Wednesday, December 4, 2013

பரிணாம வளர்ச்சி


உலகப் புகழ்பெற்ற தனது மூலதனம் நூலை "உங்க ளுடைய தீவிர அபிமானி" என்று கையெழுத்திட்டு கார்ல் மார்க்ஸ் ஒருவருக்கு அனுப்பி வைத்தார். அந்த நபர் "பரிணாமவியலின் தந்தை" சார்லஸ் டார்வின். டார்வின் எழுதிய "உயிரினங்களின் தோற்றம்" (Origin of Species) என்ற நூலைப் படித்துவிட்டு, வரலாற்றுப் பொருள்முதல் வாதத்துக்கு (Historical Materialism) அந்த நூல் அடிப்படையாக இருந்ததாக மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். டார்வினின் கண்டறிதல் அந்த அளவுக்குத் தாக்கம் செலுத்தியிருந்தது.
கடவுளே மனித இனத்தைத் தோற்றுவித்ததாக நம்பப்பட்டு வந்த நிலையில், "இல்லை, அனைத்து உயிரினங்களும் இயற்கை நடைமுறையின் ஒரு பகுதியாகப்  பரிணாமவளர்ச்சியில் உருவானவை" என்பதை அறிவியல் ஆதாரங்களுடன் டார்வின் நிறுவினார். அதற்காகவே இன்றுவரை தூற்றப்பட்டுவருகிறார். அறிவியல் உலகின் இரண்டாவது புரட்சி என்று டார்வினின் பரிணாமவியல் தத்துவத்தைக் கூறலாம்.
பூவுலகில் உயிரும் மனித இனமும் எங்கிருந்து வந்தன என்ற அடிப்படைக் கேள்விக்கான விடையை, பரிணாம வளர்ச்சிக் கொள்கை சொல்கிறது. சரி, பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ன?
பரிணாம வளர்ச்சிக் கொள்கை மிகவும் எளிமையானது, அது வலியுறுத்தும் 3 முக்கிய விஷயங்கள்:
திடீர் மாற்றம்
ஓர் உயிரினத்தின் மரபணு (DNA), திடீர் மாற்றம் (Mutation) அடைவதற்கு வாய்ப்பு உண்டு. ஓர் உயிரினத்தின் மரபணுவில் ஏற்படும் இந்த திடீர் மாற்றம், அதனுடைய வாரிசின் மீது தாக்கம் செலுத்துகிறது. உடனடியாகவோ அல்லது பல தலைமுறைகளுக்குப் பிறகோ இந்த தாக்கங்கள் நிகழலாம்.
ஒரு திடீர் மாற்றம் நல்ல விளைவையும் ஏற்படுத்தலாம், தீமையான விளைவையும் ஏற்படுத்தலாம், எந்தத் தாக்கமும் இல்லாமலும் போகலாம். அந்த மாற்றம் தீமையானதாக இருக்கும்பட்சத்தில், ஓர் உயிரினத்தின் வாரிசு தொடர்ந்து வாழ்வதோ, இனப்பெருக்கம் செய்வதோ சாத்தியமில்லை. அதேநேரம், திடீர் மாற்றம் நல்ல விளைவைத் தரும்பட்சத்தில், மாற்றம் அடைந்த வாரிசு, மற்ற வாரிசுகளைவிடச் சிறந்த ஒன்றாக இருக்கும். அதனால், அதிக இனப்பெருக்கம் செய்யும். இதன்மூலம், அந்த சாதகமான திடீர் மாற்றம் பரவலாகும். தீமை பயக்கும் திடீர் மாற்றங்கள் நீக்கப்பட்டு, நல்ல மாற்றங்கள் பரவலாவதற்குக் காரணம் இயற்கைத் தேர்வு (Natural selection).
சாதாரணமாக ஆயிரக்கணக்கான தலைமுறைகளுக்கு ஒரு முறைதான் திடீர் மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறது. இனப்பெருக்கத்தின்போது பெற்றோர் இருவரிடமும் விந்தும் சினை முட்டையும் உருவாகும்போது, அவர்களது மரபணுக்களில் உள்ள குரோமோசோம்கள் (அதில்தான் டி.என்.ஏ. இருக்கிறது) பிரிக்கப்பட்டும் உடைக்கப்பட்டு ம் அவற்றில் சேர்க்கப்படுகின்றன. பிறகு அந்த விந்தும், சினைமுட்டையும் கூடும்போது சில மரபணுக்கள் அப்பாவிடம் இருந்தும், சில மரபணுக்கள் அம்மாவிடம் இருந்தும் தான்தோன்றித்தனமாகச் சேர்கின்றன. இதன் காரணமாக வாரிசுக்கு வித்தியாசமான இணைமரபணுக்கள் (alleles) தோன்றியிருக்கும்.
இப்படி இணைமரபணுக்கள் உருவாகும்போது திடீர் மாற்றங்கள் நீண்ட காலத்துக்கு நிகழ்ந்து, அது தொடர்ந்துகொண்டே இருந்தால், அதன்மூலம் புதிய உயிரின வகை தோன்றும். கோடிக்கணக்கான ஆண்டுகளில் நிகழ்ந்த திடீர் மாற்றங்கள், இயற்கைத் தேர்வு ஆகிய இரண்டு நடைமுறைகளும், பூமியில் இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உயிரினங்கள் அனைத்தையும் உருவாக்கியுள்ளன. மிகவும் சிறிய நுண்ணுயிரியான பாக்டீரியா முதல் மனிதர்கள்வரை, நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் இதில் அடக்கம்.
ஏன் இந்த மாற்றம்?
மரபணுக்களில் திடீர் மாற்றம் நிகழ்வதற்கான காரணம் என்ன? ஓர் உயிரினம் வாழும் சுற்றுச்சூழலில் உணவு, வாழிடம், இயற்கை நிகழ்வுகள் போன்ற பல்வேறு நெருக்கடிகள் (Environmental Pressures) இதில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த புற நெருக்கடிகளால்தான் திடீர் மாற்றம் தூண்டிவிடப்படுகிறது. அதுவே மரபணு மாற்றத்துக்கு வித்திட்டு, பிறகு இயற்கைத் தேர்வுக்கு இட்டுச் சென்று தனி உயிரின வகைகளையும் (Species) துணை உயிரின வகைகளையும் (Sub Species) உருவாக்குகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, காக்கை குடும்பத்தைச் சேர்ந்த காட்டில் வாழும் அண்டங்காக்கையையும், நகரத்தில் நாம் பார்க்கும் சாதாரண காக்கையையும் குறிப்பிடலாம்.
எல்லாம் சரி, உலகில் முதல் உயிர் தோன்றியது எப்படி?
பரிணாமவியல் கொள்கையின்படி, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், வேதிப்பொருட்கள் தான்தோன்றித்தனமாகச் சேர்ந்ததால், தன்னையே பிரதிசெய்துகொள்ளும் மூலக்கூறுகள் முதலில் உருவாகின. அவையே பின்னர் நுண்ணுயிரிகளாக உருமாறின. உயிரின் இந்தச் சிறு பொறிதான், இன்றைக்கு நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து உயிரினங்களுக்குமான விதை.

