Friday, July 11, 2014

குளிக்கக் குற்றாலம் இருக்குமா?


ஆயிரங்கண் போதாது வண்ணக் கிளியே குற்றால அழகை நான் காண்பதற்கு வண்ணக்கிளியே" என்பது வெறும் திரைப்படப்பாடல் மட்டுமன்று. திருக்குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடராசப்ப கவிராயர் இந்த மலையின் வளத்தை வியந்து பாடியுள்ளார். "வானரங்கள் கனி கொடுத்து..." என்னும் வரிகளோடு தொடங்கும் அந்தப் பாடல் நீர்நிலைகள், பாறையிடுக்குகளில் பொதிந்திருக்கும் தேன்கூடுகள், புள்ளினங்கள், தாவரங்கள், விலங்குகள் என மலையில் காணும் இயற்கையின் பல்லுயிர்களையும், காலந்தோறும் தொடரும் இதமான சாரலையும் அதன் எழிலையும் பாடி... திருகூடமலை எங்கள் மலையே" என்று அவர் பெருமிதம் கொள்கிறார். அவர் இயற்றிய திருக்குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம் இன்றைக்கும் அரங்கேறுகிறது.
மஞ்சள் கடம்பு, கரையான் அரிக்காத விடத்தேரை போன்ற மர வகைகளும், புலி, வரையாடு, சருகுமான் போன்ற உயிரினங்களும், அகத்திய மலை, ஐந்தலைப் பொதிகை மலைவளமும் தாமிரபரணி, நம்பியாறு, பச்சையாறு, பாம்பாற்று நீர்வளமும் ஆரல்வாய்மொழிக் கணவாயும், செம்மணல் பாலை நிலத் தேரிக்காடுகளும், நெல்லை மாவட்டத்துக்கு இயற்கை அளித்த அடையாளங்கள்.
தொலைந்த அழகு
பேரருவி, பாலருவி, ஐந்தருவி, தேனருவி, சிற்றருவி, புலியருவி, செண்பகாதேவி, அகத்தியர், குப்பாவுருட்டி என அருவிகளின் அணிவகுப்பைக் காண ஆயிரங்கண் தேவைப்பட்டதெல்லாம் அந்தக் காலம்! கண்களால் பார்க்கச் சகிக்காத அளவுக்குக் குற்றாலத்தின் அழகு இன்றைக்குக் குலைக்கப்பட்டு விட்டது.
இரவில் பெரும் வெளிச்சத்தைக் கக்கும் விளக்குகள் பொருத்தப்பட்டு இருபத்தி நான்கு மணி நேரமும் மக்கள் குளிக்கும் ஒரே இடம் குற்றாலமாகத் தான் இருக்கும். தென்மேற்குப் பருவமழைதோறும் இங்கு விழும் சாரலின் கதகதப்பு மாநிலம் கடந்தும் மக்களை ஈர்க்கிறது. தினசரி பல்லாயிரக்கணக்கில் திரளும் மக்கள் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் போன்ற எண்ணற்ற ரசாயனக் கலவையை அருவி நீரில் கரைக்கிறார்கள்.
இதனால் நீரின் இயல்புத்தன்மை சீர்கெடுகிறது. கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்குச் சுவை மிகுந்த குடிநீராய் இருந்த இந்தப் பழம்பெரும் அருவி, இப்போது சாக்கடையாய்த்தான் பாய்கிறது. பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கலங்குகிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.
ரசாயனக்கழிவு
ஆற்று நீரின் மேல்மட்டத்தில் வேதியியல் கரைசல் படிந்து ஆற்றின் ஆழத்தில் வாழும் மீன்கள், தவளைகள் போன்ற நீர்வாழ் உயிர்கள் வாழ்வதற்கான உயிர்மூச்சைத் தடை செய்கிறது. நீரின் தன்மையும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இப்படி சோப்பு நுரையில், எண்ணெய் பிசுபிசுப்பில் ஆற்று நீர் அழுக்கடைந்தது குறித்து வருந்துகிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பழைய குற்றாலத்துக்குச் சுற்றுலா வந்த மக்கள் அரப்பு, ஆவாரம்பூ, இலைகளால் செய்த குளியல் பொடி, பாசிப்பயறு மாவு என்று உடலில் பூசிக் குளித்தார்கள். அன்றைக்கு அருவியில் கரைந்த கழிவுகள் ஆற்றில் வாழ்ந்த உயிர்களுக்குக் கரிம உணவாக மாறின. இன்றைக்கு நிலைமையே வேறு. அருவியின் பக்கம் போனாலே குமட்டுகிறது என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.
நீதிமன்ற உத்தரவு
இந்தப் பின்னணியில் காடு, அருவிப் பகுதிகள், மலை சார்ந்த இடங்களிலுள்ள இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் வகையில் ‘தமிழகச் சுற்றுச்சூழல் கூருணர்வு, பாரம்பரியப் பகுதிகள் பாதுகாப்பு ஆணையம்" (Tamilnadu Authority for preservation of ECO Sensitive and Heritage Areas) என்ற அமைப்பை முதல்வர் தலைமையில் ஏற்படுத்துவதற்கான சட்ட முன்வரைவை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யத் தமிழக அரசு ஆயத்தமாக உள்ளது.
இதன் பொருட்டு நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப் பையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு 33 அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவிகளில் ஷாம்பு, சோப்பு, சீயக்காய், எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகள்
பேரருவி அருகில் பேருந்து நிலையத்தை ஒட்டியிருந்த இரண்டு ‘டாஸ்மாக்' மதுக்கடைகளும் மூடப்பட்டன. சாரல் தொடங்கும் நேரத்தில் இந்த இரண்டு கடைகளிலும் நாள் ஒன்றுக்கு ரூபாய் ஆறு லட்சத்தி லிருந்து எட்டு லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறதாம். அருவிகளில் உடைக்கப்பட்டுக் கிடக்கும் ஆயிரக் கணக்கான மதுப்புட்டிகளின் கண்ணாடி சிதறல்களில் இருந்து, இனிமேலாவது காயம் அடையாமல் இருக்கலாம் என்று மேற்கண்ட அறிவிப்புகளால் ஆறுதல் அடைகிறார்கள் அருவியில் குளிக்க வரும் பெண்கள்.
மூடப்பட்ட இரண்டு கடைகளையும் ஒரே கடையாகத் திறக்கத் தென்காசி - குற்றாலம் சாலையில் நன்னகரம் என்ற இடத்தில் கடை அமைக்க டாஸ்மாக் நிறுவனம் முயற்சிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் ‘கடை அமையும் இடத்துக்கு அருகே பள்ளியும் ஆறும் உள்ளன. கடை அமைத்தால் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் இடையூறாக இருக்குமென்று’ எதிர்ப்பு தெரிவிக்கக் குற்றாலம் பகுதி வியாபாரிகளும் கடையடைப்பு செய்தார்கள்.
முறைப்படுத்துதல்
மக்கள் திரளும் எல்லாச் சுற்றுலாத் தலங்களிலும் இத்தகைய பிரச்சினைகள் எழவே செய்கின்றன. இயந்திரத்தனமான வாழ்விலிருந்து தங்களை ஆற்றுப்படுத்திக்கொள்ள இயற்கை சூழ்ந்த இடங்களை நோக்கிப் பயணிப்பது வழக்கமாக உள்ளது. அதே நேரம் பசுமையும் பல்லுயிர் வளமும் நிறைந்த பகுதிகளை, வெறும் சுற்றுலாத் தலமாகப் பாவித்து நாசம் செய்வதை எந்தப் பண்பாட்டில் சேர்க்க முடியும்?
உண்மையாகவே குற்றால அருவியின் இயற்கை வளத்தை, தொன்மையான வரலாற்றைப் பாதுகாக்க அரசு முன்வருமானால் முதலில் சுற்றுலாவை வரை முறைப்படுத்த வேண்டும்.
கூட்டம் கூட்டமாகக் குளிப் பதைத் தவிர்த்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் குளிக்க, வரிசையில் செல்ல ஏற்பாடு செய்யலாம். மது அருந்திவிட்டுக் குளிப்பதை அனுமதிக்கக்கூடாது. குழந்தைகளை வலுக்கட்டாயமாகக் குளிப்பாட்டுவதைத் தடுக்கலாம். தடை செய்யப்பட்ட ஷாம்பு, சோப்பு, சீயக்காய், எண்ணெய் போன்ற பொருள்களின் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எக்காரணம் கொண்டும் தளர்த்தக்கூடாது. முறைப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல்துறை கண்டிப்பு குறையக் கூடாது.
‘அழுக்கு போக்கிகள்' இல்லாத குளியல்தான் நமக்கும் நல்லது, அருவிக்கும் நல்லது. உடலில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஆற்றில் வாழும் உயிரினங்களுக்குக் கேடு பயப்பதுடன் சோப்பு, ஷாம்புகளைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் ஞெகிழி (பிளாஸ்டிக்) குப்பைகளால் நீரும் நிலமும் மாசுபடாமல் இருக்கும்.
குற்றாலத்தில் குளித்து முடித்த பின் இந்த எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்க ஊர் திரும்பிய போது, கொளுத்தும் வெயிலில் வியர்வை சொட்டச்சொட்ட 'நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்' என்று விவசாயிகள் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பொருட்படுத்தாமல் சுற்றுலா வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு குற்றாலம் நோக்கி விரைந்து கொண்டிருந்தன. மௌனமாகப் பார்க்க மட்டுமே என்னால் முடிந்தது.

Thursday, June 5, 2014

கடல் மட்டம் உயர்ந்தால் தமிழகம் என்ன ஆகும்?


ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருட உலகச் சுற்றுச்சூழல் நாள் கருப்பொருள், ‘கடல் மட்டத்தை உயர்த்தாதீர்கள், குரலை உயர்த்துங்கள்' என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அறிவித்துள்ளது. அதாவது, உலக வெப்பநிலை அதிகரிப்புக்கு நாம் காரணமாக இருப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. அதனால் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு நம் குரலை உயர்த்துவோம் என்பதுதான், இதில் அடங்கியுள்ள செய்தி.
அது சரி, கடல் மட்டம் உயர்வது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
காரணம் இருக்கிறது. எதிர்காலத்தில் கடல் மட்ட உயர்வு சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகக் கடற்கரைப் பகுதியைப் பாதிக்கக்கூடும். மேற்கு வங்கத்தில் கடலை ஒட்டி அமைந்துள்ள சுந்தர வனக் காட்டுப் பகுதியில் சில தீவுகள் மூழ்கியேவிட்டன.
உயர்வு ஏன்?
உலகில் தொழிற்புரட்சி ஏற்பட்டதற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள், நிலக்கரியை அளவுக்கு மீறி எரிப்பதால் வெப்பநிலை மிகுந்து வருகிறது. தொழிற்சாலைகள் மட்டுமில்லாமல், வீடுகளில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, குளிர்பதனப் பெட்டிகள் போன்றவை கிரகிக்கும் கூடுதல் மின்சாரத்தாலும் இது நடக்கிறது. மின்சாரம் தயாரிக்கப்படும் முறை காரணமாகக் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் வெளியேறுகின்றன.
மனிதச் செயல்பாடுகளால் வெளியா கும் இத்தகைய வாயுக்களில் 50 சத வீதம் கடலில் சேமிக்கப்படுகிறது. ஆனால், கடல் கிரகிக்கும் அளவைவிட பல மடங்கு கார்பன் டை ஆக்சைடு தற்போது உற்பத்தியாகிறது. அத்துடன் வெப்பநிலை அதிகரிப்பால் தண்ணீர் வெப்பமடைந்து விரிவடைகிறது. மேலும், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேனே பூமி அளவு கடந்து வெப்பமடையவும் காரணமாக இருக்கின்றன.
கடுமையான வெப்ப அதிகரிப்பால் கடல் மட்டம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், மனித வரலாற்றில் முதன்முறையாக அண்டார்ட்டிகா, ஆர்டிக் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளும் உருகிவருகின்றன. அவை உருகிக் கடலில் சேர்வதாலும் கடல் மட்டம் கூடுதலாக உயர்கிறது. ஆண்டுக்கு 0.13 அங்குலம் அளவில் கடல் மட்டம் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது கடந்த நூற்றாண்டைவிட 2 மடங்கு அதிகம்.
மிரட்டும் பாதிப்புகள்
இவ்வாறு கடல் மட்டம் உயரும்போது, கடற்கரையைச் சார்ந்து வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து நேரிடும். மாறி வரும் பருவநிலையால் வெள்ளம், புயல் ஏற்படும்போது கடல் அருகில் உள்ள பகுதிகள் கூடுதலாக அழியும். கடல் மட்டம் உயர்ந்து அருகேயுள்ள நிலப் பகுதிகளிலும் கடல்நீர் நுழையும். அப்போது, விளைநிலங்கள் அழியும். இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படலாம். இறுதியில் மனித இனமேகூட இல்லாமல் போகலாம்.
சங்கிலித் தொடர் போன்ற இத்தகைய நிகழ்வுகள் எல்லாம் நடைபெறாமல் இருக்க, தற்போது நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை, உலக வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதுதான். அதற்காக வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற வேற்றுமை இல்லாமல் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். நாம் ஒவ்வொருவரும் இதில் பங்காற்ற வேண்டியது அவசியம். இதுவே இத்தருணத்தில் நாம் உணர வேண்டிய செய்தி.
                                    
