Friday, January 18, 2013

3000 ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி! – திகில் சம்பவம்


3000-years-old-ghost-found-in-india
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொண்டாரெட்டிபாளையத்தில் குளம் தூர்வாரும் பணி ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
உச்சிவேளையில் ஒருவர் கடப்பாரையால் குளத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது ‘தொப்..தொப்’ என்று சத்தம் கேட்டது. சத்தத்தை கேட்டு ஆச்சரியப்பட்ட அனைவரும், கடப்பாரையால் தோண்டியவரின் அருகில் வந்தனர். ‘நிச்சயம் பெரிய புதையலாத்தான் இருக்கும்’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். வியப்பு மேலிட, தோண்டும் பணி விரைந்தது. குழி ஆழமான போது, உள்ளே பெரிய மண்பானை ஒன்று புதைந்து இருந்தது லேசாக தெரிந்தது. வேகவேகமாக கடப்பாரையால் குத்தி தோண்டியபோது, மண்தாழி உடைந்தது.
மறுகணமே, ஒரு பெண் ஆவேசம் கொண்டவராய் ஆட ஆரம்பித்தார். அவர் போட்ட கூச்சல் அருகில் இருந்தவர்களை நடுங்க வைத்தது. தலைவிரிக் கோலத்தில் ஆங்காரமாய் ஆடிய பெண்ணை பார்த்து பலர் அதிர்ச்சியில் உறைந்தனர். துள்ளி குதித்து ஆடியபடியே அந்த பெண் பேசினார். அவர் சொன்ன விஷயங்களை கேட்டு கிராம மக்கள் கதிகலங்கி போனார்கள்.
‘இந்த குளத்துல சாந்தி என்ற ஒரு பொண்ண உசிரோட புதைச்சிட்டாங்க. அந்த ஆன்மா இங்கயே சுத்திக்கிட்டு இருக்கு. யாரும் குளத்த விட்டு வெளியே போகக் கூடாது. மீறி போனா உங்க உசிரு உங்களுக்கில்ல’ என்று ஆக்ரோஷமாய் கத்தினார் அந்த பெண். அவரது பேச்சிலும், செய்கையிலும் இருந்த பெரிய மாற்றத்தை கவனித்த மக்கள் பீதியில், சிலைபோல அந்த இடத்திலேயே நின்றனர். ஆனால் தேவி என்ற பெண் குளத்தை விட்டு வெளியே போக முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது.
அவரை போல குளத்தில் இருந்த போக முயன்ற சில பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் பார்த்த நடுக்கத்தில், ஆண்களும் பெண்களும் குளத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றார்கள்.
‘உடனே பூஜை பண்ணினாதான் பேய் விட்டு விலகும்’ என்று சிலர் சொன்னதால், எலுமிச்சை பழம், சூடம் கொண்டு வந்து பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆவேசமாக ஆடிய பெண் சகஜ நிலைக்கு வந்தார். அவசரஅவசரமாக எல்லோரும் குளத்தை விட்டு வெளியே வந்து பயத்தோடே வீட்டுக்கு ஓடினர். குளத்தில் இன்னொரு மண்தாழியும் இருந்திருக்கிறது.
பேய் பயத்தில் அதில் யாரும் கைவைக்கவில்லை. இச்சம்பவத்துக்கு பிறகும் பல பெண்கள் ஆக்ரோஷமாக கத்தியபடி ஆடியுள்ளனர். இதனால் கொண்டாரெட்டிபாளைய மக்களுக்கு ஆவி பயம் இன்னும் முழுமையாக அகலவில்லை.
கிராமத்தில் இருக்கும் யாரும் குளத்து பக்கம் எட்டிக்கூட பார்ப்பது கிடையாது.
இரவு நேரங்களில் அந்த பக்கம் செல்லவே அஞ்சுகிறார்கள். ‘சாந்திங்ற பொண்ண உசிரோட பொதைச்சதா, ஆவி பிடிச்சு ஆடிய பொண்ணு சொன்னா. தாழி உடைஞ்சப்போ வந்த புகை பட்டுதான் அந்த பொண்ணு அப்படி ஆடுச்சு. எங்க நல்ல நேரம். ஆவி யாரையும் பலி வாங்கல. இப்போ குளத்துப்பக்கம் யாரும் போகறது கிடையாது. எதாவது பரிகாரம் செஞ்சு, ஆவிய மறுபடியும் தாழியில அடைச்சாதான் எங்க ஊருக்கு நல்லது. அதுவரைக்கும் எங்களுக்கு பயமாத்தான் இருக்கு’ என்று சொல்லும் பெண்களின் பேச்சில் பேய் பயம் தெரிந்தது.
இந்த மண்தாழி பற்றி ஆய்வாளர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் வந்து ஆய்வு செய்து சில மண்டையோடுகளை தாழியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். இந்த மண்டையோடுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஆவேசம் கொண்டு ஆடிய அந்த பெண்ணை நேராக பார்த்த மக்களுக்கு ஆவி பயம் இன்னும் தீரவில்லை.

No comments:

Post a Comment