Thursday, January 2, 2014

சேவையே வாழ்க்கை

பருவமழை பொய்த்துப் போனாலும், நம்பிக்கை நாற்றங்கால்களோடு காத்திருக்கும் விவசாயிகளால்தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதுபோல சமூக அநீதிகளுக்கு எதிரான தங்கள் செயல்பாடுகளுக்கு எத்தனையோ தடங்கல்களும் எதிர்ப்புகளும் தலைதூக்கியபோதும் சோர்ந்துவிடாமல் நகர்ந்துகொண்டே இருக்கிறார் சமூகப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். அடக்குமுறைகளுக்கும் அதிகாரத்துக்கும் எதிராகப் பலர் பல வகைகளில் தங்கள் குரலைப் பதிவு செய்ய, உரிமைகளைக்கூட அகிம்சையின் மொழியில் கேட்டவர் இவர்!
இன்றைய காலகட்டத்தில் ஓரளவு வசதிகளும் வாய்ப்புகளும் சுதந்திரமும் உருவாகியுள்ள சூழலில், ஒரு பெண், தனது எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்வது அத்தனை பெரிய விஷயம் இல்லை. ஆனால் இந்தியா ஒரு இருண்ட காலத்தில் இருந்தபோது, இவர் தன் சேவையைத் துவக்கினார். அடுப்பங்கரைக்கு வெளியே ஒரு உலகம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளக்கூட வாய்ப்பின்றி சமையலறை கைதிகளாக மட்டுமே பெண்கள் வளர்க்கப்பட்ட காலத்தில், தேசிய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் கிருஷ்ணம்மாள்.
தாயிடம் பயின்ற தைரியம்
வெளியுலகின் பார்வைக்கு அவ்வளவாக தட்டுப்படாத தமிழகத்தின் தென்கோடி கிராமமான அய்யங்கோட்டையில் 1926இல் பிறந்தார் கிருஷ்ணம்மாள். இவர் பிறந்த சமூகமும் தீண்டத்தகாதோர் என்ற முத்திரையோடு ஒதுக்கப்பட்டிருந்தது. வாழ்க்கையில் முன்னேற்றத்தை எட்டிப் பிடிப்பதற்கான எந்தவித நடைமுறை சாத்தியக்கூறுகளும் இல்லாத இவரது பிறப்பை திசைமாற்றிய உந்துசக்தி இவரது தாய் நாகம்மாள். குடிகாரக் கணவனிடம் உதையும் வதையும் பட்டு, முப்பத்திரெண்டு வயதில் விதவைக்கோலம் பூண்டாலும், மனம் தளராமல் தான் பெற்ற குழந்தைகளை வளர்ப்பதொன்றே லட்சியமாக இருந்துள்ளது. ஏட்டுக் கல்வி சொல்லித் தராத உறுதியையும் துணிச்சலையும் தன் தாயிடம் இருந்து கற்றுக்கொண்டார் கிருஷ்ணம்மாள். படித்த, மேல்தட்டு பெண்களின் ஏகபோக சொத்தான கல்வி, தனக்கும் கைவரப்பெற வேண்டும் என்பதில் இவர் உறுதியாக இருந்ததன் விளைவு, இவரை கல்லூரிப் படிப்பு வரை கொண்டு சென்றது.
கல்லூரி படிப்பு தந்த பக்குவமும் தைரியமும் இவருக்குள் இருந்த உத்வேகத்துக்கு உரம் சேர்க்க, தலித் பெண்களின் முன்னேற்றத்துக்குக் குரல் கொடுப்பது, தன்னைச் சுற்றி நடக்கிற சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடுவது போன்றவற்றைத் தன் முழுநேரப் பணியாகத் தேர்ந்தெடுத்தார். காந்தியடிகளின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு சர்வோதய இயக்கத்தில் இணைந்தார் கிருஷ்ணம்மாள்.
கருத்தொருமித்த காதலர்கள்
அங்குதான் தன் காதல் கணவர் சங்கரலிங்கம் ஜெகந்நாதனைச் சந்தித்தார். பொதுநல சேவையில் கிருஷ்ணம்மாளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை இவர். மிகப் பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் காந்தியடிகளுடன் இணைந்து பணியாற்றத் தடையாக இருந்ததால், தனது கல்லூரிப் படிப்பைத் துறந்துவிட்டு அறவழியைத் தன் வழியாக ஏற்றுக்கொண்டவர். இருவரது எண்ணமும் செயலும் ஒன்றாக இருக்க, அந்தப் போராட்டக் களத்திலும் பூத்தது காதல் பூ.
