Friday, January 31, 2014

சிட்டுக் குருவிகள்

நாகரிக வளர்ச்சி என்ற வார்த்தையை பயன்படுத்தி, நாம் நமது வாழ்க்கையை மெல்லமெல்லத் தொலைத்து வருகிறோம். இயற்கையை சார்ந்திருந்த நிலை மாறியதால், இன்று பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். கிராமங்களில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்கள், இன்று நகரங்களின் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் தனிக் குடித்தனம் நடத்தி வருகிறார்கள்.
நமது தேவைகளை பெருக்கிக்கொள்ள இயற்கை சார்ந்த பல விஷயங்களை மெல்ல மெல்ல மறந்து வருகிறோம். அந்தப் பட்டியலில் பறவையினங்களும் ஒன்று. குறிப்பாக, நமக்கு அருகில் நம்மைச் சுற்றி சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளின் நிலை இன்று பரிதாபத்துக்குரியதாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது.
சிட்டுக்குருவிகள் மறைந்த சோகம்
சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்தவை. இவை பசரீன்கள் குடும்பத்தைச் சேர்ந்தவை. நம் நாட்டில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் என அழைக்கப்படுகின்றன. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவியினங்கள் உள்ளன. இவை எங்கும் காணப்படுபவை. சிட்டுக் குருவியின் வாழ்நாள் 13 ஆண்டுகளாகும். இவை மனிதர்கள் இருக்கும் பகுதியிலேயே வசித்து வந்தாலும், மனிதர்களோடு பழகுவதில்லை. இவைகளை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருள்களைக் கொண்டு கூடு கட்டி வசிக்கக் கூடியவை.
சிட்டுக்குருவிகள் அனைத்துண்ணிகள். தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாகக் உட்கொள்ளும். சிலவகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும். இவை 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். சிட்டுக் குருவிகள் மெல்லிய கோடுகளைக் கொண்ட புல்வெளிக் குருவிகள், மாலைச் சிட்டுகள், காட்டில் வாழும் நரிச் சிட்டுகள், வெண்கொண்டையும் வெண்மையான தொண்டையும் கொண்ட குருவிகள், கறுப்புச் சிட்டுகள், வெள்ளைக் கோடுகள் உடைய கொண்டை பெற்றவை என பலவகைகள் உண்டு.
சுற்றுச்சூழல் மாற்றங்களால் நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளில் மரங்களும், பறவைகளும் உலகெங்கும் அழிந்தும், குறைந்தும் வருவதால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன.
தற்போது, நகர் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் முற்றிலுமாக அழிந்து விட்டன. அலைபேசியில் இருந்து வெளிவரும் மின்காந்த நுண்ணலைகளின் தாக்கத்தால், சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்க மண்டலம் தாக்கப்பட்டு, அவற்றை மலடாக மாற்றி விடுவதால், சிட்டுக்குருவிகள் தங்கள் இனத்தைப் பெருக்க இயலவில்லையெனக் கண்டறியப்பட்டுள்ளது. சிட்டுக்குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டி வருகின்றனர். எனவே, மார்ச் 20-ம் தேதியை உலக ஊர்க்குருவிகள் தினமாகக் கொண்டாடி, அவற்றைக் காக்க போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில், பல நாடுகள் அஞ்சல் தலைகளை வெளியிட்டு பெருமைப்படுத்தி உள்ளன.
விழிப்புணர்வில்லை
சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும், அதுபற்றிய விழிப்புணர்வும் நம்மில் பலருக்கு இன்னும் எழவில்லை என்பதே நிதர்சனம். அதனால்தான், சிட்டுக்குருவிக்கு சோறு வைத்து குழந்தைகளுக்கு உணவூட்டிய தாய்மார்கள், இன்று வீதிகளில் விற்கப்படும் உணர்ச்சியற்ற சிட்டுக்குருவி பொம்மைகளை வாங்கி வைத்து குழந்தைகளுக்குச் சோறூட்டுகிறார்கள்.
செல்லூலாயிட் குருவிகள்
விருதுநகர் வீதிகளில், கலர் கலராய் மின்னும் எல்.ஈ.டி. பல்புகள் பொருத்தப்பட்டு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சிட்டுக் குருவி பொம்மைகள் ரூ. 10-க்கு கூவிக்கூவி விற்கப்படுகின்றன. சாலைகளில் செல்லும் பெற்றோர் பலர், தங்கள் வாகனங்களிலிருந்து இறங்கிவந்து உயிரற்ற இந்த ஜடக் குருவிகளை ஆர்வமாக விலை கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள்.
விருதுநகரில் மட்டுமல்ல. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று கலர் கலரான சிட்டுக் குருவி பொம்மைகளை தெருக்களில் போட்டு விற்பனை செய்து வருவதை நம்மால் பார்க்க முடியும்.
குடியிருப்புகளைச் சுற்றியுள்ள தோட்டத்தில், சுதந்திரமாய் சுற்றித் திரிந்த சிட்டுக் குருவியினத்தை நாம் காக்க மறந்ததால், இன்று பலரின் வீட்டுகளில் அழகுப் பொருள்கள் வைத்திருக்கும் ஷோ-கேஸ்களில் பொம்மையாக மட்டுமே, அதைக் காண வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால், இன்னும் பல உயிரினங்களும், இந்தப் பட்டியலில் விரைவில் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.
எனவே, சிட்டுக் குருவிகளை மட்டுமின்றி, அனைத்துயிர்களையும் நேசிக்கும் பழக்கத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் பறவைகள் நல ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment