Wednesday, November 27, 2013

வன்முறை


சகோதரிகளே, இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறையும் பாலியல் பலாத்காரமும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. அயல் நாடுகளில் இருந்து இந்தியாவை நோக்கிப் பயணிக்கும் பெண்கள் கடுமையான அச்சத்துக்கு ஆளாகியிருப்பதுடன், இந்தியா பற்றிய சுற்றுலாவுக்கான குறிப்பில், ‘இந்தியா: பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடு’ என்பதும் பதிவாகியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு, இது மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்படுவதுடன், 'பெண்கள் மீதான மரியாதை' விஷயத்தில், இந்தியாவுக்கு சர்வதேச அளவில் இருக்கும் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது.
பெண்கள் மீதான சமீபத்திய வன்முறைகள் நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்கின்றன. ஒன்று, பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை. இரண்டு, ஆண்களுக்குப் பெண்கள்மீது எந்த அடிப்படையிலும் மரியாதை இல்லை. மூன்று, ஏழை, பணக்காரர், இளமை, முதுமை என எந்த நிலையைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்கள் மீதான ஆண்களின் அதிகாரமும் வன்முறையும் எந்த நிலைக்கும் சளைத்ததல்ல. நான்கு, இந்த வன்முறைகளுக்குத் தண்டனை வழங்க வேண்டுமென்று போராட்டங்கள் அதிகமானாலும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகமாகின்றன.
இவைதான் காரணங்களா?
ஆண்கள் என்றால் இதையெல்லாம் செய்யலாம் என்ற சலுகையும், பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும், ஒரு தாயின் அடிமனதிலிருந்து உயர் பதவியில் இருக்கும் ஆண் அரசியல் தலைவர் வரை மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பதையே நாம் இதுவரை, 'இந்தியப் பண்பாடு' என்று கூறிவந்திருக்கிறோம். பெண்கள் உடைதான், ஆண்களிடம் இச்சையை எழுப்பி வன்முறையைச் செயல்படுத்தத் தூண்டுகிறது என்றார்கள். உடல் முழுக்க மூடிச் செல்லும் பெண்ணையும், சுடிதார் சீருடை அணிந்து செல்லும் பள்ளி மாணவியையும் பலாத்காரம் செய்து கொன்றார்கள்.
பெண்கள், மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் தனியாகச் செல்வதுதான் காரணம் என்றார்கள். பட்டப்பகலிலேயே இது நடக்கிறது. இவ்வாறு, பெண்களுக்குப் பாதகமாகவும் ஆண்களுக்குச் சாதகமாகவும் வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுவது, இயல்பாகவே இந்தக் குற்றச் செயலைப் பாதுகாப்பதற்குத்தான் என்பது தெளிவாகிறது.
போராட்டங்களில் பாரபட்சம்
டெல்லியில் டிசம்பர் 16-ம் தேதி நடைபெற்ற பாலியல் வன்முறை இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. பழங்குடியினப் பெண்கள், வெவ்வேறு அரசு, அரசு சாரா நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், வீடுகளிலேயே குடும்பங்களை நிர்வகிக்கும் பெண்கள், தொலைதூரக் கிராமங்களில் உள்ள பெண்கள் போன்றோர் மீது தினம்தோறும் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் யாரையும் உலுக்குவதே இல்லை. டெல்லி சம்பவம், இவ்வளவு தூரம் கவனம் பெற்றதற்குக் காரணம், பொதுமக்கள் தொடர்ந்து போராடினார்கள். அந்த நிகழ்வை நோக்கி ஊடகங்கள் தம் கவனத்தைத் திருப்பும்படி அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டுப் போராடியதற்கு இது ஒரு பெரிய உதாரணம். தொடர்புடைய குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிப்பதே இவர்கள் எல்லோரின் நோக்கமாக இருந்ததே தவிர, இதுபோன்று தினமும் தொடர்ந்துகொண்டிருக்கும் குற்றங்களைத் தடுப்பதற்கான போராட்டங்களாக இவை இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தண்டனை எதற்காக?