காதலைக்கூட பொதுநல நோக்கோடு கட்டமைத்துக்கொண்ட உன்னதக் காதலர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள். ஒரு தேசத்தின் விடுதலையை தங்கள் திருமணத்துக்கான இலக்காக வைத்திருந்த காதலர்கள் இவர்கள்! இந்தியா சுயராஜ்ஜியம் அடைந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்வோம் என்ற தங்களது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, அதைச் செயல்படுத்தியும் காட்டினார்கள்.
நில மீட்பு போராட்டம்
சுந்ததிர இந்தியாவில் 1950ஆம் ஆண்டு இவர்களது திருமணம் முடிந்த கையோடு, வினோபா பாவேயின் ‘பூமிதான’ இயக்கத்தில் பணியாற்ற வட இந்தியாவுக்குச் சென்றார் ஜெகந்நாதன். அவர் திரும்பி வருவதற்குள் தனது ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்திருந்தார் கிருஷ்ணம்மாள். பிறகு இருவருமாகச் சேர்ந்து தமிழகத்தில் ‘பூமிதான’ இயக்கத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டினார்கள். இதற்காக பலமுறை சிறை சென்று மீண்டபோதும், ஏழைகளின் புன்னகைக்காக அதையெல்லாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கிட்டத்தட்ட 1.4 கோடி ஏக்கர் நிலங்களைப் பல லட்சம் மக்களுக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள்
லாஃப்டி உதயம்
இவர்களது இந்தத் தொடர் பயணத்தைத் திசைமாற்றிப் போட்டது ஒரு துயர சம்பவம். 1968இல் நாகப்படினம் மாவட்டம் கீழவெண்மணி என்ற கிராமத்தில் கூலி உயர்வு கேட்ட தலித் மக்கள் 44 பேரை அவர்கள் வாழ்ந்த குடிசைக்குள் சிறை வைத்து பண்ணையார்களே தீவைத்தனர். உழுபவனுக்கே நிலம் சொந்தமாக இருந்தால்தான் இதுபோன்ற அக்கிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என நினைத்து, ‘உழுபவனின் நில உரிமை இயக்கம்’ எனப்படுகிற ‘லாஃப்டி’ அமைப்பை இருவரும் உருவாக்கினார்கள். இந்த இயக்கத்தின் சார்பில் நிலங்களை மீட்டு, அதை உழவர்களின் பெயருக்கே பதிவு செய்துகொடுத்தார்கள். விவசாயம் இல்லாத காலங்களிலும், விவசாயிகள் தங்கள் வருமானத்தைத் தொடர வேண்டும் என்பதற்காக இயக்கம் சார்பில் தச்சு வேலை, தையல் வேலை, பாய் பின்னுதல், கயிறு திரித்தல், கட்டுமானப் பணிகள் என பலவற்றுக்கு பயிற்சியும் வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ‘லாஃப்டி’ இயக்கத்தின் வெற்றியைப் பார்த்து அரசாங்கமே அந்த இயக்கத்தின் வழியில் நிலங்களை ஏழைகளுக்குக் கொடுக்கும் திட்டத்தை உருவாக்கியது.
இறால் பண்ணை எதிர்ப்பு இயக்கம்
மனிதனை மட்டுமல்ல, இயற்கையைச் சுரண்டுவதும் மிகப்பெரும் குற்றம்தான் என்பதில் உறுதியாக இருந்தார் கிருஷ்ணம்மாள். இறால் பண்ணைகளுக்காக விளைநிலங்கள் காவு கொடுக்கப்படுவதை எதிர்த்துப் போராடினார். அதற்காக சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு பயணம் செய்து தங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தார்கள்.
