Thursday, January 9, 2014

தினமும் காணும் கடவுள்!

இந்துமதம் ஆறுபிரிவுகளாக இருந்த காலம் ஒன்று உண்டு. கணபதியை வழிபடுவோர் காணாபத்யம், சிவனை வழிபடுவோர் சைவம், விஷ்ணுவை வழிபடுவோர் வைணவம், சக்தியை வழிபடுவோர் சாக்தம், குமரனை வழிபடுவோர் கவுமாரம் எனப்பட்டனர். இந்தக் கடவுள்களின் வழிபாடு இன்று வரை நிலைத்து நிற்கிறது. ஆனால், சூரியனை வழிபடும் சவுமாரம் என்ற மதம் மட்டும் காலப்போக்கில் மறைந்து விட்டது. அதுவும் வடமாநிலங்களில் தான். தற்போது, பெயரளவுக்கு சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லுதல் ஆகிய அளவோடு சூரிய வழிபாடு நிற்கிறது.
ஆனால், தமிழகத்திலும் கேரளாவிலும் மட்டும், சூரிய வழிபாட்டுக்கென தனிநாள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சூரியனின் வடதிசைப் பயணம் ஆரம்பமாகும் உத்தராயண காலத்தின் முதல்நாள் பொங்கல் பண்டிகையாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில், இந்நாள் "மகர சங்கராந்தி'. அன்று ஒளி வடிவமாக சாஸ்தாவை மக்கள் வணங்குகின்றனர். சபரிமலையில் விசேஷ பூஜை நடக்கிறது.
மற்ற தெய்வங்களை நாம் சிலை வடிவிலேயே பார்க்கிறோம். ஆனால், சூரியன் கண்கண்ட தெய்வமாக தினமும் நம் கண்முன் தெரிகிறார். புராணங்களின்படி அவர் பெரிய பணக்காரர். ஆனால், இரக்க குணமுள்ளவர். யார் என்ன கேட்டாலும் கொடுக்கக்கூடியவர். "ஸ்யமந்தகம்' என்னும் மணியை அவர் மாலையாக அணிந்து இருந்தார். அந்த மணிமாலை இன்னொரு
சூரியனுக்கு ஒப்பானது. சூரியனின் அளவுக்கு ஒளி வீசக்கூடியது. அந்த மாலை யாரிடம் இருக்கிறதோ, அவருக்கு எட்டுப் பாரம் அளவுக்கு தங்கம் கிடைக்கும். அது மட்டுமல்ல! அதை அணிந்திருப்பவர் என்ன நினைக்கிறாரோ, அந்தப் பொருள் உடனடியாக கையில் கிடைத்து விடும். இப்படிப்பட்ட மாலையை இழக்க யாருக்காவது மனது கேட்குமா!
ஆனால், இதை துவாரகையில் வசித்த தனது பக்தரான சத்ராஜித்துக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார். அந்தளவுக்கு இரக்க மனமுள்ளவர்.' சூரியஒளியே உலகில் பயிர்பச்சை விளையக் காரணமாக இருக்கிறது. சூரியன் இல்லாவிட்டால் உலகம் இல்லை. ஒரு காலத்தில் மகான்கள், சூரிய ஒளியைப் பார்க்காவிட்டால், அன்றைய தினம் சாப்பிடவே மாட்டார்கள். தொடர்ந்து அடைமழை பெய்யும் காலங்களில் சூரிய உதயம் இருக்காது. அதுபோன்று இரண்டு, மூன்று மாதங்கள் வரை கூட அவர்கள் சாப்பிடாமல் இருந்து விடுவர்.
காந்திஜியின் தாயார் புத்லிபாயிடம் இந்தப் பழக்கம் உண்டு. அவர், சூரியன் உதயமாகாத நாட்களில் சாப்பிடமாட்டார். சிறுவனான
காந்திஜிக்கு அதைக்கண்டு வருத்தமாக இருக்கும். வாசலில் வந்து நின்றபடி, சூரிய வெளிச்சம் வெளியே தெரிகிறதா என்று
கவனித்துக் கொண்டே இருப்பார். திடீரென மேகங்கள் விலகி, லேசாக சூரிய கிரணங்கள் வெளியே தெரிந்ததும், வீட்டுக்குள் ஓடிப்போய் அம்மாவிடம் சொல்வார். அம்மாவும் வெளியே வந்து எட்டிப் பார்ப்பதற்குள், சூரியனை மீண்டும் மேகம் மறைத்து விடும். அந்த அம்மையார் சாப்பிடமாட்டார். இப்படி, இரண்டு மூன்று நாட்கள் வரை அவர் சாப்பிடாமல் இருந்துள்ளார்.
சூரியன் எளிமையானவர். அவருக்கு பிடித்த பூ "எருக்கு'. விநாயகருக்கும் இதே மலர் பிடிக்கும். உலக மக்களுக்கு தன்னாலான எல்லா பொருட்களையும் வழங்கிவிட்டு, தனக்கென யாரும் பயன்படுத்தாத எருக்கம்பூவை மாலையாக அணிந்து கொண்டவர்.
இதனால் அவரை "அர்க்கன்' என்று சொல்வர். "அர்க்கம்' என்றால் "எருக்கு'. அர்க்கன் என்றால், 'எருக்கு மாலை அணிந்தவர்' என்று பொருள்.
இதனால், தமிழகத்தின் ஒரே சூரியக்கோயிலான சூரியனார்கோயிலில் எருக்கஞ்செடி தல விருட்சமாக உள்ளது. சிவனும், அம்பாளும் சூரியனைத் தங்கள் கண்களாகக் கொண்டுள்ளனர் என்பர். ஒரு கண் சூரியன் மற்றொரு கண் சந்திரன். நெற்றிக்கண் அக்னி என்று வர்ணிக்கின்றனர். விஷ்ணுவையும் "சூரிய நாராயணர்' என்று சொல்வதுண்டு. அதிகாலையில் சூரியனைப் பார்க்காத
கண்கள் வீணே என்கின்றனர் மகான்கள். எனவே, தினமும் அதிகாலையில் எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்த பிறகு, நம் அன்றாடப்பணிகளைத் துவங்க வேண்டும். பொங்கல் திருநாளில் நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி இது தான்!
-தி.செ.
பொங்கள் செய்திகளுக்கு நன்றி தினமலர்

மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம்

நாகரீகம் நாலாபுறம் குடியேறினாலும், பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், பறைசாற்றுவதிலும், தென்மாவட்டத்திற்கு இணை, தென்மாவட்டமே. "அச்சம் தவிர், நெஞ்சை நிமிர்' என, ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்களில் காளைகளுக்கு இணையாய் பாய்ந்து வரும், நம்மூர் காளைகளே அதற்கு சாட்சி.
ரேக்ளா பந்தயத்தில் வெற்றி வாகை சூடும் தென்மாவட்ட காளைகளில், மதுரை ஓய்.கொடிக்குளம் பழனியாண்டியின் காளைகளுக்கு முக்கிய இடமுண்டு. "தவிடன் காளை வந்துருச்சுடோய்...' என, எதிர் தரப்பு பீதியடையும் அளவிற்கு, அவரது காளைகளின் பாய்ச்சல் வேகம், சொல்லில் அடங்காது. அதற்காக, அவை பயிற்றுவிக்கப்படும் சூழ்நிலையை கேட்டால், "மனிதருக்கு கூட இந்தளவு சவுகரியம் கிடைக்குமா,' என, அசந்து விடுவீர்கள்.
சந்தையிலிருந்து காளை கைக்கு வந்ததுமே, அதன் குணமறிந்து பயிற்சி அளித்து, தயார் படுத்துகின்றனர். தேன் கலந்த பேரீட்சை கால் கிலோ, காளைகளின் காலை டிபன். "டிபன்' முடித்த கையோடு, தரிசில் உழவு செய்து, இழுவைப் பயிற்சி. அதன் பின், கண்மாய் அல்லது கிணற்றில் நீச்சல் பயிற்சி. குளியல் முடிந்ததும், மதிய உணவாக அரை லிட்டர் பால், நான்கு முட்டை.
பின் ஓய்வுக்குச் செல்லும் காளைக்கு, தலா ஒன்றரை கிலோ பருத்தி விதை, சத்துமாவு கலவையை கூழ் போல் காய்ச்சி, மாலை "ஸ்நாக்ஸ்' ஆக தருவர். காளை ஒன்றை பராமரிக்க, நாள் ஒன்றுக்கு ஆகும் செலவு என்ன தெரியுமா? ரூ.500.
கிராமங்களின் செலவு கணக்கை ஒப்பிடும் போது, ரூ.500 என்பது, விண்ணைத் தொடும் "பட்ஜெட்'. இருப்பினும், பந்தயத்தில் வெற்றி பெற்று, உரிமையாளருக்கு பெருமை சேர்க்கும் போது, செலவுகள், வாழ்த்துக்கள் மூலம் வரவாய் மாறிவிடுகிறது.
"தடைகளை கடந்து, எதிர்ப்பை சமாளித்து, வருவாய் இழந்து, அப்படி ஏன் காளைகளை கண்காணிக்க வேண்டும்?' என்ற கேள்விக்கு, மனம் திறக்கிறார், பழனியாண்டி, ""சிறு வயதில் வீர விளையாட்டுகளில் இருந்த ஆர்வம், ரேக்ளா பக்கம் திருப்பியது. பெரியமாடு, கரைச்சான் மாடுகள் ஜோடி, தலா 2 வைத்துள்ளேன்.
காளைகளுக்கு பராமரிப்பு செலவு அதிகம் இருந்தாலும், பின்னணியில் கிடைக்கும் வெற்றி, அனைத்தையும் மறக்கடிக்கும். அப்பன் திருப்பதியில் நடந்த பந்தயத்தில், 27ம் எண்ணில் இருந்த எனது மரக்காளை, முதல் பரிசை பெற்று, எனக்கு கவுரம் தேடித்தந்தது. இருபது ஆண்டுகளில், என் காளைகள் பெற்ற பரிசுகளை வைக்க, வீட்டில் இடமில்லை. மற்றவர்களுக்கு இது மாடு; எனக்கு கவுரவம் சூட்டும் மகுடம்,'' என, பெருமையாய் கூறினார்.
"பெருமை ஒருபுறம் இருந்தாலும், பாரம்பரியம் மாறிவிடக்கூடாது,' என்பதில் கிராமத்தினர், ரெம்பவே சிரத்தை எடுப்பர். சிலர் அதை விமர்சனம் செய்யலாம்; ஆனால், ஒவ்வொரு வீர, தீர விளையாட்டின் பின்னணியில், தங்கள் வாழ்வை அதற்காக அர்ப்பணித்த தமிழர்களின் தன்னம்பிக்கை ஒளிந்திருப்பதை, பலரும் புரிந்துகொள்வதில்லை.
- மேஷ்பா