                                            நன்றி 
                                            இந்து   

Thursday, May 1, 2014

நவீன சிந்துபாத்


மரத்திலிருந்து பல அடிகள் தள்ளி நின்று நீரூற்றிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். பெயர் அலீ மனிக்ஃபான் .
ஒடிசலான குச்சி போன்ற உடல்வாகு. புன்னகையுடன் சன்னமான குரலில் மென்தமிழில் உரையாடத் தொடங்கினார்.
பல அடி தள்ளி நின்று மரங்களுக்கு நீர் ஊற்றுவது ஏன் என்று கேட்டேன். மரங்களின் வேர்கள் இயல்பாகவே நீரைத் தேடிப் பயணிக்கக்கூடியவை. சற்றுத் தொலைவில் நீரூற்றும்போது, அதைத் தேடி அந்த வேர்கள் பரவும். அதனால் மரம் வலிமையாக நிலைகொள்ளும். ஆனால், மரத்தின் அடியிலேயே நீரை ஊற்றி அதன் தற்சார்புத் தன்மையை பலவீனப்படுத்துகிறோம் என்றார்.
வள்ளியூரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ளது கிழவனேரி கிராமம். வறண்டு பரந்த நிலத்தின் நடுவே நிற்கிறது அலீ மனிக்ஃபானின் குடில்.
அருகாமையில் கிடைக்கும் பொருட்களை வைத்து உள்ளூரின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறுதான் வீடு கட்ட வேண்டும் எனக் கூறும் அலீ மனிக்ஃபான், அதற்கேற்பக் குடிசையமைத்து வாழ்ந்துவந்தார்.
முராய்து கண்டவ்ரு அலீ மனிக்ஃபான் என்ற முழு பெயரைக் கொண்ட அலீ மனிக்ஃபான் பிறந்து வளர்ந்த இடம் மினிக்காய் தீவு. எட்டாம் வகுப்புடன் இவருடைய கல்வி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு கடல், மலை, ஆறு, குளம், குட்டைகள் இவருடைய ஆசான்களாக மாறிப் போதித்தன.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத் தில் உள்ள மத்திய அரசின் கடல்சார் மீன்வள ஆய்வு கழகத்தில் (CMFRI) 20 ஆண்டுகள் அருங்காட்சியக உதவியாளராகப் பணியாற்றியுள்ளார் அலீ மனிக்ஃபான்.
புதுமைக்கும் தேடலுக்கும் அந்தப் பணியில் இனிமேலும் வாய்ப்பில்லை என்றான பிறகு, விருப்ப ஓய்வு பெற்றார்.
இயற்கை வேளாண்மை
அப்போது இயற்கை வேளாண்மை குறித்த தனது கனவுகளை நனவாக்க நினைத்து, வள்ளியூர் அருகே 15 ஏக்கர் நிலத்தை வாங்கி ஜப்பானிய வேளாண் அறிஞர் மசனாபு ஃபுகோகாவின் DO NOTHING FARM என்ற இயற்கை வேளாண் பண்ணையை அமைத்தார். மனிதனின் இடையூறு இல்லாமல் மரங்களும் செடிகொடிகளும் எப்படி வளர்கின்றன என்பதைச் சோதித்து அறிவதற்காகவே, அதை அமைத்ததாக மனிக்ஃபான் கூறுகின்றார்.
அத்துடன் மொட்டைப் பனையில் காற்றாடிகளைப் பிணைத்துக் கார் பேட்டரி வாயிலாகத் தனது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வெட்ட வெளியிலிருந்து கறந்து கொண்டி ருந்தார்.
ஆடு தின்னும் அனைத்து இலை தழைகளையும் மனிதனும் சாப்பிடலாம் என்று கூறும் இவர், சமைப்பதே இல்லை. இலைதழைகள்தான் இவருடைய அன்றாட உணவு. நோய் வந்தால் மருந்து உட்கொள்வதில்லை. நோன்பு பிடிப்பதன் மூலமாக நோய் தீர்க்கும் உடலின் ஆற்றல் செயல்படத் தொடங்குவதாகக் கூறினார். கால் நடைகளுக்கு நோய் வந்தால் அவை உண்ண மறுக்கின்றன . நோய் சரியான பிறகே அவை மீண்டும் இரை எடுக்கத் தொடங்குகின்றன என விளக்கினார்.
நவீன சிந்துபாத்தின் இயற்கையோடு சில பரிசோதனைகள்
ஆடு தின்னும் அனைத்து இலை தழைகளையும் மனிதனும் சாப்பிடலாம் என்று கூறும் இவர், சமைப்பதே இல்லை. இலைதழைகள்தான் இவருடைய அன்றாட உணவு. நோய் வந்தால் மருந்து உட்கொள்வதில்லை. நோன்பு பிடிப்பதன் மூலமாக நோய் தீர்க்கும் உடலின் ஆற்றல் செயல்படத் தொடங்குவதாகக் கூறினார். கால் நடைகளுக்கு நோய் வந்தால் அவை உண்ண மறுக்கின்றன . நோய் சரியான பிறகே அவை மீண்டும் இரை எடுக்கத் தொடங்குகின்றன என விளக்கினார்.
இப்படிப் பணியிலி ருந்து விலகிய பிறகு, தற்சார்பு வாழ்வியலைத் தனது வாழ்நாள் பணி திட்டமாகக்கொண்டு இயங்கும் அலீ மனிக்ஃபானின் செயல் களமாக விளங்குவது அவரது சொந்த உடலும் குடும்பமும்தான்.
நவ சிந்துபாத்
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துபாத் என்ற கடலோடி கதை மாந்தன் பயணித்த கற்பனைத் தடங்களுக்கு உயிர் கொடுக்க எண்ணினார் அயர்லாந்தைச் சார்ந்த கள ஆய்வாளரும் எழுத்தாளருமான டிம் செவரின் (TIM SEVERIN ).
சிந்துபாத் பயணித்த மஸ்கட்டிலிருந்து சீனத்தின் கேன்டன் (CANTON) துறைமுகம் வரையிலான 9,655 கிலோமீட்டர் கடல் பாதையில் தன் குழுவினருடன் டிம் செவரின் பயணித்துள்ளார். இந்தப் பயணப் பட்டறிவை The Sindbad Voyage என்ற பயணக் குறிப்பு நூலாகவும் வெளியிட்டுள்ளார்.
அந்தக் கடல் பயணத்துக்கான ‘சோஹர்’ (SOHAR) என்ற பெயருடைய 27 மீட்டர் நீளமுள்ள மரக்கலத்தை 11 மாதக் கால உழைப்பில் தென்னை மட்டை, கயிறு, அயினி மரம் என்ற இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்தி வடிவமைத்து உருவாக்கியது அலீ மனிக்ஃபான் தலைமையிலான குழுதான். கப்பல் கட்டுதல் அலீ மனிக்ஃபானின் குடும்பத்தில் வாழையடி வாழையாகப் பின்பற்றப்பட்டு வரும் தொழில்.
இந்த மரக்கலம் 16-ம் நூற்றாண்டின் போர்த்துகீசிய ஆவணத்தில் காணக் கிடைக்கும் வடிவமைப்பின் அடிப்படையில் பண்டைய திவேஹி தொழில்நுட்பத்தின்படி உருவாக்கப்பட்டது. இந்தச் சோஹர் மரக்கலம், தற்போது மஸ்கட்டில் உள்ள கடல்சார் அருங்காட்சியகத்தில் உள்ளது.
கௌரவம் பெற்ற பெயர்
கடலின் மகனான அலீ மனிக்ஃபான் பல அரிய வகை மீன் இனங்களைச் சேகரித்துள்ளார். அவற்றின் உள்ளூர்ப் பெயர்களை அடையாளம் காணும் பணியில் மண்டபத்தில் உள்ள CMFRIயின் முன்னாள் இயக்குநர் டாக்டர் எஸ்.ஜோன்ஸுக்கு உதவியுள்ளார்.
அப்போது இளைஞனாக இருந்த அலீ மனிக்ஃபானின் திறமையைக் கண்டு வியந்த ஜோன்ஸ், மனிக்ஃபான் கண்டுபிடித்த புதிய வகை மீன் ஒன்றுக்கு அவருடைய நினைவாக abu def def manikfani என்ற பெயரைச் சூட்டியுள்ளார்.
அத்துடன் மண்டபம் கடல் சார் ஆய்வு நிலையத்தில் அருங்காட்சியக உதவியாளராகவும் பணியில் சேர்த்துக்கொண்டார். அதன் பிறகு தனக்கு விருப்பமான கடலையும் மீனையும் போல, தனது தேடலைப் பரந்து விரிந்ததாக ஆக்கிக்கொண்டார் மனிக்ஃபான்.
இயற்கை தந்த கொடை
கப்பல் கட்டும் கலை, தற்சார்பு வாழ்வியல், கட்டடக்கலை, மொழியியல், கல்வி, பொறியியல் தொழில்நுட்பம், கடல் உயிரியல், கடல்சார் ஆய்வு, நிலப்பரப்பியல், வானியல், வேளாண்மை, சூழலியல் போன்றவற்றில் அறிமுகமும் ஆழமும் மனிக்ஃபானுக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அது இயற்கை அளித்த கொடை என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்லமுடியும்?
இயற்கையை உறவாடுபவர்களுக்கு அது பன்மடங்காகத் திரும்பக் கையளிக்கும் வள்ளல் தன்மை வாய்ந்தது என்பதற்கு அலீ மனிக்ஃபானின் வாழ்க்கை ஒரு சாட்சி.
அலீ மனிக்ஃபானின் வாழ்க்கையை The man in million என்ற பெயரில் கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் மஜித் அழிக்கோடு ஆவணப்படமாக இயக்கியுள்ளார்.
நானும் நண்பர்களும் வள்ளியூரில் உள்ள அவரது இயற்கை பண்ணையில் கண்ட காட்சிகள் எல்லாம் 1993-ம் ஆண்டு காலப்பகுதியைச் சேர்ந்தவை. இன்று அவர் கட்டிய வீடு இல்லை. அலீ மனிக்ஃபான் கேரளத்துக்குச் சென்றுவிட்டார்.
எல்லாமே பரிசோதனை
“நீங்கள் நடந்து வந்த பாதையில், ஏன் பிறரைப் பயிற்றுவிக்கவில்லை?” என்று கேட்டபோது, “நான் செய்துகொண்டிருக்கும் விஷயங்களை யாரையும் ஏற்றுக்கொள்ளும்படி செய்ய விரும்பவில்லை. இது ஒரு பரிசோதனை மட்டுமே” என்றார்.
அன்றாடம் விரியும் மலரைப்போல, காலைக் கதிரவனைப்போல வாழ்க்கையானது ஒவ்வொரு நாளும் நிறைந்த அழகுடனும் நம்பிக்கைகளுடனும் மலர்கிறது.
அனைத்தையும் ஒரே மூட்டையில் அள்ளி முடிந்திட வேண்டும் என்ற நுகர்வுவெறியும் அது சார்ந்த நமது வாழ்க்கை ஓட்டமும், அந்த நம்பிக்கைப் புலரியைக் காண முடியாமல் செய்யும் கருந்திரையாக மறைத்துக் கொண்டிருக்கின்றன.
அலீ மனிக்ஃபானின் பரிசோதனைகள் நடைமுறைப்படுத்தப்படும் இடத்தில், அந்தக் கருந்திரைகள் கிழித்து எறியப்பட்டுக் கிடக்கின்றன. இயற்கையையும் அதன் வளங்களையும் பணத்தாள்களில் அளவிடும் நமது மதிப்பீட்டு முறைக்குள் அடங்க மறுக்கின்றன.
                                        நன்றி 
                                             தி இந்து 

மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் காக்க யோசனைகள்

ஒரு கதை உண்டு. ஒரு தம்பதி புதிதாக ஒரு வீட்டுக்குக் குடிபெயர்ந்தனர். ஜன்னல் வழியாகப் பக்கத்து வீட்டில் காயப்போட்டிருந்த துணிகளைப் பார்த்த மனைவி, "பக்கத்து வீட்டுக்காரிக்குத் துணிகளைச் சரியாகத் துவைக்கத் தெரியவில்லை. அழுக்கைச் சரியாக நீக்காமலேயே துவைத்திருக்கிறாள்’’ என்றாள். தினமும் அவள் இப்படி அடுத்த வீட்டில் உலரும் துணியைப் பார்ப்பதும், இப்படி விமர்சனம் செய்வதுமாகச் சில நாட்கள் கழிந்தன.
பிறகு ஒரு நாள் வழக்கம் போல, பக்கத்து வீட்டில் காயப் போட்டிருந்த துணிகளைப் பார்த்த அந்த இளம் மனைவிக்குப் பெரும் வியப்பு. “அ டடா, இன்று அந்தத் துணிகள் ரொம்ப சுத்தமாக இருக்கின்றன. இப்போதுதான் அவள் துவைப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டிருக்கிறாள்’’ என்றாள். அதற்கு அவள் கணவன் சொன்னது இதுதான்: “இன்று காலை முதன்முறையாக நம் வீட்டு ஜன்னலைத் துடைத்துச் சுத்தப்படுத்தினேன்’’.
பிறரை விமர்சிப்பதற்கு முன்னால், நம்மைப் பற்றி யோசிப்பது நல்லது என்பதை உணர்த்தும் கதை இது. அடுத்து நாம் பேசப் போகும் விஷயங்களுக்கும் இந்தக் கதைக்கும் தொடர்பிருக்கிறது. மின்சாரச் சேமிப்புக்கும் இந்தக் கதைக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்க முடியும்?
பகலில் டியூப்லைட்?
பலரும் பகலில்கூட வீட்டுக்குள் ஓரிரு அறைகளிலாவது டியூப்லைட்டைப் போட்டு வைப்பது உண்டு. வெளியே சூரியன் சுள்ளென்று காய்ந்துகொண்டிருக்கும். கேட்டால் “அறைக்குள் போதிய வெளிச்சம் இல்லையே. என்ன செய்வது?’’ என்பார்கள்.
வீட்டைக் கட்டும்போதே எல்லா அறைகளிலும் சூரிய ஒளி நுழையும் விதத்தில் கட்டப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். போதுமான அளவு ஜன்னல்களை அமையுங்கள். அவை சரியான கோணத்தில் அமைந்திருந்தால் வெளிச்சம் மட்டுமல்ல, காற்றும் சீராக வரும். அதன்மூலம் மின்விசிறிக் கட்டணத்தையும் குறைக்க முடியும், தென்றல் காற்றையும் சுகமாக அனுபவிக்க முடியும். ஏற்கெனவே கட்டிய கட்டடம் என்றாலும்கூட, அதிக இயற்கை வெளிச்சம் அறைக்குள் பாயும் வகையில் சில மாற்றங்களைச் செய்யலாம். கட்டட இன்ஜினீயரிடம் ஆலோசனை பெறுங்கள்.
ஜன்னல் சுத்தம்
ஜன்னல் கண்ணாடிகளின்மீது படியும் தூசியை அடிக்கடி துடைத்துச் சுத்தம் செய்யுங்கள். இல்லையென்றால் முழு வெளிச்சத்தையும் அறைக்குள் செல்ல விடாமல், ஜன்னலில் உள்ள தூசிப் படலம் தடுக்கும்.
அதுமட்டுமல்ல, ஜன்னலில் எந்த வகையான கண்ணாடி பொருத்தப்பட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துங்கள். வண்ணக் கண்ணாடிகள், அடர்த்தியான மங்கலான வெள்ளைக் கண்ணாடிகள் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். தெளிவான கண்ணாடிகள் அதிக வெளிச்சத்தை உள்ளே அனுப்பும். மாலை 5.00 மணிக்கே விளக்குகளைப் போட வேண்டிய நிலையை, இது தவிர்க்கும்.
எந்தப் பெயின்ட்?
பெயின்டின் நிறம்கூட மின் கட்டணத்தை அதிகப்படுத்தும் அல்லது குறைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.
அழுத்தமான வண்ணங்களைச் சுவர்களுக்கு அடித்தால், தங்கள் மீது படும் ஒளியில் கணிசமான பகுதியை அவையே விழுங்கிக்கொண்டுவிடும். வெளிர்நிற வண்ணம் என்றால், அது வெளிச்சத்தை அதிகம் பிரதிபலிக்கும். எனவே, வெளிர்நிற வண்ணம் அடிக்கப்பட்ட சுவர்களைக்கொண்ட அறைக்கு, குறைவான மின்சக்தி கொண்ட பல்பே போதுமானதாக இருக்கும்.
மின்விசிறிகள்
மின்விசிறி தொடர்பாக எல்லோருக்கும் எழும் சந்தேகம் இது. மின்விசிறியின் வேகத்தைக் குறைத்தால், மின்சாரம் குறைவாகச் செலவாகுமா என்பதுதான். முன்பு புழக்கத்தில் அதிகமாக இருந்த ரெகுலேட்டர்களைப் பயன்படுத்தினால் (1,2,3,4,5, ON/OFF என்று எழுதப்பட்டிருக்குமே அந்த வகை) மின்விசிறியை எவ்வளவு வேகமாகச் சுழலவிட்டாலும், ஒரே அளவு மின்சாரம்தான் செலவழியும். இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களைப் பொறுத்தவரையில், மின்விசிறியின் வேகத்துக்குத் தகுந்த மாதிரிதான் மின்சாரமும் செலவழியும். எலெக்ட்ரீஷியன் ஒருவர் தந்த தகவல் இது. எனவே, தேவைப்படும் அளவுக்கான வேகத்தில் மட்டுமே மின்விசிறியைச் சுழலவிடுவோம்.
நமது பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் மாற்றி கொள்ள வேண்டும். ஓர் அறைக்குள் நுழையும்போதே அங்குள்ள லைட், ஃபேன் ஆகிய இரண்டு சுவிட்சுகளையுமே ஆன் செய்யும் வழக்கம் பலருக்கு உண்டு. இதைத் தவிர்க்க வேண்டும். போதிய காற்றோட்டம் இருக்கும்போது, மின்விசிறி எதற்காகச் சுற்ற வேண்டும்? தவிர ஏ.சி. வேலை செய்யும்போது, மின்விசிறி அவசியமா?
அறையை விட்டு வெளியேறும்போது மின் சாதனங்களை ஆஃப் செய்ய வேண்டும் என்பதில் கட்டாயம் கவனம் செலுத்துங்கள்.
தேவை கவனம்
எந்த வகை மின்சாதனங்கள் அதிக மின்சாரத்தைச் செலவழிக்குமோ, அவற்றின்மீது அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு நம் வீட்டிலுள்ள எல்லா மின்சாதனங்களும் இயங்குகின்றன என்று வைத்துக் கொள்வோம். அப்போது டியூப்லைட்டைவிட, குமிழ் பல்பு அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.
வழக்கமான குமிழ் பல்புகளைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக சி.எஃப்.எல் பல்புகள் நீடித்து உழைக்கின்றன. குறைந்த மின்சக்தியில் அதிக ஒளியைத் தருகின்றன. இப்போது எல்.இ.டி. விளக்குகளும்கூட குறைந்த மின் செலவில் பிரகாசமான வெளிச்சத்தைத் தருகின்றன. சிறிதளவு கூடுதல் பணத்தைச் செலவழித்தால், நீண்ட நாளைக்குப் பயன்தரும் இந்த விளக்குகளை வாங்கிவிடலாம்.
சி.எஃப்.எல் விளக்கைவிட மின்விசிறிக்குக் கொஞ்சம் அதிக மின்சாரம் தேவைப்படும். டி.வி. செட்டுக்கு இன்னும் அதிகம். ஃபிரிட்ஜ் மேலும் அதிக மின்சாரத்தைச் செலவழிக்கும். ஏ.சி., கீஸர் ஆகியவற்றுக்கு உச்சகட்ட மின்சாரம் அவசியம்.
அறைக்கு ஏற்ற ஏ.சி. மாடலைத் தேர்ந்தெடுங்கள். தானாக டீஃப்ராஸ்ட் ஆகும் ஃபிரிட்ஜ்களுக்கு அதிக மின்சாரம் தேவைப்படும். அடிக்கடி ஃபிரிட்ஜின் கதவைத் திறந்து மூடுவதால், வெப்பக் காற்று உள்ளே நுழையும். பொருள்களைக் குளிர்நிலையில் வைத்திருக்க அதிக மின்சாரம் தேவைப்படும்.
கூடுதல் புரிதலுக்கு...
மின்சாதனங்களை வாங்கும்போது அவற்றைப் பராமரிப்பது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு சிறு கையேட்டைக் கொடுப்பார்கள். பலரும் அதைப் பிரித்துப் பார்ப்பதுகூட இல்லை. அந்த வழிமுறைகளின்படி பராமரிக்கப்பட்டால், மின் செலவை நிறைய குறைக்க முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டில் மின் இணைப்பு நன்றாக இருக்க வேண்டும். தரமற்ற ஒயர்கள், அல்லது மின் பாகங்கள் போன்றவற்றால் ஆபத்து அதிகம் என்பதுடன், மின் செலவும் அதிகமாக வாய்ப்பு உண்டு.
வீட்டிலுள்ள எல்லா மின் சுவிட்சுகளையும் ஆஃப் செய்துவிட்டு மின்சார மீட்டரைக் கொஞ்ச நேரம் கவனியுங்கள். அதிலுள்ள சக்கரம் அப்போதும் மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்தால், வீட்டில் எங்கோ மின்சாரம் கசிகிறது என்று அர்த்தம். அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பக்கத்துப் போர்ஷன்காரரோ, பக்கத்து வீட்டுக்காரரோ உங்கள் மின் இணைப்பிலிருந்து தன் வீட்டுக்குக் கனெக் ஷன் கொடுத்திருக்கிறார் என்று அர்த்தம். கவனித்துச் சரி செய்துகொள்ளுங்கள்.
இப்படி வீட்டைக் கட்டும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலும், வீட்டில் குடிபுகுந்த பின்பு கூடுதலாகச் சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலும் மின்சாரத்தைச் சேமித்து நாட்டுக்கு உதவலாம். மின் கட்டணத்தைக் குறைத்து நம்முடைய பட்ஜெட்டையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
                                         நன்றி 
                                        தி இந்து   

Monday, April 28, 2014

சூழலியல் மாசு: வேதி நச்சுகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியுமா?



நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தாய்மார்களின் உடல்கள், ஏற்கெனவே வேதிக் குப்பைக்கூடைகளாகிவிட்டன. தாயின் உடலை அடைந்த வேதி நச்சுகள் தொப்புள் கொடி வழியாகத் தாய் சுமக்கும் கருவையும் சென்று சேர்கின்றன. இந்த நிலையில் நம் தாய்மார்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும்போதே உடலில் தங்கிய நஞ்சுடனே அவர்கள் பிறக்கிறார்கள். தாயின் தொப்புள்கொடி, தாய் வயிற்றில் குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குடம் போன்றவை வேதி நஞ்சுகளால் நிறைந்துள்ளதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.
தொழில்மயமாக்கத்தாலும் நுகர்வு கலாச்சாரத்தாலும் சூழல் சீர்கேடு அடைந்துள்ள நகர்ப்புறங்களில் பிறக்கும் குழந்தைகள் கிராமப்புறக் குழந்தைகளைவிட அதிகமான வேதித் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இன்று நகர்ப்புறக் குழந்தைகளில் மூளை வளர்ச்சி பாதிப்பு, ஆட்டிசம், பலவகைக் கற்றல் குறைபாடுகள் போன்றவை பரவலாகக் காணப்படுகின்றன. சுற்றுச்சூழலில் இருந்தும் தாயின் உடலில் இருந்தும் இக்குழந்தைகளை அடையும் தொழிற்சாலை மாசுகள், இப்பிரச்சினைகளுக்குக் கூடுதல் காரணமாக இருக்குமா எனச் சிந்திக்க வேண்டியுள்ளது.
வாழ்க்கைக்கு ஓர் அன்பளிப்பு
நெதர்லாந்தில் கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பும், உலகளாவிய இயற்கை நிதியம் (டபிள்யு.டபிள்யு.எஃப்.) பிரிட்டன் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் குழந்தைப் பருவத்தில் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் கடுமையானது என்பது தெரியவந்துள்ளது. ‘வாழ்க்கைக்கு ஓர் அன்பளிப்பு’ என்ற பெயரில் 2005-ல் வெளிவந்த அந்த அறிக்கை, இப்படிப்பட்ட வேதிப்பொருட்களின் உற்பத்தியையும் விற்பனையையும் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
மேற்கண்ட ஆய்வில் 35 வேதிப் பொருட்கள் பட்டியலிடப்பட்டு, இதில் எத்தனை வேதிப்பொருட்கள் தொப்புள்கொடி ரத்தத்தில் உள்ளன என்று பரிசோதிக்கப்பட்டது. அனைத்துத் தொப்புள்கொடி ரத்த மாதிரிகளிலும் குறைந்தபட்சம் 5 முதல் 14 வேதிப்பொருட்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவற்றில் டெஃப்லான் போன்ற ஒட்டாத வேதிப்பொருட்கள், தீ தடுப்பான்கள், நறுமண வேதிப்பொருள்கள், பால்நிலையை பிறழ்த்தும் வேதிப்பொருட்கள். அழகுசாதனப் பொருட்களில் பயன்படும் வேதிப்பொருட்கள், நெகிழி வேதிகள், நீர்புகாப் பூச்சுக்குப் பயன்படும் வேதிப்பொருட்கள் போன்றவை அடங்கும்.
அச்சுறுத்தும் வேதிமாசுகள்
மேற்கண்ட வேதிப்பொருட்களில் நச்சுத்தன்மை உடைய ஆல்கைல் ஃபீனால்கள், டிரைகுளோசான், செயற்கை கஸ்தூரிகள், பெர்ஃபுளோரினேற்ற சேர்மங்கள், தாலேட்டுகள், டி.டி.ட்டி போன்ற சேர்மங்களும் அடங்கும். நாம் பயன்படுத்தும் நெகிழிகள், டிடர்ஜென்டுகள், தூய்மைப்படுத்தும் பொருட்கள், வேளாண் களைக்கொல்லிகள், பற்பசை, குளியல் சோப்புகள், அழகு சாதனப் பொருட்கள், துணிகள், பொம்மைகள், வினைல் தரை, மின் கேபிள்கள் போன்றவற்றின் தயாரிப்பில் இவை பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இவற்றை நாம் பயன்படுத்துவதன் மூலம், அவற்றிலுள்ள நச்சுகள் நம்மை வந்தடைகின்றன.
இவற்றில் ஆல்கைல் ஃபீனால்கள் பாலியல் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடும். டிரைகுளோசான், ‘சூடோமோனஸ் எருஜினோசா’ என்னும் மருந்து, எதிர்ப்புத்தன்மையை உருவாக்கி நோயாளிக்கு மருத்துவமனைத் தொற்றுகளை ஏற்படுத்தி உயிரைப் பறிக்கக்கூடியது. செயற்கை கஸ்தூரிகள் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை. பெர்ஃபுளோரினேற்ற சேர்மங்கள் நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தைப் பாதிக்கக்கூடியவை. தாலேட்டுகள் ஆண் குழந்தைகளில் விந்து பாதிப்பையும், பெண் குழந்தைகளில் முன்கூட்டியே மார்பக வளர்ச்சிப் பிரச்சினையையும் உண்டுபண்ணுகின்றன. டி.டி.ட்டி. புற்று நோயையும், இனப்பெருக்கக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.
ஆய்வில்லை, தடையுமில்லை
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் செயற்கை வேதிப்பொருட்களால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட ஆய்வு முடிவுகள் ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் உரத்த குரலுக்குக் கட்டுப் பட்டு, அங்குள்ள அரசுகள் சில ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கின்றன.
ஆனால், நம் நாட்டில் முறையான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. சுற்றுச்சூழல் இயக்கங்களும் இன்னும் வலுப்பெறவில்லை. பாதிப்புகள் இங்கு மேலும் ஆழமானதாக இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் என ஊகிக்கலாம். இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் எதிர்காலத்தில் நம் குழந்தைகளின் வாழ்வு கவலைக்குரியது தான்.
‘விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்’ என்ற பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளை இதற்கும் பொருத்திப் பார்த்து எதிர்காலச் சந்ததியினரை வேதிக் குப்பைத்தொட்டிகளாக உருவாக்கும் மாசடைந்த சுற்றுச்சூழல் அமைப்பை மாற்ற, நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்.

