Sunday, December 29, 2013

தமிழகத்தில் குறைந்து வரும் வேளாண்மை சாகுபடி பரப்பு

தமிழ்நாட்டில் முக்கியமான பயிர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கணிசமாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல் கடந்த 2001-02-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 20 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது. அதுவே அடுத்த பத்தாண்டுகளில் அதாவது 2011-12-ல் 19 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.
அதேபோல் 2001-02-ம் ஆண்டில் 3 லட்சத்து 17 ஆயிரம் ஹெக்டேராக இருந்த சோளம் சாகுபடி பரப்பு 2011-12-ம் ஆண்டில் 1 லட்சத்து 98 ஆயிரம் ஹெக்டேராகவும், 1 லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேராக இருந்த கம்பு சாகுபடி பரப்பு, வெறும் 47 ஆயிரம் ஹெக்டேராகவும், 1 லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேராக இருந்த கேழ்வரகு சாகுபடி பரப்பு, 83 ஆயிரம் ஹெக்டேராகவும் குறைந்துவிட்டன. நிலக்கடலை சாகுபடி பரப்பு 6 லட்சத்து 63 ஆயிரம் ஹெக்டேரிலிருந்து 3 லட்சத்து 86 ஆயிரம் ஹெக்டேராகவும், எள் சாகுபடி பரப்பு 84 ஆயிரம் ஹெக்டேரிலிருந்து 43 ஆயிரம் ஹெக்டேராகவும் குறைந்துள்ளன.
இது தவிர சிறு தானியங்கள் பயிரிடப்படும் மொத்த சாகுபடி பரப்பு இந்த பத்தாண்டுகளில் 27 லட்சத்து 66 ஆயிரம் ஹெக்டேர் என்ற அளவிலிருந்து 25 லட்சத்து 42 ஆயிரம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை வெளியீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளன.
மாநிலத்தின் முக்கிய உணவுப் பயிர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவு கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது என்பது எதிர்கால உணவுப் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
இது குறித்து காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங் கத்தின் பொதுச் செயலாளர் மன்னார் குடி எஸ்.ரங்கநாதன் கூறியதாவது:
நகரப் பகுதிகளின் விரிவாக்கம் என்பது வேளாண்மை சாகுபடி பரப்பளவு குறைய மிக முக்கிய காரணமாக உள்ளது. இது தவிர நிலத்தடி நீர்மட்டம் குறைவது, நிலத்தடி நீரில் உப்புத் தன்மை அதிகரிப்பது போன்றவையும் முக்கியக் காரணங்கள்.
இந்த சூழலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உத்தேசிக்கப் பட்டுள்ள மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டால் மேலும் பல லட்சம் ஏக்கர் நிலம் சாகு படியை இழக்க நேரிடும். ஆகவே, இதுபோன்ற தொழில் திட்டங்களை விவசாய சாகுபடிப் பகுதிகளில் அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும், நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கான கடமையைச் செய்ய வேண்டும் என்றார்.
பொருளாதார வல்லுநர் வெங்க டேஷ் ஆத்ரேயா தனது கருத்தை கூறும்போது, ‘வேளாண்மைத் துறைக்கான மத்திய, மாநில அரசு களின் நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்படுவது மிகவும் முக்கியம் என்றார்.
மேலை நாடுகள் எல்லாம் வேளாண்மைத் துறைக்கு அதிக மானியம் வழங்கி வரும் நிலை யில், நமது நாட்டில் ஏற்கெனவே வழங்கி வரும் மானியத்தையும் குறைக்கும் நிலை உள்ளது. நீர் பாசனப் பரப்பளவை அதிகரிப்பதற் கான புதிய திட்டங்கள் செயல் படுத்தப்பட வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு நியாய மான விலை கிடைப்பதோடு, அறு வடை ஆனவுடன் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
அறிவியல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு பயிற்சி கள் அளிக்கப்பட வேண்டும். மண் பரிசோதனை, உரமிடும் முறை உள்ளிட்டவை குறித்து வேளாண்மை விரிவாக்கப் பணியாளர்கள் களத்தில் இறங்கி விவசாயிகளுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
குறிப்பாக விவசாயிகளுக்கு அதிக மகசூல், விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்து விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான நட வடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்வதன் மூலம் வேளாண்மைத் துறையைப் பாது காக்க முடியும்’ என்றார் ஆத்ரேயா.

பூச்சியுண்ணும் அபூர்வ தாவரம்

பூச்சி, விலங்குகளை உண்ணும் தாவரம் பற்றி அச்சுறுத்தும் வகையில் ஹாலிவுட் படங்களில் சில காட்சிகளை நீங்களும் பார்த்திருக்கலாம். ஆனால், அது போன்று பூச்சியுண்ணும் ஒரு அபூர்வத் தாவரம் ஏற்காடு மலையில் 38 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருவது பலருக்கும் தெரியாது.
இந்தியாவில் பூச்சி உண்ணும் 19 வகை செடிகள் உள்ளன. மேகாலயா மாநிலத்தின் காசி மலையில் நெப்பந்தசேயி எனும் பூச்சி உண்ணும் தாவரம் காணப்படுகிறது. காசி மலையில் அதிகம் காணப்படுவதால், நெப்பந்த சேயி காசியானா என்பது தாவரவியல் பெயர். இது கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடி முதல் 10,000 அடி உயரம் வரையுள்ள பகுதிகளில் வளரக்கூடியது. ஈரம்மிக்க காடுகள், சதுப்பு நிலங்கள், குட்டை ஓரங்களில் நெப்பந்தசேயி 100 ஆண்டுகள் வரை வாழ்கிறது.
ஒரு அடி உயரம் முதல் 70 அடி உயரம் வரை கொடியாக மரங்களில் தொற்றி, காற்றில் சுற்றித் திரியும் மின்மினி பூச்சி முதல் குழவிகள் வரையிலான பூச்சிகளை பூஜாடி போன்ற தனது பூக்களில் சிக்க வைத்து, இது சாப்பிடுகிறது. வண்டு, நத்தை, குழவி என பூச்சிகளை மட்டுமில்லாமல், குட்டி எலியைக்கூட இந்த வகை தாவரங்கள் சாப்பிடுமாம்.
இவை அசைவத்தை விரும்பிச் சாப்பிடுவதற்குக் காரணம், உயிர் வாழ்வதற்குத் தேவையான புரதச் சத்துகள், அது வளரும் மண்ணில் குறைவாக இருப்பதுதான்.
பூக்களின் உயரம் 10 செ.மீ. முதல் 30 செ.மீ. உயரம் வரை. பூவின் கழுத்து பகுதியில் மூடி போன்ற இலை, குடுவையை மூடியிருக்கும். பூக்குடுவையில் மூன்றில் ஒரு பங்கு பெப்சின் என்ற திரவமும், கழுத்து விளிம்பில் நெக்டார் என்ற சுவையான தேனும் இருக்கும்.
தேன் வாசமும், பூவின் நிறமும் பட்டாம் பூச்சிகள், வண்டினங்களை கவர்ந்து இழுக்கும். ஆபத்தை உணராத பூச்சியினங்கள், பூவின் விளிம்பில் அமர்ந்து தேனை குடிக்கும் நொடியில், சரசரவென வழுக்கிக்கொண்டு பூவுக்குள் பெப்சின் திரவத்தில் விழும்.
ஜாடிக்குள்ளிருந்து பூச்சிகள் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக, மெல்லிய இழை போன்ற சிறுமுடிகள் உட்புறம் சிலிர்த்தெழுந்து நிற்கும். இந்த முடிகள், பூச்சிகள் மேலே எழுந்து வராமல் தடுக்கும். பெப்சின் திரவம் பூச்சியை ஜீரணிக்கக்கூடிய சக்தியைக் கொண்டிருப்பதால், மேலே எழுந்து வருவதற்கான பூச்சிகளின் முயற்சி தோல்வியில் முடியும். கொஞ்சம் கொஞ்சமாய் திரவத்தில் கரைந்து போகும்.
அடைமழை பெய்தாலும் ஒரு சொட்டு நீர்கூட ஜாடிக்குள் விழுந்து பெப்சின் திரவம் நீர்த்து போகாமல் இருக்க, ஜாடி விளிம்பில் உள்ள இலை, மூடி போலச் செயல்படும்.
பூச்சியுண்ணும் தாவரங்கள் வட இந்தி யாவில் மட்டுமே இயற்கையாக இருந்து வருகின்றன. கடந்த 1975ஆம் ஆண்டு, மேகாலயா மாநிலத்தில் இருந்து ஏற்காடு தாவர வியல் பூங்காவுக்கு 15 நெப்பந்தசேயி செடிகள் கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு செடி 38 ஆண்டுகளாக இப்போதும் இருக்கிறது.
ஏற்காடு தாவரவியல் பூங்காவைச் சேர்ந்த ஏற்காடு இளங்கோ இது பற்றி கூறுகையில், "நாங்கள் பாதுகாத்து வரும் நெப்பந்தசேயி செடி, பெண் தாவரம் என்ற விவரம் ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடிதான் தெரிஞ்சது. அப்பத்தான் இது முதல்முதலா பூத்தது. பக்கத்துல ஆண் நெப்பந்தசேயி செடி இருந்தால் மட்டுமே இதில் மகரந்தச் சேர்க்கை நடக்கும். பிறகு இனவிருத்திக்கான விதைகள் உற்பத்தியாகும். இப்போது அதற்கு வாய்ப்பில்லை.
சமீபத்தில் புது முயற்சியா நெப்பந்தசேயி செடியின் ஒரு பகுதியை வெட்டி, தண்ணீரில் போட்டு வெச்சோம். 15 நாளுக்குப் பின்னாடி, அந்த செடி வேர் விட ஆரம்பிச்சது. இது மாதிரி மூன்று நெப்பந்தசேயி செடிகள வளர்த்து வர்றோம். என்ன ஒரே விஷயம்னா இதன்மூலம் பெண் நெப்பந்தசேயி செடிய மட்டுமே உருவாக்க முடியும்" என்றார்.

Monday, December 23, 2013

தேசிய உழவர் தினம்: அழிவின் விளிம்பில் இந்திய விவசாயம்


விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பிரதமர் நாற்காலியை அலங்கரித்தவர் சொளத்ரி சரண்சிங். அவரது பிறந்த நாளே தேசிய உழவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், உழவர் தினம் குறித்து தற்போது, விவசாயிகளிடமே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த 18-ம் நூற்றாண்டில், உலகின் வலுவான விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா மிளிர்ந்தது. சுதந்திரத்துக்குப் பின் இந்திய விவசாயப் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.
பசுமைப் புரட்சி
1960-ல் இந்திய விவசாயம் கடும் வறட்சியைச் சந்தித்தது. உணவுத் தட்டுப்பாட்டை சமாளிக்க அமெரிக்காவில் இருந்து, கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. உணவு உற்பத்தியைப் பெருக்க, 1965-ல் பசுமைப் புரட்சி தொடங்கியது. ஆனாலும், இந்திய விவசாயிகளின் நிலைமை இன்றும் படுமோசமாகத்தான் உள்ளது.
கட்டுப்படியான விலை
கிரியேட் அமைப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண் விற்பனைத் துறை அதிகாரி பொன்னம்பலம் கூறுகையில், “விவசாயத் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தேசிய மாதிரி சர்வேயில், 8 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை, 40 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேற இருப்பதாகச் சொல்கிறது.
விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. தமிழகத்தில், 2000-2010 வரையுள்ள புள்ளி விவரங்களின்படி, ஏறக்குறைய 2 லட்சம் ஹெக்டேர் நெல் பயிரிடும் பரப்பு குறைந்துள்ளது. விவசாய நிலங்கள், வீட்டுமனைகள் ஆவதைத் தடுக்க வேண்டும். இதற்கென தேசிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு, உரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். விளைவிக்கும் பொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் காலம் வரவேண்டும்” என்றார்.
நமது நெல்லைக் காப்போம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தட்டிமேடு ஜெயராமன் கூறுகையில், “தமிழகத்தில் இருந்த 40,000 நீர் ஆதாரங்களில் 75 சதவிகித குளங்கள் ஆக்கிரமிப்பின் காரணமாக காணாமல் போய்விட்டன. விவசாயத்தை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும்” என்றார்.