தொடரும் சேவை
2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த கணவரின் மறைவுக்குப் பிறகும் தொடர்ந்து பொதுச்சேவையில் இருக்கிறார் கிருஷ்ணம்மாள். தலித்துகள், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் அயராமல் பணியாற்றி வருகிறார். பத்ம, மாற்று நோபல் பரிசு என விருதுகளை வாங்கி யிருப்பதோடு, அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவரது பெயர் பரிந்துரைக்கப் பட்டது. ஆனால் இந்த விருதுகளைவிட ஏழைகளின் கண்களின் பளிச்சிடுகிற மகிழ்ச்சியைத்தான் பெரிய விருதாக நினைக் கிறார் கிருஷ்ணம்மாள். தன் வாழ்க்கை யையே பிறருக்காக அர்ப்பணித்துக்கொண்ட பக்குவப்பட்ட இதயத்தால் அப்படித்தானே நினைக்க முடியும்

எங்களை மனிதர்களாக நடத்தினாலே போதும் - லிவிங் ஸ்மைல் வித்யா

“மூன்றாம் பாலினத்தவர்கள் என்பது திருநங்கைகளைக் குறிப்பதாக இருந்தால், முதல் பாலினம் ஆண்கள் என்று இந்தச் சமூகம் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?” என்ற கேள்வியுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் நாடகக் கலைஞரும் எழுத்தாளருமான லிவிங் ஸ்மைல் வித்யா.
“திருநங்கைகள் என்று அழைப்பதற்குப் பதிலாக மாற்றுப் பாலினத்தவர்கள் என அழைப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க, சான்றிதழ்களில் மாற்றுத் திறனாளிகள், அல்லது சாதிப் பெயர்கள் பயன்படுத்தப்படுகிறதோ அதேபோல் மாற்றுப் பாலினத்தவர் களுக்கும் சான்றிதழ்களில் மட்டும் திருநங்கையர்கள் என்று குறிப்பிட்டு மற்ற பொதுத் தளங்களில் மாற்றுப் பாலினத்தவர்கள் என்று அழைக்க வேண்டும். இந்தத் தொகுப்பில் மாற்றுப் பாலினம் என்று குறிப்பிடுவது திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்” என்று மாற்றுப் பாலினத்தினரின் குரலாக ஒலிக்கிறார்.
பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில் செய்வதும்தான் இவர்களுடைய தொழில் என மக்களின் பொது புத்தியில் பதிந்துள்ள கருத்துகளை எல்லாம் உடைத்து, பல்வேறு பரிமாணங்களுடன் விளங்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறார்.
சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் சார்பாக சினிமா தவிர்த்து மாற்றுக் கலைகளில் உள்ள கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சார்ல்ஸ் வாலேஸ் (charles wallace) என்ற நிதிநல்கை வழங்கப்படும்.
இந்த ஆண்டிற்கான நிதிநல்கை முதன் முதலாக மாற்றுப் பாலினத்தவரான லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லண்டனில் செயல்பட்டு வரும் நிகழ்த்து கலைகளுக்கான கல்லூரியில் ஆறு மாதம் பயிலும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. அவருடன் ஒரு சந்திப்பு...
உங்ளைப்பற்றி?
என் சொந்த ஊர் திருச்சி. இளங்கலை கணினி அறிவியல் படித்தேன். பின்பு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் படித்தேன். முதுகலை படிப்பு வரை ஆண் என்ற பாலின அடையாளத்துடன் படிக்க முடிந்தது. பின்பு மொழியியலில் ஆராய்ச்சி படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் மாற்றுப் பாலின அடையாளத்துடன் மேற்கொண்டு கல்வி கற்க முடியாத சூழ்நிலை.
எழுத்தாளராக நீங்கள்?
என் தனிமைக்குக் கிடைத்த சிறந்த பரிசு புத்தங்கள்தான். நான் முதல் வகுப்பு படிக்கும் போதே என் அப்பா மூன்றாம் வகுப்பு புத்தகத்தைப் படிக்கச் சொல்வார். அதனால் வீட்டின் அருகே உள்ள நூலகத்திற்குச் சென்று அப்போது கிடைத்த கதைப் புத்தகங்கள், நாவல்கள் ஆகியவற்றைப் படிப்பேன். பின்னாட்களில் ரஷ்ய எழுத்தாளர்களின் நாவல்கள், எழுத்தாளர் ச.முருகபூபதியின் புத்தகங்களைப் படித்ததால் எழுத்தின் மீதும் நாடகத்தின் மீதும் ஆர்வம் அதிகரித்தது.
ஆங்கிலத்தில் ‘நான் வித்யா’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளளேன். அந்தப் புத்தகம் தமிழ், மராத்தி, அஸ்ஸாமி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது.
ஒரு எழுத்தாளராக இந்தச் சமூகம் உங்களை எப்படிப் பார்க்கிறது?