Friday, April 25, 2014

உலகப் புவி நாள்


பூமியின் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் சுற்றுச்சூழல் சார்ந்த சரியான புரிதலையும் உருவாக்கும் வகையில் உலகப் புவி நாள் (World Earth day), ஏப்ரல் 22-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
1969-ம் ஆண்டில் அமெரிக்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான எண்ணெய் சிதறலுக்குப் பிறகு அமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன், சாண்டா பார்பராவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கே எண்ணெய் சிதறலை நேரில் கண்ட பிறகு, மனம் கொதிப்படைந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அவர் திரும்பினார். அதற்குப் பிறகு ஏப்ரல் 22-ம் தேதியைத் தேசியச் சுற்றுச்சூழல் நாளாக அறிவிக்கும் மசோதாவை அவர் சமர்ப்பித்தார். 1970 முதல் அமெரிக்காவில் அது அனுசரிக்கப்பட்டது.
நவீன சுற்றுச்சூழல் போராட் டத்தின் தொடக்கம் என்று இந்த நாளைக் கூறலாம். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் இருக்கும்.
யுனெஸ்கோ அங்கீகாரம்
இதைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் பற்றிய யுனெஸ்கோ மாநாட்டில் ‘எர்த் டே' எனப்படும் புவி நாளைக் கொண்டாடுவது பற்றி அமைதிக்காகப் போராடிய ஜான் மெக்கோநெல் அறிவித்தார். 1972-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் புவி நாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் தொடர்கின்றன.
1990-ம் ஆண்டு புவி நாளன்று 141 நாடுகளில் 20 கோடி மக்களைத் திரட்டிச் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை உலகறியச் செய்ததன் மூலம், மறுசுழற்சி முயற்சிகளுக்கு மிகப் பெரிய உத்வேகம் கிடைத்தது. அத்துடன் 1992-ம் ஆண்டு ரியோடி ஜெனிரோவில் ஐக்கிய நாடுகள் சபை, பூமி குறித்து விவாதிப்பதற்காக நடத்திய உலகளாவிய மாநாட்டுக்கும் இந்த முயற்சி அடிப்படையாக அமைந்தது.
பசுமை நகரங்கள்
2014 புவி நாளின் கருப் பொருள்: பசுமை நகரங்கள் (Green Cities). உலகில் நகரங்களே பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாக இருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பால் அதிக மக்கள் அவதியுறுவதும் நகரங்களில்தான். எனவே, நகரங்களைக் கூடுமானவரை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும், அதற்கு சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வழிமுறை களைப் பின்பற்ற வேண்டு மென இந்தப் புவி நாள் வலியுறுத்துகிறது. நாமும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நடைமுறைகளைக் கடைபிடிக்க ஆரம்பிக்கலாமே!

உணவுச் சங்கிலி


கூட்டிலிருந்து ஒரு குருவிக் குஞ்சு கீழே விழுந்து கிடக்கிறது. நீங்கள் அதைப் பார்த்துவிடுகிறீர்கள். அப்போது ஒரு பருந்து அந்தக் குஞ்சைக் கொத்திச் செல்வதற்காக மேலிருந்து கீழ்நோக்கி இறங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு பாம்பும்கூட அந்தக் குஞ்சைப் பிடித்துச் செல்ல வருகிறது. இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
பருந்தையும் பாம்பையும் துரத்திவிட்டுவிட்டுக் குருவிக் குஞ்சை எடுத்து, அதன் கூட்டைத் தேடி அதில் விடுவதா? அல்லது உங்கள் வீட்டுக்கு எடுத்து வந்து வளர்ப்பதா? அல்லது விலங்குகள் நலச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களை வந்து எடுத்துப்போகச் சொல்வதா? அல்லது அந்தக் குஞ்சை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுவதா? எது சரியான செயல்?
அந்தக் குஞ்சை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுவதுதான் சரி. இதென்ன கொஞ்சம்கூட இரக்கமில்லாத முறையாக இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அதுதான் சரி. இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். பருந்தும் பாம்பும் அந்தக் குஞ்சைத் தின்னக் கூடாது என்று நீங்கள் நினைத்தால், அப்புறம் பருந்தும் பாம்பும் எப்படி உயிர்வாழ்வதாம்? இயற்கையில் உள்ள உணவுச் சங்கிலியே ஒன்றை ஒன்று இரையாக்கிக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது.
பூச்சியைத் தவளை தின்கிறது, தவளையைப் பாம்பு தின்கிறது, பருந்தை ஆந்தை தின்கிறது. இப்படித்தான் இருக்கும் உணவுச் சங்கிலி. அதை இடையூறு செய்தால் மொத்த உணவுச் சங்கிலியும் பாதிக்கப்படும். இயற்கையில் எங்கே கைவைத்தாலும் ஏதாவதொரு இடத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிடும். அவ்வளவு நுண்மையான சமநிலையில்தான் இயற்கை அமைந்திருக்கிறது.
இருந்தாலும் அந்தக் குஞ்சு பாவமல்லவா? அதை அதன் கூட்டிலாவது கொண்டுபோய் சேர்க்கலாமல்லவா? இல்லை, பெரும்பாலும் அந்தக் குஞ்சைத் தாய்ப்பறவை தன் கூட்டில் சேர்க்காது. சரி, நம் வீட்டிலாவது கொண்டுவந்து வளர்க்கலாமல்லவா? எப்படி வளர்ப்பீர்கள்? நம் வீட்டு நாய்க்குட்டியை வளர்ப்பது போலவா? அல்லது கூண்டுக்கிளியை வளர்ப்பது போலவா?
பறப்பதற்காகப் பிறந்த ஒரு பறவையை நம் வீட்டில் கொண்டுவந்து வளர்ப்பது எந்த விதத்தில் நியாயம்? அது மட்டுமல்லாமல் அதன் உணவுப் பழக்கமும் பிற பழக்கங்களும் எதுவும் நமக்குத் தெரியாது. இதற்குப் பேசாமல் அந்தக் குஞ்சை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது.
பறவைகளின் மேல் நமக்கு உண்மையில் இரக்கம் இருந்தால், அவை வாழ்வதற்கு ஏற்ற சூழலை நாம் உருவாக்கித்தர வேண்டும். பறவைகள் வாழ்வதற்கேற்ற சூழல்தான் நாம் வாழ்வதற்கேற்ற சூழல் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். காடுகளை அழிக்காமல் இருக்க வேண்டும். பூச்சி மருந்துகள், செயற்கை உரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மருந்துகளும் உரங்களும் நீரிலும் மண்ணிலும் கலக்கும்போது தீமைசெய்யும் ஒரு சில பூச்சிகளோடு நன்மை செய்யும் எண்ணற்ற பூச்சிகளும் அழிந்துவிடுகின்றன. இரைக்காகப் பூச்சிகளை நம்பியிருக்கும் பெரும்பாலான பறவைகளுக்கான இரையும் அழிந்துபோய்விடுகிறது.
இல்லையென்றால் பூச்சி மருந்தினால் பாதி உயிரோடு இருக்கும் பூச்சிகளை உண்டு பறவைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டால் அந்த இனமே, அத்தோடு அழிந்துவிடும். எனவேதான் பறவைகளைக் காப்பாற்ற வேண்டும் என்றால், அதன் மூலம் நம் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும் என்றால், நமக்கு இரக்கம் மட்டும் போதாது. சரியான அக்கறையும் அறிவும் வேண்டும். 