தண்டனை, அந்தக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக மட்டுமே. பிற இடங்களில், பிற பெண்கள்மீது காட்டப்படும் வன்முறைகள், குற்றங்கள் ஆகியவற்றைக் குறைப்பதற்காகவோ தடுப்பதற்காகவோ இல்லை அந்தத் தண்டனை. டெல்லி சம்பவத்தில் குற்றவாளிகளுக்குக் கொடுத்த தண்டனை மற்ற எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், ஏன் டிசம்பர் 16-க்குப் பின் இந்தக் குற்றங்கள் குறையாமல் அதிகரிக்கின்றன? தண்டனை கிடைக்கும் என்று அறியாமலா குற்றங்களைச் செய்கிறார்கள்?
ஏற்றத்தாழ்வான நீதி
இந்த நாட்டில் நீதி என்பது ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி வாய்ப்புகள் இருப்பவர்களுக்கு ஒன்றாகவும் இருப்பதை முதலில் நாம் உணர வேண்டும். டெல்லி சம்பவத்தில் நாம் நீதியைப் பெற முடிந்ததற்கும் அதே மாதிரியான மற்ற பாலியல் வன்முறைகளிலும், 'வாச்சாத்தி' போன்ற கொடூரமான சம்பவங்களிலும் பலர் தண்டனையைப் பெறாமல் தப்பித்ததற்கும், தாமதமான நீதிக்கும் காரணம், அரசு மக்களைப் பார்க்கும் பார்வையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுதான்.
அதுமட்டுமன்றி, டெல்லி சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் எல்லாரும் அடித்தட்டிலும் வறுமையிலும் உழல்பவர்கள். அவர்கள் ஏழைகள் என்று சொல்லி, அவர்கள் செய்ததை இதனால் நியாயப்படுத்த முடியாது. இதுபோலவே, பாலியல் வன்முறைகளைச் செய்துவரும் அதிகாரம் உடைய அரசியல்வாதிகள், சினிமாக்காரர்களுக்கு எல்லாம் நாம் எப்போது இதுபோல தண்டனை பெற்றுத்தரப்போகிறோம்?
'சூரியநெல்லி' வழக்கில் ஏன் நம்மால் இதுபோல நீதிக்கான போராட்டத்தை நடத்த முடியாமல் இருக்கிறது? அந்த அரசியல்வாதிகள் பற்றிய செய்திகளைக் கேட்டும், இம்மாதிரியான பாலியல் வன்முறைகளை ஊக்கப்படுத்தும் உற்சாகப்படுத்தும் காட்சிகளைப் பார்த்தும்தானே இதுபோன்ற கடைக்கோடி ஆண்கள் எல்லோரும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். ஆக, நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒட்டுமொத்தமான நீதியைப் பெறுவதற்காகப் போராட வேண்டியதுதான்.
அதிகார பலமற்ற குரல்கள்
இம்மாதிரியான சம்பவங்கள், நாளை நம் வீட்டிலோ, நாம் பணிபுரியும் இடங்களிலோ, நாம் புழங்கும் இடங்களிலோ நிகழலாம். அப்படி நடக்கும்போதும் நாம் நீதியைப் பெறுவோம் என்ற நம்பிக்கைக்கு எந்த இடமும் இல்லை. அதிலும், அடித்தட்டுப் பெண்கள் தினம்தோறும் ஏதோ ஒரு வகையில், அவர்களைச் சுற்றி இருக்கும் வெவ்வேறு ஆண்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். வறுமையாலும் கல்வியறிவின்மையாலும், அவற்றை வெளிப்படுத்த ஊடக ஆதரவு இன்றியும், எந்த அதிகார பலமும் இன்றியும் அவர்களின் எதிர்ப்புக் குரல் அவர்களுக்குள்ளேயே அடங்கிப்போகிறது. இந்த நிலை, அவர்கள் நிரந்தர வன்முறைக்கு உள்ளாவதற்குக் காரணமாகிவிடுகிறது.
