Saturday, February 1, 2014

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”
சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!”
உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”
இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர்பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: “காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…”
பெருங்கலவரத்துக்கான முன்னோட்டம்
யோசித்துப்பாருங்கள்… காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக்கொண்டு பறந்திருக்கும்?
அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.
அப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக்களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்பே கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஏன் காந்திமீது ஆத்திரம்?
நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார். எனினும் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், காந்தி மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும்.
மேலும், மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனத்தில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார்; தொடர்ந்து முறியடிக்கப் போராடினார். காலங்காலமாக அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்களே கலவர நாட்களில் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களில், ஆயுதப் படையினரே சிறு பிரிவுகளாகச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தயங்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்ற நாட்களில், கலவர இடங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார். பிரார்த்தனைக் கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும் “மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டை யாடக் கூடாது” என்று மன்றாடினார்.
கல்கத்தாவில் காந்திஜியின் தலையீட்டைக் கண்ட இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்: “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஓர் அற்புதமான செயல்.”
அந்த அற்புதமான செயல்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆத்திரம் பெருகக் காரணமாக இருந்தது. அந்த ஆத்திரத்தின் விளைநிலம்தான் கோட்சே!
என் உயிர் போகட்டும்!
காந்தி 1.9.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார். கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், இரவு 8.15 மணி அளவில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார். காலவரையறையற்ற உண்ணாவிரதம் அது. கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் காந்தி. பதறிப்போனார்கள் யாவரும்.
மூதறிஞர் ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். “குண்டர் களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா?” என்று கேட்டார். “குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்” என்றார் காந்தி. “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?” என்றார் ராஜாஜி.
“காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது. எனது உண்ணாவிரதம் ஏதாவது பயனளிக்க வேண்டுமென்றால், அது அவர்களுக்குத் துன்பம் நேராமல் தடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். நான் கல்கத்தாவின் நிலைமையைச் சமாளித்துவிட்டால், பஞ்சாப் நிலைமையையும் சமாளிக்க முடியும். நான் இப்போது தோல்வியடைந்தால், காட்டுத்தீ பல இடங்களுக்கும் பரவும்” என்றார் காந்தி.
“ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்” என்றார் ராஜாஜி.
காந்தி உறுதியான குரலில் சொன்னார்: “நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன். நான் என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்.”
தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தார் காந்தி.
தனியாள் திட்டமா கொலை?
காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.
இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப் படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத் துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான் “இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல” என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!
ஜி. ராமகிருஷ்ணன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர், தொடர்புக்கு: grcpim@gmail.com

Friday, January 31, 2014

ஆட்கொல்லி வேங்கை தரும் பாடம்

நீலகிரியில் மக்களிடையே பீதியை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஆட்கொல்லி வேங்கையைச் சுட்டுக் கொன்றதுதான் சரியான முடிவு என்பது என் நிலைப்பாடு.
உயிர்ச் சங்கிலியின் உச்சத்தில், காட்டில் தன்னிச்சையாக, சுற்றித்திரியும் ஒரு வேங்கைப் புலியை, மயக்கத் தோட்டா மூலம் பிடித்துக் கூண்டில் அடைத்து வைப்பது மரணத்தைவிட கொடுமையான முடிவு. அது மட்டுமல்ல, உயிர்க்காட்சிசாலையில் மிகுந்த இட நெருக்கடி நிலவுகிறது. "மைசூர் உயிர்க்காட்சிசாலையில் இப்போது தடுக்கி விழுந்தால் சிறுத்தைகள் இருக்கின்றன. இடமே இல்லை" என்று புலம்பு கின்றார் அதன் இயக்குநர். ஒரு விலங்கைக் கூண்டில் அடைத்து வைப்பதால், அந்த உயிரினப் பாதுகாப்பிற்கு எவ்விதப் பயனுமில்லை. பராமரிக்கும் செலவைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
The Deer and the Tiger (1967) என்ற நூலை எழுதி இந்தியாவில் காட்டுயிர் பேணல் ஒரு இயக்கமாக உருவாகக் காரணமாக இருந்த உயிரியிலாளர் ஜார்ஜ் ஷேலர், ஆட்கொல்லிப் புலிகளை கொல்வதுதான் ஒரே வழி என்கிறார். நம் நாட்டு வேங்கை நிபுணர் உல்லாஸ் கரந்த்தும் இதைத்தான் சொல்கிறார் (காண்க: கானுறை வேங்கை – காலச்சுவடு பதிப்பகம்) காட்டுயிர் பேணலில் அரைக்கிணறு தாண்டும் வேலைக்கே இடமில்லை. இங்கே நமது குறிக்கோள் அழிவின் விளிம்பின் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஓர் உயிரினத்தை (species) காப்பதுதான். அந்த முயற்சியில் சில தனி உயிரிகள் சாக வேண்டி வரலாம். உள்ளூர் மக்கள் ஆதரவு இல்லாமல் வேங்கையைப் பாதுகாக்க முடியாது என்பதையும் இங்கு நாம் மனதில் கொள்ள வேண்டும்.