Monday, April 21, 2014

காட்டுப்புறாவும் கொண்டைக்குருவியும்

நான் சிறுவனாயிருக் கையில் காலை ஐந்து மணியளவில் ‘கி கோ கீ’ என்று இனிமையாய்ப் பாடும் கரிச்சான் என்ற கரிக்குருவியே என்னைப் படுக்கையை விட்டெழுப்பும். நான் சிற்றூரில் பிறந்தவன். மரஞ் செடிகளோடும், விலங்குகளோடும், பறவைகளோடும் சேர்ந்தே வளர்ந்தேன்.
வீட்டில் கோழிகள், மரங்களில் காக்கைகள், வானத்தில் சிட்டுக்குருவிகள், தோட்டத்தில் தேன்சிட்டுகள், தெருவோரம் கூட்டமாய்ப் பூணில்கள் (கல்லுக் குருவிகள் - தவிட்டுக் குருவிகள்), தாய்க் கோழிகளின் பின்னே திரியும் குஞ்சுகளைக் குறிவைத்துச் செம்பருந்தும் கரும்பருந்தும் வானத்தில் வட்டமிடும். புளியந்தோப்பில் காட்டுப்புறாவும் கொண்டைக்குருவியும் (Bul bul) கூடுகட்டி வாழும்.
எலுமிச்சை மரங்களின் அடியில் இருண்ட நிழலில் பதுங்கிப் பதுங்கி நடக்கும் செம்போத்து (Crow pheasant), எனக்கு மிகவும் பிடித்த பறவை. அது காக்கை போன்றஅலகும் சிறகுகளுக்கு செம்பழுப்பு வர்ணமும் பூசிக்கொண்டது போலிருக்கும்.
கொய்யா மரத்திலும் கோவைக் கொடியிலும் பச்சைக்கிளிகள் கீச்சிட்டுக் கொண்டிருக்கும். பனை மரப் பொந்திலிருந்து நீல நிறப் பனங்காடை (Indian Roller) கரகர குரலில் கத்தும். சித்திரை பிறந்தால் மாமரத்திலிருந்து குயில்கள் மாறி மாறிக் கூவும். மழைக்காலத்தில் தெருவோரக் குட்டைக்கு மீன்கொத்திகள் வந்து வந்து போகும்.
வயலில் மொச்சைத் தழைகளுக்கு அடியில் புகுந்து குடுகுடு காடை (குறும்பூழ் - Quail) ஓடும். காட்டுப் புதரில் கௌதாரி பதுங்கியிருக்கும்.
இரவில் வீட்டைச் சுற்றிச் சிற்றாந்தைகள் கத்தும். மரத்திலிருந்து கூகை (Barn owl) குழறும். வட்ட முகமும் துருத்தும் கருங்கண்களும்கொண்ட இக்கூகை பொந்தில் பதுங்கியிருந்து ஆளை விழுங்குவது போல் பார்க்கும். இரவு நிலா வெளிச்சத்தில் வௌவால்கள் பறக்கும். கொக்குகள் பூமாலை போல் வரிசைபிடித்து வலசை போகும்.
பொருநை கரை
எட்டாம் வகுப்புவரை எங்கள் சொந்த ஊர். பின் உயர்நிலை பள்ளிப் படிப்பு பொருநை கரையில் இருக்கும் கோபாலசமுத்திரம் என்ற ஊரில் தொடர்ந்தது. அழகான ஆறும் அதன் கரையும் பறவைகளின் புகலிடங்களாகத் திகழ்ந்தன. ஆற்றின் வடகரையில் மிகப் பெரிய மாமரம். மாலை மயங்கும் வேளை ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து அதில் அடையும். அப்பொழுது அவை எழுப்பும் குரல்களைக் கேட்க வேண்டுமே! ஒரே இசையரங்குதான்!
மேற்கில் சென்றால் அணைக்கரை ஓரம் வானுயர ஓங்கிய மருத மரங்கள் வரிசையாய் நிற்கும். தொலைவிலிருந்து பார்த்தால் மரங்களில் நூற்றுக்கணக்கான வெள்ளைப் பூக்கள் பூத்துக் குலுங்குவது போலிருக்கும். கிட்டப் போனால் அத்தனையும் வெண் கொக்குகள்!
கரும்பறவைகள்
அன்றில் பறவை பற்றி தமிழி லக்கியம் பல இடங்களில் பேசுகின்றது. அது கரு நிறமானது; தலையில் சிவந்த கொண்டையும், வளைந்த கூர் அலகும் உடையது. ஆணும் பெண்ணும் பிரியாமல் எப்பொழுதும் ஒன்றாகவே வாழுமாம். பிரியாமல் வாழும் காதலர்களுக்குப் புலவர்கள் அன்றில் இணையினை உவமையாகக் கூறுவார்கள். பாட்டில் படித்திருந்தேனேயன்றி, இவற்றை நேரில் பார்த்ததில்லை.
ஆனால், ஒருநாள் ஆற்றங்கரையில் புதுமையான இரண்டு கரும்பறவைகளை ஒன்றாகப் பார்த்தபொழுது, அவற்றின் சிவந்த உச்சிக் கொண்டையும் வளைந்து நீண்ட கூர்அலகும் அவையே அன்றில்கள் என்று பறைசாற்றின. பின்பு பறவை நூல் ஒன்றில் Black Ibis என்ற பறவையின் படத்தைப் பார்த்தேன். நான் பார்த்த ஆற்றங்கரைப் பறவையை அதில் கண்டேன். மேலும் விளக்கம் தேடியபொழுது Black Ibis என்பதே அன்றில் என்பது உறுதியாயிற்று.
செங்கால்கள்
திருவனந்தபுரம் உயிர்க்காட்சிச் சாலையில் ஒரு நாரையைப் பார்த்தேன். மெய்சிலிர்த்தது. பெரு மகிழ்ச்சியில் ஆழ்ந்தேன்.
‘பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன 
பவளக் கூர்வாய் செங்கால் நாரை’
- என்று சத்திமுற்றப் புலவர் பாட்டொன்றில் வருணித்த, அதே செங்கால் நாரையை அணுவும் பிறழாமல், அதே தோற்றத்தில் அங்கு கண்டேன். அதன் அலகு பிளந்துவைத்த பனங்கிழங்கு என்றால், பனங்கிழங்கேதான்!
புதுவை ஏரி
பிற்காலத்தில் நான் புதுவை நகர் வாழ்பவன் ஆகிவிட்ட பிறகு, புதுவையின் புகழ்பெற்ற ஊசுட்டேரி என் பறவை ஆர்வத்தை வளர்த்தது. நானும் என் நண்பர் சிவ. கணபதியும் முப்பது ஆண்டுகட்கு முன்பே, பறவைகளை நோக்குவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தோம். கையில் தொலைநோக்கிகளுடன் (Binocular) பலமுறை பறவைகளை நோக்க ஊசுட்டேரிக்குச் சென்றிருக்கின்றோம். கரையோரத்திலும், நீர் நடுவிலும் எத்தனை வகையான நீர்ப்பறவைகள்!
நாங்கள் பார்த்து மகிழ்ந்தவை சிறுகொக்குகள், பெருங்கொக்குகள், உண்ணிக் கொக்குள் (Cattle egret), வாத்துகள், இறகிகள், நீர்க் காக்கைகள், முக்குளிப்பான்கள், கருநாரைகள், கூழைக்கடாக்கள் (Pelican), பல வகை மீன்கொத்திகள்.
வேதாரணியம் நீர்நிலைகளில் மிகுதியாய் வாழும் பூநாரைகள் (Flamingos) நான்கை ஒரு முறை ஊசுட்டேரியில் பார்த்தோம். ஆனால், சில நாள்களில் அவை அங்கிருந்து போய்விட்டன.
ஏரிக்கரைகளில் மட்டுமல்லாது சுற்றுப்புற நிலங்களிலும் நாங்கள் சுற்றித் திரிந்தோம். அங்கே அழகிய செம்மூக்கு ஆட்காட்டிப் பறவைகள் (Redwatted lapwing) ‘டிடிட் டிடிட் யூ' என்று தமக்கே உரிய முறையில் குரலை எழுப்பிப் பறந்தன. பலவகையான உப்புக்கொத்திப் பறவைகள் (Plovers) ஓடித் திரிந்தன.
தேங்கிய குட்டை
பறவைகளின் வாழ்வை ஆராய்வ தற்காகப் பிரான்சிலிருந்து வந்திருந்த இளைஞர் ஒருவரை ஒருமுறை ஊசுட்டேரியில் கண்டோம். பிரான்சில் இயற்கைச் சூழல் முற்றும் அழிந்து போயிற்றதென்றும், அங்கு அழிந்துபோன பறவையினங்களை ஊசுட்டேரியில் பார்க்க முடிகிற தென்றும் மகிழ்ச்சியோடு கூறினார்.
ஆனால், அந்த அழகிய ஏரி இன்று தேக்கமுற்றுப்போன பெருங் கழிவு நீர்க் குட்டையாகக் காட்சி அளிக்கின்றது. பருவகாலங்களில் வெளியிருந்து வரும் பறவைகள், இப்போது வருவதில்லை.
ஏரியால் பாசனம் பெற்ற விளைநிலங்களை வளர்ச்சி, முன்னேற்றம் என்ற போர்வையில் முதலாளிக் கும்பல் முற்றும் அழித்துக் குடியிருப்புகளைக் கட்டமைத்துக்கொண்டன.
பொழுதுபோக்குப் பூங்கா, அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் நச்சுப்புகையும், கழிவுகளும், மாசும் இயற்கை சூழலை அழித்த பின் எந்தப் பறவைதான் அங்கு வரும்?
                                                     நன்றி 
                                   ம.இலெ. தங்கப்பா, எழுத்தாளர், இயற்கை ஆர்வலர்

Friday, February 21, 2014

மனிதன் என்னும் ஓர் விலங்கினம் 4

எங்க ஊர்ல சாயந்தரம் ஆகிட்டா போதும் விளையாட்டு கலைகட்டும் பசங்கதான் அதிகம் இருப்போம் பொண்ணுங்க கம்மிதான் விளையாட்டுனு பார்த்தா எல்லோரும் ஒன்னாதான் விளையாடுவோம் கபடி கில்லி தண்டு சேனசெட்டியாரு நொன்டி எட்டாள் தொட்டு கள்ளென்போலீசு ஐஸ்1 எரிபந்து கண்கட்டி இன்னும் நிரைய இருக்கு இதெல்லாம் விளையாடுறத பார்த்து 20வருசத்துக்கு மேல ஆயிட்டதால மறந்துட்டேன். ஓவ்வொரு விளையாட்டக்கும் பத்து பேர்னாலும் எல்லா விளையாட்டுக்கும் ஆள் இருக்கும் அது போக பெருசுங்க கதையக் கேட்க ஒரு கூட்டம் இருக்கும் சண்டை வரும் சமாதானம் ஆகும் எங்களோட ஒவ்வொரு அசைவும் இயற்க்கையோட இனஞ்சே இருக்கும். எங்களுக்குள்ள இருந்த உணர்வுப்பூர்வமான நட்பு இப்போ இல்லை எல்லோரும் பார்த்துக்குறோம் பேசிக்கிறோம் ஆனா அதுல உயிர் இல்லை தொலைகாட்சில நல்ல நிகழ்ச்சிகள் வருது நிறைய தெருஞ்சுக்கிட்டோம் ஆனா நாங்க எதையோ இழந்துட்டோம் இப்போ விஷேச நாட்கள்ள கூட யாரும் வெளிய வர்ரதே இல்லை எதும் பேசரதா இருந்தா மொபைல் இருக்கு வேர என்ன வேனும். மனுசனுக்கு இப்போ உண்மையிலேயே என்ன வேணும்னு அடுத்து பார்ப்போம்.....

Wednesday, February 12, 2014

மனிதன் என்னும் ஓர் விலங்கினம்-3

காலம் மாறும் அதுக்கு தகுந்தாற்போல மனிதனும் மாறவேண்டியதுதான் ஆனால்  அந்த மாற்றம் அழிவுசார்ந்ததாக இருந்தால் ? இன்று அசிங்கம் என்று பேசும் விஷயம் நாளை நாகரீகமாக மாறும் அது வழக்கம்தான் அந்த நாகரிகம் சில அநாகரிகம் வளர காரணமாக இருந்தால் , மனித இன செயல்பாட்டு கோட்பாடுகள், சரி என்றும் தவறு என்றும்  சில விசயங்களை பிரித்து வைத்துள்ளது , தவறு என்று சொல்லும் விஷயங்கள் என்னென்ன என்று நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை அன்றாடம் தினசரிகளில் படிக்கிறோம்
அப்படி மனித மனம் மாற காரணம் என்ன என்று யாரையும் எதையும் குறைகூற விரும்பவில்லை, அதை மாற்ற என்ன  செய்யலாம், என்று  கருத்து
 கூறவும் வரவில்லை நான் பிறந்த இந்த உலகம்  இப்படி ஆகிவிட்டதே என்று புலம்ப வந்திருக்கிறேன், எங்க கிராமம் விடியும் முன்னமே சுறுசுறுப்பாகி விடும் அதிகாலை நாலு மணிக்கெல்லாம் கோழி கூவும் பால் கரக்கரவங்க மணிசத்தம் அந்த  நேரத்துல ரொம்ப இனிமையா இருக்கும் தோட்டத்துக்கு பூ பறிக்க போறவங்க தண்ணி இறைக்க போறவங்க நெல்லு குத்த உரலுக்கு இடம் பிடிக்க போறவங்க பொதுகினத்துல தண்ணி இறைக்க கிளம்புறவங்கன்னு ஊரே சுறுசுறுப்பாயிருக்கும்  நாங்க மட்டும் சுருண்டு படுக்கத்தான் பார்ப்போம் அம்மா சேலைதான் போர்வை அந்த காலை நேரத்துல இயற்க்கை உந்துதலை சமாளிச்சுகிட்டு  படுத்திருக்கிறதே ஒரு சுகம்தான்   ''டேய்  எந்திரிடா கத்திரிக்கா  பொறுக்க  போகணும்னு'' அப்பா சத்தம் போடுறப்போ நெஞ்சுக்குளில கோவம் கிளம்பும் ஆனா 'பயம்' கிடைக்கிற துணிய எடுத்து தலையில போட்டுக்கிட்டு தோட்டத்துக்கு   போகவச்சுடும் ,  ஒரு வழியா எல்லா வேலையும்  முடுச்சுட்டு  பள்ளிகூடத்துக்கு கிளம்பினா பை எங்கே வச்சோம்னு தெரியாது.., அம்மாகிட்ட பத்து பைசா இல்லேன்னா காலணா வாங்கிட்டு பசங்களோட  சேர்ந்துகிட்டு நடக்கும் பொது பேசுவோமே ஒரு பேச்சு சென்சார்ல கேட்டா செத்துருவாங்க  பள்ளிகூடத்துல நடந்தெல்லாம் விளக்கமா சொல்லனும்னா நீங்க படிச்சத விட நான் கொஞ்சம் கம்மியா படிச்சுருப்பேன் நீங்க நடிசத விட நான் கொஞ்சம் அதிகமா  நடிச்சுருப்பேன்  நீங்க விளையான்டாத  விட கொஞ்சம் அதிகமா விளையான்டிருப்பேன் நீங்க திருடி தின்ன மாங்காய விட ஒன்னு அதிகமாவே திருடி இருப்பேன் ஓ  மன்னிச்சுடுங்க நீங்க திருடி தின்னது  இல்லையா ....?
 பொழுது சாய எப்போடா மனியடிப்பனுங்கன்னு இருக்கும்..? முதல் ஆளா வீட்டுக்கு ஒடிவர்ரதுல அவ்ளோ சந்தோசம்... அப்படி வந்தாலும் நமக்கு முன்னாடியே ரெண்டு பேரு வந்துருப்பானுங்க கடைசி பீர்டு பீடி பீர்டாம்.... வேலிய தாண்டி வந்தத சொல்லி வயிதெருசல கிளப்புவாய்ங்க..................தொடரும்.....
  இதுல எங்க கலாச்சார  சீரழிவு இருக்குனு நினைக்கிறீங்களா  சமுதாயம்னா நானும்  சேர்ந்ததுதானங்க..?  என்னை பற்றி சொன்னாவே போதும்னு நினைக்கிறேன்  வரப்போற  நிகழ்ச்சிகள்ல  அத நீங்களே தெருஞ்சுக்குவீங்க..! ...... 