Friday, December 20, 2013

உலகின் மாசுபட்ட நதிகள் பட்டியலில் முந்தியது பாலாறு! - வேதனை சூழலில் வேலூர் மக்கள்

மனிதன் குடிப்பதற்கு உகந்த ஒரு லிட்டர் குடிநீரில் நைட்ரேட், சோடியம் தலா 20 மில்லிகிராம், ப்ளோரைடு, ஈயம் தலா ஒரு மில்லி கிராம் - மேற்கண்ட அளவுக்கு கீழே இருக்க வேண்டும். இதுவே 250 முதல் 300 டி.டீஎஸ். அளவுள்ள மனிதன் குடிப்பதற்கு உகந்த குடிநீர். ஆனால், பாலாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மக்கள் இந்த அளவுள்ள தண்ணீரை குடித்து சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. சென்னை பெருநகர வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MIDS) பேராசிரியர் ஜனகராஜன் பாலாறு தொடர்பாக நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவரது ஆய்வில், “உலகில் குடிநீர் பயன்பாட்டில் உள்ளவற்றில் மிகவும் மாசுபட்ட 10 நதிகளில் முதலிடம் வகிக்கிறது பாலாறு. வேலூர் மாவட்ட பாலாற்றில் சுமார் 800 தோல் தொழிற்சாலைகளின் குரோமியம் கழிவுநீர் கலக்கின்றன. பாலாற்றில் மொத்தம் 617 ஆற்று ஊற்று கால்வாய்கள் (Spring channels) இருந்தன. பாலாற்றில் இருந்து விவசாய நிலங்களின் பாசனத்துக்காக வரும் கால்வாய்கள் இவை. இன்று இந்த கால்வாய்கள் முழுவதுவமாக குரோமியம் கழிவுகளால் அழிந்துவிட்டன.
குரோமியம் உப்பு
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை தொடங்கி காவேரிப்பாக்கம் வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வறண்டு குரோமியம் உப்பு பூத்துள்ளது. வேலூர் மாவட்டத்தின் 46 ஊர்களில் 27,800 கிணறுகளின் தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றவை ஆகிவிட்டன. இந்தத் தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
வேலூரில் ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களிடம் குடிநீரைக் காய்ச்சிக் குடிப்பது உள்ளிட்ட குடிநீர் குறித்து எவ்வித விழிப்புணர்வும் இல்லை. இதுகுறித்து காவிரி நீர் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சரவணபாபு, “தீமை விளைவிக்கும் நுண்ணுரியிகள் கலந்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நோய்களை மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், குரோமியம் கலந்த தண்ணீரால் என்ன நோய் வந்திருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. குரோமியம் கலந்த தண்ணீரால் பல வியாதிகள் உண்டாகும்.
பிறக்கும் குழந்தைகளுக்கும் இதன் நோய் எதிரொலிக்கும். ப்ளோரைடு தாக்குதலால் எலும்புகள் வலுவிழப்பதுடன் பற்கள் அரிக்கப்பட்டு மஞ்சள் நிறமாகிவிடும்” என்கிறார்.
தேங்காய் வளர்ச்சி குறைவு
பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான காஞ்சி அமுதன், “வேலூர் மாவட்டத்தின் 90 சதவீத விவசாயம் மறைமுகமாக பாலாறையும் நேரடியாக கிணற்றுப் பாசனத்தையும் நம்பிதான் இருந்தது. ஆனால், தோல் கழிவுகளால் பாலாறு விஷமானதால் நிலத்தடி நீரும் விஷமாகி அனைத்துக் கிணறுகளும் பயன்படுத்த தகுதியில்லாதவை ஆகிவிட்டன. தண்ணீர் மட்டுமல்ல... கிணற்றில் போடப்பட்டிருக்கும் மோட்டார் உள்ளிட்ட இரும்பு குழாய்களும் சில மாதங்களியே துருப்பிடித்து உதிர்ந்துவிடுகின்றன.
கிணற்றுக்கு அருகில் ஒரு சைக்கிளை ஒரு மாதம் நிறுத்திவைத்தால் சைக்கிள் துருப்பிடித்துவிடும். ஒருகாலத்தில் வேலூர் மாவட்டத்தில் தென்னை விவசாயம் அமோகமாக இருந்தது. இன்றைக்கு தென்னை மரங்கள் குலை தள்ளுவதே அபூர்வமாகிவிட்டது. அப்படியே வந்தாலும் தேங்காயின் வளர்ச்சி சுமார் 60% குறைந்துவிட்டது.” என்றார்.ரூ.10 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி
வேலூர் மாவட்டத் தோல் தொழிற்சாலைகளில் தயாராகும் தோல் பொருட்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி கிடைப்பதாக மத்திய அரசு குறிப்பிடுகிறது. ஆனால், சுற்றுச்சூழல் சார்ந்த பொருளாதார வல்லுநர்களோ ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தாலும் இன்னொரு பக்கம் கழிவு நச்சு பாதிப்பு மூலமும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறு உருவாக்கம் செய்தல், இயற்கை வளம், மனித வளம் பாதிப்பு ஏற்படுதல் ஆகியவற்றாலும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தோல் தொழிற்சாலை தொழிலை Dirty industry பட்டியலில் வைத்துள்ளன. அதனால்தான், அந்த நாடுகள் தோல் பொருட்களை தயாரிக்காமல் இங்கிருந்து கொள்முதல் செய்கின்றன.

Thursday, December 19, 2013

ஆந்தைகளுக்கு ஆபத்து

எங்கள் வீட்டிற்கு முன்புறமுள்ள புங்கை மரத்துக்கு ஆந்தை ஜோடி ஒன்று வர ஆரம்பித்துள்ளது. மாலை இருள் கவிழும் நேரத்தில் அவை குரல் கொடுக்கத் தொடங்கும். பண்டிட் ஹரிபிரசாத் செளராஸியா கச்சேரி ஆரம்பிக்கும் முன் புல்லாங்குழலை ஊதிஊதிப் பார்ப்பது போன்ற மனதைக் கவரும் ஒலி. டார்ச் ஒளியைப் பொருட்படுத்தாமல் இவை மாறிமாறிக் குரலெழுப்பும் அழகை, நாங்கள் அருகிலிருந்து பார்க்க முடிகின்றது. நம் நாட்டிலுள்ள ஆந்தை வகைகளில் மிகச் சிறியது இது (Scops owl), புல்புல் அளவுதானிருக்கும்.
சாதாரணமாகக் கிராமங்களருகே காணக்கூடிய, மரப்பொந்துகளில் வாழும் சிறிய புள்ளி ஆந்தையைப் போல் முப்பது வகை ஆந்தைகள் நம் நாட்டில் இருக்கின்றன. இரவில் சஞ்சரிக்கும் பறவையாதலால், மக்கள் இவற்றைப் போற்றுவதில்லை. கவிஞர்கள் பாடிச் சிறப்பிப்பது இல்லை. ஆனால் கூர்ந்து கவனிப்பவர்களை அவை ஈர்த்துவிடும்.
எல்லா ஆந்தைகளுமே இரவில் நடமாடும் வேட்டையாடிகள். மற்ற பறவைகளைப் போலல்லாமல் ஆந்தையின் இரு கண்களும் மனிதர்களின் கண்களைப் போல முன்புறம் நோக்கி அமைந்திருக்கின்றன. ஆந்தையால் தன் தலையை முழுவதுமாகப் பின்புறம் திருப்ப முடியும். சக்தி வாய்ந்த செவிகளின் மூலம், ஒலி வரும் தூரத்தை வைத்தே இரை இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கணிக்க இப்பறவையால் முடியும். குறைந்த வெளிச்சத்திலும் பார்க்கக்கூடிய பார்வைத் திறன், மெல்லிய இறகுகள் புசுபுசுவென்று நிறைந்திருப்பதால் ஓசையின்றிப் பறக்கக்கூடிய ஆற்றல், கூரிய, வலிமையான நகங்கள், வளைந்த கூர்மையான அலகு, ஆகியவற்றைக் கொண்டு ஆந்தைகள் திறமைமிக்க இரைகொல்லிகளாக இயங்குகின்றன. இந்த இரவாடிப் பறவையின் வலிமையைத் திருவள்ளுவர் சுட்டிக்காட்டியுள்ளார்
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (481)
முதுமலை போன்ற காடுகளில் வாழும் காட்டாந்தை, முயலை எளிதாக அடித்து உண்ணும். மாலை வேளைகளில் மரங்களில் அடையவரும் மயிலைக்கூடக் கொல்லும் வலுவுடையது இந்த ஆந்தை. நீர்நிலைகளருகே வசிக்கும் இன்னொரு வகை ஆந்தை மீன், தவளை, நண்டுகளைத் தனது கால்களால் பிடித்து இரையாக்கி உயிர் வாழ்கின்றது. பயிர்த் தோட்டங்கள், வயல்களருகே இருக்கும் வெண்ணாந்தைகளுக்கு (கூகை) அதிகமாக இரையாவது எலிகள்தான்.
நம் நாட்டில் உணவு தானியங்களைச் சேதம் செய்வதில் முதலிடம் வகிக்கும் எலிகளைக் கொன்று, இந்த ஆந்தைகள் விவசாயிகளுக்குப் பெரும் உதவி செய்கின்றன. உலகின் பல இடங்களில் தோட்டங்களில் வெண்ணாந்தைகளை ஈர்க்கச் சிறிய மரப்பெட்டிகளை மரத்தில் கட்டி விடுகிறார்கள். இனப்பெருக்கக் காலத்தில் ஓர் ஆந்தை ஒரே இரவில் ஐந்தாறு எலிகளைக் கொன்றுவிடும்.
இன்று ஆந்தைகளின் எண்ணிக்கை குறையும் ஆபத்து வந்திருக்கின்றது. மாந்த்ரீக சடங்குகளில் ஈடுபடுத்தப்படுவதற்காகவும் பாரம்பரிய மருத்துவத்துக்காகவும் பல்வேறு இன ஆந்தைகள் ஆயிரக்கணக்கில் பிடிக்கப்பட்டுக் கொல்லப்படுவதை பற்றி அறிய முடிகிறது. செல்வத்தின் கடவுளான லக்ஷ்மியின் வாகனம் என்றாலும்கூட, ஆந்தை என்றதுமே அச்சமும் அருவருப்புமே மக்கள் மனதில் உருவாகிறது. மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் பேய், பிசாசுகளுடன் தொடர்புபடுத்தி இவை வெறுக்கப்படுகின்றன.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள பறவை ஆர்வலரான என் நண்பர் ஒருவர், அடுத்த வீட்டு மாடியில் உள்ள ஒரு பொந்தில் வெண்ணாந்தை ஒன்று குடியிருப்பதை ஜன்னல் வழியாக எனக்குக் காட்டினார். அது அங்கிருப்பது அந்த வீட்டுக்காரருக்குத் தெரிந்துவிட்டால் விரட்டிவிடுவாரோ என்று அஞ்சினார்.
2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெதர்லாந்தில் ஆந்தைகளைப் பாதுகாக்க நடத்தப்பட்ட பன்னாட்டு மாநாடு ஒன்று, இந்தப் பறவைகளின் எண்ணிக்கை உலக அளவில் குறைந்துவருவதைப் பதிவு செய்தது. காட்டுயிர் சார்ந்த கள்ள வணிகத்தைக் கண்காணிக்க, பன்னாட்டளவில் இயங்கி வரும் TRAFFIC என்ற அமைப்பு இந்தியாவில் நடத்திய ஒரு மதிப்பாய்வின்படி, ஆயிரக்கணக்கான ஆந்தைகள் இன்றும் விற்பனைக்காகப் பிடிக்கப்படுகின்றன. பாரம்பரியமாகக் காட்டுயிர்களைப் பிடித்து வாழ்ந்த மக்கள் குழு இந்த வணிகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்களில் இந்தப் பழக்கம் அதிகம் நிலவுகிறது. இங்கு நடக்கும் பல கிராமத்துச் சந்தைகளில் ஆந்தை வியாபாரம் நடக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. சில இடங்களில் இவை பலியாகவும் கொடுக்கப்படுகின்றன. வேறு சில இடங்களில் பில்லி சூனியம் போன்ற மாந்த்ரீக சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டு மருத்துவத்துக்காகவும் ஆந்தைகள் கொல்லப்படுகின்றன. ஆந்தைக் கூடுகளைக் கண்டுபிடித்து, குஞ்சுகளைப் பிடித்துவிடுகிறார்கள். அல்லது கீழே தரையில் கிடக்கும் எச்சத்தின் மூலம் ஆந்தை அடிக்கடி வந்தமரும் கிளையை அறிந்து, அதில் ஃபெவிகால் போன்ற பசைகளைத் தடவி இவற்றை எளிதாகப் பிடித்து விடுகிறார்கள். அதிகமாகப் பிடிபடுபவை புள்ளி ஆந்தைகளும் வெண்ணாந்தைகளும்தான். ஆனால் அதிக விலைக்குப் போவது உருவில் பெரிய கோட்டான். ரூபாய் ஐந்தாயிரம்வரை போகிறது என்கின்றனர் வனத்துறையினர். வீட்டில் குடியிருப்பவரை காலி செய்யக் கால்கள், தேர்தலில் வெற்றி பெறத் தலை, எதிர்காலத்தைக் கணிக்க ஈரல், வேகமாகப் பயணிக்க எலும்புகள் என ஆந்தையின் ஒவ்வொரு உடற்பாகமும் சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.
சரி, எப்படித்தான் ஆந்தையைப் பாதுகாக்க முடியும்? முதலில் இந்தப் பறவையினம் பற்றிய அச்சம், ஆதாரமற்ற தப்பெண்ணங்கள் ஆகியவற்றைப் பொதுமக்களிடம் இருந்து அகற்ற வேண்டும். காட்டுயிர் பற்றிய அறிவு வளர வேண்டும். எல்லா வகை ஆந்தைகளும் காட்டுயிர் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டவை. அவற்றைப் பிடிப்பதோ கூண்டில் அடைத்து வைத்திருப்பதோ சட்டத்துக்குப் புறம்பானது. சுற்றுச்சூழலைச் சமநிலையில் வைத்திருப்பதற்கும், வேளாண்மை, தானியப் பாதுகாப்பிலும் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அது மட்டுமல்ல; மாலை நேரத்தில் வீட்டருகே வந்து உங்கள் வாழ்க்கைக்கும் அவை செறிவூட்டக் கூடும்.