பல முற்போக்கு நண்பர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். என் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழ்நிலையைப் பொருத்தவரை பொது மக்கள், அவர்களுடைய மனநிலையில் விடுபடாமல் உள்ளனர். எழுத்தாளராகவும், கலைஞராகவும் இருந்தாலும் இந்தச் சமுதாயத்தின் பார்வை இன்னும் மாறாமல் உள்ளது. இப்போதும் தெருவில் நடந்து செல்லும்போது, உடல் உழைப்பில்லாமல் பெற்றோர் பணத்தில் பைக் வாங்கியிருக்கும் சில இளைஞர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அழைக்கிறார்கள்.
என்ன செய்ய வேண்டும் இந்தச் சமூகம்?
சமுதாயம் எங்களை கருணைக் கண்களோடு பார்க்க வேண்டாம். எங்களையும் சக மனிதர்களாக நடத்தினாலே போதும். அம்பேத்கரிடம் ஒரு நிருபர், ‘உங்களுக்கு என்னதான் வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘நீங்கள் நடக்கும் தெருவில் நாங்களும் நடக்கவேண்டும், அவ்வளவு தான்’ என்றார். அதுபோல் மாற்றுப் பாலினத்தவர்களான எங்களையும் சமுதாயம், அதன் ஒரு அங்கமாக மட்டும் நடத்தினால் போதும்.
தொண்டு நிறுவனங்களின் பணி?
பொதுவாகத் தொண்டு நிறுவனங்கள், பிரச்சினைகளுடன் வருகிற ஒருவருக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரும். ஆனால் மாற்றுப் பாலினத்தவர்கள் விஷயத்தில் பல தொண்டு நிறுவனங்கள் அவர்களின் சூழ்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல் வெறும் ஆணுறை பற்றிய செய்திகளைப் பரப்ப விளம்பர ரீதியாக மட்டும் பயன்படுத்துகின்றன. ஏதோ எங்களிடம் இருந்துதான் எய்ட்ஸ் பரவுகிறது என்ற எண்ணத்துடன் செயல்படுகின்றனர்.
தொண்டு நிறுவனங்கள் திருநங்கையருக்கு மட்டும்தான் சேவை செய்கிறார்களே தவிர திருநம்பிகளின் மறுவாழ்வு குறித்த அவர்களின் பார்வை கேள்விக்குறிதான்.
அரசு என்ன செய்ய வேண்டும்?
கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றுப் பாலினத்தவர்களின் மனநிலையும் மாறியுள்ளது. அவர்களும் தங்கள் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும். பிச்சை, பாலியல் தொழில் போன்றவற்றைச் செய்யக் கூடாது என்ற உறுதியான மனநிலையுடன் இன்றைக்கு உள்ள பல மாற்று பாலினத்தவர்கள் தங்கள் அடையாளங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உயர் படிப்பு, மருத்துவம், ஐ.ஏ.எஸ் தேர்வு என படித்துவருகின்றனர்.
அப்படிப்பட்ட மாற்றுப் பாலினத்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் குறைந்த சதவீத இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும். கலைத் துறைகளில் உள்ள எங்களைப் போன்றவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் தொண்டு நிறுவனங்களால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்ற சிந்தனை மாறி சொந்தக் கால்களில் எங்களால் நிற்க முடியும்.

Sunday, December 29, 2013

தமிழகத்தில் குறைந்து வரும் வேளாண்மை சாகுபடி பரப்பு

தமிழ்நாட்டில் முக்கியமான பயிர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கணிசமாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல் கடந்த 2001-02-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 20 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது. அதுவே அடுத்த பத்தாண்டுகளில் அதாவது 2011-12-ல் 19 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.
அதேபோல் 2001-02-ம் ஆண்டில் 3 லட்சத்து 17 ஆயிரம் ஹெக்டேராக இருந்த சோளம் சாகுபடி பரப்பு 2011-12-ம் ஆண்டில் 1 லட்சத்து 98 ஆயிரம் ஹெக்டேராகவும், 1 லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேராக இருந்த கம்பு சாகுபடி பரப்பு, வெறும் 47 ஆயிரம் ஹெக்டேராகவும், 1 லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேராக இருந்த கேழ்வரகு சாகுபடி பரப்பு, 83 ஆயிரம் ஹெக்டேராகவும் குறைந்துவிட்டன. நிலக்கடலை சாகுபடி பரப்பு 6 லட்சத்து 63 ஆயிரம் ஹெக்டேரிலிருந்து 3 லட்சத்து 86 ஆயிரம் ஹெக்டேராகவும், எள் சாகுபடி பரப்பு 84 ஆயிரம் ஹெக்டேரிலிருந்து 43 ஆயிரம் ஹெக்டேராகவும் குறைந்துள்ளன.