பரந்திருந்த வனப்பரப்பு அழிந்து, இன்று சிறிய தீவுகள் போன்ற காடுகள்தான் வேங்கைகளுக்கு வாழிடமாக உள்ளன. 1972இல் இருந்து காட்டுயிர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினால், அவை இன்று குறிப்பிடத்தக்க அளவு பெருகியுள்ளன. மைசூருக்குள் யானை வருகின்றது. கொடைக்கானல் கோல்ஃப் மைதானத்தில் காட்டெருது மேய்கின்றது. பதினைந்து ஆண்டுகளாக வீரப்பனின் ராஜ்யம் போலிருந்த சத்தியமங்கலம் கானகப் பரப்பில் இன்று 21 வேங்கைகள் வசிப்பது அறியப்பட்டிருக்கின்றது. நம் நாட்டில் காட்டு விலங்கு-மனிதர் எதிர்கொள்ளல் (Man-Animal Conflict) வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரித்துக்கொண்டேதான் போகும். இந்தப் பிரச்சினைக்குச் சரியான வியூகங்களை வகுத்துத் தயாராக இருக்க வேண்டும். வரும்போது பிரச்சினையை எதிர்கொள்ளலாம் என்றிருக்கக் கூடாது. ஆனால், இதைப் பற்றி அரசு இன்னும் தீவிரமாகச் சிந்திக்காதது வருந்தத்தக்க விஷயம்.
சில இடங்களில் வேங்கையோ, சிறுத்தையோ கால்நடைகளை அடிக்கின்றன. வெகு அரிதாகச் சில மனிதர்களும் பலியாகின்றார்கள். மனிதரை எளிதாக அடித்துவிடலாம் என்று ஒரு வேங்கைப் புலி தெரிந்துகொண்டால், அது மறுபடியும் அதே முறையையே கையாளும். அதாவது, அதன் பிறகு அது ஒரு ஆட்கொல்லியாகிவிடுகின்றது. அப்போது அதைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உத்தராகண்ட் சம்பவாட் என்ற இடத்தில் 264 பேரைக் கொன்ற ஒரு ஆட்கொல்லி வேங்கையை ஜிம் கார்பெட் சுட்டு அழித்தார். இன்றுகூடச் சுந்தரவனக் காடுகளில் ஆட்கொல்லி வேங்கைகள் அவ்வப்போது தோன்றுகின்றன.
காட்டுயிர்ப் பேணலும் பிராணி நலமும் (Conservation and Animal welfare) இரண்டும் சீரிய கருதுகோள்கள். இரண்டுமே சமுதாயத்திற்குத் தேவையானவை - ஒன்றை ஒன்று குழப்பிக் கொள்ளாமலிருக்கும் வரை மட்டுமே. காட்டுயிர் எனும் சொல்லில், தானாக வளர்ந்து செழிக்கும் சகல உயிரினங்களும் அடக்கம். அணில், பட்டாம்பூச்சி தொடங்கிப் பலவும் இதில் அடங்கும். ஆனால் பிராணி நலன் என்பது மனிதருடன் வாழும் விலங்குகள், பறவைகள் சார்ந்தது.
கடந்த நூறாண்டுகளாகச் சுற்றுச்சூழலை நாம் சீரழித்துவிட்டதால் இப்போது எஞ்சியுள்ள காட்டுயிர்களை - தாவரங்கள், விலங்கினங்கள், ஊர்வன, நீர்வாழ்விகள்- மேலும் அழிந்துவிடாமல் காப்பாற்றுவது எப்படி என்பதுதான் காட்டுயிர்ப் பேணலின் சாரம். அதற்கு அறிவியல்பூர்வமான உத்திகளை நாம் பயன்படுத்துகின்றோம். எடுத்துக் காட்டாக, வேங்கைக்கு ரேடியோ கழுத்துப்பட்டை போட்டு அது எவ்வளவு தூரம் இரைக்காகச் சுற்றுகின்றது, எத்தனை ஆண்டுகள் குட்டிகள் தாயுடன் இருக்கின்றன, எவ்வளவு பரப்புள்ள காடு தேவை என்பது போன்ற விவரங்களை அறிந்துகொள்கின்றோம்.
