Friday, April 25, 2014

உலகப் புவி நாள்


பூமியின் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் சுற்றுச்சூழல் சார்ந்த சரியான புரிதலையும் உருவாக்கும் வகையில் உலகப் புவி நாள் (World Earth day), ஏப்ரல் 22-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
1969-ம் ஆண்டில் அமெரிக்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான எண்ணெய் சிதறலுக்குப் பிறகு அமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன், சாண்டா பார்பராவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கே எண்ணெய் சிதறலை நேரில் கண்ட பிறகு, மனம் கொதிப்படைந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அவர் திரும்பினார். அதற்குப் பிறகு ஏப்ரல் 22-ம் தேதியைத் தேசியச் சுற்றுச்சூழல் நாளாக அறிவிக்கும் மசோதாவை அவர் சமர்ப்பித்தார். 1970 முதல் அமெரிக்காவில் அது அனுசரிக்கப்பட்டது.
நவீன சுற்றுச்சூழல் போராட் டத்தின் தொடக்கம் என்று இந்த நாளைக் கூறலாம். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் இருக்கும்.
யுனெஸ்கோ அங்கீகாரம்
இதைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் பற்றிய யுனெஸ்கோ மாநாட்டில் ‘எர்த் டே' எனப்படும் புவி நாளைக் கொண்டாடுவது பற்றி அமைதிக்காகப் போராடிய ஜான் மெக்கோநெல் அறிவித்தார். 1972-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் புவி நாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் தொடர்கின்றன.
1990-ம் ஆண்டு புவி நாளன்று 141 நாடுகளில் 20 கோடி மக்களைத் திரட்டிச் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை உலகறியச் செய்ததன் மூலம், மறுசுழற்சி முயற்சிகளுக்கு மிகப் பெரிய உத்வேகம் கிடைத்தது. அத்துடன் 1992-ம் ஆண்டு ரியோடி ஜெனிரோவில் ஐக்கிய நாடுகள் சபை, பூமி குறித்து விவாதிப்பதற்காக நடத்திய உலகளாவிய மாநாட்டுக்கும் இந்த முயற்சி அடிப்படையாக அமைந்தது.
பசுமை நகரங்கள்
2014 புவி நாளின் கருப் பொருள்: பசுமை நகரங்கள் (Green Cities). உலகில் நகரங்களே பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாக இருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பால் அதிக மக்கள் அவதியுறுவதும் நகரங்களில்தான். எனவே, நகரங்களைக் கூடுமானவரை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும், அதற்கு சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வழிமுறை களைப் பின்பற்ற வேண்டு மென இந்தப் புவி நாள் வலியுறுத்துகிறது. நாமும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நடைமுறைகளைக் கடைபிடிக்க ஆரம்பிக்கலாமே!

