிருபாநந்தன் இதுகுறித்துக் கூறும்போது, “எங்கள் கிராமத் தின் பெருமையே இந்த வவ்வால் கள்தான். இரண்டு, மூன்று தலை முறைகளாக இந்த அரசமரத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசிக்கின்றன. முதலில் புளியமரங்க ளில் குடியிருந்த வவ்வால்கள் பின்பு அரச மரத்துக்கு குடியேறின. வவ்வால்களை நாங்கள் நேசிப்பதால், குரங்குகள்கூட மரத்தில் ஏறாமல் பாதுகாத்துவருகிறோம். முக்கியமாக, தீபாவளியன்று இங்கு யாரும் பட்டாசு வெடிப்பதில்லை. தலைதீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைகளிடம் இந்த விஷயம் குறித்து முன்கூட்டியே சொல்லிவிடுகிறோம். அவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.
குழந்தைகள் பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டால் 2 கிலோமீட்டர் தள்ளி அழைத்துச் சென்று அவர்களின் ஆசையை நிறைவேற்றுகிறோம். துக்க நிகழ்வு நடந்தாலும் வவ்வால்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், வெடிச்சத்தம் கேட்காத தொலைவில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது” என்றார்.
இரக்கமுள்ள கிராமத்து மனிதர்கள் வாழும் பகுதிகளைத் தேர்வு செய்து, அந்த கிராமங்களில் குடியேறுகின்றன போலும் இந்த புத்திசாலி வவ்வால்கள்.