பறவை வகைகள் அழியும் ஆபத்து


இந்தியாவில் உள்ள 15 பறவை வகைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அழியும் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதுவரை அச்சுறுத்தல் இல்லாத பட்டியலில் இருந்த 3 பறவை வகைகள், முன்பைவிட அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் வெளியிட்டுள்ள புதிய சிவப்புப் பட்டியல் (International Union of Conservation of Nature's (IUCN) red list) தெரிவிக்கிறது.
"இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இமாலயக் காடையும் பிங் ஹெடட் வாத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன (critically endangered) என்று கூறப்பட்டாலும், அவை பெருமளவு அற்றுப்போய்விட்டன" என்கிறார் நாட்டின் முதன்மை பறவை ஆராய்ச்சி நிறுவனமான பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் (BNHS) செய்தித் தொடர்பாளர் அதுல் சாதே.
இவ்வளவு காலம் அச்சுறுத்தல் இல்லாதவை என்று வகைப்படுத்தப்பட்டிருந்த ஆற்று ஆள்காட்டி, ஆற்று ஆலா பறவைகளின் நிலைமை புதிய சிவப்புப் பட்டியலில் மோசமடைந்து இருக்கிறது. தற்போது அவை, அச்சுறுத்தலை நெருங்கிய நிலைக்கு (near threatened) மாற்றப்பட்டுள்ளன. தமிழக ஆற்றுப் பகுதிகளில் பார்க்கக்கூடிய பறவை ஆற்று ஆலா. ஆற்று சூழல்மண்டலத்தில் மனிதர்கள் ஏற்படுத்தும் நெருக்கடிகளும், அணைகள் கட்டப்படுவதுமே ஆற்று ஆலாக்கள் அழிவதற்கு முக்கியக் காரணம். அடுத்த மூன்று தலைமுறைகளில் ஆற்று ஆலாவும், ஆற்று ஆள்காட்டியும் அழியலாம் என்று கூறப்படுகிறது.
"இந்த 2 பறவைகளுமே கோடை காலத்தில் நதிகளின் நடுவே உருவாகும் சிறு தீவு போன்ற பகுதிகளிலும் நதிக்கரைகளிலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை. ஆனால், ஆற்றங்கரைகளுக்கு மாடுகளை ஓட்டி வருதல், நாய்கள் வருதல் போன்ற நடவடிக்கைகள் இவற்றின் முட்டைகளை அழிக்கின்றன. தொடர்ச்சியாக இப்பறவைகளின் எண்ணிக்கை சரிகிறது," என்கிறார் முக்கியப் பறவை பகுதிகள் (Important bird areas) தலைவர் ராஜு கஸாம்பே.
சதுப்புநிலங்கள், புல்வெளிகள், காடுகள் போன்றவையும் வளர்ச்சி நடவடிக்கைகளால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதே பறவைகள் அழிவை எதிர்நோக்குவதற்குக் காரணம் என்று தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் புல்வெளிகள் அழிந்ததால் கான மயில் (Great Indian Bustard), வங்க வரகுக் கோழி (Bengal Florican), ஜெர்டான் கோர்சர் (Jerdon's Courser) போன்ற பறவைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள. கான மயில், தமிழகத்தில் முன்பு இருந்துள்ளது.
அதேபோல, பிணந்தின்னிக் கழுகுகளின் அழிவுக்கு டைகுளோபெனாக் என்ற கால்நடைகளுக்கான வலிநிவாரணி மருந்தே காரணம். இறந்த வளர்ப்பு கால்நடைகளை உண்ணும்போது, பிணந்தின்னிக் கழுகுகளின் உடலில் இந்த மருந்து சென்று நரம்பு மண்டலத்தைப் பாதித்து இறப்பை ஏற்படுத்துகிறது.
உலக அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பறவை வகைகளின் எண்ணிக்கை, எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. தற்போது 200 பறவைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
"எஞ்சியுள்ள இயற்கை வாழிடங்கள், அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் குறித்து அறிவியல்பூர்வமான கள ஆய்வை நடத்தி, பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்" என்று பி.என்.எச்.எஸ். இயக்குநர் டாக்டர் ஆசாத் ரஹ்மானி தெரிவித்துள்ளார்.

பூமிக்கு அருகே..


1.பூமிக்கு அருகேயுள்ள நட்சத்திரம் ஒன்றிலிருந்து நம்மை வந்தடையும் ஒளி, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து வீச ஆரம்பித்ததாக இருக்கும். அது நம்மை வந்து சேர்வதற்குள் இத்தனை ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. இப்போது நம்மிடம் உள்ள ராக்கெட்களின் வேகத்தை வைத்துப் பார்த்தால், நமக்கு மிகவும் அருகிலுள்ள ஒரு நட்சத்திரத்தைச் சென்று தொட்டுவிட்டுத் திரும்புவதற்கு மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.
2.விண்ணிலிருந்து பூமியை நோக்கி வரும் விண்கற்கள், வளிமண்டலத்திலேயே உரசித் தீப்பிடித்துச் சாம்பலாகி, பின்னர் வடிகட்டப்பட்டுப் பூமியை வந்தடைகின்றன. இந்தத் தூசுத் துகள்கள் மூலம் ஒவ்வொரு நாளும் பூமியின் எடை 25 டன்னும் (1 டன் = ஆயிரம் கிலோ), ஆண்டுக்கு 9,125 டன்னும் அதிகரிக்கிறது.
3.சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய கோள் சனி. இது பூமியைவிட 95 மடங்கு எடை மிகுந்தது. சனிக் கிரகத்தை ஒரு பாத்திரம் என்று வைத்துக் கொண்டால், அதற்குள் 744 பூமிகளை உள்ளே வைக்க முடியும்.
4.விண்வெளிக்குப் போன முதல் உயிரினம் மனிதனல்ல, ஒரு நாய். அதன் பெயர் லைகா. 1957இல் ரஷ்யா அனுப்பிய விண்கலத்தில் சோதனை உயிரினமாக அது அனுப்பி வைக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக விண்கலத்துக்குள் இருந்த ஆக்சிஜன் தீர்ந்துபோன நிலையில், அது இறந்து போனது.
5.நிலவு 27 நாட்களுக்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வருகிறது. அதேநேரம் இப்படிச் சுற்றி வரும்போது, அது தன் ஒரு பக்கத்தை மட்டும்தான் பூமிக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. நிலவின் மறுபக்கத்தை முதன்முறையாக 1959இல்தான் பார்க்க முடிந்தது. அப்போது ரஷ்யாவின் லூனா 3 என்ற விண்கலம் முதன்முறையாக நிலவின் மறுபக்கத்தை போட்டோ எடுத்து அனுப்பியதால், அது சாத்தியமானது.