"தலைப் பொங்கல்' சீரும், சிறப்புமாய்!

"வீட்டை கட்டிப்பார், திருமணத்தை முடித்து பார், ' என்பதெல்லாம் அன்று. "திருமணத்தை முடித்து பார், அதன் பின் வரும் சங்கடங்களை எண்ணிப்பார் ,' என்கிறது, "மாடர்ன்' உலகம். திருமணம்- அது இருவீட்டாருக்கும் பொதுவானது என்றாலும், பெண் வீட்டார் கொஞ்சம் அதிகமாகவே ஆர்ப்பரிப்பார்கள்.
கல்யாண சீர் வரிசையுடன் நிற்பதில்லை, பெண் வீட்டாரின் செய்முறை படலம். "தலைத் தீபாவளி, தலைப்பொங்கல்,' என, அடுத்தடுத்த செலவுகள் வந்தாலும், தன் பெண்ணின் மகிழ்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு, சளைக்காமல் செய்முறை செய்வது, நம்மூர் கலாசாரம். தலைத் தீபாவளிக்கும், பொங்கலுக்கும் நிறையவே வித்தியாசம். ஒரு மாதத்திற்கு முன்பே, பொங்கல் சீர் ஏற்பாடுகள் தொடங்கிவிடும். காரணம், அதில் பாத்திரங்கள் அதிக இடம் பிடிக்கும். திருமணத்தை விட, தலை பொங்கல் "சீர்' தரும் போது தான், நிறைய பாத்திரங்கள் தரப்படுகிறது.
பொங்கல் பானையாக, பித்தளை, சில்வர், வெண்கலத்தில், மூன்று வித பானை தரப்படுகிறது. "பொங்கல் படி' எனப்படும், அரிசி, வெல்லம், கரும்பு போன்றவையும், வசதி படைத்தவர்கள், பருப்பு வகைகளையும் சேர்த்து கொடுக்கின்றனர்.
"ஏதோ... எடுத்தோம்... கவிழ்த்தோம்...' என, கையில் நீட்டி விட முடியாது, இந்த சீர்வரிசையை. உறவினர்கள் சகிதம் கிளம்பி, முறைப்படி மாப்பிள்ளை வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டிய மரபு, பொங்கல் சீருக்கு உண்டு. சீர் வரிசைக்கு ஏற்ப, வரவேற்பும், விருந்தும் படைப்பது, மாப்பிள்ளை வீட்டாரின் சம்பிரதாயம். சீர் அதிகம் இருந்தால், உறவினர்களிடம் பெருமை அடிப்பதும், குறைந்திருந்தால் நேருக்கு நேர் வசைபாடுவதையும், சில மாப்பிள்ளை வீட்டார், இன்றும் தொடர்கின்றனர்.
தலைத்தீபாவளியை, பெண் வீட்டில் கொண்டாடினாலும், பொங்கல் பொங்குவது என்னவோ, மாப்பிள்ளை வீட்டில் தான். "வண்ணம் தீட்டிய படிக்கட்டில் அமர்ந்து, அழகான மனைவியின் தோளில் உரசியபடி, வாசலில் வரைந்த கோலத்தை ரசித்துக் கொண்டே, கரும்பு கடிக்கும் சுகம் இருக்கே...' அந்த ஒரு நொடியில், தன் தந்தையின் சீர் வரிசை சிரமங்களை எல்லாம் மறந்து
விடுவாள் மனைவி.
தாய் வீட்டுச் சீதன பானையில், பொங்கல் பொங்கும் போது, மனைவி ஆனந்த கண்ணீர் வடிக்கும் அந்தத் தருணத்திலிருந்து அவளை மீட்பது, குலவை சத்தம் மட்டுமே. அத்தனை சீர் வரிசை செய்தாலும், பொங்கல் பண்டிகைக்கு, மாமனார், மாமியாருக்கு அழைப்பு கிடையாது. தன் குடும்பத்தாருடன், தன் மனைவி சகிதமாய் புதுமாப்பிள்ளை, தலைப் பொங்கல் கொண்டாடுகிறார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில், பொங்கல் "சீர்' படிப்படியாக குறைந்து, உறவுகள் "சீரில்லாமல்' போகும் கதைகளும் நடப்பதுண்டு. இருந்தாலும், தலைப் பொங்கல் "சீர்', நிச்சயம் மறக்கமுடியாது. மாஜி மணமகன்களே, உங்கள் தலைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கு திரும்பிவிட்டீர்களா?
நிச்சயம் இனிக்கும், பொங்கல் மட்டுமல்ல, அந்த நினைவுகளும் தான்.
-சுப்பு