Monday, February 10, 2014

மனிதன் என்னும் ஓர் விலங்கினம்-2


எங்க கிராமம் ஒரு மலையடிவாரம் மலை பெருசா இருந்தாலும் பேறு சிறுமலைதான் நல்ல குளிர்ச்சியான மலை குட்டி கொடைகானல்னு செல்லமா சொல்வோம் வானுயர்ந்த மரங்கள் நிறைஞ்சிருக்கும் அங்கிருக்கும் ஒருசில ஓடைகளில் வருடம் முழுவதும் தண்ணீர் வந்துகிட்டே இருக்கும் அதிகமா காபிகொட்டை மிளகும் விளையும், கெலையாடு மானு காட்டுகோழிங்க காட்டெருமைங்க காட்டுபன்னிங்கனு சுத்தி பார்க்க போறவங்களுக்கு நிமிசத்துக்கு நிமிஷம் திகிலான சந்தோசம் தரக்கூடிய மலைங்க, அங்க கிடைக்கிற எல்லாமே மருத்துவ குணம் நிரஞ்ச பழங்கள்தான் சிறுமலை பலா வாழைன்னா தமிழ்நாடு முழுசும் பிரபலம் , அந்த மலை தெருஞ்சும் தெரியாமலும் பல லட்சம் மனிதர்களை வாழ வைக்கிறது , நாங்க பசங்க நாலு பேரு சேர்தொம்னா மலைக்கு போறதுதான் அடுத்த வேலையா இருக்கும் பலாபழம் பருச்சு திங்கவும் காட்டுவிலங்குகளை மறஞ்சு நின்னு பார்குரதும் காட்டெருமை எங்க பக்குதுல உரசிக்கிட்டு போச்சுன்னு வந்து பெருமையடிக்கிறதும் ரொம்ப சகஜம் , காட்டுக்குள்ள வழி தவறிட்டா பாதைய கண்டுபிடிச்சு வர்றதுக்குள்ள ஒருநாளே முடுஞ்சுடும் மறுபடியும் எப்படா மலைக்கு போவோம்னு கூட்டு சேர்ந்து பேசுறதே தில்லா சந்தோசமா இருக்கும் , அடிவாரத்துல எங்க ஊர் இருகிறதால எப்பவும் குளிர்ச்சியா இருக்கும் ஒரு இளநீர் பறிச்சா ரெண்டு மூனுபேரு குடிக்கணும் ஒருத்தர் மட்டும் குடிச்சு தீர்க்க முடியாது , கினதுலதான் குளிப்போம் குளிக்கும்போது ஒவ்வொருமுறையும் ஒரு விளையாட்டா இருக்கும் , ஆழ்துளை கிணறு ஒருசில தொட்டங்கல்ல இருக்கும் 50அடி 100அடில தண்ணி இருக்கும் காரணம் அந்த சிறுமலைதாங்க , கள்ளசாராயம் தெரியுமா அதோட தலை நகரமே சிறுமலைதான் கவெருமெண்டு அனுமதிச்சா நல்ல சாராயம் அனுமதியில்லாம வித்தா அது கள்ளசாராயம் , அது காய்சவே மலையில தனி இடம் இருக்கும் , சாராயம் காய்ச்சி வாழ்ந்த குடும்பம் பத்து கெட்ட குடும்பம் பத்துனு ஏதோ நடக்கும் , அவனுங்கள அவனுங்க அனுமதி இல்லாம பிடிக்கவே முடியாது , கொஞ்சம் காட்டுக்குள்ள ஓடி மரஞ்சாலும் கண்டு பிடிக்கவே முடியாது மலை சம்மந்த என்னோட அனுபவம் மட்டும் எழுதனும்னா 200 பக்கம் தாண்டும் , ஆகா இப்படி ஒருமலையா அதுவும் திண்டுக்கல் பக்கத்திலையானு பார்க்க கிளம்பிடாதீங்க , நான் சொன்னது எல்லாமே ஆறேழு வருசத்துக்கும் முன்னால, ஏன் இப்போ மலை இல்லையானு கேக்கிறீங்களா.. மலை இருக்குங்க நான் சொன்ன அடையாளம் எதுவுமே இல்லைங்க , யாரோ தனியாராம் அவுங்க ஆக்கிரமுசுட்டான்கலாம்... மரங்களை எல்லாம் யாரோ உளுத்து போன மரம் வெற்றேன்னு.. கவெருமெண்ட ஏமாத்தி 4000ஆயிரம் ஏக்கருக்கு மேல இருந்த மரத்தையெல்லாம் திருடிட்டு போயிட்டாராம் ... சுத்தி பார்க்க நின்னு சுத்தவே இடம் இல்லைங்க காட்டுவிலங்கு பாக்க காட்டெலி கூட இல்லைங்க .. எங்க ஊர்லயும் ஒருத்தர் இளநீர் சாபிடனும்னா ஐந்து இளநீ வெட்டனும் அவ்ளோ சிறுத்து போயிருச்சு அந்த மலை மாதிரியே ... எல்லோருடைய தொட்டதுளையும் ஆழ்துளைகிணறு இருக்கு ஆனா தண்ணிதான் இல்லை 1000 அடி 2000 அடி போய்கிட்டே இருக்கு...
............................................................................................................................................ தொடரும்

Friday, February 7, 2014

மனிதன் என்னும் ஓர் விலங்கினம்

மனிதன் தனியா பேசிக்கிட்டா மூளை வளர்ச்சி குறைபாடுன்னு சொல்றோம் உண்மையும் கூட .
ஆனா தனியா பேசிக்காத மனிதனே இல்லை என்பதுதான் உண்மை எல்லோரும் எதோ விதத்துல தான் சொல்ல நினைத்து
சொல்லாமல் விட்டதையோ அல்லது சொல்ல நினைப்பதையோ தனியாக ஒரு முறை சொல்லி பார்த்துக்கொள்கிறோம்
அது ஒரு நம்பிக்கை சொல்ல வேண்டியவர்களிடமே சொல்லிவிட்டதாக ஒரு நம்பிக்கை
டெலிபதினு சொல்லிக்கிற விசயமாகூட இருந்திருக்கலாம் இப்போ அதுமேல நம்பிக்கை இல்லாம போயிருச்சு அதனால
அது உண்மை இல்லை நிருபிக்க முடியலை . தொலைபேசியில தனியா பேசிக்கிறோம் நாம பேசுறது அவங்களுக்கு கேட்கும்னு
நம்புறோம் அதுவும் நடக்குது , அதை விஞ்ஞானதுலவிளக்க முடியும் ஆனால் அந்த விஞ்ஞானம் முற்றும் மனிதனால் உருவாக்க பட்டதா
இயற்கையிலேயே இருக்கும் சில விசயங்களை இயற்க்கைக்கு மாறாகவோ அல்லது இயற்கையோடு இணைந்தோ சில மாற்றங்களை
சேர்க்கைகளை செய்யும் பொது மறைத்திருந்த இயற்க்கை கண்ணுக்கு புலனாகிறது , இப்போ நாம தெரிஞ்சுக்கிட்ட விஷயம்
சாத்தியமே இல்லை என்று எதையும் சொல்ல முடியாது , அதற்க்கு பதிலாக இப்போ அதுமாதிரி இல்லை '
நாளை நடந்தாலும் நடக்கும் அதற்கும் தெளிவான விஞ்ஞான விளக்கங்கள் கிடைக்கலாம் ,
மனிதன் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதாவது ஒன்றை பிரதான பொருளாக நினைத்து அதை அடைய உயிரையும் பனையமாக
வைத்து போராடி வருகிறான் , முதலில் உணவு பிறகு இடம் இடம் சார்ந்த மக்கள் மக்கள் சார்ந்த பொருட்கள் (தங்கம் இன்ன பிற )
இப்போது பணம் என்கின்ற ஒன்று , இது வரை இயற்கையை ஆட்கொண்டு அதற்காக போராடி அதை வளர்ச்சியின் பாதையில்
கொண்டு சென்ற மனிதன் இயற்கையை மறந்து தான் கண்டு பிடித்த பணம் என்கின்ற பொருளையே பிதானமாக கொண்டு
அதற்காக இயற்கையை பணையம் வைக்கிறான் அழியும் பொருள்மேல் பற்று கொண்டு தானும் தன்னை சுற்றியுள்ள
இயற்கையையும் அழிக்கிறான் (அழித்துவிட்டான்) எது மனிதன் வாழ தேவையானது என்று தெரியாமல் போய்விட்டது
தன்னுடைய சந்ததி மகிழ்ச்சியாய் வாழ எது தேவை என்று தெரியாமல் மனிதன் மதி மயங்கி கிடக்கிறான்
தான் செய்யும் தவறுகளால் தனது சந்ததியே அழியும் என்று அறியாமல் செய்கிறான்
நான் என்னால் கண்டு என்னுள் அனுபவித்த என் மூளை  வளர்ச்சிக்கு தகுந்த சிந்தித்த சில விசங்களை உங்களோடு
பகிர்ந்து கொள்ள நினைக்கிறன் காண்பீர்கள் என்ற நம்பிக்கைதான் , நீங்கள் காணாது போனால் நானும் ஒரு பைத்தியமே ...
                                                                                                                     தொடரும்    

Wednesday, February 5, 2014

கொல்வதுதான் இறுதித் தீர்வா?