Wednesday, December 18, 2013

வாழ்வு கொடுத்த கற்பூர மரங்கள் அகற்றத்தால் வாழ்வாதாரம் இழக்கும் தொழிலாளர்கள்!

நீலகிரியில் பயிரிடப்பட்டுள்ள கற்பூர மரங்கள் கற்பூர இலைகளை சேகரிக்கும் தொழிலாளர்கள்
நீலகிரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் திரும்பும் போது தங்கள் நினைவுகளோடு திரும்பக் கொண்டு செல்வது வர்க்கி மற்றும் நீலகிரி தைலம்.
தலைவலியிலிருந்து நிவாரணம் பெற பயன்படுத்தும் நீலகிரி தைலம் என்று அழைக்கப்படும் யூகலிப்டஸ் தைலத்தின் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் நீலகிரி தைலம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
எங்கு நோக்கினும் சதுப்பு நிலங்களும், மலை முகடுகளையொட்டிய பகுதிகளில் சோலைக் காடுகளுமே நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக இருந்தது.
ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் வரை நீலகிரி தனது சிறப்பு அம்சங்களை இழக்காத நிலையில், நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கத்தால் உணவுக்காகவும், கால்நடைகளின் தேவைக்காகவும் சதுப்பு நிலங்களை அழிக்கும் பணி தொடங்கப்பட்டது.
குறிப்பாக, நீலகிரியிலிருந்த சதுப்பு நிலங்களின் பரப்பை குறைக்கும் வகையில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டன. அதில் ஓர் அம்சமாக ஆஸ்திரேலியாவிலிருந்து யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டு, சதுப்பு நிலங்களையொட்டியுள்ள பகுதிகளில் நடவு செய்யப்பட்டன. யூகலிப்டஸ் மரத்தின் வேர்
நிலத்தின் அதிகபட்ச ஆழத்திற்கு சென்று நீரை உறிஞ்சிவிடும் என்பதோடு, சதுப்பு நிலப் பகுதிகள் நாளடைவில் சராசரி வாழ்க்கைக்கேற்ற தரத்திற்கு வரும் என்பதே அவர்களது நம்பிக்கையாக இருந்தது. இது நாளடைவில் நடைமுறை வாழ்க்கைக்கும் வந்தது.
இந் நிலையில் நீலகிரியில் நிலத்தடி நீரின் அளவு குறைவதற்கு இங்குள்ள யூகலிப்டஸ் மரங்களே காரணம் என சுற்றுச்சூழலியலாளர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை முழுமையாக அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு யூகலிப்டஸ் தைலம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட கற்பூர தைலம் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.அப்துல் ரகுமான் கூறியது:
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம், மலைக் காய்கறி விவசாயம் போன்ற தொழில்களுக்கு இணையாக, சுற்றுலா மாவட்டம் என்ற பெயர் கிடைக்க காரணமாக உள்ள பல்வேறு அம்சங்களில் ஒன்றாக நீலகிரி தைலம் காய்ச்சும் தொழில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந் நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலரின் கருத்துகளுக்கு ஏற்ப மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதில்லை எனவும், இவை மண் சரிவை தடுப்பதற்கே பயன்படுவதாகவும் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்த பின்னரும் யூகலிப்டஸ் மரங்களை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை முழுமையாக அகற்றிய பின்னர் பல்வேறு இடங்களில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வந்தாலும் அவை தோல்வியையே கண்டுள்ளன.
எனவே, நீலகிரியின் இயற்கை வளத்தின் நலன் கருதியும், இங்குள்ள மக்களின் ஜீவாதார நலன் கருதியும் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் யூகலிப்டஸ் மரக்கன்றுகளை மீண்டும் நடவு செய்ய வேண்டும் என்றார்.
கற்பூர மரங்களை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் நீலகிரி தைலம் சந்தையில் விற்பனைக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
கலப்படத்தால் தொழில் நசிவு
கற்பூர இலைகளை சேகரித்து தைலம் காய்ச்சுவோருக்கு விற்கும் பணியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஈடுப்ட்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்களது குடும்பத்தை கவனிக்க கணிசமான வருவாய் கிடைக்கிறது.நீலகிரி தைலம் லிட்டர் ரூ.600 வரை விற்கப்படுகிறது. சீனா தைலம் மற்றும் கலப்படம் காரணமாக ஏற்கனவே இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. இந் நிலையில் கற்பூர மரங்களை அகற்றினால் பல்லாயிரம் பேர் வேலை இழப்பார்கள் என கற்பூர தைலம் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பயமுறுத்தும் பாதரசம் பயன்பாடு குறைக்கப்படுமா?

வெள்ளியை உருக்கி ஊற்றியது போல அழகாக இருக்கும் பாதரசம், பூமியில் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் அளவிட முடியாதவை. வெறும் 0.6 கிராம் பாதரசம், சுமார் 20 ஏக்கர் அளவுள்ள ஏரியை மாசுபடுத்தும் தன்மை கொண்டது. இதனால் மனிதர்களுக்கு நரம்பு மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மின்சாரம் இல்லாமல் ஒரு நிமிடம்கூட வாழ முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். இன்றைய தேதியில் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது அனல் மின்நிலையங்களில் நிலக்கரி எரிக்கப்படுவதன் மூலம்தான். உலகின் மிக முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள பருவநிலை மாற்றத்துக்கு நிலக்கரியை எரிப்பது முக்கியக் காரணம்.
நிலக்கரியில் இருந்து பாதரசம் வெளியாவது தற்போது கவனத்துக்கு வந்திருக்கிறது. ஐ.நாவின் அங்கமான 'ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்' சமீபத்தில் வெளியிட்ட ஆண்டு அறிக்கை இதைக் கூறுகிறது. நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதைக் குறைக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில்தான் நிலக்கரி பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்கள் அதிகம் உள்ளன.
காடுகளை அழித்தல், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமும் பாதரசம் வெளியாகிறது. அது மட்டுமல்லாமல், நம் தினசரி வாழ்வுடன் இணைந்த சில பொருட்களில் அது இருக்கிறது. குறிப்பாக மருத்துவக் கருவிகளான தெர்மாமீட்டர், ரத்த அழுத்தம் அறியும் கருவிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கருவிகள் பழுதடையும்போது கழிவாகத் தூக்கி எறியப்படுகின்றன. சுற்றுச்சூழலில் அவை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
கருவில் இருக்கும் குழந்தைகள், மன அழுத்தம், தற்கொலை எண்ணம், முடக்கு வாதம், சிறுநீரகம் செயலிழப்பு, அல்ஸெய்மர் நோய், பார்வை, பேச்சுத்திறன் பாதிப்பு, ஒவ்வாமை, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பாதரச மாசுபாட்டால் ஏற்படும். எனவே, பாதரசத்தைக்கொண்ட மருத்துவக் கருவிகளுக்கு மாற்றாக வேறு கருவிகளைப் பயன்படுத்த உலகெங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சென்னையில் உள்ள சென்டர் ஃபார் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸில் பணிபுரிந்து வரும் சுற்றுச்சூழல் ஆய்வாளர் ராஜேஷ் ரங்கராஜன் கூறுகையில், "பாதரசத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கச் சர்வதேச அளவில் அளவில் ‘மினமாட்டா ஒப்பந்தம்' கொண்டு வரப்பட்டது. அதன்படி 2020இல் உலகம் முழுவதும் பாதரசம் உள்ள பொருட்களின் பயன்பாட்டைக் கைவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதிதான் பாதரசம் உள்ள மருத்துவக் கருவிகளுக்குப் பதிலாக மாற்றுக் கருவிகளைப் பயன்படுத்தும் முயற்சி" என்றார்.
ஜப்பான் நகரமான மினமாட்டாவில் 1956ஆம் ஆண்டு முதன்முதலாகப் பாதரசத்தால் ஏற்படும் நோய் கண்டறியப்பட்டது. இதனால் பாதரசம் மூலம் உருவாகும் நோய்கள் 'மினமாட்டா நோய்' எனப்படுகின்றன. 2010ஆம் ஆண்டு 'மினமாட்டா ஒப்பந்தம்' ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானில் நடந்த சர்வதேச மாநாட்டில் 91 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
"இந்நிலையில், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, தமிழகத்தில் 5 அரசு மருத்துவமனைகளும், 9 தனியார் மருத்துவமனைகளும் பாதரசத்துக்குப் பதிலான மாற்று மருத்துவக் கருவிகளைப் பரிசோதனை முயற்சியாகப் பயன்படுத்தி வருகின்றன. இதில் நல்ல முடிவுகளும் கிடைத்துள்ளன. இந்த முயற்சி நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும்போது, குறைந்தபட்சம் மருத்துவத் துறையிலாவது பாதரசத்தின் பயன்பாட்டை நீக்க முடியும்" என்றார் ராஜேஷ் ரங்கராஜன்.

