பொதுவெளிகளிலும் ஊடகங்களிலும் பெண்ணியம் பற்றிய விவாதம் நடக்கும்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. பெண்ணியம் என்றாலே ஆணுக்கு எதிரானது, ஆண்களை அடக்கியாள நினைப்பது அல்லது ஆண்களை முழுவதுமாக வெறுத்து ஒதுக்குவது என்ற கருத்து பரவலாக உள்ளது. குறிப்பாக இது ஆண்களிடமும், அவர்களே பெண்களுக்கான கருத்தையும் உருவாக்கும் அதிகாரத்தில் உள்ளதால் பெண்கள் பலரிடமும் உள்ளது. ஆண்களை எதிரிகளாகக் கருதுபவர்களாகவே பெண்ணியவாதிகளைப் பொதுச் சமூகம் அடையாளப்படுத்திவைத்திருக்கிறது.
பெண்ணியம் என்பது என்ன? முதலில் நடைமுறை சார்ந்து அதை அணுகிப் பார்க்கலாம். இன்று ஒரு பெண் படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்கிறாள் என்றால், அதில்கூடப் பெண்ணியம் இருக்கிறது. ஏனென்றால் அந்த உரிமைகூடத் தொடர்ச்சியான சமூக சீர்திருத்தச் செயல்பாடுகளின் விளைவே.
நடைமுறை வாழ்க்கையில் பேருந்தில் தன்னை உரசிக்கொண்டே வரும் வக்கிர புத்திக்காரனை எதிர்கொள்ளும் நிலையில் அவளுக்குப் பெண்ணியம் உதவிக்கு வருகிறது. இன்றளவும் அவள் நள்ளிரவில் தனியாகச் செல்ல முடியாத நிலை நீடிக்கிறதெனில், 'காந்தி தேசத்தில்' பெண்ணுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை என்றுதான் பொருள்.
அந்த நிலையில் பெண்ணைத் தாயாக, தெய்வமாகப் போற்றுவதான வெற்றுக் கூச்சல்களைப் புறந்தள்ளி நிஜத்தை உணரக் கோருகிறது பெண்ணியம். இப்படி அன்றாட யதார்த்தங்கள், புத்தகங்களில் இருக்கும் பெண்ணியத்திற்கான வரையறைகள், சட்டப் புத்தகங்கள் பேசும் சமநீதி ஆகியவற்றைப் புறக்கணிக்கும் அல்லது கேலி செய்யும் நிலை சமூகத்தில் பலரிடம் உள்ளது.
மறுபுறம் அப்பாவின் 'அரவணைப்பில்' வளர்ந்து, அண்ணணின் 'பாசத்தில்' நனைந்து, கணவனின் 'காதலில்' திளைத்து வாழும் பெண்கள் பெண்ணியமே தேவையில்லை என்கின்றனர். இத்தகைய பெண்கள் பெரும்பாலும் நடு்த்தர வர்கத்தினர். இவர்கள் அனைவரும் ஆண்கள் 'கொடுத்த' சுதந்திரத்தைக் கொண்டு நன்றியோடு வாழ்பவர்கள். இவர்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ள விரும்பாதவர்கள். ஆனால் 'அரவணைக்கும்' அப்பாவும், 'பாசம்' பொழியும் சகோதரனும், 'காதல்' கணவனும் எடுத்துக் கொடுக்கப் பெண்ணுரிமை என்பதும் சுதந்திரம் என்பதும் சமத்துவம் என்பதும் சுக்கோ மிளகோ இல்லை என்கிற புரிதலில் முகிழ்ப்பதுதான் பெண்ணியம்.
ஓர் ஆண் சினிமா பார்க்க இரவு நேரக் காட்சிக்குத் தன் நண்பர்களுடன் செல்ல முடியும். ஆனால் இன்றைய சூழலில் ஒரு பெண்ணால் அது முடியாது. ஓர் இளைஞன் தன் நண்பர்களுடன் வெளியூர் சென்று எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கிவிட்டு வரலாம். ஆனால், ஓர் இளம் பெண் அவ்வாறு செய்ய முடியாது. வேலை நிமித்தமாகவோ கல்லூரிச் சுற்றுலாவுக்கோ சென்றாலும்கூட அதற்கான பயண அட்டவணை, அவள் உடன் செல்பவர்கள் குறித்த விவரங்கள் ஆகியவை அவளின் பெற்றோர் கையில் இருக்கும். இது என்ன சின்ன விஷயம்தானே என்று புறக்கணித்துவிடலாம். ஆனால் இதில் நுட்பமான உடல் அரசியல் அடங்கியுள்ளது.
