Monday, April 21, 2014

காட்டுப்புறாவும் கொண்டைக்குருவியும்

நான் சிறுவனாயிருக் கையில் காலை ஐந்து மணியளவில் ‘கி கோ கீ’ என்று இனிமையாய்ப் பாடும் கரிச்சான் என்ற கரிக்குருவியே என்னைப் படுக்கையை விட்டெழுப்பும். நான் சிற்றூரில் பிறந்தவன். மரஞ் செடிகளோடும், விலங்குகளோடும், பறவைகளோடும் சேர்ந்தே வளர்ந்தேன்.
வீட்டில் கோழிகள், மரங்களில் காக்கைகள், வானத்தில் சிட்டுக்குருவிகள், தோட்டத்தில் தேன்சிட்டுகள், தெருவோரம் கூட்டமாய்ப் பூணில்கள் (கல்லுக் குருவிகள் - தவிட்டுக் குருவிகள்), தாய்க் கோழிகளின் பின்னே திரியும் குஞ்சுகளைக் குறிவைத்துச் செம்பருந்தும் கரும்பருந்தும் வானத்தில் வட்டமிடும். புளியந்தோப்பில் காட்டுப்புறாவும் கொண்டைக்குருவியும் (Bul bul) கூடுகட்டி வாழும்.
எலுமிச்சை மரங்களின் அடியில் இருண்ட நிழலில் பதுங்கிப் பதுங்கி நடக்கும் செம்போத்து (Crow pheasant), எனக்கு மிகவும் பிடித்த பறவை. அது காக்கை போன்றஅலகும் சிறகுகளுக்கு செம்பழுப்பு வர்ணமும் பூசிக்கொண்டது போலிருக்கும்.
கொய்யா மரத்திலும் கோவைக் கொடியிலும் பச்சைக்கிளிகள் கீச்சிட்டுக் கொண்டிருக்கும். பனை மரப் பொந்திலிருந்து நீல நிறப் பனங்காடை (Indian Roller) கரகர குரலில் கத்தும். சித்திரை பிறந்தால் மாமரத்திலிருந்து குயில்கள் மாறி மாறிக் கூவும். மழைக்காலத்தில் தெருவோரக் குட்டைக்கு மீன்கொத்திகள் வந்து வந்து போகும்.
வயலில் மொச்சைத் தழைகளுக்கு அடியில் புகுந்து குடுகுடு காடை (குறும்பூழ் - Quail) ஓடும். காட்டுப் புதரில் கௌதாரி பதுங்கியிருக்கும்.
இரவில் வீட்டைச் சுற்றிச் சிற்றாந்தைகள் கத்தும். மரத்திலிருந்து கூகை (Barn owl) குழறும். வட்ட முகமும் துருத்தும் கருங்கண்களும்கொண்ட இக்கூகை பொந்தில் பதுங்கியிருந்து ஆளை விழுங்குவது போல் பார்க்கும். இரவு நிலா வெளிச்சத்தில் வௌவால்கள் பறக்கும். கொக்குகள் பூமாலை போல் வரிசைபிடித்து வலசை போகும்.
பொருநை கரை
எட்டாம் வகுப்புவரை எங்கள் சொந்த ஊர். பின் உயர்நிலை பள்ளிப் படிப்பு பொருநை கரையில் இருக்கும் கோபாலசமுத்திரம் என்ற ஊரில் தொடர்ந்தது. அழகான ஆறும் அதன் கரையும் பறவைகளின் புகலிடங்களாகத் திகழ்ந்தன. ஆற்றின் வடகரையில் மிகப் பெரிய மாமரம். மாலை மயங்கும் வேளை ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து அதில் அடையும். அப்பொழுது அவை எழுப்பும் குரல்களைக் கேட்க வேண்டுமே! ஒரே இசையரங்குதான்!
மேற்கில் சென்றால் அணைக்கரை ஓரம் வானுயர ஓங்கிய மருத மரங்கள் வரிசையாய் நிற்கும். தொலைவிலிருந்து பார்த்தால் மரங்களில் நூற்றுக்கணக்கான வெள்ளைப் பூக்கள் பூத்துக் குலுங்குவது போலிருக்கும். கிட்டப் போனால் அத்தனையும் வெண் கொக்குகள்!
கரும்பறவைகள்
அன்றில் பறவை பற்றி தமிழி லக்கியம் பல இடங்களில் பேசுகின்றது. அது கரு நிறமானது; தலையில் சிவந்த கொண்டையும், வளைந்த கூர் அலகும் உடையது. ஆணும் பெண்ணும் பிரியாமல் எப்பொழுதும் ஒன்றாகவே வாழுமாம். பிரியாமல் வாழும் காதலர்களுக்குப் புலவர்கள் அன்றில் இணையினை உவமையாகக் கூறுவார்கள். பாட்டில் படித்திருந்தேனேயன்றி, இவற்றை நேரில் பார்த்ததில்லை.
