Friday, January 31, 2014

ஆட்கொல்லி வேங்கை தரும் பாடம்

நீலகிரியில் மக்களிடையே பீதியை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஆட்கொல்லி வேங்கையைச் சுட்டுக் கொன்றதுதான் சரியான முடிவு என்பது என் நிலைப்பாடு.
உயிர்ச் சங்கிலியின் உச்சத்தில், காட்டில் தன்னிச்சையாக, சுற்றித்திரியும் ஒரு வேங்கைப் புலியை, மயக்கத் தோட்டா மூலம் பிடித்துக் கூண்டில் அடைத்து வைப்பது மரணத்தைவிட கொடுமையான முடிவு. அது மட்டுமல்ல, உயிர்க்காட்சிசாலையில் மிகுந்த இட நெருக்கடி நிலவுகிறது. "மைசூர் உயிர்க்காட்சிசாலையில் இப்போது தடுக்கி விழுந்தால் சிறுத்தைகள் இருக்கின்றன. இடமே இல்லை" என்று புலம்பு கின்றார் அதன் இயக்குநர். ஒரு விலங்கைக் கூண்டில் அடைத்து வைப்பதால், அந்த உயிரினப் பாதுகாப்பிற்கு எவ்விதப் பயனுமில்லை. பராமரிக்கும் செலவைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
The Deer and the Tiger (1967) என்ற நூலை எழுதி இந்தியாவில் காட்டுயிர் பேணல் ஒரு இயக்கமாக உருவாகக் காரணமாக இருந்த உயிரியிலாளர் ஜார்ஜ் ஷேலர், ஆட்கொல்லிப் புலிகளை கொல்வதுதான் ஒரே வழி என்கிறார். நம் நாட்டு வேங்கை நிபுணர் உல்லாஸ் கரந்த்தும் இதைத்தான் சொல்கிறார் (காண்க: கானுறை வேங்கை – காலச்சுவடு பதிப்பகம்) காட்டுயிர் பேணலில் அரைக்கிணறு தாண்டும் வேலைக்கே இடமில்லை. இங்கே நமது குறிக்கோள் அழிவின் விளிம்பின் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஓர் உயிரினத்தை (species) காப்பதுதான். அந்த முயற்சியில் சில தனி உயிரிகள் சாக வேண்டி வரலாம். உள்ளூர் மக்கள் ஆதரவு இல்லாமல் வேங்கையைப் பாதுகாக்க முடியாது என்பதையும் இங்கு நாம் மனதில் கொள்ள வேண்டும்.
பரந்திருந்த வனப்பரப்பு அழிந்து, இன்று சிறிய தீவுகள் போன்ற காடுகள்தான் வேங்கைகளுக்கு வாழிடமாக உள்ளன. 1972இல் இருந்து காட்டுயிர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினால், அவை இன்று குறிப்பிடத்தக்க அளவு பெருகியுள்ளன. மைசூருக்குள் யானை வருகின்றது. கொடைக்கானல் கோல்ஃப் மைதானத்தில் காட்டெருது மேய்கின்றது. பதினைந்து ஆண்டுகளாக வீரப்பனின் ராஜ்யம் போலிருந்த சத்தியமங்கலம் கானகப் பரப்பில் இன்று 21 வேங்கைகள் வசிப்பது அறியப்பட்டிருக்கின்றது. நம் நாட்டில் காட்டு விலங்கு-மனிதர் எதிர்கொள்ளல் (Man-Animal Conflict) வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரித்துக்கொண்டேதான் போகும். இந்தப் பிரச்சினைக்குச் சரியான வியூகங்களை வகுத்துத் தயாராக இருக்க வேண்டும். வரும்போது பிரச்சினையை எதிர்கொள்ளலாம் என்றிருக்கக் கூடாது. ஆனால், இதைப் பற்றி அரசு இன்னும் தீவிரமாகச் சிந்திக்காதது வருந்தத்தக்க விஷயம்.
சில இடங்களில் வேங்கையோ, சிறுத்தையோ கால்நடைகளை அடிக்கின்றன. வெகு அரிதாகச் சில மனிதர்களும் பலியாகின்றார்கள். மனிதரை எளிதாக அடித்துவிடலாம் என்று ஒரு வேங்கைப் புலி தெரிந்துகொண்டால், அது மறுபடியும் அதே முறையையே கையாளும். அதாவது, அதன் பிறகு அது ஒரு ஆட்கொல்லியாகிவிடுகின்றது. அப்போது அதைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உத்தராகண்ட் சம்பவாட் என்ற இடத்தில் 264 பேரைக் கொன்ற ஒரு ஆட்கொல்லி வேங்கையை ஜிம் கார்பெட் சுட்டு அழித்தார். இன்றுகூடச் சுந்தரவனக் காடுகளில் ஆட்கொல்லி வேங்கைகள் அவ்வப்போது தோன்றுகின்றன.