Tuesday, January 7, 2014

நம்மாழ்வார் என்னும் மனிதர்

#லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம்பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே.
#பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். அதைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் பேசுவார். ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். அதனாலேயே தனது பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு அழுதார் நம்மாழ்வார்.
#நம்மாழ்வாரை அதிகம் ஈர்த்தவை ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகள். ‘‘டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே’’ என்று ஜே.சி. குமரப்பா சொன்னதை நகைச்சுவை ததும்பத் தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார்.
#நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று பலரும் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று முதன்முதலாக நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.
#நாடெங்கும் பசுமைப் புரட்சி தீவிரமாகப் பரவிய அதே காலகட்டத்தில், இயற்கை விவசாயம் தொடர்பாகத் தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார் நம்மாழ்வார். அதற்காகத் தான் பார்த்துவந்த அரசு வேலையான மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனப் பணியையும் உதறினார்.
#பசுமைப் புரட்சியின்போது அரசு உரங்களை ஊக்குவித்துக்கொண்டிருந்த காலம் அது. நம்மாழ்வார் கால்நடையாகக் கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்தார். உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை கூடி, அது அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுகிறது என்பதைச் சிறிய செயல்விளக்கம் மூலம் நிரூபித்துக்காட்டினார் நம்மாழ்வார். இன்றைக்கு இயற்கை விவசாயம்பற்றி தமிழகத்தில் ஓரளவேனும் விழிப்புணர்வு இருக்கிறது என்றால், அதற்கு நம்மாழ்வாரின் படிப்படியான செயல்பாடுகளே காரணம்.
#பலரும் நினைப்பதுபோல் நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல.பயோடெக்னாலஜியின் அத்தனை பரிமாணங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் நம்மாழ்வார். இது அவரது வானகம் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால்தான் நம்மாழ்வார் எதிர்த்தார்.
#கேடு விளைவிக்கும் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்த்த நம்மாழ்வார், நமது பாரம்பரிய ஒட்டுரகங்களை ஆதரித்தார். இவரது வழிகாட்டுதலில் ஒரு புதிய ஒட்டு எலுமிச்சை ரகத்தையே உருவாக்கினார் புளியங்குடி அந்தோணிசாமி.
#ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் நெல் நடவு என்பது உலக அளவில் பிரபலமானது. ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும் மடகாஸ்கர் நெல் நடவு 1960-களில் வெளியே தெரிந்தது. ஆனால், விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்றுநடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள்தான் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தவர் நம்மாழ்வார். இன்றைக்குத் தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகி, ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் ஈட்ட முடிகிறது என்றால் அதற்குக் காரணகர்த்தா நம்மாழ்வாரே!
#1960 மற்றும் 70-களில் கலப்பின ரகங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது கலப்பினங்களைப் பற்றிப் படித்தவர்கள், அனுபவம் வாய்ந்த விவசாயிகளிடையேகூடப் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அந்த நேரத்தில் “கலப்பினம் மற்றும் வீரிய ரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காக அல்ல; மாறாக, ரசாயன உரங்களை விற்பனை செய்வதற்கான அரசியலே பசுமைப் புரட்சி பெயரிலான கலப்பின ஊக்குவிப்பு” என்று அன்றே சொன்னார் நம்மாழ்வார்.
#நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல... மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். சோலைக்காடுகள் இல்லை எனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது.சோலைக்காடுகள் இல்லை எனில், மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார்.
#நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு - தனது எந்த ஒரு கூட்டத்திலும் இந்த வசனத்தைப் பேசத்தவறியதே இல்லை நம்மாழ்வார்.
#நம்மாழ்வாரின் தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான். ஆனாலும், தமிழ் இலக்கியம் தொடங்கி ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் பாமரத் தமிழில் சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும் என்பார்.
#விவசாயிகளிடம் சென்று பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள் என்பார். தனது கூட்டங்களிலும், ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதையும் இயன்றவரை தவிர்த்தே வந்தார்.
#பி.டி. கத்திரியை இந்தியாவில் அறிமுகம் செய்யலாமா என்று அன்றைய மத்திய சுற்றுச்சூழல்அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் தனது பிரதிநிதிகளை அனுப்பி பி.டி-க்கு எதிராகப் பேசச் செய்தார் நம்மாழ்வார். அதேபோல் நம்மாழ்வாரின் நண்பர்களான அரச்சலூர் செல்வம், டாக்டர் சிவராமன் ஆகியோர் அன்றைக்குத் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் அதற்குத் தடை உத்தரவும் பெற்றனர்.
#தொடக்கத்தில் சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம் தொடர்பாகப் பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக இயங்கிவந்தன. ஆனால், நம்மாழ்வார் ஆசைப்பட்டதாலேயே பூவுலகின் நண்பர்கள், ரிஸ்டோர், தமிழ்நாடு வணிகர்கள் சங்கம், பெண்கள் இணைப்புக் குழு, இந்திய நல்வாழ்வு நல்லறம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் ஒன்றிணைந்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு 2008-ல் தொடங்கப்பட்டது.
#1990-களில் ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம் இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தது. அப்போது இத்தாலி நாட்டில் நடந்த துரித உணவுக்கு எதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பிய நம்மாழ்வார், இங்கு ஆரம்பித்ததுதான் ‘ஸ்லோ ஃபுட் மூவ்மெண்ட்’. இன்றைக்கு, பளபளக்கும் பல்பொருள் அங்காடிகளில் கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியத் தானியங்களான சாமையும் கம்பும் போட்டிபோட முடிகின்றன என்றால், அதற்குக் காரணம் நம்மாழ்வாரே!
#தனது வாழ்நாளில் அலோபதி மருத்துவத்தை வேண்டாம் என்று ஒதுக்கியவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆர்வம்காட்டினார். அதில் நிறையக் கற்றுக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.
#நம்மாழ்வாருக்கு நல்ல குரல் வளம். வயலில் இறங்கிவிட்டால் பாட்டு தானாக வந்துவிடும். பட்டுக்கோட்டையாரின் தத்துவப் பாடல்கள், பாரதியின் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?’ போன்றவை அவர் அடிக்கடி ராகமிட்டுப் பாடும் பாடல்கள்.
#நம்மாழ்வார் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர் துயில் எழுந்தால் அது அதிகாலை 4.30 மணி என்று உறுதியாகச் சொல்லலாம். எழுந்ததும் வேப்ப மரப்பட்டையால் பல் துலக்கிவிட்டு, தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார். பிறகு, மூச்சுப் பயிற்சி. அதன் பின்தான் அவரது வழக்கமான அலுவல்கள் தொடரும்.
#கடைசி வரை இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் பண்ணையில் சுமார் 6,000 இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.
#காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்.
#வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செல விட்டார். எங்கு சென்றாலும் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார். அவரது நண்பர்கள், நலம்விரும்பிகள் அவருக்கு கார் வாங்கித் தர முன்வந்தும் “என்னால முடிஞ்சவரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுக்குறேனே” என்று தவிர்த்துவிட்டார்.
#அவர் தனது வாழ்க்கைத்துணை சாவித்திரியை 50 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒருமையில் அழைத்தது கிடையாது. “வாங்க… போங்க” என்று மரியாதையுடன்தான் அழைப்பார்.(உலகில் வாழும் ஒரு சில மனிதர்களில் இவரும் ஒருவர் )