இருபது ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாக மயக்கத் தோட்டா மூலம் வேங்கையைச் செயலிழக்கச் செய்து கழுத்துப்பட்டை மாட்டிய போது, பலரும் கருணையின் அடிப்படையில் அது ஒரு சித்திரவதை என எதிர்த்தார்கள். சம்பந்தப் பட்ட ஆய்வாளரின் ஆராய்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால், இன்று ரேடியோ காலர் உலகெங்கும், நம் நாட்டிலும் சிறு பறவைகளுக்கும்கூடப் பொருத்தப்படுகின்றது.
காட்டுயிர் பாதுகாப்பின் அடிப்படை, அறிவியல் சார்ந்த முறைகளே. ஓர் உயிரியின் மேல் கருணை காட்டுவது என்பது அறம் சார்ந்த விஷயம். அது சூழலியல் கரிசனத்தின் அடையாளமல்ல. அத்தகைய கருணை சில சமயங்களில் காட்டுயிர் பேணலுக்கு எதிர்மறையாகவும் அமையலாம்.
திருட்டு வேட்டை (Poaching), உறைவிட அழிப்பு (Habitat destruction) ஆகியவற்றுடன் வேங்கைக்கு இப்போது ஒரு புதிய ஆபத்து வந்திருக்கின்றது. அண்மையில் நான்கு வேங்கைப் புலிகள் நாய்களிடமிருந்து தொற்றும் நாய் நொடிப்பு (canine distemper) நோயால் மடிந்திருக்கின்றன என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான இந்திய அரசுக் குறிப்பொன்று கூறுகின்றது. இதை நம் நாட்டு ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. பிரிட்டனின் கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தெருநாய்களுக்குக் கருத்தடை செய்தும், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றதே தவிர, இம்மியளவும் குறையவில்லை. தன்சீனியாவில் 1994இல், சுற்றுலாப் பயணிகளுடன் வந்த செல்லநாய்களிடமிருந்து பரவிய இந்நோய்க்கு 1,000 சிங்கங்கள் பலியாகின.
பிராணி நலன், விலங்குரிமை சார்ந்தவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்த சாலிம் அலி தனது கவலையை `ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ (The Fall of the Sparrow) என்ற தன்வரலாற்று நூலில் 1985இல் கீழ்க்கண்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்: "என்னைப் பொறுத்தவரையில் காட்டுயிர்ப் பேணல், நடைமுறை நோக்கங்களைக் கொண்டது. உணர்வுபூர்வமான செயல்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை. ஆனால் இன்று காட்டுயிர் பற்றிச் சொல்லிக் கொடுக்கப்படுவது, அகிம்சை சம்பந்தப்பட்டதாயிருக்கின்றது. புனிதப் பசுவைப் பாதுகாப்பது போல. இது தவறானது மட்டுமல்ல. துரதிருஷ்டவசமானது:"

சிட்டுக் குருவிகள்

நாகரிக வளர்ச்சி என்ற வார்த்தையை பயன்படுத்தி, நாம் நமது வாழ்க்கையை மெல்லமெல்லத் தொலைத்து வருகிறோம். இயற்கையை சார்ந்திருந்த நிலை மாறியதால், இன்று பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். கிராமங்களில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்கள், இன்று நகரங்களின் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் தனிக் குடித்தனம் நடத்தி வருகிறார்கள்.
நமது தேவைகளை பெருக்கிக்கொள்ள இயற்கை சார்ந்த பல விஷயங்களை மெல்ல மெல்ல மறந்து வருகிறோம். அந்தப் பட்டியலில் பறவையினங்களும் ஒன்று. குறிப்பாக, நமக்கு அருகில் நம்மைச் சுற்றி சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளின் நிலை இன்று பரிதாபத்துக்குரியதாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது.