Thursday, December 12, 2013

மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம்.

1. மூலிகையின் பெயர் -: மிளகு. 

2. தாவரப் பெயர் -: PIPER NIGRUM.
3. தாவரக்குடும்பம் -: PIPERACEAE.
4. வகைகள் -: மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகைப்படும்.

5. வேறு பெயர்கள்- மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம்.

6. பயன் தரும் பாகங்கள் -: கொடி, இலை மற்றும் வேர் முதலியன.

7.வளரியல்பு -: இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா, சைனா, மத்திய கிழக்கு நாடுகள் வட ஆப்பிருக்கா விற்குப் பரவிற்று. 16ம் நூற்றாண்டில் ஜாவா, சுமத்திரா, மடகாஸ்கர் மற்றும் மலேசியாவுக்குப் பரவிற்று. மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இதன் கொடி 10 -12 அடிக்குமேல் கெட்டியான பட்டையுள்ள மரத்தில் பற்றி வளரும். முக்கியமாக முள் முருங்கையில், இக்கொடிகள் மரங்களைப் பின்னிப் பிணைந்து அடர்த்தியாக வளரும். எப்பொழுதும் பசுமையாகவும், கொடியின் கணுக்கள் சிறிது பெருத்தும் காணப்படும். இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். பச்சையாக எடுத்து அதன் நிறம் மாராமல் பதம் செய்தும் வைப்பார்கள். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் அது கரு மிழகாக சுண்டி சிருத்து மாறிவிடும். இதுவே மிளகாகும். இது கொடி கட்டிங் மூலம் இனப் பெருக்கம் அதிகமாகச் செய்யப்படுகிறது.

4. மருத்துவப் பயன்கள்- “பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. தவிர, உடலில் தோன்றுகின்ற வாயுவையும் நீக்கி, உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. உணவில் உள்ள விடத்தைப் போக்குவது.

விட்டு விட்டு வருகின்ற முறை சுரத்தை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.

பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தணமிட நல்ல பலன் கிடைக்கும்.

தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் கொடுத்து வர வாந்தி பேதி நிற்கும்.

பால்வினை நோய்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று பிறப்புறுப்புக்களில் புண்கள் தோன்றுவது. இதை சித்த மருத்துவத்தில் கொறுக்கு நோய் என்பார்கள். இது குணமாக மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன் வேர் 18 கராம் என இரண்டையும் போதிய ஆளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, கடுகளவு மாத்திரையாகச் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.

மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் நைய இடித்து கசாயமிட்டு அருந்தி வந்தால் சகல விசக்கடிகளும் முறியும்.

சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.

மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும்.

மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.

மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 2-3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும்.

100 கிராம் வில்வ இலை சூரணத்துடன் 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.

வெற்றிலை உலர்ந்த வேரையும் மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10 கிராம் அளவு வெந்நீரில் காலை மாலை மூன்று நாள் சாப்பிட கருகலையும். தடைபட்ட விலக்கும் வெளியேறும்.

அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

இதம் தரும் மிளகு


கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிட்டும்.
* அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றைக் குறைக்க மிளகு அருமருந்து.
* உணவில் மிளகைச் சேர்த்துக் கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்கப்படும். ஏற்பட்டால் குணமாகும்.
* மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைச் சரிசெய்கிறது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது.
* வெந்தயம் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். சிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
* கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் சீதபேதி கட்டுப்படும்.
நாவலும் அவரையும் நல்லது
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான காலணிகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
* நாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். தினமும் கையளவு நாவல்பழங்களைச் சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ராசயனங்கள் நாவல்பழத்தில் உள்ளன.
பருக்களை விரட்டும் வெந்தயம்
* வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும்.
* பாதாம்பருப்பில் வைட்டமின் ‘ஈ' சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் 10 முதல் 15 பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும்.
* தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட்ஸ் சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும். இதிலும் வைட்டமின் ‘ஈ' சத்து நிறைந்துள்ளது.

Tuesday, December 10, 2013

தவளை இனப்பெருக்க அழிவால் பரவுகிறது டெங்கு


தமிழகத்தில் தவளைகள் இனப்பெருக்கும் குறைந்ததால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் வேகமாகப் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல்களின் தாக்கம் வேகமாகப் பரவி வருகிறது.
டெங்கு, மலேரியாவுக்குப் பலர் உயிர் இழந்து வருகின்றனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல்கள் தாக்கி சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இந்த வகைக் காய்ச்சல்கள் அனைத்தும் கொசுக்கள் மூலமே பரவுகின்றன. கொசுக்களை அழிக்கும் தவளைகள் இனப்பெருக்கம் குறைந்து அந்த இனமே அழிந்து வருவதால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதற்கு முக்கிய காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து திண்டுக்கல் ராம் நகரைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட உதவி வனப் பாது காவலரும், வன உயிரினங்கள் ஆராய்ச்சியாளருமான வனதாசன் ஆர்.ஆர்.ராஜசேகரன் கூறியதாவது:
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கிராமங்கள், நகரங்களில் குளங்கள், குட்டைகள், ஏரிகள், திறந்த வெளிக் கிணறுகள் அதிகமாகக் காணப்பட்டன. நீர்நிலைகளில் தவளைகள் அதிகமாக உயிர் வாழ்ந்தன. பருவ மழைகளும் அதிக அளவு பெய்தன. அதனால், தவளைகள் இனப்பெருக்கம் அதிகமாகக் காணப்பட்டது.
தவளைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை. தவளையின் முட்டையில் இருந்து வெளியே வரும் குஞ்சுகளுக்கு (தலபிரட்டை) கொசுக்கள்தான் முக்கிய உணவு. தலபிரட்டைகள் கொசுக்களை சாப்பிட்டு உயிர் வாழும்.
அதனால், கடந்த காலத்தில் கொசுக்கள் இனப்பெருக்கம் கட்டுக்குள் இருந்தது. அதன் மூலம் நோய்களும் மிகக் குறைவாகக் காணப்பட்டன.
தற்போது பள்ளி, கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்புகளுக்கும், மாணவர்கள் ஆய்வுக்காக தவளைகளை பிடித்துக் கொன்று வருகின்றனர்.
மேலும், கிராம, நகரப் பகுதிகளில் குளம், குட்டைகள், ஏரிகள், கிணறுகள் பார்ப்பது அபூர்வமாக மாறி விட்டது. மழையளவும் குறைந்து விட்டது. அதனால், வாழ்விடங்கள் சுருங்கி தவளை இனப்பெருக்கம் குறைந்து, அழிந்து வருகிறது.
இதுதவிர சீனாவில் தவளை கறியை அந்நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால், அந்நாட்டிற்கு ஒரு தவளை ரூ.10, ரூ.20க்கு இங்குள்ளவர்கள் பிடித்து அனுப்பினர். இவ்வாறு பல்வேறு காரணங்களால் தவளை இனம் தற்போது 70 சதவீதம் அழிந்துவிட்டது. அதனால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி மர்ம நோய்கள் வரத்தொடங்கி விட்டன.
அனைத்து உயிரினங்களையும் சம விகிதத்தில் பாதுகாக்கப் பொதுமக்கள், அரசு நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எதிர்கால தலைமறையினரை மர்ம நோய் தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற முடியும் என்றார்.