உணவுச் சங்கிலி


கூட்டிலிருந்து ஒரு குருவிக் குஞ்சு கீழே விழுந்து கிடக்கிறது. நீங்கள் அதைப் பார்த்துவிடுகிறீர்கள். அப்போது ஒரு பருந்து அந்தக் குஞ்சைக் கொத்திச் செல்வதற்காக மேலிருந்து கீழ்நோக்கி இறங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு பாம்பும்கூட அந்தக் குஞ்சைப் பிடித்துச் செல்ல வருகிறது. இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
பருந்தையும் பாம்பையும் துரத்திவிட்டுவிட்டுக் குருவிக் குஞ்சை எடுத்து, அதன் கூட்டைத் தேடி அதில் விடுவதா? அல்லது உங்கள் வீட்டுக்கு எடுத்து வந்து வளர்ப்பதா? அல்லது விலங்குகள் நலச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களை வந்து எடுத்துப்போகச் சொல்வதா? அல்லது அந்தக் குஞ்சை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுவதா? எது சரியான செயல்?
அந்தக் குஞ்சை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுவதுதான் சரி. இதென்ன கொஞ்சம்கூட இரக்கமில்லாத முறையாக இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அதுதான் சரி. இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். பருந்தும் பாம்பும் அந்தக் குஞ்சைத் தின்னக் கூடாது என்று நீங்கள் நினைத்தால், அப்புறம் பருந்தும் பாம்பும் எப்படி உயிர்வாழ்வதாம்? இயற்கையில் உள்ள உணவுச் சங்கிலியே ஒன்றை ஒன்று இரையாக்கிக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது.
பூச்சியைத் தவளை தின்கிறது, தவளையைப் பாம்பு தின்கிறது, பருந்தை ஆந்தை தின்கிறது. இப்படித்தான் இருக்கும் உணவுச் சங்கிலி. அதை இடையூறு செய்தால் மொத்த உணவுச் சங்கிலியும் பாதிக்கப்படும். இயற்கையில் எங்கே கைவைத்தாலும் ஏதாவதொரு இடத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிடும். அவ்வளவு நுண்மையான சமநிலையில்தான் இயற்கை அமைந்திருக்கிறது.
இருந்தாலும் அந்தக் குஞ்சு பாவமல்லவா? அதை அதன் கூட்டிலாவது கொண்டுபோய் சேர்க்கலாமல்லவா? இல்லை, பெரும்பாலும் அந்தக் குஞ்சைத் தாய்ப்பறவை தன் கூட்டில் சேர்க்காது. சரி, நம் வீட்டிலாவது கொண்டுவந்து வளர்க்கலாமல்லவா? எப்படி வளர்ப்பீர்கள்? நம் வீட்டு நாய்க்குட்டியை வளர்ப்பது போலவா? அல்லது கூண்டுக்கிளியை வளர்ப்பது போலவா?
பறப்பதற்காகப் பிறந்த ஒரு பறவையை நம் வீட்டில் கொண்டுவந்து வளர்ப்பது எந்த விதத்தில் நியாயம்? அது மட்டுமல்லாமல் அதன் உணவுப் பழக்கமும் பிற பழக்கங்களும் எதுவும் நமக்குத் தெரியாது. இதற்குப் பேசாமல் அந்தக் குஞ்சை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது.
பறவைகளின் மேல் நமக்கு உண்மையில் இரக்கம் இருந்தால், அவை வாழ்வதற்கு ஏற்ற சூழலை நாம் உருவாக்கித்தர வேண்டும். பறவைகள் வாழ்வதற்கேற்ற சூழல்தான் நாம் வாழ்வதற்கேற்ற சூழல் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். காடுகளை அழிக்காமல் இருக்க வேண்டும். பூச்சி மருந்துகள், செயற்கை உரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மருந்துகளும் உரங்களும் நீரிலும் மண்ணிலும் கலக்கும்போது தீமைசெய்யும் ஒரு சில பூச்சிகளோடு நன்மை செய்யும் எண்ணற்ற பூச்சிகளும் அழிந்துவிடுகின்றன. இரைக்காகப் பூச்சிகளை நம்பியிருக்கும் பெரும்பாலான பறவைகளுக்கான இரையும் அழிந்துபோய்விடுகிறது.
இல்லையென்றால் பூச்சி மருந்தினால் பாதி உயிரோடு இருக்கும் பூச்சிகளை உண்டு பறவைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டால் அந்த இனமே, அத்தோடு அழிந்துவிடும். எனவேதான் பறவைகளைக் காப்பாற்ற வேண்டும் என்றால், அதன் மூலம் நம் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும் என்றால், நமக்கு இரக்கம் மட்டும் போதாது. சரியான அக்கறையும் அறிவும் வேண்டும். 