சிட்டுக்குருவிகள் மறைந்த சோகம்
சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்தவை. இவை பசரீன்கள் குடும்பத்தைச் சேர்ந்தவை. நம் நாட்டில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் என அழைக்கப்படுகின்றன. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவியினங்கள் உள்ளன. இவை எங்கும் காணப்படுபவை. சிட்டுக் குருவியின் வாழ்நாள் 13 ஆண்டுகளாகும். இவை மனிதர்கள் இருக்கும் பகுதியிலேயே வசித்து வந்தாலும், மனிதர்களோடு பழகுவதில்லை. இவைகளை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருள்களைக் கொண்டு கூடு கட்டி வசிக்கக் கூடியவை.
சிட்டுக்குருவிகள் அனைத்துண்ணிகள். தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாகக் உட்கொள்ளும். சிலவகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும். இவை 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். சிட்டுக் குருவிகள் மெல்லிய கோடுகளைக் கொண்ட புல்வெளிக் குருவிகள், மாலைச் சிட்டுகள், காட்டில் வாழும் நரிச் சிட்டுகள், வெண்கொண்டையும் வெண்மையான தொண்டையும் கொண்ட குருவிகள், கறுப்புச் சிட்டுகள், வெள்ளைக் கோடுகள் உடைய கொண்டை பெற்றவை என பலவகைகள் உண்டு.
சுற்றுச்சூழல் மாற்றங்களால் நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளில் மரங்களும், பறவைகளும் உலகெங்கும் அழிந்தும், குறைந்தும் வருவதால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன.
தற்போது, நகர் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் முற்றிலுமாக அழிந்து விட்டன. அலைபேசியில் இருந்து வெளிவரும் மின்காந்த நுண்ணலைகளின் தாக்கத்தால், சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்க மண்டலம் தாக்கப்பட்டு, அவற்றை மலடாக மாற்றி விடுவதால், சிட்டுக்குருவிகள் தங்கள் இனத்தைப் பெருக்க இயலவில்லையெனக் கண்டறியப்பட்டுள்ளது. சிட்டுக்குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டி வருகின்றனர். எனவே, மார்ச் 20-ம் தேதியை உலக ஊர்க்குருவிகள் தினமாகக் கொண்டாடி, அவற்றைக் காக்க போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில், பல நாடுகள் அஞ்சல் தலைகளை வெளியிட்டு பெருமைப்படுத்தி உள்ளன.
விழிப்புணர்வில்லை
சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும், அதுபற்றிய விழிப்புணர்வும் நம்மில் பலருக்கு இன்னும் எழவில்லை என்பதே நிதர்சனம். அதனால்தான், சிட்டுக்குருவிக்கு சோறு வைத்து குழந்தைகளுக்கு உணவூட்டிய தாய்மார்கள், இன்று வீதிகளில் விற்கப்படும் உணர்ச்சியற்ற சிட்டுக்குருவி பொம்மைகளை வாங்கி வைத்து குழந்தைகளுக்குச் சோறூட்டுகிறார்கள்.
செல்லூலாயிட் குருவிகள்
விருதுநகர் வீதிகளில், கலர் கலராய் மின்னும் எல்.ஈ.டி. பல்புகள் பொருத்தப்பட்டு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சிட்டுக் குருவி பொம்மைகள் ரூ. 10-க்கு கூவிக்கூவி விற்கப்படுகின்றன. சாலைகளில் செல்லும் பெற்றோர் பலர், தங்கள் வாகனங்களிலிருந்து இறங்கிவந்து உயிரற்ற இந்த ஜடக் குருவிகளை ஆர்வமாக விலை கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள்.
விருதுநகரில் மட்டுமல்ல. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று கலர் கலரான சிட்டுக் குருவி பொம்மைகளை தெருக்களில் போட்டு விற்பனை செய்து வருவதை நம்மால் பார்க்க முடியும்.
குடியிருப்புகளைச் சுற்றியுள்ள தோட்டத்தில், சுதந்திரமாய் சுற்றித் திரிந்த சிட்டுக் குருவியினத்தை நாம் காக்க மறந்ததால், இன்று பலரின் வீட்டுகளில் அழகுப் பொருள்கள் வைத்திருக்கும் ஷோ-கேஸ்களில் பொம்மையாக மட்டுமே, அதைக் காண வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால், இன்னும் பல உயிரினங்களும், இந்தப் பட்டியலில் விரைவில் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.
எனவே, சிட்டுக் குருவிகளை மட்டுமின்றி, அனைத்துயிர்களையும் நேசிக்கும் பழக்கத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் பறவைகள் நல ஆர்வலர்கள்.