ஊட்டியில் தொட்டபெட்டாவை அடுத்துள்ள கிராமங்களில் தனது இருப்பிடம் மாறி, ஊனமுற்றதன் காரணமாக (ஊனத்துக்கான சரியான காரணம் இப்போது வரை அறிவிக்கப்படவில்லை) ஆட்கொல்லி வேங்கை புலி சுட்டு கொல்லப்பட்டதன் தொடர்ச்சியாய் `தி இந்து’ நாளிதழில் இரு காட்டுயிர் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
ஒருவர் ஆட்கொல்லிப் புலிகள் பரம்பரையாகவே ஆட்கொல்லியாக மாறும், அதனால் அவற்றைக் கொல்வதில் தவறில்லை என்று கூறியிருந்தார். மற்றவர், ஜிம் கார் பெட்டை மேற்கோள் காட்டி, புலி காட்டில் வாழும் தகுதியை இழந்து விட்டதால் சுட்டதில் தவறில்லை என்று எழுதியிருந்தார்.
இவற்றை எல்லாம் வைத்து யோசிக் கும்பொழுது, பழைய காட்டுயிர் ஆர்வலர்-ஆராய்ச்சியாளர்களின் பல அறிவுபூர்வமான கூற்றுகளை நமது கருத்துக்கேற்ப மாற்றிப் பயன்படுத்துவது புலப்படுகிறது.
ஜிம் கார்பெட் தனது வாழ்நாளில் ஆட்கொல்லிப் புலிகளை வேட்டையாடிய அனுபவங்களைப் படித்த எவரும், ஊட்டியில் புலி சுட்டுக் கொல்லப்பட்ட விதத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நூற்றுக்கணக்கான மக்கள், ஐம்பது அறுபது வனக்காவல் மற்றும் அதிரடிப் படை வீரர்களுடன் புலியைக் கிளப்பிவிட்டு, 36 குண்டுகள் துளைக்கக் கொன்றிருக்கிறார்கள் (தாரை தப்பட்டை பேண்டு முழங்காததுதான் குறை!).
கார்பெட்டைப் போலத் தனியனாய், தடமறிந்து, நடந்து சென்று கொல்லவில்லை. கார்பெட்டைப் போல இது தான் ஆட்கொல்லிப் புலியா என்று கணித்தும் பார்க்கவில்லை. காரணம், காட்டில் தடமறிதல் என்ற கலை அற்றுப்போனதுதான். தடமறிதலில் இன்னும் சில காட்டுவாசிகளே சிறந்து விளங்குகின்றனர். அவர்களது திறனும் அடுத்த தலைமுறைக்குப் போகாமல் வீணாகிறது.
ஏனெனில், அவர்களும் ஒரு கூலியைப் போல நடத்தப்படுவதுதான். ஆனால் பல காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள் இன்றும் அவர்களது உதவியையே நாடிவருகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை! இன்னும் அடித்தட்டு ஊழியர்தான்!
ஊட்டியிலும் பொம்மன் என்ற பழங் குடியின நண்பரின் உதவியோடுதான் இந்தப் புலியைச் சுட்டிருக்கின்றனர். ஆனால், அவரது பங்களிப்பு பற்றி எந்தப் பத்திரிகையும் எழுதவில்லை, காட்டிலாகாவும் கூறவில்லை.
மற்றொரு விஷயம் - ஆட்கொல்லியைக் கொல்வதுதான் நல்லது என்ற கருத்தின் அடிநாதம் - மனிதன்தான் உயர்ந்தவன், அவனே இங்கு வாழப் பிறந்தவன், மற்றவை எல்லாம் அவனுக்குப் பின்னர்தான் என்ற சித்தாந்தம்! அது சரியென்றால், நாம் பல யானைகளைக் கொல்ல வேண்டி வரும். ஏனெனில் அவை பல உயிர்களைச் சிதைக்கின்றன. சிறுத்தைகளைக் காவு வாங்க வேண்டும். ஏனெனில், அவை ஊரில் நுழைந்து உபத்திரவம் தருகின்றன!
காட்டுயிர் மருத்துவர் டாக்டர் கே எனப்படும் கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்றை அறிந்தவர்கள் அல்லது அவருடன் இருந்தவர்கள் அவர் எவ்வாறு மயக்க மருந்து குண்டை (Tranquiliser dart) பயன்படுத்தினார் என்பதை அறிவர். அவரைப் போல ஒருவர் இருந்திருந்தால், இதைப் போன்ற சம்பவம் நடந்திருக்குமா என்பது சந்தேகமே. இவை எல்லா வற்றுக்கும் காட்டுயிர்கள், இயற்கை யின் பால் அவரைப் போன்ற ஈடுபாடு இல்லாததும் அவரைப் போன்றவர் களை ஊக்குவிக்காததும்தான் காரணம்.
எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமெனில், இதன் மூலக் காரணமான காடுகள், இரை விலங்குகள் சுருங்குவதைத் தடுக்க வேண்டும். மேலும் காடுகளுக்கு அடுத்துள்ள இடைப்படு பகுதிகளில் (Buffer) மனிதன் வாழிடமாக இல்லாமல் இருக்க வேண்டும். இதைப் போன்ற ஆட்கொல்லிகளைக் குறைந்தபட்சம் கருணைக் கொலையாவது (Mercy killing) செய்ய வேண்டும்-வேறு வித மான மறுவாழ்வு முறைகள் சாத்திய மில்லாதபோது. சுட்டுப் பிடிப்பது என்பது ஒரு நல்ல தீர்வு ஆகாது.
ஏனென்றால், 1995ல் சிக்மகளூரில் மனிதர்களை சிறுத்தை தாக்க ஆரம்பித்தபோது 17 சிறுத்தைகள் கொல்லப்பட்டன. ஆனால்
பிரச்சினைக்குக் காரணம் ஒரேயொரு சிறுத்தைதான்.
என்றுமே மனித இனம் மாறுபட்ட கருத்துகளையும் கொள்கைகளையுமே கண்டு வந்துள்ளது. உதாரணமாக, "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரும், "மனிதனே மிருகம் போலத்தான், அதனால் புலால் உண்பதுதான் சரி யான வழி" என்ற பெரியாரும் இந்த நாட்டில்தான் வாழ்ந்தனர். யார் சரி, யார் தவறு என்ற பேச்சு வாக்கு வாதத்தை வேண்டுமானால் வளர்க்கும். தீர்வு கிடைக்காது.
- கட்டுரை ஆசிரியர் காட்டுயிர் ஆர்வலர்
தொடர்புக்கு: hkinneri@gmail.com

Monday, February 3, 2014

அக்கா 'குருவி'

அப்போ எங்களுடைய ஜாகை ரயில்வே வீட்டில் ஸ்டேஷனுக்கு மேலே உள்ள மாடியில். அந்தக்கால மோஸ்த்தரில் ஜன்னல் அதற்கேற்ற கண்ணாடிக்கதவுக ளும்,எத்தனை டிகிரி சூடேற்றினாலும் இளகாத இரும்புக் கொண்டிகளையும் கொண் டது. இழுத்து ஜன்னல் கதவைச் சார்த்துவது என்பது, அத்தனை சுளுவில் நடந்துவிடாது. அந்தக் கண்ணாடிக்கதவுகளூடே ரயில் செல்வதைப் பார்க்கப் பிடிக்கும். சத்தம் ஏதும் கேட் காமல் அதிர்வோடு கூடிய ரயில் ஊர்ந்துசெல்வது தெளிவாகத் தெரியும்.
வீட்டிற்கு விட்டம் என்பது மூன்று ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருக்கும், அந்த உயரத்திலிருந்து இரு பக்க சுவர்களை இணைக்க தண்டவாளங்களை வைத்து ‘கர்டர்’ போட்டிருப்பார்கள். அந்தக் ’கர்டர்’களிலிருந்து பெரிய ஃபேன் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். சுவிட்சைப் போட்டால் சுனாமியே வந்தது போல சுழன்றியடிக்கும் காற்று. ரெகுலேட்டர் வகையறாவெல்லாம் பழுப்பேறிப்போய் அதன் குமிழை திருக்குவதற்குள் காற்று நம்மை அடித்துக் கொண்டுபோய்விடும். அதனால் எப்போதாவது வெய்யில் அதிகம் இருக்கும் நாட்களில் , வீடு முழுக்க வெய்யிலின் தாக்கம் இருக்கும் போது மட்டும் அதைச் சுழலவிடுவது வழக்கம்.
அன்று காற்று துளிக்கூட அடிக்கவில்லை, வெய்யில் தாங்கவியலாமல் அடித்துக் கொண்டிருந்தது. வெக்கை பரவி வீட்டுக்குள் இருக்கமுடியாமல் போனது. ‘அந்த ஃபேன் சுவிட்சைப் போட்டு விட்றா’ என்றாள் அக்கா. வேக மாக ஏறிப்போட்டுவிட்டேன்.
அப்போது பார்த்து எங்கி ருந்தோ ஒரு சிட்டுக்குருவி வீட்டிற் குள் பறந்து வந்தது. ‘கீச் கீச்’ என்று கத்தியபடியே இங்குமங்கும் பறந்துகொண்டிருந்த குருவி சுழன்று கொண்டிருந்த ஃபேனின் இறக்கையில் அடிபட்டு பொத்தென விழுந்தது, ‘யக்கா யக்கா’ குருவி செத்துப்போச்சு’ என்று கத்தினேன். ஓடிவந்தவள், ‘ச்சீ சாகவெல்லாம் இல்லை, அதுக்குத்தான் இந்த ஃபேனைப் போடவே கூடாது, என்றாள். வெள்ளைப்பூண்டு போட்டு வைக்கும் கூடையிலிருந்த பூண்டுகளை கொட்டிவிட்டு குருவியை அதற்குள் வைத்து மேலே இருந்த கம்பிகளை கீழிறக்கி மூடினாள்.
பின்னர், மஞ்சளை அரைத்துக்கொண்டுவந்து, கம்பிக் கூடையின் ஓட்டைகள் வழியாக அந்தக் குருவியின் இறக்கையை சற்றே தூக்கிவிட்டு மஞ்சளைத் தடவிவிட்டாள். சிறிது நேரத்தில் மயங்கிப்போய், கூண்டின் அடுத்த பக்கத்தில் சாய்ந்து கிடந்தது. கொஞ்ச நேரம் கழித்து கைப்பிடி அளவு சோறை ஒரு கொட்டாங்குச்சியில் வைத்து மேல் மூடியை குருவி அறியாது திறந்து உள்ளே வைத்து விட்டாள். அசையாது படுத்துக்கிடந்த அந்தக்குருவி அரவம் கேட்டதும் கால்களை உதைத்து முன்வந்து பார்த்தது. பின்னர் மெதுவாக ஒன்றிரண்டு பருக்கைகளை கொத்தித்தின்ன முயன்றது.
இரண்டு நாள் கழிந்தது. தரையில் வைத்திருந்த கூடையை மெதுவாக எடுத்து மரப்பலகையில் இருந்த ஆணி யில் தொங்கவிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக ஆறியது காயம். கூண்டுக்குள்ளேயே கீச் கீச் என்று சில சமயங்களில் கத்தும். அதன் உடலிலும் இறக்கை யிலும் அந்த மஞ்சள் கறை இன்னும் போகவில்லை. சில சமயங்களில் மூக்கை வைத்து நீவுகிறேன் பேர்வழி என்று காயத்தில் பட்டுவிட்டால் சிறிது நேரம் கத்தும். பின்னர் அமைதியாகிவிடும்.
‘யக்கா இந்தக்குருவிய நாமளே வளப்பமா’ என்று கேட்டால் ‘ போடா அதெல்லாம் எப்பவும் பறந்துக்கிட்டே இருக்கிறது, இப்டி கூண்டுலல் லாம் அடைச்சி வெக்கக்கூடாது, எதோ அடிபட்டுருச்சேன்னு தான் வெச்சிருக்கேன். அப்புறம்? ‘சரியானவொடனே கதவைத் திறந்து விட்டுருவேன்’ என்பாள் அக்கா.
நான் அருகில் சென்றாலே படபடவென சிறகுகளை அடித்துக் கொண்டு தன்னைப்பிடிக்கத்தான் வருகிறான் என நினைத்து கூண்டின் அடுத்த பகுதியில் போய் ஒண்டிக்கொள்ளும். பள்ளிக்
கூடம் போவதற்கு முன்பும், வீடு வந்து சேர்ந்தபின்பும் அதைப் போய்ப்பார்க்காமல் எனக்கு உறக்கமே வருவதில்லை. ஒரு நாள் வீடு திரும்பி வந்த போது கூண்டுக்குள் அந்தக்குருவியைக் காணவில்லை. பயந்துபோய் அக்காவிடம் சென்றேன் இதைத் தான் கேட்க வந்திருக்கிறான் என ஊகித்தபடி ‘என்ன குருவி தானே, மூடியைத்திறந்து பறக்கவிட்டுட்டேன்,காயம் தான் ஆறிருச் சில்ல’ என்றாள். எனக்கு ஒன்றுமே சொல்லத்தோணவில்லை.
அவ்வப்போது பக்கத்திலி ருக்கும் மரங்களில் அந்தக்குருவி தென்படுகிறதா என்று பார்த்துப்பார்த்து ஏமாந்து போவேன், அப்போதெல்லாம் தூரத்தி லிருந்து என்னைப்பார்த்து சிரித்துக்கொள்வாள் என் அக்கா.
http://chinnappayal.blogspot.com/2014/01/blog-post_26.html
Keywords:

Sunday, February 2, 2014

இந்தியன் எனும் ஏமாளி

இந்தியாவில் பயன்படுத்தப்படும் சிறிய ரக கார்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது சமீபத்திய ‘குளோபல் என்.சி.ஏ.பி.’ ஆய்வு. இந்த நிறுவனம் கார்களை வேகமாக ஓட்டிவந்து மோதிப் பார்க்கும் சோதனைக்கு உள்படுத்தியபோது, ‘சுசூகி-மாருதி ஆல்டோ 800’, ‘டாட்டா நானோ’, ‘ஃபோர்டு ஃபிஃகோ’, ‘ஹூண்டாய் ஐ-டென்’, ‘ஃபோக்ஸ்வேகன் போலோ’ ஆகிய ஐந்து சிறிய ரக கார்களும் ஒரு விபத்து நேரிட்டால், அப்பளம்போல நொறுங்கிப்போகும் வாய்ப்புடையவை என்பதும் அவற்றில் பயணிப்போருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் விற்பனையில் முன்னணியில் இருப்பவை இந்த கார்கள்; நம் நாட்டில் விற்பனையாகும் ஐந்து கார்களில் ஒன்று இவற்றில் ஏதேனும் ஒரு கார் என்கிற பின்னணியில் இந்தச் சோதனையின்போது வெளிவந்திருக்கும் உண்மைகள் அதிரவைக்கின்றன.
இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக ஆய்வை நடத்திய நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு விஷயம், இந்திய நுகர்வோரை வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் எப்படி மதிப்பிடுகின்றன என்பதை உணர்த்தப் போதுமானது. அதாவது, “இந்த கார்களில் காற்றுப் பைகள் கிடையாது. நிறுத்த முடியாத அளவுக்கு கார் வேகமாகச் செல்லும்போது, இந்த காற்றுப் பைகளைப் பயன்படுத்தினால் காரின் வேகம் கணிசமாக மட்டுப்படும். ஆனால், அவை பொருத்தப்படவில்லை. அதேசமயம், இதே கார்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கப்படும்போது அவை காற்றுப்பைகளுடனே விற்கப்படுகின்றன” என்று சுட்டிக்காட்டுகிறது அந்த ஆய்வறிக்கை.
இந்த ஆய்வறிக்கை வெளியான உடனேயே இந்த கார் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், “கார் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் தடுப்பதுதான் எம் முதல் நோக்கம்; அதற்கேற்ற தீவிர நடவடிக்கைகளை எடுப்போம்” என்று அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். ‘ஃபோக்ஸ்வேகன்’ நிறுவனம் தன்னுடையோ ‘போலோ’ ரக கார்களைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றிருக்கிறது. கூடவே, “இனி விற்கப்படும் கார்களில் காற்றுப் பைகளும் பிரேக்குகள் பழுதாகாமல் இருப்பதற்கான சாதனமும் சேர்த்தே விற்கப்படும்; அவற்றுக்காகக் கூடுதலாக 2.7% கட்டணம் வசூலிக்கப்படும்” என்று அறிவித்திருக்கிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். 2012-ல் மட்டும் 1,40,000 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். இவற்றில் கார் பயணிகளின் இறப்பு சுமார் 17%. இந்தியாவில் விற்கும் கார்களில் ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட கார்களின் சந்தை 80%. மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தச் சந்தை மேலும் பிரம்மாண்டமாக விரிவடையும். எனில், எவ்வளவு பெரிய ஆபத்து இது?
பெருநிறுவனங்களுக்கு எப்போதுமே லாபமே முக்கியக் குறிக் கோள் என்பதும் இந்தியச் சந்தைக்கு அவை கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான் என்பதும் ஆச்சரியமானதல்ல. ஆனால், இப்படிப்பட்ட ஆபத்துகளை எல்லாம் அரசாங்கம் எப்படி வேடிக்கை பார்க்கிறது?