Monday, April 21, 2014

காட்டுப்புறாவும் கொண்டைக்குருவியும்

நான் சிறுவனாயிருக் கையில் காலை ஐந்து மணியளவில் ‘கி கோ கீ’ என்று இனிமையாய்ப் பாடும் கரிச்சான் என்ற கரிக்குருவியே என்னைப் படுக்கையை விட்டெழுப்பும். நான் சிற்றூரில் பிறந்தவன். மரஞ் செடிகளோடும், விலங்குகளோடும், பறவைகளோடும் சேர்ந்தே வளர்ந்தேன்.
வீட்டில் கோழிகள், மரங்களில் காக்கைகள், வானத்தில் சிட்டுக்குருவிகள், தோட்டத்தில் தேன்சிட்டுகள், தெருவோரம் கூட்டமாய்ப் பூணில்கள் (கல்லுக் குருவிகள் - தவிட்டுக் குருவிகள்), தாய்க் கோழிகளின் பின்னே திரியும் குஞ்சுகளைக் குறிவைத்துச் செம்பருந்தும் கரும்பருந்தும் வானத்தில் வட்டமிடும். புளியந்தோப்பில் காட்டுப்புறாவும் கொண்டைக்குருவியும் (Bul bul) கூடுகட்டி வாழும்.
எலுமிச்சை மரங்களின் அடியில் இருண்ட நிழலில் பதுங்கிப் பதுங்கி நடக்கும் செம்போத்து (Crow pheasant), எனக்கு மிகவும் பிடித்த பறவை. அது காக்கை போன்றஅலகும் சிறகுகளுக்கு செம்பழுப்பு வர்ணமும் பூசிக்கொண்டது போலிருக்கும்.
கொய்யா மரத்திலும் கோவைக் கொடியிலும் பச்சைக்கிளிகள் கீச்சிட்டுக் கொண்டிருக்கும். பனை மரப் பொந்திலிருந்து நீல நிறப் பனங்காடை (Indian Roller) கரகர குரலில் கத்தும். சித்திரை பிறந்தால் மாமரத்திலிருந்து குயில்கள் மாறி மாறிக் கூவும். மழைக்காலத்தில் தெருவோரக் குட்டைக்கு மீன்கொத்திகள் வந்து வந்து போகும்.
வயலில் மொச்சைத் தழைகளுக்கு அடியில் புகுந்து குடுகுடு காடை (குறும்பூழ் - Quail) ஓடும். காட்டுப் புதரில் கௌதாரி பதுங்கியிருக்கும்.
இரவில் வீட்டைச் சுற்றிச் சிற்றாந்தைகள் கத்தும். மரத்திலிருந்து கூகை (Barn owl) குழறும். வட்ட முகமும் துருத்தும் கருங்கண்களும்கொண்ட இக்கூகை பொந்தில் பதுங்கியிருந்து ஆளை விழுங்குவது போல் பார்க்கும். இரவு நிலா வெளிச்சத்தில் வௌவால்கள் பறக்கும். கொக்குகள் பூமாலை போல் வரிசைபிடித்து வலசை போகும்.
பொருநை கரை
எட்டாம் வகுப்புவரை எங்கள் சொந்த ஊர். பின் உயர்நிலை பள்ளிப் படிப்பு பொருநை கரையில் இருக்கும் கோபாலசமுத்திரம் என்ற ஊரில் தொடர்ந்தது. அழகான ஆறும் அதன் கரையும் பறவைகளின் புகலிடங்களாகத் திகழ்ந்தன. ஆற்றின் வடகரையில் மிகப் பெரிய மாமரம். மாலை மயங்கும் வேளை ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து அதில் அடையும். அப்பொழுது அவை எழுப்பும் குரல்களைக் கேட்க வேண்டுமே! ஒரே இசையரங்குதான்!
மேற்கில் சென்றால் அணைக்கரை ஓரம் வானுயர ஓங்கிய மருத மரங்கள் வரிசையாய் நிற்கும். தொலைவிலிருந்து பார்த்தால் மரங்களில் நூற்றுக்கணக்கான வெள்ளைப் பூக்கள் பூத்துக் குலுங்குவது போலிருக்கும். கிட்டப் போனால் அத்தனையும் வெண் கொக்குகள்!
கரும்பறவைகள்
அன்றில் பறவை பற்றி தமிழி லக்கியம் பல இடங்களில் பேசுகின்றது. அது கரு நிறமானது; தலையில் சிவந்த கொண்டையும், வளைந்த கூர் அலகும் உடையது. ஆணும் பெண்ணும் பிரியாமல் எப்பொழுதும் ஒன்றாகவே வாழுமாம். பிரியாமல் வாழும் காதலர்களுக்குப் புலவர்கள் அன்றில் இணையினை உவமையாகக் கூறுவார்கள். பாட்டில் படித்திருந்தேனேயன்றி, இவற்றை நேரில் பார்த்ததில்லை.