Wednesday, December 4, 2013

பரிணாம வளர்ச்சி


உலகப் புகழ்பெற்ற தனது மூலதனம் நூலை "உங்க ளுடைய தீவிர அபிமானி" என்று கையெழுத்திட்டு கார்ல் மார்க்ஸ் ஒருவருக்கு அனுப்பி வைத்தார். அந்த நபர் "பரிணாமவியலின் தந்தை" சார்லஸ் டார்வின். டார்வின் எழுதிய "உயிரினங்களின் தோற்றம்" (Origin of Species) என்ற நூலைப் படித்துவிட்டு, வரலாற்றுப் பொருள்முதல் வாதத்துக்கு (Historical Materialism) அந்த நூல் அடிப்படையாக இருந்ததாக மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். டார்வினின் கண்டறிதல் அந்த அளவுக்குத் தாக்கம் செலுத்தியிருந்தது.
கடவுளே மனித இனத்தைத் தோற்றுவித்ததாக நம்பப்பட்டு வந்த நிலையில், "இல்லை, அனைத்து உயிரினங்களும் இயற்கை நடைமுறையின் ஒரு பகுதியாகப்  பரிணாமவளர்ச்சியில் உருவானவை" என்பதை அறிவியல் ஆதாரங்களுடன் டார்வின் நிறுவினார். அதற்காகவே இன்றுவரை தூற்றப்பட்டுவருகிறார். அறிவியல் உலகின் இரண்டாவது புரட்சி என்று டார்வினின் பரிணாமவியல் தத்துவத்தைக் கூறலாம்.
பூவுலகில் உயிரும் மனித இனமும் எங்கிருந்து வந்தன என்ற அடிப்படைக் கேள்விக்கான விடையை, பரிணாம வளர்ச்சிக் கொள்கை சொல்கிறது. சரி, பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ன?
பரிணாம வளர்ச்சிக் கொள்கை மிகவும் எளிமையானது, அது வலியுறுத்தும் 3 முக்கிய விஷயங்கள்:
திடீர் மாற்றம்
ஓர் உயிரினத்தின் மரபணு (DNA), திடீர் மாற்றம் (Mutation) அடைவதற்கு வாய்ப்பு உண்டு. ஓர் உயிரினத்தின் மரபணுவில் ஏற்படும் இந்த திடீர் மாற்றம், அதனுடைய வாரிசின் மீது தாக்கம் செலுத்துகிறது. உடனடியாகவோ அல்லது பல தலைமுறைகளுக்குப் பிறகோ இந்த தாக்கங்கள் நிகழலாம்.
ஒரு திடீர் மாற்றம் நல்ல விளைவையும் ஏற்படுத்தலாம், தீமையான விளைவையும் ஏற்படுத்தலாம், எந்தத் தாக்கமும் இல்லாமலும் போகலாம். அந்த மாற்றம் தீமையானதாக இருக்கும்பட்சத்தில், ஓர் உயிரினத்தின் வாரிசு தொடர்ந்து வாழ்வதோ, இனப்பெருக்கம் செய்வதோ சாத்தியமில்லை. அதேநேரம், திடீர் மாற்றம் நல்ல விளைவைத் தரும்பட்சத்தில், மாற்றம் அடைந்த வாரிசு, மற்ற வாரிசுகளைவிடச் சிறந்த ஒன்றாக இருக்கும். அதனால், அதிக இனப்பெருக்கம் செய்யும். இதன்மூலம், அந்த சாதகமான திடீர் மாற்றம் பரவலாகும். தீமை பயக்கும் திடீர் மாற்றங்கள் நீக்கப்பட்டு, நல்ல மாற்றங்கள் பரவலாவதற்குக் காரணம் இயற்கைத் தேர்வு (Natural selection).
சாதாரணமாக ஆயிரக்கணக்கான தலைமுறைகளுக்கு ஒரு முறைதான் திடீர் மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறது. இனப்பெருக்கத்தின்போது பெற்றோர் இருவரிடமும் விந்தும் சினை முட்டையும் உருவாகும்போது, அவர்களது மரபணுக்களில் உள்ள குரோமோசோம்கள் (அதில்தான் டி.என்.ஏ. இருக்கிறது) பிரிக்கப்பட்டும் உடைக்கப்பட்டு ம் அவற்றில் சேர்க்கப்படுகின்றன. பிறகு அந்த விந்தும், சினைமுட்டையும் கூடும்போது சில மரபணுக்கள் அப்பாவிடம் இருந்தும், சில மரபணுக்கள் அம்மாவிடம் இருந்தும் தான்தோன்றித்தனமாகச் சேர்கின்றன. இதன் காரணமாக வாரிசுக்கு வித்தியாசமான இணைமரபணுக்கள் (alleles) தோன்றியிருக்கும்.
இப்படி இணைமரபணுக்கள் உருவாகும்போது திடீர் மாற்றங்கள் நீண்ட காலத்துக்கு நிகழ்ந்து, அது தொடர்ந்துகொண்டே இருந்தால், அதன்மூலம் புதிய உயிரின வகை தோன்றும். கோடிக்கணக்கான ஆண்டுகளில் நிகழ்ந்த திடீர் மாற்றங்கள், இயற்கைத் தேர்வு ஆகிய இரண்டு நடைமுறைகளும், பூமியில் இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உயிரினங்கள் அனைத்தையும் உருவாக்கியுள்ளன. மிகவும் சிறிய நுண்ணுயிரியான பாக்டீரியா முதல் மனிதர்கள்வரை, நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் இதில் அடக்கம்.
ஏன் இந்த மாற்றம்?
மரபணுக்களில் திடீர் மாற்றம் நிகழ்வதற்கான காரணம் என்ன? ஓர் உயிரினம் வாழும் சுற்றுச்சூழலில் உணவு, வாழிடம், இயற்கை நிகழ்வுகள் போன்ற பல்வேறு நெருக்கடிகள் (Environmental Pressures) இதில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த புற நெருக்கடிகளால்தான் திடீர் மாற்றம் தூண்டிவிடப்படுகிறது. அதுவே மரபணு மாற்றத்துக்கு வித்திட்டு, பிறகு இயற்கைத் தேர்வுக்கு இட்டுச் சென்று தனி உயிரின வகைகளையும் (Species) துணை உயிரின வகைகளையும் (Sub Species) உருவாக்குகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, காக்கை குடும்பத்தைச் சேர்ந்த காட்டில் வாழும் அண்டங்காக்கையையும், நகரத்தில் நாம் பார்க்கும் சாதாரண காக்கையையும் குறிப்பிடலாம்.
எல்லாம் சரி, உலகில் முதல் உயிர் தோன்றியது எப்படி?
பரிணாமவியல் கொள்கையின்படி, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், வேதிப்பொருட்கள் தான்தோன்றித்தனமாகச் சேர்ந்ததால், தன்னையே பிரதிசெய்துகொள்ளும் மூலக்கூறுகள் முதலில் உருவாகின. அவையே பின்னர் நுண்ணுயிரிகளாக உருமாறின. உயிரின் இந்தச் சிறு பொறிதான், இன்றைக்கு நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து உயிரினங்களுக்குமான விதை.

பறவை வகைகள் அழியும் ஆபத்து


இந்தியாவில் உள்ள 15 பறவை வகைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அழியும் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதுவரை அச்சுறுத்தல் இல்லாத பட்டியலில் இருந்த 3 பறவை வகைகள், முன்பைவிட அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் வெளியிட்டுள்ள புதிய சிவப்புப் பட்டியல் (International Union of Conservation of Nature's (IUCN) red list) தெரிவிக்கிறது.
"இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இமாலயக் காடையும் பிங் ஹெடட் வாத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன (critically endangered) என்று கூறப்பட்டாலும், அவை பெருமளவு அற்றுப்போய்விட்டன" என்கிறார் நாட்டின் முதன்மை பறவை ஆராய்ச்சி நிறுவனமான பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் (BNHS) செய்தித் தொடர்பாளர் அதுல் சாதே.
இவ்வளவு காலம் அச்சுறுத்தல் இல்லாதவை என்று வகைப்படுத்தப்பட்டிருந்த ஆற்று ஆள்காட்டி, ஆற்று ஆலா பறவைகளின் நிலைமை புதிய சிவப்புப் பட்டியலில் மோசமடைந்து இருக்கிறது. தற்போது அவை, அச்சுறுத்தலை நெருங்கிய நிலைக்கு (near threatened) மாற்றப்பட்டுள்ளன. தமிழக ஆற்றுப் பகுதிகளில் பார்க்கக்கூடிய பறவை ஆற்று ஆலா. ஆற்று சூழல்மண்டலத்தில் மனிதர்கள் ஏற்படுத்தும் நெருக்கடிகளும், அணைகள் கட்டப்படுவதுமே ஆற்று ஆலாக்கள் அழிவதற்கு முக்கியக் காரணம். அடுத்த மூன்று தலைமுறைகளில் ஆற்று ஆலாவும், ஆற்று ஆள்காட்டியும் அழியலாம் என்று கூறப்படுகிறது.
"இந்த 2 பறவைகளுமே கோடை காலத்தில் நதிகளின் நடுவே உருவாகும் சிறு தீவு போன்ற பகுதிகளிலும் நதிக்கரைகளிலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை. ஆனால், ஆற்றங்கரைகளுக்கு மாடுகளை ஓட்டி வருதல், நாய்கள் வருதல் போன்ற நடவடிக்கைகள் இவற்றின் முட்டைகளை அழிக்கின்றன. தொடர்ச்சியாக இப்பறவைகளின் எண்ணிக்கை சரிகிறது," என்கிறார் முக்கியப் பறவை பகுதிகள் (Important bird areas) தலைவர் ராஜு கஸாம்பே.
சதுப்புநிலங்கள், புல்வெளிகள், காடுகள் போன்றவையும் வளர்ச்சி நடவடிக்கைகளால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதே பறவைகள் அழிவை எதிர்நோக்குவதற்குக் காரணம் என்று தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் புல்வெளிகள் அழிந்ததால் கான மயில் (Great Indian Bustard), வங்க வரகுக் கோழி (Bengal Florican), ஜெர்டான் கோர்சர் (Jerdon's Courser) போன்ற பறவைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள. கான மயில், தமிழகத்தில் முன்பு இருந்துள்ளது.
அதேபோல, பிணந்தின்னிக் கழுகுகளின் அழிவுக்கு டைகுளோபெனாக் என்ற கால்நடைகளுக்கான வலிநிவாரணி மருந்தே காரணம். இறந்த வளர்ப்பு கால்நடைகளை உண்ணும்போது, பிணந்தின்னிக் கழுகுகளின் உடலில் இந்த மருந்து சென்று நரம்பு மண்டலத்தைப் பாதித்து இறப்பை ஏற்படுத்துகிறது.
உலக அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பறவை வகைகளின் எண்ணிக்கை, எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. தற்போது 200 பறவைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
"எஞ்சியுள்ள இயற்கை வாழிடங்கள், அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் குறித்து அறிவியல்பூர்வமான கள ஆய்வை நடத்தி, பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்" என்று பி.என்.எச்.எஸ். இயக்குநர் டாக்டர் ஆசாத் ரஹ்மானி தெரிவித்துள்ளார்.

பூமிக்கு அருகே..


1.பூமிக்கு அருகேயுள்ள நட்சத்திரம் ஒன்றிலிருந்து நம்மை வந்தடையும் ஒளி, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து வீச ஆரம்பித்ததாக இருக்கும். அது நம்மை வந்து சேர்வதற்குள் இத்தனை ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. இப்போது நம்மிடம் உள்ள ராக்கெட்களின் வேகத்தை வைத்துப் பார்த்தால், நமக்கு மிகவும் அருகிலுள்ள ஒரு நட்சத்திரத்தைச் சென்று தொட்டுவிட்டுத் திரும்புவதற்கு மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.
2.விண்ணிலிருந்து பூமியை நோக்கி வரும் விண்கற்கள், வளிமண்டலத்திலேயே உரசித் தீப்பிடித்துச் சாம்பலாகி, பின்னர் வடிகட்டப்பட்டுப் பூமியை வந்தடைகின்றன. இந்தத் தூசுத் துகள்கள் மூலம் ஒவ்வொரு நாளும் பூமியின் எடை 25 டன்னும் (1 டன் = ஆயிரம் கிலோ), ஆண்டுக்கு 9,125 டன்னும் அதிகரிக்கிறது.
3.சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய கோள் சனி. இது பூமியைவிட 95 மடங்கு எடை மிகுந்தது. சனிக் கிரகத்தை ஒரு பாத்திரம் என்று வைத்துக் கொண்டால், அதற்குள் 744 பூமிகளை உள்ளே வைக்க முடியும்.
4.விண்வெளிக்குப் போன முதல் உயிரினம் மனிதனல்ல, ஒரு நாய். அதன் பெயர் லைகா. 1957இல் ரஷ்யா அனுப்பிய விண்கலத்தில் சோதனை உயிரினமாக அது அனுப்பி வைக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக விண்கலத்துக்குள் இருந்த ஆக்சிஜன் தீர்ந்துபோன நிலையில், அது இறந்து போனது.
5.நிலவு 27 நாட்களுக்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வருகிறது. அதேநேரம் இப்படிச் சுற்றி வரும்போது, அது தன் ஒரு பக்கத்தை மட்டும்தான் பூமிக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. நிலவின் மறுபக்கத்தை முதன்முறையாக 1959இல்தான் பார்க்க முடிந்தது. அப்போது ரஷ்யாவின் லூனா 3 என்ற விண்கலம் முதன்முறையாக நிலவின் மறுபக்கத்தை போட்டோ எடுத்து அனுப்பியதால், அது சாத்தியமானது.

Sunday, December 1, 2013

உயிர் கொல்லி உணவுகள்

உஷார்!!! உயிர் கொல்லி உணவுகள்

சில நாட்களுக்கு முன் பலசரக்கு அங்காடிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க போயிருந்தோம், என் மகன் ஒரு பெட்டி Lay's Stax எடுத்துவந்து, அப்பா, இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லு? Zero Added Hydrogenated Trans Fat இருந்தா நான் வாங்கனும் என்று பெரிய ஆள் மாதிரி ஒரு மேட்டரை கேட்டான்!!! போன மாதம், என் மகனுக்கு காய்ச்சல் இருந்தபோது மருத்தவர் சொன்ன அட்வைஸ் அது!!! நான் மறந்துவிட்டேன், என் மகன் ஞாபகம் வைத்து கேட்டான்!!! ஆச்சர்யமாக இருந்தது!!! இந்த தகவல் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கும் உபயோகமா இருக்கும் என்று தோன்றியதால் இந்த பதிவு.