இது தவிர சிறு தானியங்கள் பயிரிடப்படும் மொத்த சாகுபடி பரப்பு இந்த பத்தாண்டுகளில் 27 லட்சத்து 66 ஆயிரம் ஹெக்டேர் என்ற அளவிலிருந்து 25 லட்சத்து 42 ஆயிரம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை வெளியீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளன.
மாநிலத்தின் முக்கிய உணவுப் பயிர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவு கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது என்பது எதிர்கால உணவுப் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
இது குறித்து காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங் கத்தின் பொதுச் செயலாளர் மன்னார் குடி எஸ்.ரங்கநாதன் கூறியதாவது:
நகரப் பகுதிகளின் விரிவாக்கம் என்பது வேளாண்மை சாகுபடி பரப்பளவு குறைய மிக முக்கிய காரணமாக உள்ளது. இது தவிர நிலத்தடி நீர்மட்டம் குறைவது, நிலத்தடி நீரில் உப்புத் தன்மை அதிகரிப்பது போன்றவையும் முக்கியக் காரணங்கள்.
இந்த சூழலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உத்தேசிக்கப் பட்டுள்ள மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டால் மேலும் பல லட்சம் ஏக்கர் நிலம் சாகு படியை இழக்க நேரிடும். ஆகவே, இதுபோன்ற தொழில் திட்டங்களை விவசாய சாகுபடிப் பகுதிகளில் அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும், நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கான கடமையைச் செய்ய வேண்டும் என்றார்.
பொருளாதார வல்லுநர் வெங்க டேஷ் ஆத்ரேயா தனது கருத்தை கூறும்போது, ‘வேளாண்மைத் துறைக்கான மத்திய, மாநில அரசு களின் நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்படுவது மிகவும் முக்கியம் என்றார்.
மேலை நாடுகள் எல்லாம் வேளாண்மைத் துறைக்கு அதிக மானியம் வழங்கி வரும் நிலை யில், நமது நாட்டில் ஏற்கெனவே வழங்கி வரும் மானியத்தையும் குறைக்கும் நிலை உள்ளது. நீர் பாசனப் பரப்பளவை அதிகரிப்பதற் கான புதிய திட்டங்கள் செயல் படுத்தப்பட வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு நியாய மான விலை கிடைப்பதோடு, அறு வடை ஆனவுடன் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
அறிவியல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு பயிற்சி கள் அளிக்கப்பட வேண்டும். மண் பரிசோதனை, உரமிடும் முறை உள்ளிட்டவை குறித்து வேளாண்மை விரிவாக்கப் பணியாளர்கள் களத்தில் இறங்கி விவசாயிகளுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
குறிப்பாக விவசாயிகளுக்கு அதிக மகசூல், விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்து விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான நட வடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்வதன் மூலம் வேளாண்மைத் துறையைப் பாது காக்க முடியும்’ என்றார் ஆத்ரேயா.

பூச்சியுண்ணும் அபூர்வ தாவரம்

பூச்சி, விலங்குகளை உண்ணும் தாவரம் பற்றி அச்சுறுத்தும் வகையில் ஹாலிவுட் படங்களில் சில காட்சிகளை நீங்களும் பார்த்திருக்கலாம். ஆனால், அது போன்று பூச்சியுண்ணும் ஒரு அபூர்வத் தாவரம் ஏற்காடு மலையில் 38 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருவது பலருக்கும் தெரியாது.
இந்தியாவில் பூச்சி உண்ணும் 19 வகை செடிகள் உள்ளன. மேகாலயா மாநிலத்தின் காசி மலையில் நெப்பந்தசேயி எனும் பூச்சி உண்ணும் தாவரம் காணப்படுகிறது. காசி மலையில் அதிகம் காணப்படுவதால், நெப்பந்த சேயி காசியானா என்பது தாவரவியல் பெயர். இது கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடி முதல் 10,000 அடி உயரம் வரையுள்ள பகுதிகளில் வளரக்கூடியது. ஈரம்மிக்க காடுகள், சதுப்பு நிலங்கள், குட்டை ஓரங்களில் நெப்பந்தசேயி 100 ஆண்டுகள் வரை வாழ்கிறது.