காட்டுயிர்ப் பேணலும் பிராணி நலமும் (Conservation and Animal welfare) இரண்டும் சீரிய கருதுகோள்கள். இரண்டுமே சமுதாயத்திற்குத் தேவையானவை - ஒன்றை ஒன்று குழப்பிக் கொள்ளாமலிருக்கும் வரை மட்டுமே. காட்டுயிர் எனும் சொல்லில், தானாக வளர்ந்து செழிக்கும் சகல உயிரினங்களும் அடக்கம். அணில், பட்டாம்பூச்சி தொடங்கிப் பலவும் இதில் அடங்கும். ஆனால் பிராணி நலன் என்பது மனிதருடன் வாழும் விலங்குகள், பறவைகள் சார்ந்தது.
கடந்த நூறாண்டுகளாகச் சுற்றுச்சூழலை நாம் சீரழித்துவிட்டதால் இப்போது எஞ்சியுள்ள காட்டுயிர்களை - தாவரங்கள், விலங்கினங்கள், ஊர்வன, நீர்வாழ்விகள்- மேலும் அழிந்துவிடாமல் காப்பாற்றுவது எப்படி என்பதுதான் காட்டுயிர்ப் பேணலின் சாரம். அதற்கு அறிவியல்பூர்வமான உத்திகளை நாம் பயன்படுத்துகின்றோம். எடுத்துக் காட்டாக, வேங்கைக்கு ரேடியோ கழுத்துப்பட்டை போட்டு அது எவ்வளவு தூரம் இரைக்காகச் சுற்றுகின்றது, எத்தனை ஆண்டுகள் குட்டிகள் தாயுடன் இருக்கின்றன, எவ்வளவு பரப்புள்ள காடு தேவை என்பது போன்ற விவரங்களை அறிந்துகொள்கின்றோம்.
இருபது ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாக மயக்கத் தோட்டா மூலம் வேங்கையைச் செயலிழக்கச் செய்து கழுத்துப்பட்டை மாட்டிய போது, பலரும் கருணையின் அடிப்படையில் அது ஒரு சித்திரவதை என எதிர்த்தார்கள். சம்பந்தப் பட்ட ஆய்வாளரின் ஆராய்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால், இன்று ரேடியோ காலர் உலகெங்கும், நம் நாட்டிலும் சிறு பறவைகளுக்கும்கூடப் பொருத்தப்படுகின்றது.
காட்டுயிர் பாதுகாப்பின் அடிப்படை, அறிவியல் சார்ந்த முறைகளே. ஓர் உயிரியின் மேல் கருணை காட்டுவது என்பது அறம் சார்ந்த விஷயம். அது சூழலியல் கரிசனத்தின் அடையாளமல்ல. அத்தகைய கருணை சில சமயங்களில் காட்டுயிர் பேணலுக்கு எதிர்மறையாகவும் அமையலாம்.
திருட்டு வேட்டை (Poaching), உறைவிட அழிப்பு (Habitat destruction) ஆகியவற்றுடன் வேங்கைக்கு இப்போது ஒரு புதிய ஆபத்து வந்திருக்கின்றது. அண்மையில் நான்கு வேங்கைப் புலிகள் நாய்களிடமிருந்து தொற்றும் நாய் நொடிப்பு (canine distemper) நோயால் மடிந்திருக்கின்றன என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான இந்திய அரசுக் குறிப்பொன்று கூறுகின்றது. இதை நம் நாட்டு ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. பிரிட்டனின் கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தெருநாய்களுக்குக் கருத்தடை செய்தும், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றதே தவிர, இம்மியளவும் குறையவில்லை. தன்சீனியாவில் 1994இல், சுற்றுலாப் பயணிகளுடன் வந்த செல்லநாய்களிடமிருந்து பரவிய இந்நோய்க்கு 1,000 சிங்கங்கள் பலியாகின.
பிராணி நலன், விலங்குரிமை சார்ந்தவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்த சாலிம் அலி தனது கவலையை `ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ (The Fall of the Sparrow) என்ற தன்வரலாற்று நூலில் 1985இல் கீழ்க்கண்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்: "என்னைப் பொறுத்தவரையில் காட்டுயிர்ப் பேணல், நடைமுறை நோக்கங்களைக் கொண்டது. உணர்வுபூர்வமான செயல்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை. ஆனால் இன்று காட்டுயிர் பற்றிச் சொல்லிக் கொடுக்கப்படுவது, அகிம்சை சம்பந்தப்பட்டதாயிருக்கின்றது. புனிதப் பசுவைப் பாதுகாப்பது போல. இது தவறானது மட்டுமல்ல. துரதிருஷ்டவசமானது:"

No comments:

Post a Comment