ஆனால், ஒருநாள் ஆற்றங்கரையில் புதுமையான இரண்டு கரும்பறவைகளை ஒன்றாகப் பார்த்தபொழுது, அவற்றின் சிவந்த உச்சிக் கொண்டையும் வளைந்து நீண்ட கூர்அலகும் அவையே அன்றில்கள் என்று பறைசாற்றின. பின்பு பறவை நூல் ஒன்றில் Black Ibis என்ற பறவையின் படத்தைப் பார்த்தேன். நான் பார்த்த ஆற்றங்கரைப் பறவையை அதில் கண்டேன். மேலும் விளக்கம் தேடியபொழுது Black Ibis என்பதே அன்றில் என்பது உறுதியாயிற்று.
செங்கால்கள்
திருவனந்தபுரம் உயிர்க்காட்சிச் சாலையில் ஒரு நாரையைப் பார்த்தேன். மெய்சிலிர்த்தது. பெரு மகிழ்ச்சியில் ஆழ்ந்தேன்.
‘பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன 
பவளக் கூர்வாய் செங்கால் நாரை’
- என்று சத்திமுற்றப் புலவர் பாட்டொன்றில் வருணித்த, அதே செங்கால் நாரையை அணுவும் பிறழாமல், அதே தோற்றத்தில் அங்கு கண்டேன். அதன் அலகு பிளந்துவைத்த பனங்கிழங்கு என்றால், பனங்கிழங்கேதான்!
புதுவை ஏரி
பிற்காலத்தில் நான் புதுவை நகர் வாழ்பவன் ஆகிவிட்ட பிறகு, புதுவையின் புகழ்பெற்ற ஊசுட்டேரி என் பறவை ஆர்வத்தை வளர்த்தது. நானும் என் நண்பர் சிவ. கணபதியும் முப்பது ஆண்டுகட்கு முன்பே, பறவைகளை நோக்குவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தோம். கையில் தொலைநோக்கிகளுடன் (Binocular) பலமுறை பறவைகளை நோக்க ஊசுட்டேரிக்குச் சென்றிருக்கின்றோம். கரையோரத்திலும், நீர் நடுவிலும் எத்தனை வகையான நீர்ப்பறவைகள்!
நாங்கள் பார்த்து மகிழ்ந்தவை சிறுகொக்குகள், பெருங்கொக்குகள், உண்ணிக் கொக்குள் (Cattle egret), வாத்துகள், இறகிகள், நீர்க் காக்கைகள், முக்குளிப்பான்கள், கருநாரைகள், கூழைக்கடாக்கள் (Pelican), பல வகை மீன்கொத்திகள்.
வேதாரணியம் நீர்நிலைகளில் மிகுதியாய் வாழும் பூநாரைகள் (Flamingos) நான்கை ஒரு முறை ஊசுட்டேரியில் பார்த்தோம். ஆனால், சில நாள்களில் அவை அங்கிருந்து போய்விட்டன.
ஏரிக்கரைகளில் மட்டுமல்லாது சுற்றுப்புற நிலங்களிலும் நாங்கள் சுற்றித் திரிந்தோம். அங்கே அழகிய செம்மூக்கு ஆட்காட்டிப் பறவைகள் (Redwatted lapwing) ‘டிடிட் டிடிட் யூ' என்று தமக்கே உரிய முறையில் குரலை எழுப்பிப் பறந்தன. பலவகையான உப்புக்கொத்திப் பறவைகள் (Plovers) ஓடித் திரிந்தன.
தேங்கிய குட்டை
பறவைகளின் வாழ்வை ஆராய்வ தற்காகப் பிரான்சிலிருந்து வந்திருந்த இளைஞர் ஒருவரை ஒருமுறை ஊசுட்டேரியில் கண்டோம். பிரான்சில் இயற்கைச் சூழல் முற்றும் அழிந்து போயிற்றதென்றும், அங்கு அழிந்துபோன பறவையினங்களை ஊசுட்டேரியில் பார்க்க முடிகிற தென்றும் மகிழ்ச்சியோடு கூறினார்.
ஆனால், அந்த அழகிய ஏரி இன்று தேக்கமுற்றுப்போன பெருங் கழிவு நீர்க் குட்டையாகக் காட்சி அளிக்கின்றது. பருவகாலங்களில் வெளியிருந்து வரும் பறவைகள், இப்போது வருவதில்லை.
ஏரியால் பாசனம் பெற்ற விளைநிலங்களை வளர்ச்சி, முன்னேற்றம் என்ற போர்வையில் முதலாளிக் கும்பல் முற்றும் அழித்துக் குடியிருப்புகளைக் கட்டமைத்துக்கொண்டன.
பொழுதுபோக்குப் பூங்கா, அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் நச்சுப்புகையும், கழிவுகளும், மாசும் இயற்கை சூழலை அழித்த பின் எந்தப் பறவைதான் அங்கு வரும்?
                                                     நன்றி 
                                   ம.இலெ. தங்கப்பா, எழுத்தாளர், இயற்கை ஆர்வலர்