Sunday, December 1, 2013

உயிர் கொல்லி உணவுகள்

உஷார்!!! உயிர் கொல்லி உணவுகள்

சில நாட்களுக்கு முன் பலசரக்கு அங்காடிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க போயிருந்தோம், என் மகன் ஒரு பெட்டி Lay's Stax எடுத்துவந்து, அப்பா, இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லு? Zero Added Hydrogenated Trans Fat இருந்தா நான் வாங்கனும் என்று பெரிய ஆள் மாதிரி ஒரு மேட்டரை கேட்டான்!!! போன மாதம், என் மகனுக்கு காய்ச்சல் இருந்தபோது மருத்தவர் சொன்ன அட்வைஸ் அது!!! நான் மறந்துவிட்டேன், என் மகன் ஞாபகம் வைத்து கேட்டான்!!! ஆச்சர்யமாக இருந்தது!!! இந்த தகவல் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கும் உபயோகமா இருக்கும் என்று தோன்றியதால் இந்த பதிவு.

Hydrogenated Trans Fat & Partially hydrogenated oils:

Trans Fat இயற்கையாகவே பசுவின் பாலில் 2 - 5%சதவீதம் இருக்கும். ஆனால் Hydrogenated Trans Fat என்பது செயற்கையாக செய்யப்படும் Trans Fat. இது பசு, எறுது, பன்றி, காட்டுஎருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும், சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது!!!
இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்பு சத்து!!
இந்த கொழுப்பு சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density lipoproteins (HDL)) சத்தை குறைத்து, கெட்ட கொழுப்பு (Low-density lipoprotein (LDL)) சத்தை இருமடங்காக உயர்த்தி நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறது!!!

பல எதிர்வினைகளையும் உண்டாக்கும் கொழுப்பு!!! இது இருதய நோய்(coronary heart disease), Cancer, Diabetes மற்றும் உடல் பருமனை உருவாக்கும் கொழுப்பு. Partially hydrogenated oils என்பது இந்த கொழுப்பிலிருந்து தயாரிக்கபடும் எண்ணை. நாம் உபயோகிக்கும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ், பாக்கெட்டில் கிடைக்கும் உருலைகிழங்கு சிப்ஸ் வகைகள், பீட்ஸா, சாக்லெட் என் துவங்கி பல வகையான துரித உணவு வகைகள் தயாரிக்க உபயோகிக்கப்படுகிறது!!!