டெல்லி சம்பவத்தில் நாம் நீதியைப் பெற விரும்பினோம், பெற்றோம். அதுபோல பிற நிகழ்வுகளிலும் நீதியைப் பெற, குற்றங்கள் குறைய, நாம் எல்லோரும் ஒன்றுசேர வேண்டும் என்பதே டெல்லி சம்பவம் நமக்குக் கொடுத்திருக்கும் நம்பிக்கை. எந்த ஒரு பெண்ணின் மீதான கொடுமை என்றாலும், ஒட்டுமொத்தமாகப் பெண்கள் எழுந்தால்தான் அவளுக்கான நீதியைப் பெற முடியும். அந்த ஒரு பெண்ணுக்கான நீதிதான் பெண்களாகிய நம் எல்லோருக்குமான நீதியாகும்.
நம் கதறலும் முழக்கமும் ஒன்றாக எழ வேண்டும். அப்போதுதான் நம் மகள்கள், சகோதரிகள், அன்னைகள் எல்லோரும் இந்த நாட்டில் நிம்மதியாகவும் வலியின்றியும் வாழ முடியும். இதை உணர்வதுதான் நமக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த நேரத்தில் மிகமிக அவசியம்.

Monday, November 25, 2013

வந்தாச்சு அழுக்கு மூட்டை சாமியார்

ம் நாட்டில் வெரைட்டி ரைஸ்களை விட சாமியார் ரகங்கள் ஏராளம். அதில், கரூரைக் கலக்கிவரும் அழுக்கு மூட்டைச் சாமியார், ரொம்பப் புது ரகம். 
கரூரில் முக்கியப் பிரமுகர்கள் குடிஇருக்கும் அண்ணாநகர் ஏரியாவைத் தேடி கடந்த ஒரு வாரமாக மக்கள்வெள்ளம் படை எடுக்கிறது. காரணம், அழுக்கு மூட்டைச் சாமியார் விஜயம்.
அழுக்கு மூட்டை சாமியாரை இரவு நேரத்தில்தான் தரிசனம் செய்ய முடியும் என்று சொல்லப்பட்டதால், நள்ளிரவு 1.30 மணிக்கு ஸ்பாட்டில் ஆஜரானோம். கம்பி கேட் போட்ட ஒரு வீடு. அதன் உள்ளே நின்ற ஆம்னி வேனுக்கு அருகில், ஒரு கட்டிலில் டேபிள் ஃபேன் காற்றில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இருந்தார். மேலே மட்டும் பச்சை நிற அங்கி... கீழே எதுவும் இல்லை. அந்த நேரத்திலும் கேட்டுக்கு வெளியிலும் வாசலிலும் சாமியாரைப் பார்க்க கிட்டத்தட்ட 200 பேர் கூடி இருந்தனர். சிலர் அக்கம்பக்கத்து வீட்டு வாசலில் அமர்ந்து தியானம் செய்தபடி இருந்தனர். சிலர் அங்கப்பிரதட்சணம் செய்வதும், நெடுஞ்சாண் கிடையாக உள்ளே இருப்பவரை நோக்கி விழுவதும் எழுவதுமாக இருந்தனர்.
திடீரென்று பக்தர்கள் குரல் ஓங்கி ஒலிக்கவே, திரும்பிப் பார்த்தோம். ''சாமி கண்ணைத் தொறந்துட்​டாரு...'' என்றபடி கும்பல் எழுந்து நிற்க... சாமியார் படுத்திருந்த நிலையிலேயே இரண்டு விரலைத் தூக்கிக் காண்பித்தார். அருகில் இருந்த உதவியாளர் ஒரு துணி எடுத்து சுத்தம் செய்தபடி, ''சாமியார் குழந்தை மாதிரி... அதனாலதான் இப்படி'' என்று சகஜமாகப் பேசிக்கொண்டனர்.