Saturday, February 1, 2014

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”
சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!”
உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”
இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர்பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: “காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…”
பெருங்கலவரத்துக்கான முன்னோட்டம்
யோசித்துப்பாருங்கள்… காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக்கொண்டு பறந்திருக்கும்?
அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.
அப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக்களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்பே கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஏன் காந்திமீது ஆத்திரம்?
நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார். எனினும் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், காந்தி மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும்.
மேலும், மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனத்தில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார்; தொடர்ந்து முறியடிக்கப் போராடினார். காலங்காலமாக அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்களே கலவர நாட்களில் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களில், ஆயுதப் படையினரே சிறு பிரிவுகளாகச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தயங்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்ற நாட்களில், கலவர இடங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார். பிரார்த்தனைக் கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும் “மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டை யாடக் கூடாது” என்று மன்றாடினார்.
கல்கத்தாவில் காந்திஜியின் தலையீட்டைக் கண்ட இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்: “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஓர் அற்புதமான செயல்.”
அந்த அற்புதமான செயல்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆத்திரம் பெருகக் காரணமாக இருந்தது. அந்த ஆத்திரத்தின் விளைநிலம்தான் கோட்சே!
என் உயிர் போகட்டும்!
காந்தி 1.9.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார். கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், இரவு 8.15 மணி அளவில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார். காலவரையறையற்ற உண்ணாவிரதம் அது. கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் காந்தி. பதறிப்போனார்கள் யாவரும்.
மூதறிஞர் ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். “குண்டர் களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா?” என்று கேட்டார். “குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்” என்றார் காந்தி. “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?” என்றார் ராஜாஜி.
“காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது. எனது உண்ணாவிரதம் ஏதாவது பயனளிக்க வேண்டுமென்றால், அது அவர்களுக்குத் துன்பம் நேராமல் தடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். நான் கல்கத்தாவின் நிலைமையைச் சமாளித்துவிட்டால், பஞ்சாப் நிலைமையையும் சமாளிக்க முடியும். நான் இப்போது தோல்வியடைந்தால், காட்டுத்தீ பல இடங்களுக்கும் பரவும்” என்றார் காந்தி.
“ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்” என்றார் ராஜாஜி.
காந்தி உறுதியான குரலில் சொன்னார்: “நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன். நான் என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்.”
தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தார் காந்தி.
தனியாள் திட்டமா கொலை?
காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.
இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப் படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத் துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான் “இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல” என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!
ஜி. ராமகிருஷ்ணன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர், தொடர்புக்கு: grcpim@gmail.com

Friday, January 31, 2014

ஆட்கொல்லி வேங்கை தரும் பாடம்

நீலகிரியில் மக்களிடையே பீதியை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஆட்கொல்லி வேங்கையைச் சுட்டுக் கொன்றதுதான் சரியான முடிவு என்பது என் நிலைப்பாடு.
உயிர்ச் சங்கிலியின் உச்சத்தில், காட்டில் தன்னிச்சையாக, சுற்றித்திரியும் ஒரு வேங்கைப் புலியை, மயக்கத் தோட்டா மூலம் பிடித்துக் கூண்டில் அடைத்து வைப்பது மரணத்தைவிட கொடுமையான முடிவு. அது மட்டுமல்ல, உயிர்க்காட்சிசாலையில் மிகுந்த இட நெருக்கடி நிலவுகிறது. "மைசூர் உயிர்க்காட்சிசாலையில் இப்போது தடுக்கி விழுந்தால் சிறுத்தைகள் இருக்கின்றன. இடமே இல்லை" என்று புலம்பு கின்றார் அதன் இயக்குநர். ஒரு விலங்கைக் கூண்டில் அடைத்து வைப்பதால், அந்த உயிரினப் பாதுகாப்பிற்கு எவ்விதப் பயனுமில்லை. பராமரிக்கும் செலவைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
The Deer and the Tiger (1967) என்ற நூலை எழுதி இந்தியாவில் காட்டுயிர் பேணல் ஒரு இயக்கமாக உருவாகக் காரணமாக இருந்த உயிரியிலாளர் ஜார்ஜ் ஷேலர், ஆட்கொல்லிப் புலிகளை கொல்வதுதான் ஒரே வழி என்கிறார். நம் நாட்டு வேங்கை நிபுணர் உல்லாஸ் கரந்த்தும் இதைத்தான் சொல்கிறார் (காண்க: கானுறை வேங்கை – காலச்சுவடு பதிப்பகம்) காட்டுயிர் பேணலில் அரைக்கிணறு தாண்டும் வேலைக்கே இடமில்லை. இங்கே நமது குறிக்கோள் அழிவின் விளிம்பின் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஓர் உயிரினத்தை (species) காப்பதுதான். அந்த முயற்சியில் சில தனி உயிரிகள் சாக வேண்டி வரலாம். உள்ளூர் மக்கள் ஆதரவு இல்லாமல் வேங்கையைப் பாதுகாக்க முடியாது என்பதையும் இங்கு நாம் மனதில் கொள்ள வேண்டும்.
பரந்திருந்த வனப்பரப்பு அழிந்து, இன்று சிறிய தீவுகள் போன்ற காடுகள்தான் வேங்கைகளுக்கு வாழிடமாக உள்ளன. 1972இல் இருந்து காட்டுயிர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினால், அவை இன்று குறிப்பிடத்தக்க அளவு பெருகியுள்ளன. மைசூருக்குள் யானை வருகின்றது. கொடைக்கானல் கோல்ஃப் மைதானத்தில் காட்டெருது மேய்கின்றது. பதினைந்து ஆண்டுகளாக வீரப்பனின் ராஜ்யம் போலிருந்த சத்தியமங்கலம் கானகப் பரப்பில் இன்று 21 வேங்கைகள் வசிப்பது அறியப்பட்டிருக்கின்றது. நம் நாட்டில் காட்டு விலங்கு-மனிதர் எதிர்கொள்ளல் (Man-Animal Conflict) வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரித்துக்கொண்டேதான் போகும். இந்தப் பிரச்சினைக்குச் சரியான வியூகங்களை வகுத்துத் தயாராக இருக்க வேண்டும். வரும்போது பிரச்சினையை எதிர்கொள்ளலாம் என்றிருக்கக் கூடாது. ஆனால், இதைப் பற்றி அரசு இன்னும் தீவிரமாகச் சிந்திக்காதது வருந்தத்தக்க விஷயம்.
சில இடங்களில் வேங்கையோ, சிறுத்தையோ கால்நடைகளை அடிக்கின்றன. வெகு அரிதாகச் சில மனிதர்களும் பலியாகின்றார்கள். மனிதரை எளிதாக அடித்துவிடலாம் என்று ஒரு வேங்கைப் புலி தெரிந்துகொண்டால், அது மறுபடியும் அதே முறையையே கையாளும். அதாவது, அதன் பிறகு அது ஒரு ஆட்கொல்லியாகிவிடுகின்றது. அப்போது அதைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உத்தராகண்ட் சம்பவாட் என்ற இடத்தில் 264 பேரைக் கொன்ற ஒரு ஆட்கொல்லி வேங்கையை ஜிம் கார்பெட் சுட்டு அழித்தார். இன்றுகூடச் சுந்தரவனக் காடுகளில் ஆட்கொல்லி வேங்கைகள் அவ்வப்போது தோன்றுகின்றன.
காட்டுயிர்ப் பேணலும் பிராணி நலமும் (Conservation and Animal welfare) இரண்டும் சீரிய கருதுகோள்கள். இரண்டுமே சமுதாயத்திற்குத் தேவையானவை - ஒன்றை ஒன்று குழப்பிக் கொள்ளாமலிருக்கும் வரை மட்டுமே. காட்டுயிர் எனும் சொல்லில், தானாக வளர்ந்து செழிக்கும் சகல உயிரினங்களும் அடக்கம். அணில், பட்டாம்பூச்சி தொடங்கிப் பலவும் இதில் அடங்கும். ஆனால் பிராணி நலன் என்பது மனிதருடன் வாழும் விலங்குகள், பறவைகள் சார்ந்தது.
கடந்த நூறாண்டுகளாகச் சுற்றுச்சூழலை நாம் சீரழித்துவிட்டதால் இப்போது எஞ்சியுள்ள காட்டுயிர்களை - தாவரங்கள், விலங்கினங்கள், ஊர்வன, நீர்வாழ்விகள்- மேலும் அழிந்துவிடாமல் காப்பாற்றுவது எப்படி என்பதுதான் காட்டுயிர்ப் பேணலின் சாரம். அதற்கு அறிவியல்பூர்வமான உத்திகளை நாம் பயன்படுத்துகின்றோம். எடுத்துக் காட்டாக, வேங்கைக்கு ரேடியோ கழுத்துப்பட்டை போட்டு அது எவ்வளவு தூரம் இரைக்காகச் சுற்றுகின்றது, எத்தனை ஆண்டுகள் குட்டிகள் தாயுடன் இருக்கின்றன, எவ்வளவு பரப்புள்ள காடு தேவை என்பது போன்ற விவரங்களை அறிந்துகொள்கின்றோம்.
இருபது ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாக மயக்கத் தோட்டா மூலம் வேங்கையைச் செயலிழக்கச் செய்து கழுத்துப்பட்டை மாட்டிய போது, பலரும் கருணையின் அடிப்படையில் அது ஒரு சித்திரவதை என எதிர்த்தார்கள். சம்பந்தப் பட்ட ஆய்வாளரின் ஆராய்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால், இன்று ரேடியோ காலர் உலகெங்கும், நம் நாட்டிலும் சிறு பறவைகளுக்கும்கூடப் பொருத்தப்படுகின்றது.
காட்டுயிர் பாதுகாப்பின் அடிப்படை, அறிவியல் சார்ந்த முறைகளே. ஓர் உயிரியின் மேல் கருணை காட்டுவது என்பது அறம் சார்ந்த விஷயம். அது சூழலியல் கரிசனத்தின் அடையாளமல்ல. அத்தகைய கருணை சில சமயங்களில் காட்டுயிர் பேணலுக்கு எதிர்மறையாகவும் அமையலாம்.
திருட்டு வேட்டை (Poaching), உறைவிட அழிப்பு (Habitat destruction) ஆகியவற்றுடன் வேங்கைக்கு இப்போது ஒரு புதிய ஆபத்து வந்திருக்கின்றது. அண்மையில் நான்கு வேங்கைப் புலிகள் நாய்களிடமிருந்து தொற்றும் நாய் நொடிப்பு (canine distemper) நோயால் மடிந்திருக்கின்றன என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான இந்திய அரசுக் குறிப்பொன்று கூறுகின்றது. இதை நம் நாட்டு ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. பிரிட்டனின் கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தெருநாய்களுக்குக் கருத்தடை செய்தும், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றதே தவிர, இம்மியளவும் குறையவில்லை. தன்சீனியாவில் 1994இல், சுற்றுலாப் பயணிகளுடன் வந்த செல்லநாய்களிடமிருந்து பரவிய இந்நோய்க்கு 1,000 சிங்கங்கள் பலியாகின.
பிராணி நலன், விலங்குரிமை சார்ந்தவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்த சாலிம் அலி தனது கவலையை `ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ (The Fall of the Sparrow) என்ற தன்வரலாற்று நூலில் 1985இல் கீழ்க்கண்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்: "என்னைப் பொறுத்தவரையில் காட்டுயிர்ப் பேணல், நடைமுறை நோக்கங்களைக் கொண்டது. உணர்வுபூர்வமான செயல்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை. ஆனால் இன்று காட்டுயிர் பற்றிச் சொல்லிக் கொடுக்கப்படுவது, அகிம்சை சம்பந்தப்பட்டதாயிருக்கின்றது. புனிதப் பசுவைப் பாதுகாப்பது போல. இது தவறானது மட்டுமல்ல. துரதிருஷ்டவசமானது:"