ஒரு பெண்ணின் உடலானது குடிப்பெருமை, குலப்பெருமை, சமயம், சமுதாயம் ஆகியவற்றின் பெருமை அனைத்தையும் சுமந்து திரியும் தெய்வீக வஸ்து. அப்படி எல்லாம் எந்தக் கடமையும் ஆணுக்கு விதிக்கப்படவில்லை, அல்லது அந்த விதிக்கு விசுவாசமாக ஒரு ஆண் இருக்கவும் தேவை இல்லை.
சொத்துடமைச் சமுதாயம் தோன்றிய காலத்தில் 'கற்பு எனும் திண்மை' முதன் முதலாக ஆண் வாரிசு முறையை உத்திரவாதப்படுத்த உருவாகி நிலைபெற்றதாகச் சமூக அறிவியல் தெரிவிக்கிறது. தனக்குப் பிறகு தன் சொத்துக்கள் யாருக்குப் போய்ச் சேருமோ அவர்கள் தன் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ளவே பெண்ணுக்குக் கற்பொழுக்கம் வலியுறுத்தப்பட்டது. அதோடு இன்னொரு விஷயமும் நடந்தது.
திருமணம் செய்துகொண்டு 'வேறு வீட்டுக்கு'ச் சென்றுவிடும் பெண்ணுக்குச் சொத்துரிமை கிடையாது என்ற விதியும் ஏற்படுத்தப்பட்டது. பெண்ணுக்குச் சொத்தில் பங்கு கிடையாது. அவள் ஆணின் சொத்து. அவளைப் பணம் கொடுத்து, வாங்கிக் கைமாற்றிக்கொள்லலாம்.
பொருளாதார ரீதியில் குடும்பத்தைக் காக்க ஒர் ஆண் மகன் வேலைக்குச் சென்றால், அந்தக் குடும்பம் தலையெடுத்துவிட்டது என்கிறது சமுதாயம். அதே குடும்பப் பொருளாதார நிலையைச் சமாளிக்க ஒரு பெண் வேலைக்குச் சென்றால், அது சமுதாயத்தால் 'பரிதாபத்திற்குரிய' நிலையாகப் பார்க்கப்படுகிறது. சமயத் தலைவர்கள் சிலர் ஒரு படி மேலே போய் 'வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்' என விஷம் கக்குகின்றனர்.
19ஆம் நூற்றாண்டுவரை பெண்கள் கல்வி கற்பதே மிகப் பெரிய விஷயமாக இருந்தது. மகாத்மா ஃபுலே, ராம் மோஹன் ராய், காந்தியடிகள், தந்தை பெரியார் போன்றோரின் செயல்பாடுகளால் இன்று மாற்றங்கள் சாத்தியமாகியுள்ளன. இன்று ஓரளவு கல்வியும் வேலைவாய்ப்பும் பெண்களுக்குக் கிடைத்துள்ளன. இந்த மாற்றங்களைப் பலர் எரிச்சலோடும், சிலர் நிறைவோடும் பார்க்கிறார்கள். ஆனால் பெண்கள் போக வேண்டிய தூரமோ ஒளி வேகப் பயணத்தைக் கோருகிறது.
பெண்ணுரிமை பேசும் சில பெண்கள், ஆண்களுக்கும் பொதுச் சமூகத்துக்கும் எதிராக முன்வைக்கும் விமர்சனங்களில் சமநிலை தவறியிருக்கலாம். அதை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த பெண்ணுரிமைக் கோரிக்கைகளையும் சிறுமைப்படுத்த முயல்வதும் பெண்ணை அடிமைப்படுத்தும் செயலாகவே அமையும்.
பெண்ணுரிமை, பெண்நிலைவாதம், பெண்ணியம் என்பவை அடிப்படையில் சம உரிமைக்கான குரல்கள்தான். இதைப் பெண்கள் மட்டும்தான் எழுப்ப வேண்டும் என்பதில்லை. கல்வி, வேலை, லட்சியம், பொழுதுபோக்கு, திருமணம், பாதுகாப்பு, நடமாட்டம் என அனைத்திலும் ஆணுக்குக் கிடைக்கும் உரிமைகளும் சுதந்திரமும் பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும். இது ஆண்களின் உரிமையைப் பறிக்கும் நோக்கம் கொண்டதல்ல. ஆணுக்கு எதிரானதுமல்ல.
பெண்கள் தங்கள் உரிமையை உணர்ந்து, சமுதாயத்தில் அதனைத் தக்க வைத்துக்கொள்ளவும், பால் சமத்துவத்திற்குப் போராடவும் உதவும் ஒரு வழிகாட்டியே பெண்ணியம். நியாய உணர்வும் சமத்துவத்தில் நம்பிக்கையும் கொண்ட ஆண்களும் இணைந்து பாடுபட வேண்டிய லட்சியம் இது.