Hydrogenated Trans Fat & Partially hydrogenated oils:

Trans Fat இயற்கையாகவே பசுவின் பாலில் 2 - 5%சதவீதம் இருக்கும். ஆனால் Hydrogenated Trans Fat என்பது செயற்கையாக செய்யப்படும் Trans Fat. இது பசு, எறுது, பன்றி, காட்டுஎருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும், சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது!!!
இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்பு சத்து!!
இந்த கொழுப்பு சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density lipoproteins (HDL)) சத்தை குறைத்து, கெட்ட கொழுப்பு (Low-density lipoprotein (LDL)) சத்தை இருமடங்காக உயர்த்தி நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறது!!!

பல எதிர்வினைகளையும் உண்டாக்கும் கொழுப்பு!!! இது இருதய நோய்(coronary heart disease), Cancer, Diabetes மற்றும் உடல் பருமனை உருவாக்கும் கொழுப்பு. Partially hydrogenated oils என்பது இந்த கொழுப்பிலிருந்து தயாரிக்கபடும் எண்ணை. நாம் உபயோகிக்கும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ், பாக்கெட்டில் கிடைக்கும் உருலைகிழங்கு சிப்ஸ் வகைகள், பீட்ஸா, சாக்லெட் என் துவங்கி பல வகையான துரித உணவு வகைகள் தயாரிக்க உபயோகிக்கப்படுகிறது!!!

இத்தனை தீங்குள்ளது என்று தெரிந்தும் ஏன் இந்த கம்பெனிகள் உபயோகிக்கிறது இந்த Partially hydrogenated oils/Hydrogenated Trans Fat ?
  • இந்த எண்ணைகள் பல முறை திரும்ப திரும்ப உபயோகித்தாலும், தயாரித்த உணவில் மணம் மாறாது!
  • 18 மாதம் வரை வேண்டுமானாலும் இதில் தயாரித்த கெட்டுப் போகாமல் வைத்துக்கொள்ள முடியும். சாதாரண எண்ணையில் தயாரித்தது 3 நாட்களுக்கு மேல் தாங்காது!!
  • இந்த எண்ணையில் தயாரிக்கும் போது கிடைக்கும் சுவையும் ஒரு முக்கிய காரணமே!! நீங்களே கூட நினைத்திருக்கலாம் நம்ம வீட்டுல செய்யற ஃப்ரென்ச் ஃப்ரைஸ் மெக் டொனால்ட், மேரி ப்ரெளன், பீஸா கார்னர்களில் கிடைக்கும் அளவுக்கு சுவை இல்லை என்று!!!
பல முன்னேறிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் இந்த Hydrogenated Trans Fat உள்ள உணவுகளை தடை செய்து வருகிறது!! மெக் டோனால்ட், KFC போன்ற பல நிறுவனங்கள் இன்று இதை உபயோகிப்பதால் பல கோடி டாலர்கள் வழக்குகளில் போராடிவருகின்றன!!! சில நிறுவனங்கள் ஏப்ரல் 2007 முதல் இந்த எண்ணைகளை பயன்படுத்த மாட்டோம் என்றும் உத்தரவாதங்களும் தந்திருக்கின்றன, அட இந்தியவில இல்லைங்க, அமெரிக்காவிலே!!! இந்தியாவில் இன்றும் மெக் டோனால்ட், KFC போன்றவை சுதந்திரமாக இந்த எண்ணை உபயோகித்து நம் ஆரோக்கியத்தை அழித்து வருகிறது.
நீங்க செய்யவேண்டியது என்ன?
இனி நீங்கள் வாங்கும் குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ், ப்ரெச் ஃரைஸ் என எதை வாங்குவாதா இருந்தாலும் அதில் Hydrogenated Trans Fat = Zero (0) , Zero Added Hydrogenated Trans Fat , Zero Hydrogenated Vegitable Oil இவைகளில் ஏதேனும் லேபிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு பொருட்களை வாங்குங்கள்!!!
டாப் 10 Hydrogenated Trans Fat உள்ள உணவுகள்

உங்கள் வீட்டில் பூரி மற்றும் Deep Fry செய்யப்பட்ட மிச்சம் ஆகும் எண்ணையை திரும்ப உபயோகித்தாலும் அந்த உணவு பொருட்களில் இது போன்ற Hydrogenated Trans கொழுப்பு நிறைந்துவிடும். அதனால் ஒரு முறை உபயோகித்த எண்ணையை திரும்ப உபயோகிக்காமல் இருப்பது நல்லது!!!

குளோபல் வார்மிங்..?


இப்போது எங்கு திரும்பினாலும்
குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்பது போன்ற வார்த்தைகள் கேட்கின்றன. உலகம் அழிவின் விளிம்பை நோக்கிச் செல்கிறது. புயல், வெள்ளம் தாறுமாறாக அதிகரித்திருப்பதற்கும், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் இவைதான் காரணம் என்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தை உருவாக்கும் குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்றால் என்ன? சிக்கலான அறிவியல், சுற்றுச்சூழல் விஷயங்களாகக் கருதப்படும் புவிவெப்பமடைதல், பருவநிலை மாற்றம் பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ள, இதோ ஒரு வழிகாட்டி.
1.புவி வெப்பமடைதல் (Global Warming): வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால், பூமி இயல்புக்கு மாறாக வெப்பமடைவதே புவி வெப்பமடைதல். கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருள்களை கட்டுமீறி பயன்படுத்தியதும், காடழிப்பும் பசுங்குடில் வாயுக்களின் அளவை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.
2.காலநிலை மாற்றம் (Climate Change): புவி வெப்பம் அடைவதால் பூமியின் பருவகாலநிலை, தட்பவெப்பநிலை, இயற்கைச் சீற்ற நிகழ்வுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களே காலநிலை மாற்றம். ஒரு பகுதியின் சராசரி வானிலையில் ஏற்படும் மாற்றம்தான் காலநிலை மாற்றம் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
3.பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases): பூமியின் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஒரு போர்வை போல சேகரமாகி இருக்கும் நீராவி, கார்பன் டை ஆக்சைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள் சூரிய வெப்பத்தை பூமிக்குள் அனுமதிக்கின்றன. ஆனால், பூமியின் மேற்பரப்பில் இருந்து எதிரொளிக்கப்படும் வெப்பத்தை (அகச்சிவப்பு கதிர்களை) விண்வெளிக்கு அனுமதிக்காமல் தடுத்து, பூமிக்கே திரும்ப அனுப்புகின்றன. இதனால் பூமி கூடுதல் வெப்பமடைகிறது. கிரீன்ஹவுஸ் எனப்படும் கண்ணாடிக் கூடு போல, இந்த வாயுக்கள் பூமியை வெப்பமடையச் செய்வதால் இந்தப் பெயர் வந்தது.
4.பசுங்குடில் விளைவு (Greenhouse Effect): வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் இல்லை என்றால், பூமியின் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருக்கும். அப்போது எல்லாம் உறைந்து போய் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, பூமியில் உயிரினங்கள் வாழ பசுங்குடில் விளைவு அவசியமே. ஆனால் தொழிற்புரட்சிக்குப் பின் பசுங்குடில் வாயுக்களின் வெளியீடு எல்லை கடந்து அதிகரித்துவிட்டதால், அவற்றின் அடர்த்தி அதிகரித்து அதிக வெப்பத்தை பிடித்து வைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன. இதுவே பிரச்சினைக்குக் காரணம்.
5.புதைபடிம எரிபொருள்கள் (Fossil Fuels): நிலத்தில் இருந்த தாவரங்கள், கடலில் இருந்த உயிரினங்கள் நிலத்துக்கு அடியில் புதைந்து, கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு மக்கும்போது, கார்பனை மூலப்பொருளாகக் கொண்ட நிலக்கரி, கச்சாஎண்ணெய், எரிவாயு ஆகியவை உருவாகின்றன. இவற்றை பயன்படுத்துவதால், பசுங்குடில் வாயுக்கள் அதிக அளவில் வெளியிடப்படுகின்றன.
6.புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy): நிலக்கரி, பெட்ரோல் போன்ற மரபு சார்ந்த ஆற்றல்களுக்கு மாறாக, சூரியசக்தி, காற்று, புனல் (தண்ணீர்) ஆற்றல் போன்ற எக்காலத்திலும் தீராத, மீண்டும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆதாரங்கள். இதன் மற்றொரு பெயர் மரபுசாரா எரிசக்தி.
7.தட்பவெப்பநிலை (Weather): ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் வளிமண்டலம் எப்படிப்பட்ட நிலையில் உள்ளதோ அதுவே தட்பவெப்பநிலை. காற்று, வெப்பநிலை, ஈரப்பதம், வளிமண்டல அழுத்தம், மேகங்கள், மழைப்பொழிவு ஆகிய அம்சங்களின் மூலம் இது அளவிடப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் நேரத்துக்கு நேரம், நாளுக்கு நாள், பருவத்துக்குப் பருவம் தட்பவெப்பநிலை மாறுபடும்.
8.பருவநிலை (Climate): குறிப்பிட்ட ஒரு பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் உள்ள வானிலையின் பொதுவான தன்மை. ஒரு குறிப்பிட்ட பகுதியின் வானிலை பொதுவாக எப்படியிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அதுதான் பருவநிலை. எ.கா. ஊட்டியும் கொடைக்கானலும் குளிராக இருக்கும், சென்னையும் வேலூரும் வெப்பமாக இருக்கும் என்பதைப் போல.
9.தகவமைத்தல் (Adaptation): மாற்றம் அடைந்துவிட்ட, மாற்றம் அடையப் போகிற ஒரு சுற்றுச்சூழலில் தொடர்ந்து வாழ்வதற்காக உயிரினங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றங்கள். புவி வெப்பமடைதல், அதன் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றம், அழிவுகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே இந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றன.
10.மறுசுழற்சி, மறுபயன்பாடு, குறைந்த பயன்பாடு (Recycle, Reuse, Reduce): நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமையாகி பொருள்களை வாங்கிக் குவிப்பதற்கு பதிலாக, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருள்களை மட்டும் வாங்கி, மறுபடி பயன்படுத்தி, மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலுக்கு இணக்கமாகச் செயல்படுவது. இதன் மூலம் புவி வெப்பமடைவதையும், பருவநிலை மாற்றத்தையும் குறைக்க முடியும்.

Wednesday, November 27, 2013

வன்முறை


சகோதரிகளே, இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறையும் பாலியல் பலாத்காரமும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. அயல் நாடுகளில் இருந்து இந்தியாவை நோக்கிப் பயணிக்கும் பெண்கள் கடுமையான அச்சத்துக்கு ஆளாகியிருப்பதுடன், இந்தியா பற்றிய சுற்றுலாவுக்கான குறிப்பில், ‘இந்தியா: பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடு’ என்பதும் பதிவாகியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு, இது மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்படுவதுடன், 'பெண்கள் மீதான மரியாதை' விஷயத்தில், இந்தியாவுக்கு சர்வதேச அளவில் இருக்கும் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது.
பெண்கள் மீதான சமீபத்திய வன்முறைகள் நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்கின்றன. ஒன்று, பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை. இரண்டு, ஆண்களுக்குப் பெண்கள்மீது எந்த அடிப்படையிலும் மரியாதை இல்லை. மூன்று, ஏழை, பணக்காரர், இளமை, முதுமை என எந்த நிலையைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்கள் மீதான ஆண்களின் அதிகாரமும் வன்முறையும் எந்த நிலைக்கும் சளைத்ததல்ல. நான்கு, இந்த வன்முறைகளுக்குத் தண்டனை வழங்க வேண்டுமென்று போராட்டங்கள் அதிகமானாலும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகமாகின்றன.
இவைதான் காரணங்களா?
ஆண்கள் என்றால் இதையெல்லாம் செய்யலாம் என்ற சலுகையும், பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும், ஒரு தாயின் அடிமனதிலிருந்து உயர் பதவியில் இருக்கும் ஆண் அரசியல் தலைவர் வரை மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பதையே நாம் இதுவரை, 'இந்தியப் பண்பாடு' என்று கூறிவந்திருக்கிறோம். பெண்கள் உடைதான், ஆண்களிடம் இச்சையை எழுப்பி வன்முறையைச் செயல்படுத்தத் தூண்டுகிறது என்றார்கள். உடல் முழுக்க மூடிச் செல்லும் பெண்ணையும், சுடிதார் சீருடை அணிந்து செல்லும் பள்ளி மாணவியையும் பலாத்காரம் செய்து கொன்றார்கள்.
பெண்கள், மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் தனியாகச் செல்வதுதான் காரணம் என்றார்கள். பட்டப்பகலிலேயே இது நடக்கிறது. இவ்வாறு, பெண்களுக்குப் பாதகமாகவும் ஆண்களுக்குச் சாதகமாகவும் வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுவது, இயல்பாகவே இந்தக் குற்றச் செயலைப் பாதுகாப்பதற்குத்தான் என்பது தெளிவாகிறது.
போராட்டங்களில் பாரபட்சம்
டெல்லியில் டிசம்பர் 16-ம் தேதி நடைபெற்ற பாலியல் வன்முறை இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. பழங்குடியினப் பெண்கள், வெவ்வேறு அரசு, அரசு சாரா நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், வீடுகளிலேயே குடும்பங்களை நிர்வகிக்கும் பெண்கள், தொலைதூரக் கிராமங்களில் உள்ள பெண்கள் போன்றோர் மீது தினம்தோறும் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் யாரையும் உலுக்குவதே இல்லை. டெல்லி சம்பவம், இவ்வளவு தூரம் கவனம் பெற்றதற்குக் காரணம், பொதுமக்கள் தொடர்ந்து போராடினார்கள். அந்த நிகழ்வை நோக்கி ஊடகங்கள் தம் கவனத்தைத் திருப்பும்படி அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டுப் போராடியதற்கு இது ஒரு பெரிய உதாரணம். தொடர்புடைய குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிப்பதே இவர்கள் எல்லோரின் நோக்கமாக இருந்ததே தவிர, இதுபோன்று தினமும் தொடர்ந்துகொண்டிருக்கும் குற்றங்களைத் தடுப்பதற்கான போராட்டங்களாக இவை இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தண்டனை எதற்காக?
தண்டனை, அந்தக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக மட்டுமே. பிற இடங்களில், பிற பெண்கள்மீது காட்டப்படும் வன்முறைகள், குற்றங்கள் ஆகியவற்றைக் குறைப்பதற்காகவோ தடுப்பதற்காகவோ இல்லை அந்தத் தண்டனை. டெல்லி சம்பவத்தில் குற்றவாளிகளுக்குக் கொடுத்த தண்டனை மற்ற எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், ஏன் டிசம்பர் 16-க்குப் பின் இந்தக் குற்றங்கள் குறையாமல் அதிகரிக்கின்றன? தண்டனை கிடைக்கும் என்று அறியாமலா குற்றங்களைச் செய்கிறார்கள்?
ஏற்றத்தாழ்வான நீதி
இந்த நாட்டில் நீதி என்பது ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி வாய்ப்புகள் இருப்பவர்களுக்கு ஒன்றாகவும் இருப்பதை முதலில் நாம் உணர வேண்டும். டெல்லி சம்பவத்தில் நாம் நீதியைப் பெற முடிந்ததற்கும் அதே மாதிரியான மற்ற பாலியல் வன்முறைகளிலும், 'வாச்சாத்தி' போன்ற கொடூரமான சம்பவங்களிலும் பலர் தண்டனையைப் பெறாமல் தப்பித்ததற்கும், தாமதமான நீதிக்கும் காரணம், அரசு மக்களைப் பார்க்கும் பார்வையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுதான்.
அதுமட்டுமன்றி, டெல்லி சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் எல்லாரும் அடித்தட்டிலும் வறுமையிலும் உழல்பவர்கள். அவர்கள் ஏழைகள் என்று சொல்லி, அவர்கள் செய்ததை இதனால் நியாயப்படுத்த முடியாது. இதுபோலவே, பாலியல் வன்முறைகளைச் செய்துவரும் அதிகாரம் உடைய அரசியல்வாதிகள், சினிமாக்காரர்களுக்கு எல்லாம் நாம் எப்போது இதுபோல தண்டனை பெற்றுத்தரப்போகிறோம்?
'சூரியநெல்லி' வழக்கில் ஏன் நம்மால் இதுபோல நீதிக்கான போராட்டத்தை நடத்த முடியாமல் இருக்கிறது? அந்த அரசியல்வாதிகள் பற்றிய செய்திகளைக் கேட்டும், இம்மாதிரியான பாலியல் வன்முறைகளை ஊக்கப்படுத்தும் உற்சாகப்படுத்தும் காட்சிகளைப் பார்த்தும்தானே இதுபோன்ற கடைக்கோடி ஆண்கள் எல்லோரும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். ஆக, நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒட்டுமொத்தமான நீதியைப் பெறுவதற்காகப் போராட வேண்டியதுதான்.
அதிகார பலமற்ற குரல்கள்
இம்மாதிரியான சம்பவங்கள், நாளை நம் வீட்டிலோ, நாம் பணிபுரியும் இடங்களிலோ, நாம் புழங்கும் இடங்களிலோ நிகழலாம். அப்படி நடக்கும்போதும் நாம் நீதியைப் பெறுவோம் என்ற நம்பிக்கைக்கு எந்த இடமும் இல்லை. அதிலும், அடித்தட்டுப் பெண்கள் தினம்தோறும் ஏதோ ஒரு வகையில், அவர்களைச் சுற்றி இருக்கும் வெவ்வேறு ஆண்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். வறுமையாலும் கல்வியறிவின்மையாலும், அவற்றை வெளிப்படுத்த ஊடக ஆதரவு இன்றியும், எந்த அதிகார பலமும் இன்றியும் அவர்களின் எதிர்ப்புக் குரல் அவர்களுக்குள்ளேயே அடங்கிப்போகிறது. இந்த நிலை, அவர்கள் நிரந்தர வன்முறைக்கு உள்ளாவதற்குக் காரணமாகிவிடுகிறது.
டெல்லி சம்பவத்தில் நாம் நீதியைப் பெற விரும்பினோம், பெற்றோம். அதுபோல பிற நிகழ்வுகளிலும் நீதியைப் பெற, குற்றங்கள் குறைய, நாம் எல்லோரும் ஒன்றுசேர வேண்டும் என்பதே டெல்லி சம்பவம் நமக்குக் கொடுத்திருக்கும் நம்பிக்கை. எந்த ஒரு பெண்ணின் மீதான கொடுமை என்றாலும், ஒட்டுமொத்தமாகப் பெண்கள் எழுந்தால்தான் அவளுக்கான நீதியைப் பெற முடியும். அந்த ஒரு பெண்ணுக்கான நீதிதான் பெண்களாகிய நம் எல்லோருக்குமான நீதியாகும்.
நம் கதறலும் முழக்கமும் ஒன்றாக எழ வேண்டும். அப்போதுதான் நம் மகள்கள், சகோதரிகள், அன்னைகள் எல்லோரும் இந்த நாட்டில் நிம்மதியாகவும் வலியின்றியும் வாழ முடியும். இதை உணர்வதுதான் நமக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த நேரத்தில் மிகமிக அவசியம்.