இத்தனை தீங்குள்ளது என்று தெரிந்தும் ஏன் இந்த கம்பெனிகள் உபயோகிக்கிறது இந்த Partially hydrogenated oils/Hydrogenated Trans Fat ?
  • இந்த எண்ணைகள் பல முறை திரும்ப திரும்ப உபயோகித்தாலும், தயாரித்த உணவில் மணம் மாறாது!
  • 18 மாதம் வரை வேண்டுமானாலும் இதில் தயாரித்த கெட்டுப் போகாமல் வைத்துக்கொள்ள முடியும். சாதாரண எண்ணையில் தயாரித்தது 3 நாட்களுக்கு மேல் தாங்காது!!
  • இந்த எண்ணையில் தயாரிக்கும் போது கிடைக்கும் சுவையும் ஒரு முக்கிய காரணமே!! நீங்களே கூட நினைத்திருக்கலாம் நம்ம வீட்டுல செய்யற ஃப்ரென்ச் ஃப்ரைஸ் மெக் டொனால்ட், மேரி ப்ரெளன், பீஸா கார்னர்களில் கிடைக்கும் அளவுக்கு சுவை இல்லை என்று!!!
பல முன்னேறிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் இந்த Hydrogenated Trans Fat உள்ள உணவுகளை தடை செய்து வருகிறது!! மெக் டோனால்ட், KFC போன்ற பல நிறுவனங்கள் இன்று இதை உபயோகிப்பதால் பல கோடி டாலர்கள் வழக்குகளில் போராடிவருகின்றன!!! சில நிறுவனங்கள் ஏப்ரல் 2007 முதல் இந்த எண்ணைகளை பயன்படுத்த மாட்டோம் என்றும் உத்தரவாதங்களும் தந்திருக்கின்றன, அட இந்தியவில இல்லைங்க, அமெரிக்காவிலே!!! இந்தியாவில் இன்றும் மெக் டோனால்ட், KFC போன்றவை சுதந்திரமாக இந்த எண்ணை உபயோகித்து நம் ஆரோக்கியத்தை அழித்து வருகிறது.
நீங்க செய்யவேண்டியது என்ன?
இனி நீங்கள் வாங்கும் குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ், ப்ரெச் ஃரைஸ் என எதை வாங்குவாதா இருந்தாலும் அதில் Hydrogenated Trans Fat = Zero (0) , Zero Added Hydrogenated Trans Fat , Zero Hydrogenated Vegitable Oil இவைகளில் ஏதேனும் லேபிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு பொருட்களை வாங்குங்கள்!!!
டாப் 10 Hydrogenated Trans Fat உள்ள உணவுகள்

உங்கள் வீட்டில் பூரி மற்றும் Deep Fry செய்யப்பட்ட மிச்சம் ஆகும் எண்ணையை திரும்ப உபயோகித்தாலும் அந்த உணவு பொருட்களில் இது போன்ற Hydrogenated Trans கொழுப்பு நிறைந்துவிடும். அதனால் ஒரு முறை உபயோகித்த எண்ணையை திரும்ப உபயோகிக்காமல் இருப்பது நல்லது!!!

குளோபல் வார்மிங்..?