Monday, January 6, 2014

பட்டுப்போன மரங்களால் பறந்துபோன பறவைகள்

களையிழந்து நிற்கும் வேடந்தாங்கல் சரணாலயம் ச.கார்த்திகேயன்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் போதிய பராமரிப்பின்றி மரங்கள் பட்டுப்போனதால், தேடி வந்த பறவைகள் ஓடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சுமார் 80 கி.மீ தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் அருகில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தை இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு 1798-ல் அடையாளம் கண்டு, 1858-ல் மேம்படுத்தியது. 1936-ம் ஆண்டு வேடந்தாங்கலில் உள்ள ஏரி, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1962-ல் மெட்ராஸ் வன சட்டப்படி பறவைகள் சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது. அதன் பின்னர் 1972-ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு, அச்சட்டத்தின் கீழ், வேடந்தாங்கல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த பறவைகள் சரணாலயத்திற்கு இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தைக்குத்தி நாரை, ஊசிவால் வாத்து, சாம்பல் நிற நாரை, வர்ண நாரை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பறவைகள் ஆண்டுதோறும் வந்து, இனப்பெருக்கம் செய்கின்றன.
இந்த பறவைகள் சரணாலயத்தில் முக்கிய ஆதாரமே நீரும், மரங்களும் தான். இந்நிலையில், சரணாலய எல்லைக்குள் சுமார் 90 மரங்கள், ஏரியில் நீர் இருந்தும் காய்ந்து கிடக்கின்றன. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகள், கூடு கட்டி, அதில் தங்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பில்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த மரங்களைப் பாதுகாக்க வனத்துறை சார்பில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால், அங்குள்ள மரங்கள் காய்ந்து பட்டுப்போய் காணப்படுவதாக, பறவைகளை பார்வையிட வரும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பறவை ஆர்வலர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து பறவைகள் சரணாலய அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘பறவைகள் அதிகம் தங்கும் பிரதான பகுதியில் எந்த மரங்களும் காயவில்லை. சரணாலயத்தின் எல்லைப் பகுதிகளில் தான் மரங்கள் காய்ந்துள்ளன. காய்ந்துள்ள மரங்கள் அனைத்தும் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட கருவேலமரங்கள். இவை வறண்ட பகுதியில் வளரக்கூடியவை. வயது முதிர்வு காரணமாக சில ஆண்டுகள் இம்மரங்கள் நீரில் இருந்தாலும் பட்டுப்போக வாய்ப்புள்ளது.
வழக்கமாக வனத்துறை சார்பில் ஏரிகளில் வளர்க்கப்படும் கருவேல மரங்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகு, வனத்துறையால் வெட்டி விற்பனை செய்யப்படும். இங்கு வன உயிரின சட்டப்படி மரங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதால், இங்குள்ள மரங்கள் வெட்டப்படவில்லை. அவை வயது முதிர்வு காரணமாக பட்டுப் போயுள்ளன. இதிலும் பறவைகள் வந்து அமருவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதால், காய்ந்த நிலையிலும் இம்மரங்கள் வனத்துறையால் அகற்றப்படவில்லை. பறவைகள் அமரவும், கூடு கட்டி வாழவும் ஏராளமான மரங்கள், வேடந்தாங்கல் ஏரியில் உள்ளன. பட்டுப்போன மரங்களால் பாதிப்பு ஏதும் இல்லை. இருப்பினும், அப்பகுதியில் இந்த ஆண்டு 500 கருவேல மரங்கள் மற்றும் 1500 நீர் கடம்பு மரங்களை வனத்துறை நட்டுள்ளது’’ என்றார்.
குருவிகளைத்தான் தொலைத்து
விட்டோம். நம் சந்ததிகளுக்காக தேடி வரும் பறவைகளையாவது பாதுகாக்க வேண்டியது நம் கடமை.