சுத்தப்படுத்தும் பணி முடிந்ததும் சாமியார் கத்தியபடி வாயைத் திறக்க... அவரது உதவியாளர் துண்டு புகையிலையைக் கொடுத்தார். அதை வாயில் கடித்து மென்றபடி கேட்டுக்கு வெளியில் நிற்கும் கூட்டத்தைப் பார்த்து பச்சை பச்சையாக தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தை​களாலும் திட்டினார். ''ஏண்டா நாய்​களா... சொன்னாக் கேக்க மாட்டீங்களா..? உங்க வேலை​யைப் பார்த்துட்டுப் போங்கடா...'' என்பதை மட்டும்தான் பிரசுரம் செய்ய இயலும்.
அதைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு, ''எந்தத் திசையில் போகணும் சாமி?'' என்று சில பெண்கள் கேட்க, ''வடக்கால இருந்து தெக்கால போங்கடி'' என்றார். உடனே பக்தர்கள் அனைவரும் 'ஸ்ரீ அழுக்கு மூட்டையார் நமஹ...’ என்று முனகியபடி தெற்கு திசை நோக்கி கொஞ்ச தூரம் நடந்து மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்தனர்.
''அப்புறம் என்ன சாமி செய்றது?'' என்று கேட்​கவும், மீண்டும் தனது கெட்ட வார்த்தை அர்ச்சனையைத் தொடங்கினார்.
''இன்னைக்கு நல்ல தரிசனம்'' என்றபடி கூட்டத்தினர் நெருங்கி நிற்க, ''போங்கடி... போங்கடா'' என்று சாமியார் எகிறத் தொடங்கவே, ''எல்லாரும் கலைஞ்சு​ போங்க'' என்று உதவியாளர் சொன்ன பிறகே பக்தர்கள் நகர்கிறார்கள். கூல்டிரிங்ஸ், பூ, பால், வாழைப்பழம், ஹார்லிக்ஸ் போன்றவற்றை சாமிக்குக் கொடுக்கச் சொல்லி உள்ளே நீட்ட... ''இதை எவனுக்குக்காவது கொண்டுபோய் கொடுங்கடி...'' என்றவர் சோர்ந்துபோய் மீண்டும் கட்டிலில் படுத்தார்.
இதற்கிடையில் நாம் போட்டோ எடுக்க முயல... அதைப் பார்த்த சாமியார் திரும்பவும் கத்த ஆரம்பித்​தார். அவரது மெய்க்காப்பாளர் ஒருவர், ''சாமிக்குப் போட்டோ எடுக்குறது பிடிக்கல. உடனே போட்டோவை அழிச்சிருங்க. சொன்னாக் கேளுங்க... இவர்தான் நம்மைப் படைச்சவர்'' என்றார்.
புகை படம் எடுக்க விரும்பாத சாமியார் தன்னை விரும்பிய பக்தர் "பார்த்த சாரதி"யுடன் எடுத்துக்கொண்ட படம் 
அவரை ஓரங்கட்டி பேச்சுக் கொடுத்தோம். ''பழநி பக்கத்துல இருக்குற கணக்கம்பட்டியிலதான் சாமி இதுவரை இருந்தார். முந்தி இவருக்கும் சரக்கு, கஞ்சான்னு எல்லா பழக்கமும் இருந்துச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. மனைவியைப் போட்டு தினமும் அடிச்சுக் கொடுமைப்படுத்துவாரு. ஒரு காலத்துல, சித்தர் ஒருத்தர் இவருக்கு தீட்சை கொடுத்தார். உடனே இப்படி மாறிட்டார். லேசுல குளிக்கவே மாட்டார். மக்களோட அழுக்கு மூட்டையை எல்​லாம் வாங்கிக்கிடுறார், அதனாலதான் அழுக்கு மூட்டை சாமின்னு சொல்றோம். சாமிகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கினா, அது கோடி புண்ணியம். அதனால, அவரைப் பார்க்க ஊர்விட்டு, நாடுவிட்டு எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க.
சாமியைப் பார்க்க வர்றவங்க அவர் சொல்றதை எல்லாம் செய்யணும். திடீர்னு கீழே குனிஞ்சு கல் எடுக்கச் சொல்லுவாரு. அதை எல்லாம் ஒரு இடத்துல குவிச்சு வைக்கச் சொல்லி, அந்தக் கல்லை எடுத்தே அவங்களை அடிப்பார். 'நான் எது சொன்னாலும் கேப்பியா முட்டாளே... கல் பொறுக்கச் சொன்ன நான் முட்டாள்னா... ஏன், எதுக்குன்னு கேக்காம அதை அப்படியே செய்யும் நீ எவ்வளவு பெரிய முட்டாப் பய’ன்னு சொல்லி வாழ்க்கையின் தத்துவத்தைப்(?) புரிய வைப்பாரு'' என்று சொல்லிக்கொண்டே போக தலை கிறுகிறுத்துத் திரும்பினோம்.
என்ன, போய்ப் பார்க்கத் தோணுதா?
ஞா.அண்ணாமலை ராஜா

கரகாட்டக்கலையும் கசப்பான உண்மையும்

  • கரகாட்டக் கலைஞர்கள் மாலா, ரவிராஜ்
    கரகாட்டக் கலைஞர்கள் மாலா, ரவிராஜ்
  • கிராமத்தை வலம் வரும் 'தாள் கரகம்'
    கிராமத்தை வலம் வரும் 'தாள் கரகம்'
தலையில் கரகம் சுமந்து செல்வது நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளில் ஒன்றாகும். குறிப்பாக கிராமக் கோயில்களில் ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மகாபாரதம் கதைப்பாடல் வடிவத்தில் நிகழ்த்தப்படும்போது முதல் நாள் நிகழ்ச்சியாக காப்பு கட்டும் விழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து பதினெட்டு நாட்களும் விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெறும்.
அப்போது, முதல் நாள் நிகழ்வில் முக்கிய அம்சமாக தாள் கரகம் சோடித்தல் அமையும். (தாள் கரகம் என்பது குடத்தின் வாய்ப்பகுதியில் பல்வேறு வண்ணத்தாள்களால் செய்யப்பட்ட முக்கோண வடிவ கொடிகள் ஒட்டப்பட்ட குச்சிகள் செறுகப்பட்டிருக்கும்). பக்தர் ஒருவர் அதைத் தலையில் சுமந்து வருவது உண்டு.
அதுபோலவே தீமிதித் திருவிழாவன்று அக்கினி கரகம் (மண் பானையில் மரக்கட்டைகளை இட்டு தீ மூட்டி தகதகவென எரியவிடுவர். தீ, பானையின் வாய் வழியே நாவை நீட்டும்) எனப்படும் தீக்கரகத்தைச் சுமந்து வருவதும் வழக்கம்.
கரகம் சுமப்பது என்ற வழக்கம் ஒரு வழிபாட்டு மரபாக இருந்துள்ளது. இத்தகையதொரு வழிபாட்டுச் சடங்கு நாளடைவில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று ஒரு நிகழ்த்துக் கலையாக வளர்ந்துள்ளது. தலையில் கரகம் சுமந்து ஆடும் ஆட்டம் கரகாட்டம் என்றாலும், கலைஞர்களின் தனித்திறமைக்கேற்ப பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது இக்கலை.
கரகாட்டக்கலை இன்றும் நடைமுறையில் உள்ள ஒரு கலை என்றாலும், அக்கலைஞர்களின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.
தகவல் தொடர்பு சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சி, கலைகளைப் பெரிதும் பாதித்துள்ளது, என்றாலும் அதையே சாதகமாக மாற்றிக்கொள்ளும் கலைஞர்களும் உண்டு. தொலைக்காட்சிகளின் ஆதிக்கம், எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்த வேண்டிய தேவையை இன்று கட்டாயமாகியிருக்கிறது. கலைகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
நாட்டுப்புற கலைகள், அந்தக் கலைஞர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. எனவே அக்கலைஞர்கள் தொடர்ந்து வாழ்க்கையை நடத்துவதற்கு கலை நிகழ்ச்சிகளைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். அதிலும் போட்டிகள் உண்டு. எனவே ஒவ்வொரு கலைக்குழுவும் தங்கள் குழுவை நிலைநிறுத்த விளம்பரப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
தஞ்சாவூர் கிழக்கு வாசல் பகுதியில் கரகாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம் என பல குழுக்கள் தங்கள் கலைக்கான விளம்பரப் பலகைகளை வைத்திருப்பதைப் பார்க்கலாம்.