Monday, November 25, 2013

வந்தாச்சு அழுக்கு மூட்டை சாமியார்

ம் நாட்டில் வெரைட்டி ரைஸ்களை விட சாமியார் ரகங்கள் ஏராளம். அதில், கரூரைக் கலக்கிவரும் அழுக்கு மூட்டைச் சாமியார், ரொம்பப் புது ரகம். 
கரூரில் முக்கியப் பிரமுகர்கள் குடிஇருக்கும் அண்ணாநகர் ஏரியாவைத் தேடி கடந்த ஒரு வாரமாக மக்கள்வெள்ளம் படை எடுக்கிறது. காரணம், அழுக்கு மூட்டைச் சாமியார் விஜயம்.
அழுக்கு மூட்டை சாமியாரை இரவு நேரத்தில்தான் தரிசனம் செய்ய முடியும் என்று சொல்லப்பட்டதால், நள்ளிரவு 1.30 மணிக்கு ஸ்பாட்டில் ஆஜரானோம். கம்பி கேட் போட்ட ஒரு வீடு. அதன் உள்ளே நின்ற ஆம்னி வேனுக்கு அருகில், ஒரு கட்டிலில் டேபிள் ஃபேன் காற்றில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இருந்தார். மேலே மட்டும் பச்சை நிற அங்கி... கீழே எதுவும் இல்லை. அந்த நேரத்திலும் கேட்டுக்கு வெளியிலும் வாசலிலும் சாமியாரைப் பார்க்க கிட்டத்தட்ட 200 பேர் கூடி இருந்தனர். சிலர் அக்கம்பக்கத்து வீட்டு வாசலில் அமர்ந்து தியானம் செய்தபடி இருந்தனர். சிலர் அங்கப்பிரதட்சணம் செய்வதும், நெடுஞ்சாண் கிடையாக உள்ளே இருப்பவரை நோக்கி விழுவதும் எழுவதுமாக இருந்தனர்.
திடீரென்று பக்தர்கள் குரல் ஓங்கி ஒலிக்கவே, திரும்பிப் பார்த்தோம். ''சாமி கண்ணைத் தொறந்துட்​டாரு...'' என்றபடி கும்பல் எழுந்து நிற்க... சாமியார் படுத்திருந்த நிலையிலேயே இரண்டு விரலைத் தூக்கிக் காண்பித்தார். அருகில் இருந்த உதவியாளர் ஒரு துணி எடுத்து சுத்தம் செய்தபடி, ''சாமியார் குழந்தை மாதிரி... அதனாலதான் இப்படி'' என்று சகஜமாகப் பேசிக்கொண்டனர்.
சுத்தப்படுத்தும் பணி முடிந்ததும் சாமியார் கத்தியபடி வாயைத் திறக்க... அவரது உதவியாளர் துண்டு புகையிலையைக் கொடுத்தார். அதை வாயில் கடித்து மென்றபடி கேட்டுக்கு வெளியில் நிற்கும் கூட்டத்தைப் பார்த்து பச்சை பச்சையாக தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தை​களாலும் திட்டினார். ''ஏண்டா நாய்​களா... சொன்னாக் கேக்க மாட்டீங்களா..? உங்க வேலை​யைப் பார்த்துட்டுப் போங்கடா...'' என்பதை மட்டும்தான் பிரசுரம் செய்ய இயலும்.
அதைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு, ''எந்தத் திசையில் போகணும் சாமி?'' என்று சில பெண்கள் கேட்க, ''வடக்கால இருந்து தெக்கால போங்கடி'' என்றார். உடனே பக்தர்கள் அனைவரும் 'ஸ்ரீ அழுக்கு மூட்டையார் நமஹ...’ என்று முனகியபடி தெற்கு திசை நோக்கி கொஞ்ச தூரம் நடந்து மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்தனர்.
''அப்புறம் என்ன சாமி செய்றது?'' என்று கேட்​கவும், மீண்டும் தனது கெட்ட வார்த்தை அர்ச்சனையைத் தொடங்கினார்.
''இன்னைக்கு நல்ல தரிசனம்'' என்றபடி கூட்டத்தினர் நெருங்கி நிற்க, ''போங்கடி... போங்கடா'' என்று சாமியார் எகிறத் தொடங்கவே, ''எல்லாரும் கலைஞ்சு​ போங்க'' என்று உதவியாளர் சொன்ன பிறகே பக்தர்கள் நகர்கிறார்கள். கூல்டிரிங்ஸ், பூ, பால், வாழைப்பழம், ஹார்லிக்ஸ் போன்றவற்றை சாமிக்குக் கொடுக்கச் சொல்லி உள்ளே நீட்ட... ''இதை எவனுக்குக்காவது கொண்டுபோய் கொடுங்கடி...'' என்றவர் சோர்ந்துபோய் மீண்டும் கட்டிலில் படுத்தார்.
இதற்கிடையில் நாம் போட்டோ எடுக்க முயல... அதைப் பார்த்த சாமியார் திரும்பவும் கத்த ஆரம்பித்​தார். அவரது மெய்க்காப்பாளர் ஒருவர், ''சாமிக்குப் போட்டோ எடுக்குறது பிடிக்கல. உடனே போட்டோவை அழிச்சிருங்க. சொன்னாக் கேளுங்க... இவர்தான் நம்மைப் படைச்சவர்'' என்றார்.
புகை படம் எடுக்க விரும்பாத சாமியார் தன்னை விரும்பிய பக்தர் "பார்த்த சாரதி"யுடன் எடுத்துக்கொண்ட படம் 
அவரை ஓரங்கட்டி பேச்சுக் கொடுத்தோம். ''பழநி பக்கத்துல இருக்குற கணக்கம்பட்டியிலதான் சாமி இதுவரை இருந்தார். முந்தி இவருக்கும் சரக்கு, கஞ்சான்னு எல்லா பழக்கமும் இருந்துச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. மனைவியைப் போட்டு தினமும் அடிச்சுக் கொடுமைப்படுத்துவாரு. ஒரு காலத்துல, சித்தர் ஒருத்தர் இவருக்கு தீட்சை கொடுத்தார். உடனே இப்படி மாறிட்டார். லேசுல குளிக்கவே மாட்டார். மக்களோட அழுக்கு மூட்டையை எல்​லாம் வாங்கிக்கிடுறார், அதனாலதான் அழுக்கு மூட்டை சாமின்னு சொல்றோம். சாமிகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கினா, அது கோடி புண்ணியம். அதனால, அவரைப் பார்க்க ஊர்விட்டு, நாடுவிட்டு எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க.
சாமியைப் பார்க்க வர்றவங்க அவர் சொல்றதை எல்லாம் செய்யணும். திடீர்னு கீழே குனிஞ்சு கல் எடுக்கச் சொல்லுவாரு. அதை எல்லாம் ஒரு இடத்துல குவிச்சு வைக்கச் சொல்லி, அந்தக் கல்லை எடுத்தே அவங்களை அடிப்பார். 'நான் எது சொன்னாலும் கேப்பியா முட்டாளே... கல் பொறுக்கச் சொன்ன நான் முட்டாள்னா... ஏன், எதுக்குன்னு கேக்காம அதை அப்படியே செய்யும் நீ எவ்வளவு பெரிய முட்டாப் பய’ன்னு சொல்லி வாழ்க்கையின் தத்துவத்தைப்(?) புரிய வைப்பாரு'' என்று சொல்லிக்கொண்டே போக தலை கிறுகிறுத்துத் திரும்பினோம்.
என்ன, போய்ப் பார்க்கத் தோணுதா?
ஞா.அண்ணாமலை ராஜா

கரகாட்டக்கலையும் கசப்பான உண்மையும்

  • கரகாட்டக் கலைஞர்கள் மாலா, ரவிராஜ்
    கரகாட்டக் கலைஞர்கள் மாலா, ரவிராஜ்
  • கிராமத்தை வலம் வரும் 'தாள் கரகம்'
    கிராமத்தை வலம் வரும் 'தாள் கரகம்'
தலையில் கரகம் சுமந்து செல்வது நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளில் ஒன்றாகும். குறிப்பாக கிராமக் கோயில்களில் ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மகாபாரதம் கதைப்பாடல் வடிவத்தில் நிகழ்த்தப்படும்போது முதல் நாள் நிகழ்ச்சியாக காப்பு கட்டும் விழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து பதினெட்டு நாட்களும் விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெறும்.
அப்போது, முதல் நாள் நிகழ்வில் முக்கிய அம்சமாக தாள் கரகம் சோடித்தல் அமையும். (தாள் கரகம் என்பது குடத்தின் வாய்ப்பகுதியில் பல்வேறு வண்ணத்தாள்களால் செய்யப்பட்ட முக்கோண வடிவ கொடிகள் ஒட்டப்பட்ட குச்சிகள் செறுகப்பட்டிருக்கும்). பக்தர் ஒருவர் அதைத் தலையில் சுமந்து வருவது உண்டு.
அதுபோலவே தீமிதித் திருவிழாவன்று அக்கினி கரகம் (மண் பானையில் மரக்கட்டைகளை இட்டு தீ மூட்டி தகதகவென எரியவிடுவர். தீ, பானையின் வாய் வழியே நாவை நீட்டும்) எனப்படும் தீக்கரகத்தைச் சுமந்து வருவதும் வழக்கம்.
கரகம் சுமப்பது என்ற வழக்கம் ஒரு வழிபாட்டு மரபாக இருந்துள்ளது. இத்தகையதொரு வழிபாட்டுச் சடங்கு நாளடைவில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று ஒரு நிகழ்த்துக் கலையாக வளர்ந்துள்ளது. தலையில் கரகம் சுமந்து ஆடும் ஆட்டம் கரகாட்டம் என்றாலும், கலைஞர்களின் தனித்திறமைக்கேற்ப பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது இக்கலை.
கரகாட்டக்கலை இன்றும் நடைமுறையில் உள்ள ஒரு கலை என்றாலும், அக்கலைஞர்களின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.
தகவல் தொடர்பு சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சி, கலைகளைப் பெரிதும் பாதித்துள்ளது, என்றாலும் அதையே சாதகமாக மாற்றிக்கொள்ளும் கலைஞர்களும் உண்டு. தொலைக்காட்சிகளின் ஆதிக்கம், எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்த வேண்டிய தேவையை இன்று கட்டாயமாகியிருக்கிறது. கலைகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
நாட்டுப்புற கலைகள், அந்தக் கலைஞர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. எனவே அக்கலைஞர்கள் தொடர்ந்து வாழ்க்கையை நடத்துவதற்கு கலை நிகழ்ச்சிகளைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். அதிலும் போட்டிகள் உண்டு. எனவே ஒவ்வொரு கலைக்குழுவும் தங்கள் குழுவை நிலைநிறுத்த விளம்பரப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
தஞ்சாவூர் கிழக்கு வாசல் பகுதியில் கரகாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம் என பல குழுக்கள் தங்கள் கலைக்கான விளம்பரப் பலகைகளை வைத்திருப்பதைப் பார்க்கலாம்.
என்னதான் விளம்பரப்படுத்தினாலும் இதுபோன்ற கலைகள் கோயில் திருவிழாக்களை நம்பியே உள்ளன. அதில் ஈடுபடும் கலைஞர்கள் உரிய முறையில் கெளரவிக்கப்படுவதில்லை. ஓலைக் குடிசைகளில்தான் அவர்களின் வாழ்க்கை கழிகிறது. நாம் அந்த கலைகளின் சிறப்பைப் பேசுவதால் அவர்களின் வாழ்வில் எத்தகைய முன்னேற்றமும் இல்லை. கலை அவர்களை வாழவைக்கிறதோ இல்லையோ அவர்கள் கலைகளை வாழவைத்துக்கொண்டுள்ளனர் என்பதுதான் கசப்பான உண்மை. நாட்டுப்புறக் கலைஞர்கள் பலர் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர். அரசு அவர்களுக்கென்று நல வாரியம் அமைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
கலை, கலையாக மட்டும் இல்லாமல், அதில் பல நுண் அரசியல் இயங்குகிறது. அவற்றையெல்லாம் மீறியும் பல கலைஞர்கள் பல்வேறு கலைகளில் ஈடுபட்டுக்கொண்டுதான் உள்ளனர். அத்தகையவர்களில் ஒருவர்தான் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகிலுள்ள ஊ.மங்கலம் கிராமத்தில் உள்ள கரகாட்டக் கலைஞர் மாலா. இவர் பிறந்தது பண்ருட்டி அருகிலுள்ள தண்டுப்பாளையம். தற்போது கணவர் தமிழ்ச்செல்வனோடு ஊ.மங்கலத்தில் வாழ்ந்து வருகிறார்.
மாலாவின் பெற்றோர் தொடக்கத்தில் கரகாட்டம் ஆடுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவருக்குள்ளிருந்த கலை உணர்வை யாராலும் தடுக்க இயலவில்லை. பத்து ஆண்டுகள் கரகாட்ட அனுபவம் பெற்ற தேர்ந்த கலைஞராக ஆடச் செல்லுமிடங்களிலெல்லாம் பார்வையாளர்களின் பாராட்டைப்பெற்று வருகிறார் மாலா.
கரகத்தைத் தலையில் சுமந்தபடி தீப்பந்தத்தினுள் செல்வது, குழல் விளக்குகளை உடைப்பது என தன் தனித்திறமைகளை இக்கலையோடு இணைத்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்துவது மாலாவின் வழக்கம். இவருடன் இணைந்து ஆடும் ஆண் கலைஞர் ரவிராஜ். இவரும் அதே ஊரைச் சேர்ந்தவர். இவர் முதலில் குறவன் குறத்தி ஆட்டத்தைத்தான் ஆடியுள்ளார். பிறகு தானாகவே கரகாட்டம் கற்றுக்கொண்டு இன்று கரகாட்டக் கலைஞராக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளார்.
பள்ளிப்பருவத்திலேயே ஆட்டத்தில் நாட்டம் கொண்டவர் ரவி. பள்ளிக் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பல பரிசுகளைப் பெற்றவர். இவருக்கு திருமணம் ஆகும் வரை இக்கலையில் ஈடுபட எவ்வித எதிர்ப்பும் இல்லை. அதன் பிறகு இவர் மனைவிக்கு இதில் விருப்பமில்லை. ஆனாலும் ஆடிப்பழகிய ரவியால் வேறு வேலைகளில் ஈடுபடமுடியவில்லை என்பதால் வேறு வழியின்றி இவரது ஆட்டம் இவரின் மனைவிக்கும் பிடித்துப்போக தொடர்கிறது கலைச் சேவை.
இப்படித்தான் பல கலைஞர்கள் கலை வாழ்க்கைக்கு தங்களை அற்பணித்துள்ளனர். அவர்களை கெளரவப்படுத்த இயலவில்லை என்றாலும், அவமானப்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோளாக இருக்கிறது.