ஒரு அடி உயரம் முதல் 70 அடி உயரம் வரை கொடியாக மரங்களில் தொற்றி, காற்றில் சுற்றித் திரியும் மின்மினி பூச்சி முதல் குழவிகள் வரையிலான பூச்சிகளை பூஜாடி போன்ற தனது பூக்களில் சிக்க வைத்து, இது சாப்பிடுகிறது. வண்டு, நத்தை, குழவி என பூச்சிகளை மட்டுமில்லாமல், குட்டி எலியைக்கூட இந்த வகை தாவரங்கள் சாப்பிடுமாம்.
இவை அசைவத்தை விரும்பிச் சாப்பிடுவதற்குக் காரணம், உயிர் வாழ்வதற்குத் தேவையான புரதச் சத்துகள், அது வளரும் மண்ணில் குறைவாக இருப்பதுதான்.
பூக்களின் உயரம் 10 செ.மீ. முதல் 30 செ.மீ. உயரம் வரை. பூவின் கழுத்து பகுதியில் மூடி போன்ற இலை, குடுவையை மூடியிருக்கும். பூக்குடுவையில் மூன்றில் ஒரு பங்கு பெப்சின் என்ற திரவமும், கழுத்து விளிம்பில் நெக்டார் என்ற சுவையான தேனும் இருக்கும்.
தேன் வாசமும், பூவின் நிறமும் பட்டாம் பூச்சிகள், வண்டினங்களை கவர்ந்து இழுக்கும். ஆபத்தை உணராத பூச்சியினங்கள், பூவின் விளிம்பில் அமர்ந்து தேனை குடிக்கும் நொடியில், சரசரவென வழுக்கிக்கொண்டு பூவுக்குள் பெப்சின் திரவத்தில் விழும்.
ஜாடிக்குள்ளிருந்து பூச்சிகள் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக, மெல்லிய இழை போன்ற சிறுமுடிகள் உட்புறம் சிலிர்த்தெழுந்து நிற்கும். இந்த முடிகள், பூச்சிகள் மேலே எழுந்து வராமல் தடுக்கும். பெப்சின் திரவம் பூச்சியை ஜீரணிக்கக்கூடிய சக்தியைக் கொண்டிருப்பதால், மேலே எழுந்து வருவதற்கான பூச்சிகளின் முயற்சி தோல்வியில் முடியும். கொஞ்சம் கொஞ்சமாய் திரவத்தில் கரைந்து போகும்.
அடைமழை பெய்தாலும் ஒரு சொட்டு நீர்கூட ஜாடிக்குள் விழுந்து பெப்சின் திரவம் நீர்த்து போகாமல் இருக்க, ஜாடி விளிம்பில் உள்ள இலை, மூடி போலச் செயல்படும்.
பூச்சியுண்ணும் தாவரங்கள் வட இந்தி யாவில் மட்டுமே இயற்கையாக இருந்து வருகின்றன. கடந்த 1975ஆம் ஆண்டு, மேகாலயா மாநிலத்தில் இருந்து ஏற்காடு தாவர வியல் பூங்காவுக்கு 15 நெப்பந்தசேயி செடிகள் கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு செடி 38 ஆண்டுகளாக இப்போதும் இருக்கிறது.
ஏற்காடு தாவரவியல் பூங்காவைச் சேர்ந்த ஏற்காடு இளங்கோ இது பற்றி கூறுகையில், "நாங்கள் பாதுகாத்து வரும் நெப்பந்தசேயி செடி, பெண் தாவரம் என்ற விவரம் ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடிதான் தெரிஞ்சது. அப்பத்தான் இது முதல்முதலா பூத்தது. பக்கத்துல ஆண் நெப்பந்தசேயி செடி இருந்தால் மட்டுமே இதில் மகரந்தச் சேர்க்கை நடக்கும். பிறகு இனவிருத்திக்கான விதைகள் உற்பத்தியாகும். இப்போது அதற்கு வாய்ப்பில்லை.
சமீபத்தில் புது முயற்சியா நெப்பந்தசேயி செடியின் ஒரு பகுதியை வெட்டி, தண்ணீரில் போட்டு வெச்சோம். 15 நாளுக்குப் பின்னாடி, அந்த செடி வேர் விட ஆரம்பிச்சது. இது மாதிரி மூன்று நெப்பந்தசேயி செடிகள வளர்த்து வர்றோம். என்ன ஒரே விஷயம்னா இதன்மூலம் பெண் நெப்பந்தசேயி செடிய மட்டுமே உருவாக்க முடியும்" என்றார்.