இப்போது எங்கு திரும்பினாலும்
குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்பது போன்ற வார்த்தைகள் கேட்கின்றன. உலகம் அழிவின் விளிம்பை நோக்கிச் செல்கிறது. புயல், வெள்ளம் தாறுமாறாக அதிகரித்திருப்பதற்கும், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் இவைதான் காரணம் என்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தை உருவாக்கும் குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்றால் என்ன? சிக்கலான அறிவியல், சுற்றுச்சூழல் விஷயங்களாகக் கருதப்படும் புவிவெப்பமடைதல், பருவநிலை மாற்றம் பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ள, இதோ ஒரு வழிகாட்டி.
1.புவி வெப்பமடைதல் (Global Warming): வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால், பூமி இயல்புக்கு மாறாக வெப்பமடைவதே புவி வெப்பமடைதல். கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருள்களை கட்டுமீறி பயன்படுத்தியதும், காடழிப்பும் பசுங்குடில் வாயுக்களின் அளவை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.
2.காலநிலை மாற்றம் (Climate Change): புவி வெப்பம் அடைவதால் பூமியின் பருவகாலநிலை, தட்பவெப்பநிலை, இயற்கைச் சீற்ற நிகழ்வுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களே காலநிலை மாற்றம். ஒரு பகுதியின் சராசரி வானிலையில் ஏற்படும் மாற்றம்தான் காலநிலை மாற்றம் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
3.பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases): பூமியின் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஒரு போர்வை போல சேகரமாகி இருக்கும் நீராவி, கார்பன் டை ஆக்சைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள் சூரிய வெப்பத்தை பூமிக்குள் அனுமதிக்கின்றன. ஆனால், பூமியின் மேற்பரப்பில் இருந்து எதிரொளிக்கப்படும் வெப்பத்தை (அகச்சிவப்பு கதிர்களை) விண்வெளிக்கு அனுமதிக்காமல் தடுத்து, பூமிக்கே திரும்ப அனுப்புகின்றன. இதனால் பூமி கூடுதல் வெப்பமடைகிறது. கிரீன்ஹவுஸ் எனப்படும் கண்ணாடிக் கூடு போல, இந்த வாயுக்கள் பூமியை வெப்பமடையச் செய்வதால் இந்தப் பெயர் வந்தது.
4.பசுங்குடில் விளைவு (Greenhouse Effect): வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் இல்லை என்றால், பூமியின் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருக்கும். அப்போது எல்லாம் உறைந்து போய் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, பூமியில் உயிரினங்கள் வாழ பசுங்குடில் விளைவு அவசியமே. ஆனால் தொழிற்புரட்சிக்குப் பின் பசுங்குடில் வாயுக்களின் வெளியீடு எல்லை கடந்து அதிகரித்துவிட்டதால், அவற்றின் அடர்த்தி அதிகரித்து அதிக வெப்பத்தை பிடித்து வைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன. இதுவே பிரச்சினைக்குக் காரணம்.
5.புதைபடிம எரிபொருள்கள் (Fossil Fuels): நிலத்தில் இருந்த தாவரங்கள், கடலில் இருந்த உயிரினங்கள் நிலத்துக்கு அடியில் புதைந்து, கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு மக்கும்போது, கார்பனை மூலப்பொருளாகக் கொண்ட நிலக்கரி, கச்சாஎண்ணெய், எரிவாயு ஆகியவை உருவாகின்றன. இவற்றை பயன்படுத்துவதால், பசுங்குடில் வாயுக்கள் அதிக அளவில் வெளியிடப்படுகின்றன.
6.புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy): நிலக்கரி, பெட்ரோல் போன்ற மரபு சார்ந்த ஆற்றல்களுக்கு மாறாக, சூரியசக்தி, காற்று, புனல் (தண்ணீர்) ஆற்றல் போன்ற எக்காலத்திலும் தீராத, மீண்டும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆதாரங்கள். இதன் மற்றொரு பெயர் மரபுசாரா எரிசக்தி.
7.தட்பவெப்பநிலை (Weather): ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் வளிமண்டலம் எப்படிப்பட்ட நிலையில் உள்ளதோ அதுவே தட்பவெப்பநிலை. காற்று, வெப்பநிலை, ஈரப்பதம், வளிமண்டல அழுத்தம், மேகங்கள், மழைப்பொழிவு ஆகிய அம்சங்களின் மூலம் இது அளவிடப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் நேரத்துக்கு நேரம், நாளுக்கு நாள், பருவத்துக்குப் பருவம் தட்பவெப்பநிலை மாறுபடும்.
8.பருவநிலை (Climate): குறிப்பிட்ட ஒரு பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் உள்ள வானிலையின் பொதுவான தன்மை. ஒரு குறிப்பிட்ட பகுதியின் வானிலை பொதுவாக எப்படியிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அதுதான் பருவநிலை. எ.கா. ஊட்டியும் கொடைக்கானலும் குளிராக இருக்கும், சென்னையும் வேலூரும் வெப்பமாக இருக்கும் என்பதைப் போல.
9.தகவமைத்தல் (Adaptation): மாற்றம் அடைந்துவிட்ட, மாற்றம் அடையப் போகிற ஒரு சுற்றுச்சூழலில் தொடர்ந்து வாழ்வதற்காக உயிரினங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றங்கள். புவி வெப்பமடைதல், அதன் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றம், அழிவுகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே இந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றன.
10.மறுசுழற்சி, மறுபயன்பாடு, குறைந்த பயன்பாடு (Recycle, Reuse, Reduce): நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமையாகி பொருள்களை வாங்கிக் குவிப்பதற்கு பதிலாக, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருள்களை மட்டும் வாங்கி, மறுபடி பயன்படுத்தி, மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலுக்கு இணக்கமாகச் செயல்படுவது. இதன் மூலம் புவி வெப்பமடைவதையும், பருவநிலை மாற்றத்தையும் குறைக்க முடியும்.