ஆனால், ஒருநாள் ஆற்றங்கரையில் புதுமையான இரண்டு கரும்பறவைகளை ஒன்றாகப் பார்த்தபொழுது, அவற்றின் சிவந்த உச்சிக் கொண்டையும் வளைந்து நீண்ட கூர்அலகும் அவையே அன்றில்கள் என்று பறைசாற்றின. பின்பு பறவை நூல் ஒன்றில் Black Ibis என்ற பறவையின் படத்தைப் பார்த்தேன். நான் பார்த்த ஆற்றங்கரைப் பறவையை அதில் கண்டேன். மேலும் விளக்கம் தேடியபொழுது Black Ibis என்பதே அன்றில் என்பது உறுதியாயிற்று.
செங்கால்கள்
திருவனந்தபுரம் உயிர்க்காட்சிச் சாலையில் ஒரு நாரையைப் பார்த்தேன். மெய்சிலிர்த்தது. பெரு மகிழ்ச்சியில் ஆழ்ந்தேன்.
‘பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன 
பவளக் கூர்வாய் செங்கால் நாரை’
- என்று சத்திமுற்றப் புலவர் பாட்டொன்றில் வருணித்த, அதே செங்கால் நாரையை அணுவும் பிறழாமல், அதே தோற்றத்தில் அங்கு கண்டேன். அதன் அலகு பிளந்துவைத்த பனங்கிழங்கு என்றால், பனங்கிழங்கேதான்!
புதுவை ஏரி
பிற்காலத்தில் நான் புதுவை நகர் வாழ்பவன் ஆகிவிட்ட பிறகு, புதுவையின் புகழ்பெற்ற ஊசுட்டேரி என் பறவை ஆர்வத்தை வளர்த்தது. நானும் என் நண்பர் சிவ. கணபதியும் முப்பது ஆண்டுகட்கு முன்பே, பறவைகளை நோக்குவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தோம். கையில் தொலைநோக்கிகளுடன் (Binocular) பலமுறை பறவைகளை நோக்க ஊசுட்டேரிக்குச் சென்றிருக்கின்றோம். கரையோரத்திலும், நீர் நடுவிலும் எத்தனை வகையான நீர்ப்பறவைகள்!
நாங்கள் பார்த்து மகிழ்ந்தவை சிறுகொக்குகள், பெருங்கொக்குகள், உண்ணிக் கொக்குள் (Cattle egret), வாத்துகள், இறகிகள், நீர்க் காக்கைகள், முக்குளிப்பான்கள், கருநாரைகள், கூழைக்கடாக்கள் (Pelican), பல வகை மீன்கொத்திகள்.
வேதாரணியம் நீர்நிலைகளில் மிகுதியாய் வாழும் பூநாரைகள் (Flamingos) நான்கை ஒரு முறை ஊசுட்டேரியில் பார்த்தோம். ஆனால், சில நாள்களில் அவை அங்கிருந்து போய்விட்டன.
ஏரிக்கரைகளில் மட்டுமல்லாது சுற்றுப்புற நிலங்களிலும் நாங்கள் சுற்றித் திரிந்தோம். அங்கே அழகிய செம்மூக்கு ஆட்காட்டிப் பறவைகள் (Redwatted lapwing) ‘டிடிட் டிடிட் யூ' என்று தமக்கே உரிய முறையில் குரலை எழுப்பிப் பறந்தன. பலவகையான உப்புக்கொத்திப் பறவைகள் (Plovers) ஓடித் திரிந்தன.
தேங்கிய குட்டை
பறவைகளின் வாழ்வை ஆராய்வ தற்காகப் பிரான்சிலிருந்து வந்திருந்த இளைஞர் ஒருவரை ஒருமுறை ஊசுட்டேரியில் கண்டோம். பிரான்சில் இயற்கைச் சூழல் முற்றும் அழிந்து போயிற்றதென்றும், அங்கு அழிந்துபோன பறவையினங்களை ஊசுட்டேரியில் பார்க்க முடிகிற தென்றும் மகிழ்ச்சியோடு கூறினார்.
ஆனால், அந்த அழகிய ஏரி இன்று தேக்கமுற்றுப்போன பெருங் கழிவு நீர்க் குட்டையாகக் காட்சி அளிக்கின்றது. பருவகாலங்களில் வெளியிருந்து வரும் பறவைகள், இப்போது வருவதில்லை.
ஏரியால் பாசனம் பெற்ற விளைநிலங்களை வளர்ச்சி, முன்னேற்றம் என்ற போர்வையில் முதலாளிக் கும்பல் முற்றும் அழித்துக் குடியிருப்புகளைக் கட்டமைத்துக்கொண்டன.
பொழுதுபோக்குப் பூங்கா, அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் நச்சுப்புகையும், கழிவுகளும், மாசும் இயற்கை சூழலை அழித்த பின் எந்தப் பறவைதான் அங்கு வரும்?
                                                     நன்றி 
                                   ம.இலெ. தங்கப்பா, எழுத்தாளர், இயற்கை ஆர்வலர்

No comments:

Post a Comment