என்னதான் விளம்பரப்படுத்தினாலும் இதுபோன்ற கலைகள் கோயில் திருவிழாக்களை நம்பியே உள்ளன. அதில் ஈடுபடும் கலைஞர்கள் உரிய முறையில் கெளரவிக்கப்படுவதில்லை. ஓலைக் குடிசைகளில்தான் அவர்களின் வாழ்க்கை கழிகிறது. நாம் அந்த கலைகளின் சிறப்பைப் பேசுவதால் அவர்களின் வாழ்வில் எத்தகைய முன்னேற்றமும் இல்லை. கலை அவர்களை வாழவைக்கிறதோ இல்லையோ அவர்கள் கலைகளை வாழவைத்துக்கொண்டுள்ளனர் என்பதுதான் கசப்பான உண்மை. நாட்டுப்புறக் கலைஞர்கள் பலர் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர். அரசு அவர்களுக்கென்று நல வாரியம் அமைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
கலை, கலையாக மட்டும் இல்லாமல், அதில் பல நுண் அரசியல் இயங்குகிறது. அவற்றையெல்லாம் மீறியும் பல கலைஞர்கள் பல்வேறு கலைகளில் ஈடுபட்டுக்கொண்டுதான் உள்ளனர். அத்தகையவர்களில் ஒருவர்தான் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகிலுள்ள ஊ.மங்கலம் கிராமத்தில் உள்ள கரகாட்டக் கலைஞர் மாலா. இவர் பிறந்தது பண்ருட்டி அருகிலுள்ள தண்டுப்பாளையம். தற்போது கணவர் தமிழ்ச்செல்வனோடு ஊ.மங்கலத்தில் வாழ்ந்து வருகிறார்.
மாலாவின் பெற்றோர் தொடக்கத்தில் கரகாட்டம் ஆடுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவருக்குள்ளிருந்த கலை உணர்வை யாராலும் தடுக்க இயலவில்லை. பத்து ஆண்டுகள் கரகாட்ட அனுபவம் பெற்ற தேர்ந்த கலைஞராக ஆடச் செல்லுமிடங்களிலெல்லாம் பார்வையாளர்களின் பாராட்டைப்பெற்று வருகிறார் மாலா.
கரகத்தைத் தலையில் சுமந்தபடி தீப்பந்தத்தினுள் செல்வது, குழல் விளக்குகளை உடைப்பது என தன் தனித்திறமைகளை இக்கலையோடு இணைத்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்துவது மாலாவின் வழக்கம். இவருடன் இணைந்து ஆடும் ஆண் கலைஞர் ரவிராஜ். இவரும் அதே ஊரைச் சேர்ந்தவர். இவர் முதலில் குறவன் குறத்தி ஆட்டத்தைத்தான் ஆடியுள்ளார். பிறகு தானாகவே கரகாட்டம் கற்றுக்கொண்டு இன்று கரகாட்டக் கலைஞராக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளார்.
பள்ளிப்பருவத்திலேயே ஆட்டத்தில் நாட்டம் கொண்டவர் ரவி. பள்ளிக் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பல பரிசுகளைப் பெற்றவர். இவருக்கு திருமணம் ஆகும் வரை இக்கலையில் ஈடுபட எவ்வித எதிர்ப்பும் இல்லை. அதன் பிறகு இவர் மனைவிக்கு இதில் விருப்பமில்லை. ஆனாலும் ஆடிப்பழகிய ரவியால் வேறு வேலைகளில் ஈடுபடமுடியவில்லை என்பதால் வேறு வழியின்றி இவரது ஆட்டம் இவரின் மனைவிக்கும் பிடித்துப்போக தொடர்கிறது கலைச் சேவை.
இப்படித்தான் பல கலைஞர்கள் கலை வாழ்க்கைக்கு தங்களை அற்பணித்துள்ளனர். அவர்களை கெளரவப்படுத்த இயலவில்லை என்றாலும், அவமானப்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோளாக இருக்கிறது.